வேதாந்தத்தை தமிழ்ப்படுத்துதல்
வேதாந்தம் பற்றிய விவாதங்களில் பலர் சொல்லும் சிக்கல் ஒன்றுண்டு. தன் கலைச்சொற்கள் தமிழில் சிந்திப்பவரின் நினைவில் நிற்பதில்லை. அவை சம்ஸ்கிருதத்தில் உள்ளன. அவற்றை தமிழாக்கம் செய்து ஏன் பயன்படுத்தக்கூடாது? அப்படி எத்தனையோ சொற்களை தமிழில் மொழியாக்கம் செய்துகொள்கிறோம். மேலும், அவ்வாறு மொழியாக்கம் செய்துகொண்டால் அச்சொற்களைக் கேட்டதுமே அவை எதைக்குறிக்கின்றன என்று நமக்குப் புரியும். உதாரணமாக ஃபாஸம் என்னும் சொல்லை வேதாந்தத்தில் பயன்படுத்துகிறோம். அதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியுள்ளது. மயங்குரு என தமிழாக்கம் செய்துகொண்டால் அச்சொல்லே அக்கருத்தை நமக்கு புரியவைத்துவிடுமே?
இது ஒரு நல்ல வழிதான். நான் தொடக்ககாலத்தில் அப்படி நம்பியதுமுண்டு, முயன்றதுமுண்டு. ஆனால் இன்று பலவாறாகப் பிரிந்துகிடக்கும் வேதாந்தப் பிரிவுகள் அனைத்தும் அப்படி புதிய சொற்களை ஏற்றுக்கொள்ளுவது நடைபெறக்கூடிய செயல் அல்ல. இரண்டு, அப்படி நமக்கான சொற்களுடன் நாம் வேதாந்தத்தைக் கற்றால் நம் வட்டத்துக்கு அப்பால், நம் மொழிக்கு அப்பாலுள்ள இன்னொரு வேதாந்த மாணவருடன் நம்மால் உரையாடவே முடியாது. வேதாந்தம் கற்பவர்களே மிகக்குறைவு. அவர்களுக்குள்ளும் இப்படி உழக்குக்குள் கிழக்குமேற்கு உருவாவது பயனுள்ளது அல்ல.
இன்று எல்லா ஞானங்களும் உலகளாவிய விவாதக்களத்தில்தான் நிகழ்கின்றன. ஆகவேதான் எல்லா அறிவுத்துறைகளும் உலகளாவிய கலைச்சொற்களை உருவாக்கிக்கொண்டுள்ளன. தொடக்ககாலத்தில் அறிவியலில் கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்தனர். கார்பன் டை ஆக்ஸைடை கரியமிலவாயு என்றெல்லாம் மொழியாக்கம் செய்தார்கள். ஆனால் இன்று உயர்கல்வியில் அதெல்லாம் வழக்கத்தில் இல்லை. கரியமில வாயு என தமிழாக்கம் செய்து படிப்பவர் ஒரு கட்டத்தில் கரியமில வாயு என்றால் கார்பன் டையாக்ஸைட் என்றும் கற்கவேண்டியிருக்கும். அது இரட்டைவேலை.
பலநூற்றாண்டுகளாக வேதாந்தம் தனக்கே உரிய கலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் கலைச்சொற்களிந் வழியாகவே வேதாந்த விவாதங்கள் எப்போதும் நிகழ்ந்து வருகின்றன. அவை ஒரு தமிழ் வாசகனுக்கு உடனடியாக மொழி சார்ந்த ஒவ்வாமையை உருவாக்கக் கூடியதாக இருக்கக்கூடும் ஃபாசம், ஃபானம், அவித்யை போன்ற சொற்களை அவன் உடனடியாக நினைவில் வைத்திருக்க முடியாது என்பது உண்மையே. ஆகவே தொடக்கநிலை வாசகர்களுக்காக அச்சொற்களை தமிழ்ப்படுத்துவது என் வழக்கம் .அச்சொற்களை ஒவ்வொரு முறையும் அடைப்பு குறிக்குள் தமிழ்ப்படுத்தி எழுதுவது என்னுடைய வழிமுறை. ஆனால் தமிழ்ப்படுத்துவது என்பது இச்சொற்களை புரிந்து கொள்வதற்காகவும், அவற்றின் பொருள் நினைவில் நிற்பதற்காகவுமே ஒழிய அச்சொற்களை நீக்கம் செய்வதற்காக அல்ல. நாம் மொழியாக்கம் செய்யும் சொற்கள் மூலக்கலைச்சொற்களின் இடத்தில் சென்று அமையாது. அது பிழையானதும்கூட.
