அமெரிக்கா பயணம்
இன்று விடியற்காலை 4 மணி விமானத்தில் அமெரிக்காவுக்கு நானும் அருண்மொழியும் கிளம்பிச் செல்கிறோம். நேரடியாக சான் பிரான்ஸிஸ்கோ. அங்கிருந்து பல ஊர்கள் வழியாக வழக்கம்போல அமெரிக்காவைக் குறுக்காகக் கடந்து நியூயார்க்.
இது அருண்மொழியின் ஐந்தாவது அமெரிக்கப் பயணம். எனது ஏழாவது பயணம். அமெரிக்கா இப்போது கிட்டத்தட்ட இந்தியா அளவுக்கே தெரிந்ததாக, அணுக்கமானதாக ஆகிவிட்டது. அமெரிக்காவின் பல்வேறு உள் அடுக்குகளை அறிந்த ஒருவனாக இன்று என்னை உணர்கிறேன். ஏனெனில் சாதாரணமாக அமெரிக்காவில் பணியாற்றியபடி நெடுங்காலம் அங்கே வாழும் ஒருவர் செய்வதை விட மிக அதிகமாக அமெரிக்காவின் சிற்றூர்களில் கூட பயணம் செய்திருக்கிறேன். தொடர்ச்சியாக வெவ்வேறு களங்களில் வாழும் அமெரிக்க இந்தியர்களை மட்டுமல்ல அமெரிக்கர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
இம்முறை என் அறம் கதைகளின் மொழியாக்கமான Stories of the True அமெரிக்காவின் FSG- Macmillan பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. அதன் புத்தக விளம்பர நிகழ்வுகள் கல்லூரிகளிலும் நூலகங்களிலும் நடைபெறுகின்றன. இரண்டு நாவல் பயிலரங்குகள் மற்றும் வழக்கமான பூன் முகாம்.
‘இம்முறை பெரும்பாலும் கூட்டங்களாகவே இருக்கிறது’ என்று சலித்துக் கொள்கிறாளா இல்லையா என்று தெரியாத ஒரு பாவனையில் அருண்மொழி சொன்னாள். ஆனால் ஒரு முறையும் அமெரிக்கா கிளம்பும்போது ஒரு மாதத்திற்கு முன்னரே பரவசமடைவதும் , அங்கிருக்கும் ஒவ்வொரு தோழியையும் எண்ணி ஏங்குவதும், தொலைபேசியில் கொஞ்சிக்கொள்வதும், கடைசிநிமிடம் வரை தையல்கார பெண்மணியிடம் மிகையுணர்ச்சிப் பூசல்களில் ஈடுபடுவதும் அவள்தான்.
நான் தொடர்ந்து வெவ்வேறு உளநிலைகளில்அலைந்து கொண்டிருந்தேன். குறிப்பாக ரமேஷின் இறப்பு. அதிலிருந்து மீள்வதற்காக சென்ற ஹெக்கோடு பயணம். இரு எல்லைகள் .அவை என் நாட்களை முழுக்கவே எடுத்துக் கொண்டு விட்டன .இதற்கு இடையே முடித்து கொடுக்கப்பட வேண்டிய திரைப்படப் பணிகள் நான்கு. நண்பர்கள் எப்போது கிளம்புகிறீர்கள் என்று கேட்டபோது ஆளுக்கொரு தேதியைச சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்து நேற்று பின் மாலையில்தான் பயணத்திற்கான மனநிலையை அடைந்தேன்.
பயணம் இனிது. அமெரிக்கா எந்நிலையிலும் இனிது. அதன் மகத்தான நிலங்கள். வண்ணம் மாறி ஒளி சுடர நின்றிருக்கும் மரங்கள்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
