ஒன்றரை நாள்- கடலூர் சீனு
இனிய ஜெயம்,
புதுவைக்கு பேருந்து ஏறுவதற்கு, கூட்டம் இல்லாத அடுத்த பேருந்து வருவதற்காக நின்றிருந்த நேரத்தில் தற்செயலாகதான் அவனை பார்த்தேன். எலும்புகள் தெரிய துவங்கும் வண்ணம், உணவு உண்டு சில நாட்கள் ஆன, அழுக்கு வண்ண மெலிந்த நாய்.
சுற்றி நடந்து கொண்டிருந்தது. முதலில் எல்லா நாயும் படுப்பதற்கு முன்பாக சுற்றுமே அப்படி சுற்றுகிறது என்று நினைத்தேன். சற்று நேரம் கழித்தே அந்த வினோதம் எனக்கு உரைத்தது. வலது பக்கம் சற்றே தலையை சாய்ந்தபடி, பொதி சுமக்கும் கழுதை தனது பாரம் கொண்ட உடலை சுமந்து ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து நடப்பதை போல, பாரம் கொண்ட தனது உடலை சுமந்து எட்டு வைத்து நடந்து கொண்டிருந்தது அது. பத்து அடி விட்டம் கொண்ட வட்ட பாதையில் வலது பக்கமாக சுற்றி சுற்றி சுற்றி நடந்து கொண்டு இருந்தது. நிறுத்தாமல்.
சற்று நேரத்துக்கு மேல் அந்த காட்சியை தாள இயலாது, சென்று அதன் முதுகை தொட்டு நிறுத்தினேன். என் கை அதன் முதுகில் இருக்கும் வரை நின்றிருந்த அது, கையை எடுத்ததும் வழக்கம் போல நடக்க துவங்கியது. பக்கத்து கடையில் பிஸ்கெட் வாங்கி, அதை முதுகை தொட்டு நிறுத்தி, பிஸ்கெட் போட்டேன். அதற்கு முன்பாக உணவு விழுந்த பிரக்ஞையே அதற்கு இல்லை. பிஸ்கட்டை எடுத்து அதன் மூக்கு அருகே பிடித்தேன். ஊஹூம் ஒரு சிறிய மாறுதல் கூட அதனிடம் இல்லை. அதன் முதுகை தொட்டு சுவாச உஷ்ணம் ஏறிய என் கையை விலக்கினேன். அது மீண்டும் அவ்விதமே நடக்க துவங்கியது. தாள இயலா எரிச்சலுடன் அதன் முதுகில் ஒரு அடி போட்டேன். நகர்ந்து அப்பால் போனான். நேராக அன்றி தனது அதே வட்ட பாதை நடையில். என்னவோ கசப்பு உள்ளே எழ மனதுக்குள் அதை திட்டிவிட்டு அடுத்து வந்த பேருந்தில் ஏறி, புதுச்சேரி மணிமாறன் சரவணன் உடன் இணைந்து புதுச்சேரி கடற்கரை வந்து சேர்ந்தேன். அதுவரை பின்தொடர்ந்தது அந்த நாயின் நினைவு. எப்போது அந்த நாய் அந்த சுற்று பாதை நடையை நிறுத்தும்? உடல் தளர்ந்து ஓயும்போதா? அல்லது உயிர் போகும்போதா…
புதுச்சேரி மொத்தமும் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருப்பதால், மாலைநேர கடற்கரை சாலை விளக்குகள் குறைந்து இருண்டு கிடந்தது. காந்தி சிலைக்கு எதிரே நேரு சதுக்கத்தில், பார்வையாளர் கேலரி படிக்கட்டில் அமர்ந்து புதிய சதி ஆலோசனையில் ஈடுபட்டுகொண்டிருந்த ஜெயமோகன் குழுவினர் உடன் சென்று சேர்ந்து கொண்டேன்.
தமிழகம் முழுக்க பரவி இருக்கும் மைய்ய ஆத்மீகத்துக்கு வெளியிலான சித்தர்கள் மரபு குறித்து ஜெ பேசிக்கொண்டு இருந்தார். அது முடிந்ததும் கலை விமர்சகர் மணிகண்டன் காலையில் மேல் சித்தாமூர் மடத்தில் தாங்கள் கண்ட பட்டாரகர் ஜெயமோகனுக்கு அளித்த ஆசி மடலை அளித்தார். எல்லோரும் அதை வாசித்துப் பார்த்தோம் நெகிழ்வாக இருந்தது. ஜெ வை பல்கலைக்கழகத்துக்கு கையளித்துவிட்டு இரவு உணவு தேடி ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கம் பிரிந்தோம்.