உலகம் முழுக்கவே தத்துவ சிந்தனைகள் தங்களுக்கான கலைச்சொற்களை உருவாக்கிக் கொள்வது வழக்கம். லத்தீனிலும் ஜெர்மனியிலும் பிரஞ்சிலும் உருவாக்கப்பட்ட கலைச்சொற்களை ஆங்கில மொழியில் அப்படியே தான் பயன்படுத்துகிறார்கள். பல சமயம் அவற்றுக்கான பதிலி ஆங்கிலச் சொற்கள் இருக்கும். ஆனால் குறிப்பாக மூலச்சொற்களையே பயன்படுத்துவது தான் வழக்கம் நமக்கே தெரியும், சட்டத்தில் Modus operandi, Habeas corpus போன்ற சொற்களைத்தான் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு தத்துவ கலைச்சொல் என்பது முதன்மையாக ஒரு குறிப்பிட்ட தத்துவக் கொள்கையை அல்லது கருத்தை மட்டுமே குறிப்பிடுவதாகும். அக்கலைச்சொல் செவியில் விழுந்த உடனேயே அதனுடன் இணைந்த மொத்த சிந்தனைகளும் அச்சொல்லின் வரையறையாக நம் நினைவுக்கு வரவேண்டும். text என்று இன்று இலக்கியத்தில் ஒரு கலைச்சொல்லை நாம் பயன்படுத்தும் போது அது வாசகனின் கற்பனை படி விரித்து எடுக்கக்கூடிய ஒன்று அல்ல. அதற்கு மொழியியல் மிகத்தெளிவான வரையறை ஒன்றை அளித்திருக்கிறது. அந்த வரையறையை தான் அந்தச் சொல் குறிக்கிறது.
கலைச்சொல் என்பது திட்டவட்டமான விவாதங்களுக்கு மிக உதவியாக இருக்கும் ஒன்று. கலைச்சொல் என்பது ஒரு கருத்தை வரையறுத்துவிட்டு அக்கருத்துக்குச் சுட்டப்படும் பெயர்தான். ஒரு மனிதனுக்கு பெயரிடுவதுபோல. கலைச்சொல் இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் அந்த வரையறையை நாம் சொல்ல வேண்டியிருக்கும். அந்த வரையுறையுடன் இணைந்துள்ள அனைத்து கருத்துகளையும் நினைவுபடுத்த வேண்டி இருக்கும். அவ்வாறு ஒரு தத்துவ விவாதம் நடக்க முடியாது . ஒரு மனிதனுக்குப் பெயர் இல்லை என்றால் அவனை ஒவ்வொரு முறையும் வர்ணிக்கவேண்டியிருக்கும் என்பதுபோலத்தான்.
