அத்வைதவேதாந்தத்திற்கு இன்றைய நடைமுறைப்பயன் என்ன?

அனலும் புனலும் இந்திய இலக்கியத்தில் வேதாந்தம்

வேதாந்தம் பற்றி அல்லது அத்வைதம் பற்றி பரவலாகக் கேட்கப்படும் கேள்வி அதன் இன்றைய பயன்பாடு என்ன என்பதுதான். பெரும்பாலானவர்கள் அது ஒரு தொன்மையான நம்பிக்கை அல்லது கொள்கை என்ற எண்ணத்தை கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு அதற்கு நடைமுறைப் பொருத்தம் என்று எதுவுமில்லை என்றும், ஆகவே இளமையில் அதை எந்த வகையிலும் அறிந்துகொள்ளவோ அதன் அடிப்படையில் வாழ்க்கையை புரிந்துகொள்ளவோ தேவையில்லை என்றும் நினைக்கிறார்கள். அது பழமையான ஒரு நம்பிக்கை என்பதனால் வாழ்வின் இறுதிக்கட்டத்திலிருக்கும் முதியவர்களுக்கு ஆறுதலையும் உறுதிப்பாட்டையும் அளிக்கிறது என்றும், அது அவர்களுக்கே உரியது என்றும் நம்புகிறார்கள்.  

இந்தக் கூற்றில் பல பகுதிகள் உள்ளன. ஒன்று, அத்வைதம் உண்மையில் ஒரு நம்பிக்கையா? அது தொன்மையானது மட்டும்தானா? இவ்விரண்டு கேள்விகளுக்கும் பதிலளித்தாலொழிய மூன்றாவது கேள்விக்கு விடை தேட முடியாது. வேதாந்தம் தமிழ் விக்கி, அத்வைதம் தமிழ் விக்கி.

அத்வைதம் என்பது ஒரு நம்பிக்கை அல்ல. அத்வைதி அத்வைதத்தை ‘நம்பி’ ஏற்றுக்கொள்பவன் அல்ல. ஏனெனில் அத்வைதம் அல்லது வேதாந்தம் புறவயமான, திட்டவட்டமான  தர்க்கக் கட்டமைப்பு கொண்டது. நம்பிக்கையின் வழியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அதாவது தர்க்கமனம் கொண்டவர்கள், ஆகவே அறிவார்ந்த பயணம் கொண்டவர்கள் மட்டும்தான் வேதாந்தத்தை நோக்கி வருகிறார்கள். அவர்களால் எளிதாக ஒரு மத நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது. அந்த நம்பிக்கை மீது அவர்கள் முடிவில்லாத தர்க்கபூர்வமான கேள்விகளைக் கேட்பார்கள். அக்கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்தாலொழிய அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள்.

அத்வைத வேதாந்தம் ஒரு நம்பிக்கை அல்ல என்பது மட்டுமல்ல, அது எல்லாவகையான நம்பிக்கைகளுக்கும் எதிரானதும் கூட. ஆகவே அது மதநம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானதுதான். அது இந்து மதத்தில் உருவான ஒன்றென்பதனால் மட்டும் இந்து மதத்தின் ஒரு பிரிவு என்று சொல்லிவிடமுடியாது. உண்மையில் அத்வைதம் இந்து மதத்திற்கு ஆதரவான ஒன்று கூட அல்ல. இந்துமதம் என்று பிறவகையில் குறிப்பிடப்படும் எல்லாவகையான நம்பிக்கைகளையும் கடந்த ஒன்றாகவே அத்வைதம் தன் தூய நிலையில் உள்ளது. ஆகவே அதை ஒரு நம்பிக்கை அல்லது ஒரு மதச்சார்பு என்று கொள்வது முற்றிலும் பிழையான ஒன்று. அத்வைதம் அல்லது வேதாந்தத்தைப் பற்றிய முழுமையான அறியாமையில் இருந்து வரும் எண்ணம் அது. கடந்த ஆயிரமாண்டுகளில் அத்வைதத்தை இந்துமதம் இழுத்துக்கொண்டுவிட்டது. அத்வைதமடங்கள் இந்து வழிபாட்டுமுறைகளின் தலைமையகங்களாக உள்ளன. ஆகவே இந்த எண்ணம் உருவாவது எளிதானது. ஆனால் கற்பவர் இந்த பிழைபுரிதலைக் கடந்தாகவேண்டும்.

இரண்டாவதாக கேட்கவேண்டிய கேள்வி, அத்வைதம் பழைமையானதா? அது காலாவதியானதா? அத்வைதம் சங்கரரால் பொதுயுகம் ஒன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் அது வேதாந்தம் என்ற பெயரில் சுட்டப்பட்டது. வேதாந்தம் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளாக இந்திய நிலத்தில் உள்ளது. திட்டவட்டமாக அதை வகுத்துரைக்கும் நூல் பிரம்ம சூத்திரம். அதற்கு இன்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் தொன்மை இருக்கலாம். அதற்கும் முன்னால் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகள் அது ஒரு விவாதப்பொருளாக இருந்திருக்கலாம் என்று வெவ்வேறு நூல்கள் நமக்கு காட்டுகின்றன.

