குட்டி இளவரசிகள், குட்டி இளவரசர்கள்!
வணக்கம் இனிய திரு. ஜெயமோகன்
நான் சிவா. நலமா?
சமீப காலமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான இளம்பெண்கள் “Little Princess syndrome” (செல்ல சிற்றரசி மனநிலை?) எனும் புதிய வகை மனநோய்க்கு உள்ளாக்கபடுகின்றார்களோ என்ற ஐயம் எனக்கு உண்டு.
நான் கண்ட வரை தமிழ்நாட்டு பெண் குழந்தைகள் ஆண்குழந்தைகளைவிட அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்படுகிறார்கள்.. அதன் காரணமாகவே மற்ற யாரைவிடவும் தான் சிறந்த, ஒரு வித அதிசய பிறவி எனும் எண்ணத்தோடே வளர்கின்றார்கள். இந்த “லிட்டில் பிரின்சஸ்” மனநிலை பேதை, பெதும்பைகளில் ஆரம்பித்து பேரிளம்பெண்ணாகியம் தொடர்வது காணுந்தோறும் குமட்டலை தருகின்றது.
காரின் கூரை ஜன்னலை திறந்து தலையை வெளியே காட்டி “நகர்வலம்” வரும் மனநிலையை பெண் குழந்தைகள் எங்கிருந்து கற்றனர்? அந்த மனநிலையின் அடிப்படை காரணம் என்ன? (பொடியன்கள் யாரையும் பெரிதாக அப்படி கண்டதில்லை) இதனை ஊக்குவிக்கும்/ அனுமதிக்கும் பெற்றோரின் மனநிலை என்ன? பெரும்பாலான பெண் குழந்தைகள் தான் ஒரு தமிழ் பட கதாநாயகி என்னும் மன நிலையிலேயே வளர்கின்றார்கள்/ ளா?
இப்படி “தமிழ் பட கதாநாயகி” மனநிலையில் வளரும் குழந்தையை விதந்தோதி ரசிக்கும் பெற்றோர்., அப்பெண் அடுத்த கட்டமாக “பருவத்தில்” அகசுரப்பிகள் ஆணைக்கிணங்க அவள் ஒரு ஆண் துணை தேடினால் ஏதோ அவர்களின் அப்பாவி இளவரசியை வேற்றான் சீரழித்து விட்டதாக சினம் கொண்டு அவன் தலை வெட்டுகின்றார்கள்! (ஆண் பெண் பாலியல் உறவுகள் இயல்பாக கொள்ளப்படவேண்டும் (கொல்லப்பட அல்ல!) என்பதுதான் மானுடத் தரத்தில் முன்னேறிய பண்பட்ட சமூகங்களின் கருத்து) ஆனால், இந்தியாவை போன்ற ஏழாம் உலகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நிலத்தின், வாழும் சூழலின் நிதர்சனத்தை புகட்டாமல் ஒரு வித கற்பனை உலகில் வாழவிட்டு, பின் அப்பாவி ஆண் ஒருவனை தலை வெட்டும் கோணல் தர்க்கம் எனக்கு விளங்கவே இல்லை. (தர்க்கரீதியாக சிந்திக்கக்கூடிய தளத்தில் அவர்கள் இன்னும் மனித பரிமாண தரநிலையில் உயரவில்லை என்று புரிகின்றது)
இவ்வாறாக காரின் கூரையை திறந்து நிற்பதில் ஆரம்பிக்கும் லிட்டில் பிரின்செஸ்களின் அராஜகம் எவனோ ஒருவனின் வாழ்க்கையை தலைவெட்டி முடிப்பதில் நிற்கின்றது.
உண்மை உரைத்தால், இது இந்த இளையோரின் தவறல்ல. கடந்த சில தலைமுறை பெற்றோரின் தவறு!