உணவு நேரத்தில் முனை சிபி என்னை சிறிய நேர்காணல் செய்தார். அடிப்படையில் பள்ளி கல்வியில் மக்கான நான் இலக்கியத்துள் வந்து அதை சிக்கெனப் பற்றிக்கொண்ட கதையை சொன்னேன். தலைமுறையாக ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்வதன் வழியே பிறந்த பலகீனமான உடல் கொண்ட பிள்ளை நான். என் நரம்பு அமைப்புகள் சார்ந்து எப்போதுமே கொதித்து கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவன் நான். என்னை தொடும் சிறிய துயர் சிறிய மகிழ்ச்சி போதும் அந்த கொந்தளிப்பை பெருக்கி கொள்ள. என் வாழ்நாளில், நார்மலாவே இருக்க மாட்டீங்களா நீங்க என்ற கேள்வி என்னை வந்து தொடாத ஒரே ஒரு வருடம் கூட இல்லை.
மனதின் இயல்பு எதையேனும் பற்றி விருத்தி அடைந்துகொண்டே இருப்பது. அறிவின் இயல்பு எதையேனும் உண்டு எரிந்து கொண்டே இருப்பது. உடல் கொண்ட இயல்பு இயங்கி கொண்டே இருப்பது. இந்த மூன்றையும் இவ்விதம் இயக்குவது விழைவும் யத்தனமும் கொண்ட ஆன்மா.
சும்மா இருக்கும் மனம் அறிவு உடல் இந்த மூன்றையும் அதை இயக்கும் ஆன்மாவின் இயல்பின் படி விட்டால் அது சென்று சேரும் இறுதி இடம் காமம்.
எனில் என்னை போன்று கொந்தளிப்பான ஒருவன் நிலையை யோசித்துக் கொள்ளலாம். நான் மனதுக்கு அது விருத்தி கொள்ள இலக்கியத்தை அளித்தேன். அறிவு அது பற்றி எரிய வரலாறு பண்பாடு அறிவியல் இன்ன பிறவற்றை அளித்தேன். உடலுக்கு அது இயங்கிக்கொண்டே இருக்க இந்தியா எனும் நில விரிவை அளித்தேன். எனது அத்தனை சமநிலை குலைவையும் அவ்விதமாகவே ஏற்றுக்கொண்டு என்னை பேணுபவர் ஜெயமோகனும் விஷ்ணுபுரம் நண்பர்களும். ஆகவே இங்கே இவ்விதம் சந்தோஷமாக இருக்கிறேன். என்று சொன்னேன்.
அப்படியே தொடர்ந்து சிபியும் நானும் ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவல் குறித்து பேசியபடி தங்கும் விடுதி வந்தோம். இரவு படுக்க 12 மணி ஆகும் என்பதால் நேரத்தை வீணாக்காமல் கலை குறித்த உரை ஒன்றை கேட்போம் என்று ஈரோடு கிருஷ்ணன் உடனடியாக தீர்ப்பு எழுதி பொறுப்பை கலை விமர்சகர் மணிகண்டன் வசம் கையளித்தார்.
மணிகண்டன் பண்டைய கலை துவங்கி இன்றைய கலை வழியே, நாம் ஒன்றை உள்ளுணர்ந்து எவ்வாறு அறிகிறோம், புலன்களும் மூளை அமைப்பும் கொண்ட பலம் பலவீனம் என்ன, அதிலிருந்து கலையை துயிப்பது என்பது எவ்விதம், ஓவியத்தில் கலைக்கும், கலை போலவே உடன் வரும் ஒன்றுக்கும் பேதம் காண்பது எப்படி, உருவ மற்றும் அருவ ஓவியங்களை அணுகுவது எப்படி என்பதை போன்ற அடிப்படைகளை சுருக்கமாக விளக்கி சென் ஓவியம் ஒன்றில் உரையை நிறைவு செய்தார்.
