பண்பாடு மலர்வது…
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
சமீபத்தில் விஷ்ணுபுரம் வாசித்து முடித்தேன். ஆறு முன்னுரைகளை வாசித்தபோது, காலத்தில் பின்னோக்கி சென்ற அனுபவம் கிடைத்தது. அந்த முகம் தெரியாத முதியவரிடமிருந்து தங்களுக்கு கிடைத்த விதை, எவ்வளவு அழகிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
கொற்றவையில் மிகக் குறைவான கதாபாத்திரங்கள் தான். ஆனால் இதிலோ அத்தனை கதாபாத்திரங்கள்.
சங்கர்ஷனன், அனிருத்தன், லட்சுமி, சுதாவுடன் சேர்ந்து நாமும் விஷ்ணுபுரத்தில் நுழைகிறோம். விஸ்வரூப தோரண வாயிலும், ஹரிதுங்கா சிகரமும், மிகப்பிரமாண்டமான மகா கோபுரமும், பத்து நாள் நடக்கும் ஸ்ரீ பாத விழாவுமாக விஷ்ணுபுரம் கண்முன்னே விரிகிறது. வீர நாராயணர் பேத்தி சித்திரை, மன்னனை மணம் செய்வார் என்று விளையாட்டாக கூறுவதும், சித்திரை ஒரு நாள் ஒளிமயமாக ஜொலிப்பேன் என்றதும் மீள்வாசிப்பு செய்யும்போது முன்னெச்சரிக்கையாக (premonition) இருந்தது. கற்புக்கரசி மாதரி, சோனா நதியாக மாறிய கதை அருமை.
அற்புதமாக நினைக்கும் ஒவ்வொன்றுக்கும் பின்னால் உள்ள, விஞ்ஞானமும் விளக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் காலத்தின் போக்கில் எவ்வாறு மாறுகிறார்கள் என்று படித்து முடிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது. சடங்குகள் (பவளமல்லி மரம் பகடி) உருவாகும் விதம் வேடிக்கையாக சொல்லப்பட்டிருக்கிறது. யோசித்தால், இப்படித்தான் காரணமே இல்லாமல் பலவற்றை செய்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது.
விஷ்ணுபுரம் வாசிக்கும் முன்பு, ஜெயக்குமார் Sirன் ஆலயக்கலை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். விஷ்ணுபுரம் நாவல் ஆலயக்கலை வகுப்பிற்கு ஒரு practical test போல் அமைந்திருந்தது. தோரண வாயிலின் வர்ணனை தொடங்கி, உயர்ந்த வடக்கு கோபுரம், லலிதாங்கியின் ஆபரணங்கள் என வகுப்பில் கற்ற அனைத்தும் அதில் இருந்தது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு முதல் பாகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பள்ளியில் இருந்து வந்த போது தான், விஷ்ணுபுரத்திலிருந்து திரும்பி வந்தேன். என்னை இப்புத்தகம் உள்ளே இழுத்ததற்கு, இந்த பயிற்சியும் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.
தோணியில் அரிசியும், பத்தாயிரம் அப்பங்களும், யானை மூடியை திறக்கும் 1500 அப்பங்கள் வேக வைக்கும் இரும்பு கல் தொட்டிகளும், என்று எல்லாவற்றிலும் பிரம்மாண்டம். ஆனால் இறுதியில் எதுவுமே மிஞ்சவில்லை. வரலாற்றில் இந்த விஷயம் திரும்பத் திரும்ப நடந்து கொண்டே இருக்கிறது. மாபெரும் சாம்ராஜ்யங்கள் தொடங்கி Titanic வரை. ஆனாலும் நாம் அழிவே இல்லாதது போல் வாழ்ந்து கொண்டிருப்பது விந்தைதான்.
வாசித்து முடித்ததையே பெருமிதமாக நினைக்கும்போது, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. பணி நிறைவடைந்து, உலகமெங்கும் விஷ்ணுபுரம் சென்று சேர வாழ்த்துக்கள்.
பல்வேறு அனுபவங்களையும், வாசிக்கும் ஆனந்தத்தையும் தரும் தங்களுக்கு மிகவும் நன்றி.
என்றும் அன்புடன்,
S.ராஜேஷ்வரி
கோவை.
https://vishnupuram.com/ நாவல் பற்றிய பார்வைகளுக்காக விஷ்ணுபுரம் வாங்க
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

