அரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள்- கடிதம்
அன்புள்ள ஜெ,
அரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் என்னும் சமீபத்திய நாவலை வாசித்தேன். நான் வாசிக்கும் இவரது முதல் படைப்பு இதுதான். ஒரு படைப்பாளியை இப்படி முதல்முறையாக வாசிக்கும்போது அவர் யார் என்று தெரியாதது அளிக்கும் ஒரு தவிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. தெரியாத ஒருவரிடம் பேசுவதுபோல உள்ளது.
விஷ்ணுபுரம் விருதுவிழா வழியாகவே நான் புதிய படைப்பாளிகளை அறிமுகம் செய்துகொள்கிறேன். அவர்களை மட்டுமே வாசிக்கிறேன். இது சரியா என்று ஒரு கேள்வி எனக்குள் உண்டு. ஆனால் இன்றைக்கு புத்தகத்தை தேர்வுசெய்வது என்பது ஒரு பெரிய சிக்கல். பணத்தை விட நேரம் பெரிய இழப்பு. ஆகவே ஒரு பரிந்துரை தேவை. அந்தப் பரிந்துரையாக அமைவது விஷ்ணுபுரம் நிகழ்வு.
இந்நாவல் வழியாக நான் அரிசங்கரை சமகால வாழ்க்கையின் கதைசொல்லி என்று புரிந்துகொண்டிருக்கிறேன். சமகால வாழ்க்கையின் வெறுமையையும் சலிப்பையும் அவற்றை வெல்லுவதற்காக நாம் தேர்ந்தெடுக்கும் எல்லா பாதைகளும் ஏற்கனவே மூடப்பட்டிருப்பதையும் சொல்லும் நாவல் இது. வாசிக்கையிலேயே ஒருவகையான சலிப்பையும் ஆனால் இப்படித்தானே நம் வாழ்க்கை இருக்கிறது என்ற உணர்வையும் அளிக்கிறது. இந்த நாவல் வழியாகச் சென்று வருவது என்பது நம்மை நாமே ஓர் உடைந்த கண்ணாடி வழியாகப் பார்ப்பதுபோன்ற அனுபவமாக அமைந்தது.
இந்நாவல் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. உண்மைகள், பொய்கள், கற்பனைகள் என்ற மூன்று தலைப்பிட்ட பகுதிகளும் இன்றைய வாழ்க்கையின் மூன்று டைமென்ஷன்கள். ஆனால் இந்தப் பிரிவினையே பொய்தான். பொய்கள் உண்மைகளும் கற்பனைகள் பொய்களுமாக ஆகலாம். இந்த பிரிவினை அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நாம் பிரித்துக்கொண்டிருப்பதுதான்.
அதேபோல இந்நாவலில் கதாபாத்திரங்களுக்குப் பெயர்கள் இல்லை. கதைநாயகன் பெயர் வெள்ளை. ஒரு நிறம். அல்லது நிறமே அற்றவன். அவன் தன் காதலியை ஆரஞ்சு என்று சொல்கிறான். வெள்ளைக்கு திருமணமாகவில்லை. பாலுறவுக்கும் காதலுக்கும் ஏங்குகிறான். ஆனால் அவனுக்கு எந்த வழிகளும் இல்லை. எல்லாமே பொய்யால் அடைக்கப்பட்டுள்ளன. அவன் செக்குமாடு போல வாழ்ந்து செத்தாகவேண்டும். ஏதாவது குற்றம் செய்தால்தான் அந்த வட்டத்தை உடைக்கமுடியும். ஆனால அந்தக்குற்றத்தையும் அவனால் கற்பனையில்தான் செய்யமுடியும்.
பொய் என்னும் பகுதியின் அவனுடய பகற்கனவுகள் உள்ளன. கற்பனை பகுதியில் ஒரு குற்றம் உள்ளது. அந்த குற்றம் உண்மையில் நடந்ததா இல்லையா என்பது மாயமாக உள்ளது. இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தும் பிரித்தும் காட்டும் விளையாட்டு என்று இந்நாவலைச் சொல்லமுடியும்.
நான் 10 ஆண்டுகள் சென்னை மேன்ஷனில் வாழ்ந்தேன். அதில் வேலை கிடைக்காதவர்கள், கல்யாணமாகாதவர்கள், சினிமா வாய்ப்பு தேடுபவர்கள் என பலவகை. அவர்கள் மிகமிக யதார்த்தமாகப் பேசிக்கொள்வார்கள். ஆனால் அவற்றில் எது உண்மை என்று கண்டுபிடிக்கவே முடியாது. ஏனென்றால் பொய் என்பது கற்பனைதான். கற்பனையை நம்பி அவர்கள் அதிலே வாழ்வார்கள். காதலிகள் இருக்கும். சினிமாப்பட பூஜை போடப்பட்டிருக்கும். காதலியை கொலைகூட செய்வார்கள். உண்மையில் ஒருவன் கொலைசெய்தால்கூட அந்தக் கொலையும் கற்பனையாக ஆகிவிடும்.
இன்றைய வாழ்க்கை ஒவ்வொருவரையும் கூண்டுக்குள் அடைத்து வெறும் கற்பனைகளிலேயே வாழச்செய்கிறது. சினிமா,டிவி, இன்ஸ்டா எல்லாமே கற்பனைகள்தான். அதில்தான் எல்லா வாழ்க்கையும் நிகழ்கிறது. இன்ஸ்டாவில் ஒரு பிளேபாய் ஆக இருப்பவன் நிஜத்தில் ஒரே ஒரு பெண்ணிடம்கூட பேசாதவனாக இருப்பான். ஆனால் அவன் வாழ்வதே கற்பனையில் என்றால் அவன் வாழ்வதில்லை என எப்படிச் சொல்லமுடியும்.
இன்றைய வாழ்க்கையிலுள்ள வெறுமையையும் மீட்பின்மையையும் ஒரு வகையான காஃப்காத்தனமான விளையாட்டுடன் சொல்லும் ஒரு நல்ல படைப்பு இது. என் நண்பன் ஒருவன் 20 ஆண்டுக்கு முன் சொன்னான். “மச்சி நம்ம வாழ்க்கையே ஒரு மாஸ்டர்பேஷன்தாண்டா”. அந்த வரியே இந்நாவலையும் வரையறுக்கச் சரியான ஒன்று என்று படுகிறது.
எம்.பாஸ்கர்
விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் 7, அனுராதா ஆனந்த்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 8 – குறிஞ்சிவேலன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

