கடைமுடிநாதருடன் வாழ்தல்
அன்புள்ள ஜெ,
இன்று உங்களது தளத்தில் கடைமுடிநாதர் கோயிலுக்கான – கடைமுடீஸ்வரர் கோயில் என்பதும் வழக்கம் – தமிழ் விக்கி பக்கத்திற்கான குறிப்பு கண்டதும் ஜில்லென்று இருந்தது. காரணம் அது எங்கள் ஊர். (பூன் முகாம் தத்துவ வகுப்பில் நீங்கள் செம்பொன்னார்கோயில் பற்றி குறிப்பிட்டபோதும் அப்படித்தான். எங்கள் ஊருக்கு பக்கத்து ஊர் என்று சொல்லவேண்டும் போல இருந்தது) மேலும் குறிப்பாக கோயிலின் கிழக்கு பிரகாரத்துக்குப் பக்கத்தில்தான் எங்கள் வீடு இருக்கிறது. எங்கள் வீட்டின் பின்பக்கத்து முள்வேலிப் படலைத் திறந்து கோயிலின் கிழக்கு வாயில் கதவு மூலமாக பிரகாரத்துக்கு வரலாம். சிறுவயதில் எங்கள் வீட்டையும் கோயிலையும் பிரிக்கும் மதில் மேல் ஏறியும் உள்ளே குதிப்போம். தெற்குப் பிரகாரத்தில் இருந்த தம்பட்டங்காய் மரத்தின் மூலமும் வடக்குப் பிரகாரத்தில் இருந்த பன்னீர் மரம் மூலமும் ஏறி மண்டபடத்தின்மீது விளையாடிய நினைவுகளை எல்லாம் மீட்டிக் கொண்டேன்.
ஆசிரியராக இருந்த அப்பா பெரிதும் இறை நம்பிக்கை உடையவராக இருந்ததில்லை – அல்லது அப்படி காட்டிக்கொண்டதில்லை. ஆனால் தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி எல்லாம் அவ்வப்போது படிப்பார். திருவிழாக்களில் சாமி ஊர்வலத்துக்கு தோள் கொடுப்பார். reserved type ஆனவர், ஓய்வு பெற்றதும் channelize செய்துகொள்ளும் பொருட்டோ என்னவோ மெல்ல வழிபாட்டில் ஈடுபடுத்திக்கொண்டார். அதுகூட அதிதீவிரமாகவெல்லாம் இல்லை, அதிகாலை, வீட்டிலேயே சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றி பதிகம் சொல்வார். மாலையில் பூக்கள் பறித்து கோயிலுக்குச் சென்று கொடுத்து வணங்கி, வலம் வருவார்.
சஷ்டியப்த பூர்த்திக்குக்கூட திருக்கடையூர் செல்ல முதலில் ஒப்பவில்லை. எங்கள் கோயிலிலேயே செய்யலாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. ”நம்ம கோயில் பக்கத்துலயே இருக்கும்போது எதுக்கு திருக்கடையூருக்கு ?” என்றார். பிறகு எங்களின் வற்புறுத்தலுக்காக ஒப்புக்கொண்டார்.
ஒன்பதாண்டுகள் முன்பு (2016-ல்) அப்படி ஒருநாள் மாலையில் வழிபாடு முடிந்து வீட்டுக்கு வருகையில் பிரகாரத்திலேயே மயங்கி விழுந்து உயிர்நீத்தார்.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 849 followers