மேலே சொன்ன எதுவும் மாதம் 7500 ஊதியத்திற்கு நாள் முழுவதும் நின்று வேலை செய்யும் பெண்களுக்கோ, வெயிலிலும், மழையிலும் சாலை ஓரம் நாள் முழுதும் அமர்ந்து பூ, பழம், காய்கறி, மீன் இன்னபிற விற்கும் பெண்களுக்கோ பொருந்தாது. நான் கண்டவரை தமிழ்நாட்டில் பெரும்பாலான பேரழகிகள் இவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
உங்கள் நேரத்துக்கு நன்றி
சிவா
*
அன்புள்ள சிவா,
ஒரு பார்வையில் சட்டென்று ஒரு சரியான சமூக அவதானிப்பு என்று இது தோன்றலாம். அல்லது ஒரு நேர்மையான எதிர்வினை என்றாவது சிலர் எண்ணலாம். ஆனால் இது ஒரு பொதுவான மனப்பதிவு மட்டுமே.
முதலில் நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி, பெண்குழந்தைகள் மட்டுமா இப்படி வளர்கிறார்கள்? உடனடியான பதில் இல்லை என்பதே. பைக் வாங்கித்தரவில்லை என தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்களைப் பார்க்கிறோம். மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் வருமானம் உள்ள தந்தையின் மகன் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள காலணிகளை அடம்பிடித்து வாங்கியதை அண்மையில் அறிந்தேன். ஏற்கனவே பதினெட்டு ஜோடி காலணிகளை அவன் வைத்திருக்கிறான். நம் பெண்குழந்தைகள் எந்த அளவுக்கு கொஞ்சிச்சீராட்டி வளர்க்கப்பட்டு, உலகமறியாமல் இருக்கிறார்களோ அதைவிட பலமடங்கு ஆண்குழந்தைகள் ‘இளவரசு மனச்சிக்கலில்’ இருக்கிறார்கள்.
நேற்றுத்தான் ஓர் அம்மையார் தன் மகன்கள் இருவரும் ‘அம்மா கையால் சமைத்தால் மட்டுமே சாப்பிடுவோம்’ என உறுதியாக இருப்பதாகவும், ஒவ்வொரு நாளும் ‘மெனு’ அவர்களால் அளிக்கப்படும் என்றும், இருவருக்கும் தனித்தனியாக சமைப்பதற்காக ஒருநாளில் பத்து மணிநேரம் சமையலறையில் செலவழிவதனால் தன்னால் வாசிக்க முடியவில்லை, யோகப்பயிற்சிகூட செய்யமுடியவில்லை என்று சொன்னார். ஆனால் அவர் அதைப்பற்றிக் குறைப்பட்டுக் கொள்ளவில்லை., தன் மகன்களின் ‘பேரன்பை’ எண்ணி கண்கள் பனிக்க அதைச் சொன்னார்.
நண்பர் கிருஷ்ணன் கல்லூரி மாணவர்களுக்கான திறன்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி. அதற்காக மாணவர்களிடம் தேர்வுகள் நடத்தும்போது மாணவர்கள் மிதமிஞ்சிய தன்னம்பிக்கை, கட்டற்ற அலட்சியம் ஆகியவற்றுடன் முழுமையான அசடர்களாக இருப்பதைத்தான் கவனித்ததாகச் சொன்னார். அவர்கள் தங்கள் குடும்பங்களில் சீராட்டப்படுவதனால் தாங்கள் ஏதோ அபூர்வப் பிறவிகள் என நினைக்கிறார்கள். எதையும் தெரிந்துகொள்ள ஆர்வம்கொள்வதே இல்லை. பொறியியலில் மதிப்பெண்ணை எப்படியாவது பெற்றுவிட்டால் நேராக அமெரிக்கா – அதுதான் பலரின் கனவு. பலநூறு பேரில் ஒருவர் மட்டுமே ஏதேனும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
மாறாக மாணவிகள் வீடுகளில் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். கண்காணிக்கப்படுகிறார்கள். அகவளர்ச்சிக்கான எல்லா வாய்ப்புகளும் அடைபட்டுள்ளன. அவர்கள் அதை மீறி வெளிக்கிளம்ப வேண்டியுள்ளது. ஆகவே ஆர்வம் கொண்டவர்களாக, முயற்சி செய்பவர்களாக இருக்கிறார்கள். இதுதான் உண்மையில் நடுத்தர, கீழ்நடுத்தரக் குடும்பங்களின் இன்றைய யதார்த்தம். உயர்நடுத்தரக் குடும்பங்களிலும் உயர்குடும்பங்களிலும் மட்டும்தான் ஒரு பகுதிப் பெண்கள் நீங்கள் சொல்லும்படி ‘இளவரசி மனச்சிக்கல்’ கொண்டவர்களாக வளர்க்கப்படுகின்றனர்.