அடுத்து வந்த நான், மனிதர்களுக்கு அழகுக்கான தேவையை எவ்விதம் கலைகள் வழியே எய்தினர். கலையும் அழகும் பிரிக்க இயலாது எவ்விதம் முயங்கி இருக்கிறது. நவீன தமிழ் இலக்கியத்தில் அழகின் ஒவ்வொரு ரூபமும் இயல்புவாதம், யதார்தவாதம் என்ற அழகியல் முறைகள் வழியே அவற்றை எவ்விதம் அடைகிறோம். ஒவ்வொரு அழகியலும் அதன் தூய அழகு நிலையை அதன் கவிதை வழியே எவ்விதம் அடைகிறது. அழகு அறம் இவை கொண்ட தொடர்பு என்ன? இந்த தொடர்பின் பாரபட்சம், அதில் இருந்து ரா ஆர்ட் எவ்விதம் மேலதிக ஜனநாயக பூர்வம் கொண்டு வேறுபடுகிறது, பியூர் ஆர்ட் உணர்வுகளை மையம் கொள்வது போல, ரா ஆர்ட் உடலை எவ்விதம் மையம் கொள்கிறது. ரா ஆர்ட் இல்லாமல் கலை எவ்விதம் முழுமை பார்வையை அடைய இயலாது என்ற அடிப்படைகள் மீது ஒரு 15 நிமிட சிற்றுரை நிகழ்தினேன். எங்களது இரண்டு உரைகளும் நண்பர்களுக்கு மிகுந்த மகிழ்வும் நிறைவும் அளித்ததாக சொன்னார்கள்.
உரை முடிந்து உறங்கும் முன்னர் நண்பர் மணிகண்டன் வசம் பேசிக்கொண்டு இருந்தேன். இயல்புவாத தத்துவம் எவ்விதம் உருவானது அதை வளர்த்து எடுத்த ஆளுமைகள் குறித்து சொன்னார். தமிழில் பின்னவீன அக்கபோர்களை நான் போட்டு அடிப்பதன் ஒரு பகுதியாக ஃபூக்கோ போன்ற தத்துவவாதிகளையும் பொறுப்பை மறந்து சேர்த்து எப்படி அடிக்கிறேன் என்பதை சுட்டிக் காட்டினார். கதைகள் குறித்து பேசும்போது சமூக யதார்த்தம், இயல் கடந்த யதார்த்தம் இவை ஒரு கதைக்குள் இடம் பெறும்போது தவிர்க்க இயலாது இடம் பெற வேண்டிய பரிணாம கதி, அது இல்லாத போன (ஆனால் பெரிய பாராட்டு பெற்ற கதைகள்) அது இருப்பதால் கலை மேன்மை கொண்ட கதைகள் இவற்றை உதாரணம் சொல்லி விளக்கினார். மேலை கீழை மரபு என்பதன் அடிப்படை பேத புள்ளி என்ன என்ற எனது கேள்விக்கு, அதன் பிரபஞ்சவியல் பார்வையில் பாம்பு எனும் மைய உருவகத்தை கொண்டு அது பைபிளில் எவ்விதம் வருகிறது, சாங்கியத்தில் எவ்விதம் வருகிறது என்பதை வைத்து விடை தந்தார். எனக்கு மிக முக்கிய கல்வி தருணம் அது. இவற்றுக்கு வெளியே விஷ்ணுபுரம் இன்று தனது ஆக்கங்கள் வழியே சர்வதேச களனை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. சர்வதேச அளவில் அந்த ஆக்கங்கள் மீது எழுந்து வரும் கேள்விகளுக்கு பின்னே அவர்களுக்கு வளமான தத்துவ கலை தேடல் விளக்கங்கள், புரிந்து கொள்ள தேவையான கோட்பாடுகள் உண்டு. அதை எதிர் கொள்ளும் தத்துவ அறிமுகமும் அதை பிரயோகித்து உரையாடலை செழுமை செய்யும் கோட்பாட்டு அறிவும் நமக்கு தேவை. படைப்புகளை கொண்டு செல்லும் நாம் இதையும் கொண்டிருக்க வேண்டியதும் அவசியம் என்றார். பேசிக்கொண்டே இரவை விடிய வைத்தோம்.
விடிந்ததும் எல்லோரையும் காரில் அள்ளிப்போட்டுக்கொண்டு, பீச்சாங்கரையில் நடை பயின்று கொண்டிருந்த ஜெ உடன் சென்று சேர்ந்து கொண்டோம். ஜெ இந்திய செவ்வியல் கலைகளில் மரபு வகுத்த எல்லை, அதை மேலை மரபு தத்துவம் வழியே கடந்த நிலை, ஆப்ரிக்கா வின் கலை இந்த இரண்டும் இல்லாத காரணமாக அடைந்த தன்னெழுச்சியான வடிவ சாத்தியங்கள் வெளிப்பாட்டு முறைகள், அதன் ஒரு சிறிய பகுதி பிக்காசோ வழியே நவீன ஓவியத்துக்கு வந்தது எவ்விதம் இவற்றை விளக்கினார். அவர் பேசி முடித்ததும் வழக்கம் போல அவரை பல்கலைக்கழகத்துக்கு கையளித்துவிட்டு நண்பர்கள் காலை உணவுக்கு சென்றோம்.