ஏனெனில் தத்துவம் பேசும் இந்த விஷயங்கள் எதுவுமே புறவயமான பொருட்கள் அல்ல .மேஜையை குறித்த ஒரு சொல்லை வேறு சொல்லால் இடமாற்றம் செய்து கொள்ளலாம். ஏனெனில் மேஜை என்ற பொருள் அங்கு தான் உள்ளது. அது எதைக் குறிக்கிறது என்பதில் எவருக்கும் எந்த ஐயமும் இருப்பதில்லை. ஆனால் தத்துவ உருவகங்கள் எல்லாம் அருவமானவை. ஒரு விவாத களத்தில் நீண்ட கால பொது விவாதத்தின் வழியாக ஒரு பொதுப் புரிதலாக உருவாகி வந்தது அவற்றின் வரையறை. அந்த பொதுப்புரிதல் வரையறையை சுட்டத்தான் கலைச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக நீண்டகாலம் குற்ற விசாரணை நீதிமன்ற விவாதங்கள் வழியாகத்தான் modus operandi என்ற வார்த்தை உருவாகி வந்திருக்கிறது. அந்த வார்த்தையை பயன்படுத்தும் போது அந்த நீண்ட கால விவாதித்தன் வழியாக உருவாகி வந்த ஒட்டுமொத்தமான புரிதலையும் பொதுவான வரையறையையும் நான் சுட்டுகிறேன். தத்துவத்திலும் அவ்வாறே angst என்ற சொல்லை இருத்தலியலாளர்கள் பயன்படுத்தும் போது அதற்கு ஒரு வேறொரு சொல்லை வைத்து இடமாற்றம் செய்ய முடியாது.
கலைச்சொற்களை உருவாக்கிக் கொள்வதுதான் தத்துவ சிந்தனை தன்னை புறவயமாக ஆக்கிக் கொள்வது. தனக்கே உரிய கலைச்சொற்கள் வழியாகத்தான் ஒரு தத்துவ சிந்தனை மானுட சிந்தனையாக நிலைகொள்கிறது. அக்கலைச்சொற்களை நீக்கம் செய்து விட்டால் அத்தத்துவ சிந்தனையின் புறவயத்தன்மை அழியும். அத்தத்துவ சிந்தனையை நாம் பொத்தாம் பொதுவான அரட்டையாக மாற்றிவிடுவோம். அதன் கூரிய விவாதத் தன்மையை அது இழந்துவிடும் .
பெரும்பாலும் கலைச்சொற்கள் என்பவை ஏற்கனவே இருக்கும் சொற்கள் ஒரு சிந்தனைக்களத்தில் மிகக்குறிப்பாக ஒரு தனி அர்த்தத்தில் பயன்படுத்தப்படுபவையாகவே இருக்கும். அவை கூடுதல் அர்த்தம் கொண்ட சொற்கள் என்று சொல்லலாம். படிமம் என்பது தமிழ் மொழியில் வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அது கண்ணாடியில் விழும் பிம்பம் என்ற அர்த்தத்தில் தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மொழியில் இருந்தது. ஆனால் poetic image என்ற அர்த்தத்தில் அதை தமிழில் பயன்படுத்த தொடங்கிய பிறகு இலக்கியத்தில் அதற்கு வேறு அர்த்தமே இல்லை. அந்தச் சொல்லை இலக்கியக் கலைச்சொல்லாக ஆக்கியவர் க.நா.சு.
அவ்வாறு அத்வைதம் பல ஆயிரம் ஆண்டு விவாதங்கள் வழியாகத்தான் தங்கள் கலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சிலசமயம் பொதுப்பொருளில் அவற்றுக்கு வேறு பொருள் இருக்கலாம். பௌத்தமும் அவ்வாறே. சூனியம் என்னும் சொல்லுக்கு பௌத்தம் அளிப்பது அதற்கே உரிய தனிப்பொருளை.
