ரமேஷ் பிரேதன், கடிதங்கள்
விஷ்ணுபுரம் விருது பெறும் படைப்பாளி ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ரமேஷ் பிரேமுடன் இணைந்து எழுதிய காலகட்டத்திலேயே அவர்களை வாசிக்க ஆரம்பித்தவன். இனி ரமேஷ் தமிழின் முக்கியமான படைப்பாளியாக காலத்தில் நிலைகொள்வார்.
அவருடைய படைப்புகளை அவருடைய ஆளுமையைக் கொண்டு மட்டுமே மதிப்பிடமுடியும். மதிப்பிடவேண்டும். உதாரணமாக தொடக்க காலகட்டத்தில் இருந்தே ரமேஷ் பெயர் உள்ள படைப்புகளில் உடல் சார்ந்த ஒரு அப்செஷன் உண்டு, உடல்மேல் பெரும் பற்றும் இருக்கும். உடல்மேல் பெரும் வெறுப்பும் இருக்கும். உடலை இச்சாசக்திகொண்டு இயங்கச்செய்யும் ஒரு துடிப்பு என எனக்கு தோன்றுவதுண்டு. சிலசமயம் அந்த இச்சாசக்தியை அவர் எதிர்மறையாகவும் பார்க்கிறார். முழுப்படைப்புலகிலும் ரமேஷ் அந்த இச்சாசக்தி – உடல் என்கிற இருமையை எப்படி கையாள்கிறார் என்று பார்ப்பது அவருடைய படைப்புலகை அணுகுவதற்கான மிகச்சிறந்த வழியாகும்.
அவர் ஒரு காலத்தில் பிறருடன் சேர்ந்து எழுதினார். ஆனால் அவையும் அவருடைய படைப்புகள் மட்டும்தான். அவருடைய பெர்சனாலிட்டிதான் அவற்றிலே உள்ளது. அல்லது அவருடைய நிரந்தரமான தத்தளிப்பு. எழுத்தாளர் என ஒரு தனி ஆளுமை இல்லை என்ற பின் நவீனத்துவக் கருத்தை முன்வைத்து அவர் சேர்ந்து எழுதியிருக்கலாம். ஆனால் எழுத்தாளன் என்னும் ஆளுமை உண்டு என்றுதான் நான் நினைக்கிறேன். அது எழுதுவதற்கு முன்பு இருக்கும் ஒரு திட்டவட்டமான ஆளுமை இல்லை என்று சொல்லலாம். எழுத எழுத கண்டடைந்து நிறுவப்படும் ஒரு அடையாளம் அது. அதுதான் இன்றைய ரமேஷ்.
ஸ்ரீதர் மகாலிங்கம்
அன்புள்ள ஜெ
ரமேஷ் பிரேதனுக்கு அளிக்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் விருது பாராட்டுக்குரியது. ஓர் இலக்கியச் சூழல் என்பது எல்லாவகையான எழுத்துக்களும் கொண்டது. எல்லா எழுத்துக்களுக்கும் ஓர் இடம் உண்டு. எல்லா மரங்களும் இணைந்ததே காடு என நான் நினைக்கிறேன். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையில் காட்டுக்குப் பங்களிப்பாற்றுபவை என்று எடுத்துக்கொள்ளலாம். எல்லா தரப்பையும் ஏற்கும்போதுதான் ஒரு விருது பயனுள்ளதாகிறது. ரமேஷ் பிரேதனை நான் காட்டிலுள்ள எட்டிமரம் என்று நினைப்பதுண்டு. கடுமையான கசப்பும், சீற்றமும், ஒவ்வாமையும் கொண்ட எழுத்து என நான் நினைக்கிறேன். அந்த மரமும் இயற்கையின் ஓர் உச்சம்தான். அவருடைய பங்களிப்பு அந்த தீவிரத்தாலானது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
சா.கிருஷ்ணகுமார்
கலைஞனின் உயிர்த்தெழல் ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி ரமேஷ் நினைவுகள், சிறுமைகள். ரமேஷ், கடிதங்கள் ரமேஷ் அஞ்சலிகள், கடிதங்கள்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers


