வால்நட் கிரீக் நாவல் பயிற்சி
ஒரு இனிய நாள்
வால்நட் க்ரீக் நாவல் பட்டறை பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும், வேலை நெருக்கடி மற்றும் சாண்டா பார்பராவில் இருந்து ஆறு மணி நேர பயணம் இரண்டையும் எண்ணி குழம்பி கொண்டிருந்தேன். இரு நாள் கழித்து வருகிறீர்களா என விசு அவர்களின் வாட்ஸாப் செய்தி கண்டதும் அதையே நிமித்தமாக கொண்டு செல்லலாம் என முடிவெடுத்தேன்.
சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து பயணத்தொடக்கம் . சனி இரவு மௌண்டைன் வியூவில் தங்கி, ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு வால்நட் க்ரீக்கில் வகுப்பு நடக்கும் இடம் வந்து சேர்ந்தேன். ஏற்கனேவே நண்பர்கள் பலர் ஆஜராகி இருந்தனர். வகுப்பு தொடங்கும் வரை சென்ற ஆண்டு பூன் முகாமில் பழக்கமான ஷங்கர், சாரதா என நண்பர்களுடன் பேசிக் கொண்டு நேரம் சென்றது. நண்பர்கள் சிலர் வகுப்புக்கான வைட் போர்டை பொருத்தி கொண்டிருக்க, அங்கிருந்த அறம் தொகுதியின் ஆங்கில மொழிபெயர்ப்பை புரட்டி கொண்டிருக்கையில், ஜெ நுழைந்தார்.
அனைவரும் அமர, நண்பரின் குழல் இசையுடன் வகுப்பு தொடங்கியது. “ஏன் நாவல் எழுத வேண்டும்” என தொடங்கி, நாவலின் கரு (Theme), நாவலின் வகைகள் என விரிந்து சென்றது. நாவலின் “Plot” மற்றும் “Theme” இரண்டிற்குமான வித்தியாசத்தை ஒரு சினிமா உதாரணத்துடன் ஜெ விளக்கினார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் “Identity” என்ற கருவை எவ்வாறெல்லாம் விரித்து செல்ல கூடும் என காட்டினார். பின் நாவலின் திறப்பு அமைய வேண்டிய / கூடாத விதங்கள், நாவலின் உடல் எவ்வாறு அதன் மைய வினாவை விரிக்க வேண்டும், நாவலின் முதிர்வு எவ்வாறு ஆசிரியரின் கண்டடைதலில் இருந்து வாசகன் தன் பயணத்தை தொடங்குமாறு அமைய வேண்டும் என விளக்கிச்சென்றார். மதிய இடைவேளைக்குப் பின் “Character Arc” பற்றி சொல்லத் தொடங்கி நாவலின் ஆசிரியர் தனக்கும் கதாபாத்திரங்களுக்கும் உள்ள உறவை கையாள வேண்டிய விதம் பற்றி கூறினார். இறுதியில் நாவல் எழுதும் “Process ” பற்றி கூற வகுப்பு நிறைவடைந்தது.
வகுப்பு முடிந்த பின் அருகிருந்த புல்வெளியில் அமர்ந்து கலகலப்பான உரையாடல். என் நீண்ட முடி குறித்த கிண்டல்கள், அருண்மொழி அவர்கள் கையாள வேண்டியிருந்த பல தரப்பான வாசக வருகைகள், ஜெவின் மனைவி பெயர் குறித்து GroqAI செய்த குளறுபடி என பல சிரிப்பு வெடிகள். இரவு உணவு மிகவும் அருமையாக இருந்தது. அளவுக்கு சிறிது மீறியே உண்டு விட்டு, நண்பர்களிடம் விடை பெற்று கிளம்பினேன்.
மொத்தத்தில் மிகவும் இனியதொரு நாளாக அமைந்தது. ஏற்பாடுகள் செய்த அனைத்து விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் நன்றி. இனிய நினைவுகளுடனும், நம்மாலும் ஒரு நாவல் எழுதக்கூடும் என்ற நம்பிக்கையுடனும் வீடு வந்து சேர்ந்தேன்.
கண்ணன் (சாண்டா பார்பரா)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