ஆகவே, கலைச்சொற்களை நாம் பொருள் புரிந்து கொள்ளலாம்,ஆனால் மொழியாக்கம் செய்து மூலத்தை நீக்கிவிட முடியாது. தமிழில் தொடர்ந்து ஓர் அத்வைத விவாதம் நிகழ்கிறது என்றால், அதில் சில சொற்கள் தமிழுக்கே உரித்தான சொற்கள் முன்வைக்கப்பட்டு தொடர்ந்து அந்த விவாதம் வழியாக அர்த்தம் ஏற்றம் செய்யப்படுகிறது என்றால் ,அவை தமிழுக்கே உருவாக உரித்தான காலப்போக்கில் கலைச்சொற்களாக உருவாகி வரக்கூடும். ஆனால் அப்போது அந்தக் கலைச்சொல் தமிழில் நாம் விவாதிக்கும் அத்வைதத்தின் தனித்தன்மை சார்ந்து ஒரு புதிய கலைச்சொல்லாகவே இருக்கும். மூலச்சொல்லுக்கான மொழியாக்கமாக இருக்காது. மூலக்கருத்தே கொஞ்சம் மாறியிருக்கும், வளர்ந்திருக்கும். அந்த மாறிய கருத்தையே அந்தப் புதிய கலைச்சொல் சுட்டிநிற்கும்.
அவ்வாறு இங்கே சைவ சித்தாந்த விவாதம் நீண்ட காலம் நிகழ்ந்துள்ளது. அதன் விளைவாக சைவ சித்தாந்தத்துக்கே உரிய தனிக் கலைச்சொற்களை அது உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல சமயம் சைவ சித்தாந்தம் பயன்படுத்தும் கலைச்சொற்கள் ஏற்கனவே வேதாந்த மரபில் உள்ள கலைச்சொற்களின் ஒலி மாறுபாடுகள்தான் . ஆனால் சைவ சித்தாந்த மரபில் அதற்கு தனி அர்த்தம் உண்டு. அது சைவ சித்தாந்தத்தின் கலைச்சொல்லாக கூடுதலாக அர்த்தம் கொண்டவை.
உதாரணமாக அவித்தியை என்னும் அத்வைத கலைச்சொல் அவித்தை என்று சைவ சித்தாந்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அவஸ்தை என்ற சமஸ்கிருத கலைச்சொல் அவத்தை என்று சைவ சித்தாந்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சமஸ்கிருத அர்த்தமோ அல்லது வேதாந்த அர்த்தமோ சைவ சித்தாந்தத்திற்கு பொருந்தாது. சைவ சித்தாந்தத்தில் அந்த முன்னோடிகள் அச்சொல்லை எவ்வாறு தங்களுக்குள் விவாதித்து பொது புரிதலாக வரையறுத்துக் கொண்டார்கள் என்பதை அறிந்து அந்த அர்த்தத்தில் தான் அந்தச் சொல்லை பயன்படுத்த வேண்டும்.
பசு,பதி, பாசம் ஆகிய சொற்களைத் தவிர்த்து எவராலும் சைவ சித்தாந்தத்தை பேசிவிட முடியாது. அதுபோலத்தான் அத்வைத கலைச்சொற்களும். மாயை என்பது ஒரு பொதுச்சொல். அது சாதாரண புழக்கத்தில் ஒரு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது, பக்தி மரபில் வேறொரு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. வேதாந்தத்தின் கிளைகளில் சின்ன அர்த்த வேறுபாடுகளுடன் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அத்வைதத்தில் அதனுடைய பொருள் ஒன்று அது திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வேறொரு சொல்லை காட்சிப்பிழை என்றோ அறிவுப்பிழை என்றோ பிழையறிவு என்றோ பயன்படுத்தும்போது உண்மையில் அந்த மூலக் கலைச்சொல்லின் வரையறையை மட்டுமல்ல, அதனுடைய அடிப்படைப் பொருளையே நாம் தவற விட்டு வேறொன்றுக்கு தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். இரு சொற்களும் வேறுவேறு, அந்த வேறுபாடு நுணுக்கமானது, ஆனால் முக்கியமானது.
ஒரு கலைச்சொல் வந்து சேர்வது என்பது ஒரு கருத்து, ஒரு தரிசனம் வந்துசேர்வதேயாகும். ஆகவே மூலக்கலைச்சொல்லே கூடுமானவரை பயன்படுத்தப்படவேண்டும் என நான் இன்று எண்ணுகிறேன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

