“சொல், உன் அரசியல் என்ன?”
திரு ஜெமோ,
அரசியல் பங்கேற்பு பற்றி உங்களுடைய கருத்துக்களை பார்த்தேன் நீங்கள் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் கண்டனக் கூட்டங்களில் ஒரு குரலாக ஒலித்து இருக்கிறீர்கள். உங்களை திருமாவளருடன் இருக்கும் பல புகைப்படங்களை பார்த்திருக்கிறேன். அப்போது மட்டும் நீங்கள் தொண்டராக இருந்தீர்களா ,அல்லது தலைவராக இருந்தீர்களா?
உங்களுக்கு அரசியல் நிலைபாடு இல்லை, அரசியலை விவாதிப்பதில்லை என்று சொன்னீர்கள். அப்படியென்றால் உங்கள் அரசியல் என்ன? அதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துங்கள், அதுதான் கௌரவம். இன்றைக்கு உங்கள் அரசியலில் எவரை ஆதரிக்கிறீர்கள். அவ்வாறு அல்லாமல் இவ்வாறு தலையையும் வாலையும் மாற்றி மாற்றி காட்டும் நிலைபாடு ன்பது ஒரு சந்தர்ப்பவாதம் மட்டுமே. உங்களுக்கு தேவைக்கு ஏற்ப ஒரு நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பீர்கள் என்பது தான் இது காட்டுகிறது.
ராஜாராம் ஶ்ரீனிவாஸ்
அன்புள்ள ராஜாராம்,
நான் எந்த அரசியல் நிகழ்விலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை. ஒரு பொதுவான விஷயத்திற்கு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பிலான அறிக்கையில் எழுத்தாளர்கள் கையெழுத்து இடும்போது அவர்கள் தங்களுடைய தனித்தன்மையை இழக்கிறார்கள் என்று மட்டுமே கருத்து சொன்னேன். ஓர் எழுத்தாளர் அரசியல் கருத்து சொல்லக்கூடாது என்று, அரசியல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் கட்சியின் சார்பில் சொந்த வசைபாடல்களை நடத்துபவர், வெறும் கட்சிக்குண்டராகச் செயல்படுபவர் எழுத்தாளர் அல்ல என்கிறேன்.
அரசியல் என்பது ஒருவர் தொடர்ந்து தன்னை விளக்கிக் கொண்டே இருக்க வேண்டிய கடமை கொண்ட களம். ஆகவே ஆய்வாளர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் அதில் ஈடுபடாமல் இருப்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். ஈடுபடுபவர்கள் தொடர்ந்து அந்த விளக்கத்தை அளித்துதான் ஆக வேண்டும். பொதுவாக ஒரு அறிக்கையில் கையெழுத்திடும்போது எழுத்தாளர் ஒரு வண்ண்த்தை மட்டுமே அடைகிறார். அதை மட்டுமே சொன்னேன், அதை புரிந்து கொள்ளும் உள்ள பாங்கு உங்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.
திருமாவளவன் அவர்களை எனக்கு நண்பர் அலெக்ஸ் வழியாக அறிமுகம். நான் அவருடன் இணைந்து அரசியல் செயல்பாடு எதிலும் ஈடுபடவில்லை. எனக்கு கட்சி அரசியல் இப்போது இல்லை. என் அரசியல் களம் சார்ந்த காந்திய அரசியல் மட்டுமே. ஆனால் எப்போதேனும் கட்சி சார்ந்த அரசியலில் ஈடுபடுவேன் எனில் அது திருமாவளவனின் அரசியலில் மட்டுமே. தலைவர் என இப்போதுள்ளவர்களில் எவரையேனும் ஏற்பேன் எனில் அவரை மட்டுமே. ஏனெனில் அவரது அரசியலுக்கு மட்டுமே இன்றைய சூழலில் வலுவான சமூகக்காரணம் உள்ளது என்று நினைக்கிறேன். பிற அரசியல் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் சுயநல அரசியல்தான்.
தமிழகத்தில் முதன்மையான அரசியல் தலைவர் என்று நான் இன்றும் அவரையே கருதுகிறேன். அவருடைய குரல் இந்த கரூர் சாவு விஷயத்திலும்கூட எத்தனை நிதானத்துடனும், தலைவனுக்கான பொறுப்புடனும் இருக்கிறது என்பதை உங்களுடைய தனிப்பட்ட காழ்ப்புகளை நகர்த்தி வைத்துவிட்டு பார்த்தால் தெரியும். ஓர் எழுத்தாளனாக அதைச் சொல்ல வேண்டுமென நினைக்கிறேன். அதன் பொருட்டு அவரிடம் இருந்தது, அல்லது அக்கட்சியிலிருந்து எதையும் எதிர்பார்க்கும் அல்லது பெற்றுக் கொள்ளும் இடத்தில் நான் இல்லை.
