அறம் அறிதல், வெண்பா
பத்து வருடங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஒன்றிரண்டு கதைகளை வாசித்திருக்கிறேன். புத்தகமாக வாங்கி பொக்கிசமாக வைக்க வேண்டிய படைப்பு இது என்பதால் இந்த புக்பேரில் வாங்கினேன்.
அறம் எளியவர்களின் குரல். அந்தக் குரலின் ஆழமும் அடர்த்தியும் நம் ஆன்மாவைத் தொடுபவை. சூரியனால் வெளிச்சம் வருவது போல, அறத்தால் தான் மனதில் விருட்சம் வருகிறது. ஒரு மனிதனுக்கு மனம் நிறைந்து கண்ணீர் வரும்போது வாழ்வு அவனுக்கு அர்த்தமுள்ளதாக மாறிவிடும். அப்படியொரு அர்த்தத்தை வழங்கும் பேராசான் ஜெயமோகனின் இந்த நூல்
பனிரெண்டு கதையில எது ஒசத்தி என்றால் ஒவ்வொன்றும் அதனதன் அளவில் ஒசத்தி தான். என்னை எப்போதும் அழ வைத்து பின் எழ வைக்கும் கதைகள் தான் அனைத்தும்!
வணங்கான் கதை
திருவிதாங்கூர் சமாஸ்தானத்தின் கீழ் அடிமைப்பட்டு யானைக்கு கீழே சாகக்கிடந்த சிறுவன் தப்பித்து ஓடுகிறான். அது வெள்ளைக்காரன் ஆட்சி. ஓட்டம் நின்று ஓட்டல் கடையில் வேலை செய்கிறான். சாணான் எனப்படும் நாடார் சாதிக்காரன் அவன். அவன் கடையில் வேலை செய்யலாம். ஆனா கடை உள்ளே போக முடியாது. அப்போதெல்லாம் சாணானைப் பாத்தாலே தீட்டுல்லா! அப்படியாப்பட்ட பையன் மார்ஷல் நேசமணி என்ற நேர்மையும் துணிச்சலும் கொண்ட வக்கீலைச் சந்திக்கிறான்.
நேசமணி சாதாரண ஆளுல்ல. திருவிங்கூர் சமாஸ்தனத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் நீதிமன்றத்துல உயர்சாதி வக்கீலுங்களுக்கு நாற்காலிகளும், நாடார் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சாதிவளுக்கு உட்கார குத்துப்பெஞ்சும் போட்டதை எடுத்து உடைச்ச மனுசனாக்கும். பார்கவுன்சில்ல எல்லாச் சாதிக்கும் ஒரே குவளைல தண்ணி கொடுக்க வச்ச சமுத்துவர் நேசமணி. அப்படியான நேசமணியோட ஆதரவு கிடைச்சதும் ஓட்டல் வேலை செஞ்ச அவனோட வாழ்க்கை மாறுது. கிடைச்சதெல்லாம் படிக்கான். கவர்மெண்டுக்கு எழுதுறான். அதிகாரி வேலை கிடைச்சி இலஞ்சிக்குப் போறான். ஆனா அங்குள்ள ஜமீன்தாரு, “நீ அதிகாரியா இரு எந்த மைராவதும் இரு” என்ற ரேஞ்சில் அவனை டீல் செய்கிறார். மேலும் அவர் மீது துப்பவும் செய்கிறார். சாதிப்பெயரைச் சொல்லி அடிக்கவும் செய்கிறார். ஜமீன் தாரு அடிக்கது நம்மளை இல்ல. வெள்ளைக்காரன் வேலைக்கு வச்சிருக்க அதிகாரியன்னு உணர்றார் அந்த எளியச் சாணான். அதை வச்சே ஜமீன் தாரு நிலபுலத்துல செஞ்ச ஊழலை வெளிக்கொண்டு வாரான். ஜமீன் தாரு ஆபிஸை விட்டு வெளில வந்தா கொல்லுததுக்கு ஆள் வைக்கிறாரு. 27 நாளா ஆபிஸுக்குள்ளே கிடக்காப்ல சாணான் அதிகாரி. உடனே யோசனை வந்து நேசமணிக்கு கடிதம் எழுதுதாரு. நேசமணி யானையோட வந்து இவரை யானைல உக்கார வச்சி ஜமீன் தாரு வீட்டுக்கதவை உடைச்சிட்டு உள்ள போறாரு. ஜமீன் தாரு ஆடிப்போறாரு. அதுக்குப் பிறகு அந்த அதிகாரி மூளைக்குள்ள யானை வந்துட்டாக்கும். அதை அவர் நடையிலே பாக்க முடியும். அடேயப்பா எப்பேர்ப்பட்ட வாழ்வைச் சொல்லி நெஞ்சை விம்ம வைத்த கதையிது
விழுந்தவன் எழுந்தே தீருவான்ற நிஜத்திற்கு மேலும் மேலும் வலு சேர்க்குற கதைல்லா இது.
எத்தனை முறை வாசித்தாலும் கண்ணில் நீர்வீழ்ச்சியை கொண்டு வார கதை சோத்துக்கணக்கு கதை. கறியும் சோறும் அள்ளி அள்ளி வச்சிட்டு, காசு எவ்வளவு போட்டாலும் போதும்னு உண்டியல் வச்சி கடை நடத்துன கெத்தெல் சாகிப் கைகளை இப்ப நினைச்சாலும் பெத்த அம்மா ஞாபகத்து வருவா. அந்தக் கடையில சாப்பிட்டு உயிர் வளத்து பின் வாழ்வை வளத்த ஒருவன் பெரிய வேலையோட திரும்பி அங்க போய் பணத்தை உண்டியல்ல கொட்டும் போது எழும் சிலிர்ப்பை சொல்லால.சொல்லிட முடியாது
யானை டாக்டர் கதையிலுள்ள மனிதமும், தாயார் பாதம் கதையில உள்ள வாழ்வும், முதல் கதையான அறம் கதையிலுள்ள உள்ள கருணையும் இந்த வாசிப்பு வாழ்வுக்கு போதும். முன் வாசித்த கதைகளாயினும் இப்போதும் அதே உணர்வெழுச்சியைத் தான் தந்துது. இன்னும் பத்து வருசம் கழித்து வாசிச்சாலும் இதையே தான் தரும். கதைகளில் இருக்க வாழ்வும், தத்துவமும், உண்மையும், கருணையும் அத்தகைய உன்னதமானது
வெண்பா
Stories of the true MacmillanJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