இக்குறிப்பிட்ட சிந்தனை மரபு ‘வேதத்தின் முடிவு’ ‘வேதத்தின் இறுதிச்சொல்’ என்ற அர்த்தத்திலேயே வேதாந்தம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே வேதங்களின் தொன்மை அதற்குண்டு என்றுதான் பொருள். வேதங்கள் ஐந்தாயிரம் அல்லது ஆறாயிரம் ஆண்டுகள் தொன்மையானவை என்று கொள்ளப்பட்டால் வேதாந்தமும் அந்த அளவுக்கு தொன்மையானதே.

அத்தனை தொன்மையான ஒரு தரிசனம் எப்படி சமகாலத்திற்கு பொருத்தமானதாக அமையும் என்ற கேள்விக்கான பதில் ஒன்றே. எல்லா மெய்யான தத்துவ தரிசனங்களும் மிகத் தொன்மையானவையாகவே இருக்கும். ஒரு தத்துவ தரிசனம் முற்றிலும் புத்தம்புதிதாக உருவாக முடியாது. தத்துவம் என்பது மலைகளைப்போல. மலைகள் மனிதன் உருவாவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துகொண்டிருக்கின்றன; அதேசமயம் இப்போதும் நம் கண்முன்னால் ஒரு சமகால யதார்த்தமாக நின்றுகொண்டிருக்கின்றன. அவை கடந்த காலத்தை சேர்ந்தவை அல்ல, காலமின்மை கொண்டவை. அதே போலத்தான் தத்துவங்களும் காலம் கடந்த தன்மை கொண்டவைதான்.

தத்துவத்துக்கான விளக்கம் அல்லது தர்க்க முறைகள் காலத்துக்கேற்ப மாறுகின்றன. தத்துவ தரிசனம் என்பது பெரும்பாலும் மனித சிந்தனை தோன்றிய காலத்திலேயே உருவாகி, மனிதனுடன் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஒன்றாகவே இருக்கும். இது எல்லா தத்துவ அடிப்படைத் தத்துவ தரிசனத்துக்கும் பொருந்தும். அத்வைதமும் வேதாந்தமும் அத்தகைய ஒன்றே. அத்வைதம் வேதாந்தத்தின் தர்க்கமுழுமை கொண்ட அடுத்த கட்ட பரிணாமமாக சங்கரர் உருவாக்கியது.

வேதாந்தம் வேதங்களில் தோன்றியது; உபநிஷத்துகளில் வளர்ந்தது; பிரம்ம சூத்திரத்தில் வரையறுக்கப்பட்டது; கீதையில் கவித்துவமாக விளக்கப்பட்டது; சங்கரரால் அத்வைதமாக தர்க்கப்படுத்தப்பட்டது. அதன்பின் தொடர்ச்சியாக அறிஞர்களால் அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கும் இயல்புக்கும் ஏற்ப மறுவிளக்கம் அளிக்கப்பட்டுக்கொண்டே இன்று வரை நீடிப்பது

அத்வைதம் நவீன இந்தியாவில் புத்தம் புதிய சிந்தனையாக நம் மரபிலிருந்து மறுவுருக்கொண்டு ழுந்து வந்தது, அதை நவவேதாந்தம் என்று நாம் சொல்கிறோம். (நவவேதாந்தம், தமிழ் விக்கி ) நவவேதாந்தத்தின் ஞானிகள் என ஒரு பெரும் பட்டியலையே நம்மால் கூறமுடியும். அவர்களில் ஒளிமிக்க முகம் ராமகிருஷ்ண பரமஹம்சர், அவருடைய மாணவரும் அத்வைதத்தை சர்வதேச அளவுக்குக் கொண்டு சென்றவருமாகிய விவேகானந்தர் அதன் மகுடம் என்று சொல்லலாம். நாராயணகுரு அத்வைதியே. அவருடைய மாணவர் நடராஜகுரு, அவருடைய மாணவர் நித்ய சைதன்ய யதி ஆகியோர் அத்வைதத்தை நவீன அறிவியலுக்கும் நவீன தத்துவத்திற்கும் நவீன இலக்கியத்திற்கும் பொருந்துவதாக வளர்த்து எடுத்தனர்.

அத்வைதம் எந்த அளவுக்கு தொன்மையானதோ அந்த அளவுக்கு சமகாலத் தன்மை கொண்டதுமாகும். அத்வைதத்துக்கு எல்லாக் காலத்திலும் அந்தக் காலகட்டத்தின் மகத்தான சிந்தனையாளர்களின் விளக்கமும் விரிவாக்கமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது ஆகவே அது ஒரு சென்றகாலச் சிந்தனை என்பது அபத்தமானது. சிந்தனையின் பரிணாமத்தை அறியாத ஒரு கூற்று அது .