இதற்கான காரணங்களை நான் இவ்வாறு ஊகிக்கிறேன். சென்ற தலைமுறை வரை குடும்பங்களில் குழந்தைகள் ஒருவகையான புறக்கணிப்பையே அடைந்தனர். அவர்களுக்கு என்று உரிமைகள் ஏதுமில்லை. இல்லங்களில் சோறுபோடுவார்கள், துணிமணி வாங்கித்தருவார்கள், படிக்கவைப்பார்கள், அவ்வளவுதான். அவர்களுக்கென தனிவாழ்க்கைகூட இல்லை. அன்றைய குடும்பங்களில் எவருக்கும் அந்தரங்கம் என ஏதும் இல்லை.
இன்று காலம் மாறிவிட்டது. சிறுகுடும்பங்கள் அமைந்துள்ளன. பெரும்பாலான இல்லங்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே. ஆகவே அவர்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அத்துடன் சென்ற தலைமுறையைப் போலன்றி இப்போது எல்லா குடும்பங்களிலும் பிள்ளைகள் மேல் படிப்பு சார்ந்த பெரும் எதிர்பார்ப்பு சுமத்தப்படுகிறது. படிப்பு மாபெரும் போட்டியாக ஆகியுள்ளது. மாணவப்பருவமே இடைவிடாத போட்டிதான். இந்த போட்டியில் தங்கள் பிள்ளைகளை முன்னிறுத்தும் வெறிகொண்ட பெற்றோர் அவர்களை சண்டைக்கோழிகளைப்போல பராமரிக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு அடிமைபோலப் பணிவிடை செய்யும் பெற்றோரை இப்போது எங்கும் காண்கிறோம். பெற்றோரை அடிமைகளாக வேலைவாங்கும் குழந்தைகளும் எங்கும் உள்ளனர். ‘நான் படிக்கிறேன், ஆகவே என் பெற்றோர் எனக்கு அடிமைப்பணி செய்யவேண்டும்’ என நம் பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் கூடவே நாம் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. அப்பெற்றோர் அக்குழந்தைகளுக்கு இளமைக்காலத்தையே மறுத்துள்ளார்கள், அவர்களுக்குச் செய்யப்படும் உபச்சாரமெல்லாம் அவர்கள் பந்தயம் கட்டியுள்ள சேவலுக்குச் செய்யும் பராமரிப்பு மட்டும்தான். இது அக்குழந்தைக்கு 2 வயது ஆகும்போதே தொடங்கிவிடுகிறது.
மேலைநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், வெள்ளையினத்தாரின் குடும்பங்களுக்குச் சென்றுள்ளேன். அங்கே இந்த தலைமுறையில் நாம் நம் குழந்தைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், உரிமை எல்லாம் இரண்டு தலைமுறைக்கு முன்னரே வந்துவிட்டன. ஆனால் கூடவே அக்குழந்தைகளுக்கான பொறுப்புகளையும் மரியாதைகளையும் கற்பித்துள்ளனர். சொல்லாமலேயே வெள்ளைக்குழந்தைகள் குடும்பத்தில் அவர்களுக்குரிய பொறுப்புகளைச் செய்வதை கவனித்துள்ளே. நாம் முக்கியத்துவம், உரிமை ஆகியவற்றை பிள்ளைகளுக்கு அளிக்கிறோம்; இன்னமும் கடமைகளையும் மரியாதைகளையும் கற்பிக்க ஆரம்பிக்கவில்லை.