திருமாவளவனின் அரசியலைக் குறித்து என்னிடம் கேட்டு என்னை சங்கடப்படுத்தலாம் என்று எண்ணி கேள்விகள் அவ்வப்போது வருவதுண்டு. அவருடைய அரசியலை அதற்குரிய களநிலவரத்தை ஒட்டி நடத்தும் திறன் அவருக்கு உண்டு. அதற்கு வெளியே நின்று கொண்டு அதை விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை. நான் அவ்வாறு கூர்ந்து கட்சிஅரசியலை பார்ப்பதும் இல்லை. அறுதியாக அது எந்த வகையில் மக்களுக்கு பயன்படுகிறது என்பது மட்டும்தான் நான் பார்க்க வேண்டும். அந்த வகையில் அவருடைய செயல்பாடுகள் உண்மையிலேயே மக்களுக்கு உரியவையாகவே இன்று வரை இருந்து வருகின்றன என்றுதான் நான் நினைக்கிறேன். நான் அரசியலில் ஈடுபடவில்லை, ஆகவே இதை மறுப்பவர்களிடம் பேச வேண்டிய தேவை இல்லை. இது என் தனிப்பட்ட நம்பிக்கை.
திருமா அவர்களுடன் உரையாடல்களில் ஒவ்வொரு தருணத்திலும் ஓர் எழுத்தாளர் என்னும் இடத்தையே அவர் எனக்கு அளித்திருக்கிறார். எழுத்தாளர் என்றால் யார், அவன் இடம் என்ன என்று புரிந்து கொள்ளும் தகுதி கொண்ட மிகச் சில தலைவர்களே இன்று தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை என நினைக்கிறேன். அந்த மதிப்பு இல்லாத இடங்களுக்கு நான் செல்வதுமில்லை.
என் அரசியல் நிலைப்பாடு என்ன என்று கேட்டிருந்தீர்கள். அது அடிப்படைக் குடிமகனின் , எளிய வாக்காளரின் அரசியல். கட்சிச்சார்பு அரசியல் அல்ல. எவருக்காகவும் களமாடும் அரசியல் அல்ல. தன் அனுபவத்திற்குள் வரும் நிகழ்வுகளைக் கொண்டு ஒரு முடிவுக்கு வரும் அரசியல். அதுவே சரியான அரசியல், ஜனநாயக அரசியல் என நினைக்கிறேன். இந்த அரசியல் நிலைபாடு என்பது மாறாததும் அல்ல. இந்த கட்சிகளும் தலைவர்களும் தவறு செய்தால் அதைக் கண்டிக்கவும் கூடியது. இக்கட்சிகள் பயனற்றவை என்றால் உடனே நிராகரிக்கக் கூடியது. அப்போது அக்கட்சிக்காரர்களால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவன் என வசைபாடப்படுவேன்.
இப்போது உள்ள அரசியல் என்ன என்று கேட்கிறீர்கள். இப்போதுள்ள அரசியல் இதுவே. தனிப்பட்ட ஆடம்பரம், அதிகாரப்போக்கு போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் கேரளத்தில் பொருளாதார வளர்ச்சி, குடிமைச்சமூகப் பணிகள் ஆகிய தளங்களில் பினராயி விஜயன் மிகச்சிறந்த ஒரு ஆட்சியாளராகவே பத்தாண்டுகளில் வெளிப்பட்டிருக்கிறார். சி.அச்சுதமேனன், ஈ.கே.நாயனாருக்கு பின் அவரே சிறந்த ஆட்சியாளர். மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் இந்த ஐந்து ஆண்டுகளில் தனிமனித உரிமை மறுப்பு, தொடரும் நிர்வாக ஊழல் ஆகியவை இருந்தாலும் இன்றைய அரசு தமிழகத்தை கல்வி, தொழில்த்துறை, குடிமைச்சேவை ஆகிய மூன்று களங்களில் முன்னோக்கி நகர்த்துகிறது என்று நினைக்கிறேன். அதற்கு மாற்றாக வரும் ஒரு கட்சி இந்த அளவுக்கு செயல்பாட்டை அளிக்கும் என்ற நம்பிக்கை இப்போதைக்கு எழவில்லை. ஆகவே மு.க.ஸ்டாலின் அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
இவற்றை நேரடியாக களத்தில் செயல்பாடுகளை முன்னெடுப்பவன், கிராமங்களுக்குச் செல்பவன் என்ற வகையில் மட்டுமே சொல்கிறேன். இதற்கு அப்பால் எனக்கு கட்சி அரசியல் சார்ந்த செயல்பாடுகள் எதுவும் இல்லை. இந்த அரசுகளுக்காக பிரச்சாரம் செய்யும் பணியும் எனக்கில்லை. என் நண்பர்களிடம் இதை விவாதிப்பதில்லை. ஏனென்றால் நாங்கள் முன்னெடுக்கும் பணிகள் முற்றிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. எங்கள் அரங்குகளில் மட்டுமல்ல, தனிப்பட்ட உரையாடல்களிலும்கூட முழுமையாகவே அரசியல் இல்லை. என் அரசியலை முழுக்க மறுப்பவர்களும் பலர் என் அணுக்கமான நண்பர்களாக உண்டு, இணைந்தும் செயல்படுகிறோம். அவர்கள் தங்கள் நம்பிக்கையை தாங்கள் கொண்டிருப்பதும் இயல்பென்றே கொள்கிறேன்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