அத்வைதம் இன்று எப்படி ஒருவருக்கு உதவும் என்ற கேள்வியைக் கேட்கலாம். இன்று அத்வைதம் புதிய விளக்கங்களுடன் விரிவாக்கங்களுடன் நீடிக்கிறது என்பதே அதன் இன்றைய பொருத்தப்பாட்டிற்கான சான்றாகும். இன்று நமக்கெழும் தற்காலிகமான இந்தக் காலகட்டத்திற்கு மட்டுமே உரிய வினாக்களுக்கான விடைகளை அத்வைதம் போன்ற அடிப்படைத் தத்துவ தரிசனங்கள் தருவதில்லை. அத்வைதம் காலாதீதமானது, என்றென்றும் உள்ளது. ஆகவே என்றென்றும் உள்ள காலாதீதமான மானுடப் பிரச்னைகளுக்கான விடைகளைத் தான் அது நேரடியாக வழங்குகிறது. மனிதனின் இருப்பு, பிரபஞ்சத்துக்கும் அவனுக்குமான உறவு, பிரபஞ்சச் செயல்பாட்டின் பொருள்-  என மனிதன் என்றும் சென்று முட்டிக்கொண்டே இருக்கும் முடிவிலாக் கேள்விகளுக்கான விடைகளைத்தான் அத்வைதத்தில் தேடவேண்டும். ஒரு மெய்ஞான தரிசனமாக அத்வைதத்தின் பணி அந்த வினாக்களுக்கான விடைகளுடன் வந்து நிற்பதே ஆகும்.

இன்று ஒருவனுக்கு அவனுடைய  அன்றாட வாழ்க்கையில் எழும் எளிய கேள்விகளுக்கான பதில்களை அத்வைதம் நேரடியாக அளிப்பதில்லை. ஆனால் தத்துவார்த்தமாக ஒருவன் யோசித்தான் என்றால், அன்றாட வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு எளிய கேள்விக்குமான விடை என்பது என்றென்றும் உள்ள தத்துவ விடைகளில் இருந்துதான் பிறக்க முடியும் என அறிவான். இன்று எனக்கு நோய் வருகிறது, நான் குணமடைகிறேன். என் உறவினர் ஒருவர் இறந்துபோகிறார், என்னைத் தெரிந்தவருடைய வணிகம் நொடித்துப்போகிறது. இவை அனைத்தும் அன்றாடம் சார்ந்த சிக்கல்களே. அவற்றுக்கான விடைகளும் அன்றாடம் சார்ந்தவையாகத்தான் இருக்க முடியும். ஆனால் அவ்விடைகளை நோக்கி நாம் செல்லும்போது சந்திக்கும் அடிப்படைக் கேள்வி என்பது இங்கு மானுட வாழ்க்கை எவ்வண்ணம் நிகழ்கிறது, காலத்துடனும் பிரபஞ்ச வெளியுடனும் அதற்கான உறவென்ன என்பதாகவே இருக்கமுடியும்  அக்கேள்விக்கான விடையை அத்வைதம் அளிக்கிறது.

ஓர் அத்வைதி அத்வைதத்தை கற்றுக்கொள்வது என்றென்றைக்குமான மெய்ஞான விடைகளுக்காகவும், அந்த விடைகளிலிருந்து கிளைத்தெழும் அன்றாடக் கேள்விகளுக்கான விடைகளுக்காகவும் தான். அத்வைதம் போன்ற அடிப்படைத் தரிசனம் மட்டுமே வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திற்கும் செல்லும் கேள்விகளுக்கான பதில்களை அளிக்க முடியும். ஓர் இலக்கியப் படைப்பின் அழகு என்பது என்ன என்ற கேள்விக்கான விடையை அத்வைதத்தில் தேட முடியும். ஒரு மனிதன் பிறந்து மடிவதன் பொருளென்ன என்ற கேள்விக்கான விடையையும் அது அளிக்கும் .ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்குமான உறவின் அடிப்படை என்னவாக இருக்கமுடியும் என்ற கேள்விக்கும் அத்வைதத்தில் இருந்து விடை காணமுடியும். அதிலிருந்து கிளைக்கும் விடையை நமக்கும் நம் மனைவிக்குமான உறவின் பொருளென்ன, நமக்கும் நம் குழந்தைகளுக்குமான உறவு எப்படி அமையவேண்டும், நமக்கும் நம்முடைய பணியாற்றும் அலுவலகத்துக்குமான ஊடாட்டம் எப்படி அமையவேண்டும் என்று அனைத்து தளங்களிலும் விரிவாக்கிக்கொள்ளவும் முடியும். அதாவது அன்றாடவாழ்வுக்கான நேரடி விடைகள் அத்வைதத்தில் இல்லை, ஆனால் அத்வைதம் அவ்விடைகளை நாமே அறிவதற்கான பார்வையை நமக்கு அளிக்கும்.

எது என்றென்றைக்கும் உள்ள விடைகளை அளிக்கிறதோ அது மட்டுமே அன்றன்றைக்குமான விடைகளையும் அளிக்க முடியும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.