இந்த காலமாற்றத்தின் நடுவே சிக்கிக்கொண்ட குழந்தைகளே இன்று தங்களை இளவரசர், இளவரசியர் என எண்ணிக்கொள்பவர்கள். ரயிலில் ஒருமுறை நள்ளிரவில் ஒரு 6 வயது குழந்தை ஒரு குறிப்பிட்ட பிஸ்கெட் தின்றேயாக வேண்டும் என அடம்பிடித்து அலறி அந்தப் பெட்டியையே கதிகலங்கவைக்க, அதன் தந்தை ரயில் நிற்கும் இடங்கள் தோறும் பிஸ்கெட்டுக்காக ஓடி ஓடி அலைபாய்ந்தார். அந்த பிஸ்கட் கிடைக்கவில்லை. அக்குழந்தை ஒருமணிநேரம் மேலும் கதறியபின் தூங்கியது. அதற்குள் அந்த தந்தை உலகத்தையே வாக்குறுதியாக அளித்துவிட்டார். நான் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ ஜப்பானிலோ எங்கும் பொதுவெளியில் இப்படி ஒரு குழந்தை அலறி ஆர்ப்பாட்டம் செய்வதை ஒருமுறைகூட கண்டதில்லை.
உண்மையில் சிக்கல் எங்குள்ளது? முதலில் அப்பெற்றோரிடம். அடுத்தபடியாக ‘குழந்தைதானே’ என அக்குழந்தையை மன்னிக்கும் சகப்பயணிகளிடம். அக்குழந்தை ஒரு மனச்சிக்கலில் இருக்கிறது, எதிர்காலத்தில் அக்குழந்தை இந்த உலகை எதிர்கொள்வதில் பல பிரச்சினைகள் உருவாகும், அது சுயமையப் பார்வைகொண்டதாக இருக்கும், அதனால் சகமனிதர்களின் மனத்தை புரிந்துகொள்ளவே முடியாது, ஆகவே கடுமையான உறவுச்சிக்கல்கள் உருவாகும். அதை அப்பெற்றோரிடம் இங்கே எவருமே சொல்வதில்லை.
(நான் ஒருமுறை இந்தச் சிக்கலைச் சுட்டிக்காட்டி இந்த தளத்தில் எழுதினேன். முகநூல் முழுக்க எனக்கு வசை. குழந்தைத்தெய்வங்களை மனநோயாளி என்று சொல்கிறேன் என்றெல்லாம் திட்டித்தள்ளினார்கள். உண்மையில் அந்த மனநோய்க்கும்பல்தான் இங்கே குழந்தைகளை மனநோயாளியாக ஆக்குகிறது)
சென்ற தலைமுறையில் பெண்கள் ஒடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு கல்வி, பொருளியல் உரிமை, வாழ்க்கையை தெரிவுசெய்யும் உரிமை ஆகியவை மறுக்கப்பட்டன. அதற்கு ஈடு செய்யும்பொருட்டு இன்றைய தலைமுறையில் பெண்குழந்தைகளை ‘கொஞ்சி’ வளர்க்கவேண்டும் என பல தந்தையர் எண்ணுகிறார்கள். அந்த மனநிலை நல்லதுதான். ஆனால் அந்த வெளிப்பாடு சரியானது அல்ல.
பெண்குழந்தைகளுக்கு ‘செல்லம்கொடுப்பது’ என்பது அவர்களுக்கு நன்மை செய்வது அல்ல. கொஞ்சலாம், கொஞ்சுவது ஒரு தந்தையின் பேரின்பம். அதை இழக்கவேண்டியதில்லை. ஆனால் அவர்களுடன் உரையாடலில் இருப்பதே முக்கியமானது. இந்த உலகை அவர்களுக்கு புரியவைக்கவேண்டும். அறிவார்ந்த தகுதி கொண்டவர்களாக அவர்களை ஆக்கவேண்டும். அவர்கள் தங்களுக்கு உகந்த களங்களில் செயல்படுவதற்கான வழிகளை அமைத்துத்தரவேண்டும். அதில் சிக்கல்கள் வரும்போது உடனிருக்கவேண்டும். உணர்ச்சிகரமாகவும், அறிவார்ந்தும்.
ஒரு குழந்தையை உலகம்தெரியாத, உலகமே தனக்கு பணிவிடைசெய்யவேண்டியது என்ற எண்ணம் கொண்ட, ஓர் அசடாக வளர்க்கும் பெற்றோர் அக்குழந்தையை சீரழிக்கிறார்கள், அதற்குப் பெரும் அநீதியை இழைக்கிறார்கள். அது தன் செயற்களத்தைக் கண்டடையவும் அதில் போராடிவெல்லவும் உதவும் பெற்றோர் மட்டுமே உண்மையாக அதற்கு ஏதேனும் நன்மை செய்கிறார்கள்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