உணவு மேஜையில் வழக்கம் போல, pt உஷா ஒரு பிழையான ரோல் மாடல் என்று தனது வாதத்தை ஈரோடு கிருஷ்ணன் துவங்க, மணிகண்டன் அதை தனது வாதங்கள் வழியே முறியடித்தார். உணவு முடித்து காரில் திண்டிவனம் நோக்கி வருகையில், கிருஷ்ணன் ” சீனு இன்னின்ன காரணங்களால் ஜெயமோகன் ஆக்கங்களை நான் டிஸ்மிஸ் செய்கிறேன். அந்த காரணங்கள் இவை. அப்டின்னு எதையெல்லாம் சொல்வீங்க” என்று கேட்டார். நான் அய்யோ அபச்சாரம் என்று அலறி இரு செவிகளையும் பொத்திக்கொண்டேன். ஓசூர் பாலாஜி ஜெயமோகன் சிந்தனை முறைமை குறித்து கேட்டார். வளர்ச்சி பெறாத ஒரு சிறிய சாத்தியம் அதை எடுத்துக்கொண்டு அதில் இருந்து வரலாறு பண்பாடு குறித்த காத்திரமான பார்வை ஒன்றை உருவாக்குவது, ஒன்றின் எதிர் நிலைக்கு சென்று சிந்தித்து பார்ப்பது, ஒன்றை அதன் பெரிய அளவுக்குள், சிறிய அளவுக்குள் வைத்து சிந்தித்து பார்ப்பது, சிறிய எல்லைக்குள் தான் அடைந்தவர்றை பொதுமை படுத்தி பெரிய எல்லைக்குள் போட்டு பார்ப்பது இவற்றை கிருஷ்ணன் சொன்னார்.
வழியில் தேநீர் கடையில் மற்றொரு காரில் இருந்து ஶ்ரீ வித்யா, ( இதில் ஶ்ரீ வித்யா என்னை சரண்யாவின் அப்பாவாக புரிந்து வைத்திருந்தார். நான் இப்படி அப்பா ஆனால்தான் உண்டு ஆகவே மகிழ்ச்சியாகவே இருந்தது) பானு மற்றும் பலரும் வந்து சேர்ந்து கொண்டார்கள். டீ குடித்தபடியே உரையாடல் நடுவே பானு சிறப்பு விருந்தினர் லெய்மா போவே அவர்களின் வாழ்வையும் பணியையும் குறித்து விவரித்தார். இந்த 2000 இல் கூட அந்த நிலத்தில் அப்படி ஒரு விழுமியம் நிலை கொண்டு நின்ற விதம் எனக்கு ஆச்சர்யம் அளித்தது. தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் நடந்தால் அது யூ டியூபர்களின் விளம்பர நிகழ்ச்சியாக மட்டுமே எஞ்சி இருக்கும். இதை கிருஷ்ணன் வசம் சொன்னேன். அவர் அசாமில் இப்படி ஒரு போராட்டம் நடந்து அது அளித்த வெற்றியை சொன்னார். டீ குடித்தபடியே பேசி முடித்து பல்கலைக்கழகம் நோக்கி கிளம்பினோம்.
இன்றைய தேதியில் தமிழ் நிலத்தில் பெரும்பாலான அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் அவற்றில் நிகழும் சீரழிவுகள் இவற்றை ஒரு சராசரி பொது மனம் கணக்கில் கொண்டால், அவை அளிக்கும் கௌரவங்களில் மகிழ ஏதும் இல்லை. ஆனால் இந்த பல்கலைக்கழக வேந்தர் தனசேகர் அவர்கள் எளிய பொருளாதார பின்புலத்தில் இருந்து ஒரு கிராமத்தில் இருந்து கிளம்பி வந்து தனது குணம் உழைப்பு நல்ல உறவுகள் வழியே இப்படி ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கி இருக்கிறார். இலக்கிய வாசகர். பிரபஞ்சன் அவர்களின் இறுதி தினங்களில் துணை நின்றவர். இந்த பல்கலைக்கழகம் வழங்கும் கௌரவத்தை ஜெ பெறுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது போக இந்த பல்கலைக்கழகம் இந்த விழா வழியே தனது மாணவர்களுக்கு யார் யாரை அவர்களின் முன் மாதிரியாக நிறுத்துகிறது என்பது இங்கே முக்கிய விஷயம். ஜெ அந்த கௌரவத்தை அந்த பல்கலைக்கழகத்துக்கு அளிப்பதும் முக்கியமானதே. வழி நெடுக, விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட பதாகைகளில் ஜெயமோகன் பாகுலேயன் “பிள்ளை” புன்னகைத்துக்கொண்டிருந்தார்.
பல்கலைக்கழகத்தின் விழா நடைபெறும் அரங்கம் நண்பர்களும் வாசகர்களும் நிறைந்து கலகலத்துக் கொண்டிருந்தது. அறையின் மையத்தில் நின்றிருந்த இருவரில் இவர் புகழ்பெற்ற வெள்ளை நிற டாவின்சி நிறுவன காலனி அணிந்திருந்தார். அவர் கமல் ஹாசன் கூட வாங்க கனவு காணும் வாட்ச் அணிந்திருந்தார்.
அவர் : யோவ் என்னையா செருப்பு இது. ராத்திரிக்கு ராபெரிக்கி ரா பாட்டுல தமன்னா போட்டிருக்க ஷு தானே இது. ஒரு தொழிலதிபர் போடுற ஷூ வாயா இது.
இவர்: நீ கட்டிருக்கிறது மட்டும் என்னவாம். நாலணா ஜவ்வு மிட்டாய் வாச்சிதானே. கல்வி அதிபர் கட்டுற வாச்சா இது.
அவர்: யோவ் இது எப்பிடி பட்ட வாச்சி தெரியுமா, ஸ்மார்ட் வாச் உம்மை விட இதுக்கு அறிவு சாஸ்தி…
(சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களில் ஷூ போட்ட சிறுவன் விஷ்ணுபுரம் உள்ளிட்ட பல தொழில்கள் புரியும் தொழிலதிபர் அரங்கசாமி என்றும், வாச்சு கட்டியவர் கல்வி சித்தப்பா சக்தி கிருஷ்ணன் என்றும் அறியப்படுகிறார்கள்)
நான் அரங்கசாமியை கண்டவிடத்து “இப்டி பண்ணிட்டீங்களே நாயக்கரே, பேனர்ல பாகுலேயன் பிள்ளை அப்டின்னு போட்டுடீங்களே. இந்நேரம் பேஸ்புக் பேக்குகள் எல்லாம் இதை பாத்திருக்குமே, மண்டைக்கு மேலே முடியும் உள்ளே மூளையும் இல்லாத அந்த முட்டா கூமுட்டைகள் எல்லோருக்கும் இந்நேரம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு சாதி கெட்ட சங்கம் அப்டின்னு தெரிஞ்சிருக்குமே. இப்டி பண்ணிட்டீங்களே நாயக்கரே, இப்டி பண்ணி இந்த நாடார் மனசை புண் படுத்திட்டீங்களே நாயக்கரே…” என்று பொங்கிவிட்டேன்.
நாயக்கர் ” இந்த பாருப்பா… விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் செய்யுற குத்ததுக்கு மட்டும்தான் நான் பொறுப்பு ஏத்துக்க முடியும். ஜெயமோகன் தாத்தா அவர் புள்ளைக்கு பாகுலேயன் பிள்ளை அப்டின்னு பேர் வெச்ச குத்தத்துக்கு எல்லாம் நான் பொறுப்பு ஏத்துக்க முடியாது” என்று கறாராக சொல்லி விட்டார். அறைக்குள் சாப்பாடு தயார் எனும் அழைப்பு வர, கிருஷ்ணன் ஜென்டில்மேன் ஆக இருக்க எவ்வளவோ முயற்சி செய்தார். முடியவில்லை. எல்லோரும் உணவு முடித்து விழா அரங்கம் வந்தோம்.
பட்டம் ஏற்கும் மாணவர்கள், விஷ்ணுபுரம் நண்பர்கள் இவர்களால் அரங்கம் நிரம்பி வழிய, பலர் நின்று கொண்டே விழாவை கண்டனர். குறித்த நேரத்தில் விழா துவங்கியது. பல்கலை கழக பட்டமேற்ப்பு விழா என்பதை முதன்முதலாக பார்க்கிறேன். வண்ண வண்ண கோட்டுகள். நான் பார்க்காத துவக்க சடங்குகள். எல்லோரும் கூம்பு தொப்பி அணித்து சிலுவை மாலை போட்டிருந்தால் அடுத்த வாடிகன் போப் தேர்வு சடங்கின் ஒரு பகுதி போலவே இருந்திருக்கும். மேடையில் என் பால்ய நாயகிகளில் ஒருவரான pt உஷா அவர்களை முதன் முறையாக கண்டேன். கம்பீரமாக இருந்தார். நான் ஜெ பேசி முடித்ததும் வெளியே சென்று விட்டேன். (மிச்சத்தை நாளை ஜெ தளத்தில் படித்துக்கொள்ளலாம்). வெளியே அரங்கில் இடம் போதாத நண்பர்கள் நின்றிருந்தார்கள். பவா அண்ணன் கட்டிக்கொண்டார். “பாவிகளா அமெரிக்காவையும் விட்டு வைக்க போறது இல்லையா… நல்லா இருங்க தம்பிகளா” என்று அவர் ஸ்டைலில் வாழ்த்தினார்.
ஜனகனமன முடிந்ததும் அறைக்குள் வந்து எட்டிப்பார்த்தேன் லெமா புள்ளை குட்டிகள் சகிதம் சூழ பேரன்னையாக அமர்ந்திருந்தார். அவரையும் உஷா அவர்களையும் சுற்றி விஷ்ணுபுரம் நண்பர்கள். அடுத்து ஜெயமோகன் இருக்கும் அறைக்குள் எட்டிப்பார்த்தேன். ஒரே கோலாகலம். நண்பர்கள் வெள்ளத்தில் மைய்ய சுழியில் ஜெ. கட்டி அணைத்தல், முத்தமிடல், மாலைகள்,சால்வைகள்,ஆசிகள்,புகைப்படங்கள்…
எல்லாம் முடிந்து நண்பர்கள் சூழ வெளியேறி ( டாக்டர் எனக்கு ஊசி வேண்டாம் மாத்திரையே போதும். இனிப்பு மாத்திரை என்று சொல்ல நினைத்தேன் அதற்குள்) ஜெ கார் ஏறி விடை பெற்று கிளம்பி தூரத்தில் மறைந்து போனார்.
எல்லோரிடமும் விடை பெற்று நான் மணிமாறன் சரவணன் மூவரும் காரில் பாவண்ணனை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி புறப்பட்டோம். காரில் உரையாடலின் ஒரு பகுதியாக தஞ்சை சுந்தரம் அவர்கள் எழுதிய மங்கல இசை மன்னர்கள் நூல் குறித்து நண்பர்களுக்கு சொன்னேன். பாவண்ணன் அந்த நூலை வாசிக்க சொல்லி கிரா தன்னிடம் தந்ததை நினைவு கூர்ந்தார். 1850 முதல் 1950 வரை கோயில் கலையில் நாதஸ்வரம் தவில் இசை இவற்றை பேணிய அதன் சிறந்த ஆளுமைகள் சிலர் குறித்து சொன்னார். பேச்சு பாவண்ணன் மொழியாக்கம் செய்த காகா காலேல்கர் எழுதிய இமயமலை ஒரு பண்பாட்டு பயணம் நூல் நோக்கி நகர்ந்தது. 1912 இல் காலேல்கர் செய்த பயணம் அது. அதன் சுவாரசியங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டார். இனி மொழியாக்கம் பக்கமே போக கூடாது என்று நினைத்திருந்தேன் காலேல்கர் செய்த பயண அனுபவம் அந்த உறுதியை உடைத்து விட்டது என்று சொல்லி சிரித்தார்.
எல்லோரும் ஒன்றாக இரவு உணவருந்தி அவரவர் இல்லம் நோக்கி பிரிந்தோம். வீடு செல்கையில் ரத வீதியில் தேர் முக்கில் ஏதோ நாய் சண்டை. ஏதாவது புது நாய் ஏரியா விட்டு ஏரியா வந்திருக்க கூடும். நான் அதை கடந்துதான் வீடு போக வேண்டும். கடந்து செல்லும்போது கண்டேன் அந்த ஏரியா நாய்கள் சுற்றி நின்று குலைத்துக்கொண்டிருக்க, நடுவே நிதானமாக சுற்றி சுற்றி நடந்துகொண்டு இருந்தது நேற்று மதியம் கண்ட அந்த நாய்.
கடலூர் சீனு.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

