அஞ்சலி- ஜேன் குடால்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

பிரிடிஷ் விலங்கியலாளரும், சிம்பன்ஸிகளின் பாதுகாவலரும், மானிடவியலாளருமான ஜேன் குடால் தனது 91 –வது வயதில் நேற்று  அக்டோபர் 1, 2025 அன்று லாஸ் ஏஞ்சலீஸில் ஒரு மரம் நடும் நிகழ்வுக்கான பயணத்திலிருக்கையில் இயற்கையாக மறைந்தார்.  

அவரை நினைக்கையில், அவரது காணொளிகளையும் உரைகளையும் கேட்கையில், சிம்பன்ஸிகளுடன் அவர் இருக்கும் புகைப்படங்களைப் பார்க்கையில் எல்லாம் பேரன்னை என்றுதான்  என் மனதில் தோன்றும். அன்னைமை அவரது உடல்மொழியில் அப்படி பொங்கிப்பிரவாகிக்கும். உலகில் சிம்பன்ஸிகளை குறித்த மிக நீண்ட கால, மிக விரிவான ஆய்வுகள் செய்த ஒரே ஒருவர் ஜேன்.

ethologist என்னும் ஒரு சொல்லையே அவரைக் குறித்து அறிந்துகொண்ட போதுதான் முதன்முதலாக தெரிந்து கொண்டேன். விலங்குகளை, அவற்றின் சமூக கட்டமைப்பை, அவற்றின் உயிர்வாழ்தல், தேவைகள்,  பரிணாம வளர்ச்சியை எல்லாம் அவற்றின் இயற்கையான வாழிடங்களிலேயே அறிந்துகொள்ளும் துறைதான் ethology. 

ஜேன் 1060-களில் உலகளாவிய அளவில் இந்தத்துறையில் பிரபலமாயிருந்த ஒரு விலங்கியலாளராக இருந்தார். இவரது சிம்பன்ஸி ஆய்வுகள்  விலங்குகள் பற்றிய உலகின் புரிதலையே அடியோடு மாற்றியது.மனிதர்களுக்கு மட்டும் உரியது என்று பலகாலமாக நம்பப்பட்ட பலவற்றை சிம்பன்ஸிகள் அறிந்து கொண்டிருப்பதையும், செய்வதையும் அவர் நிரூபித்தது அறிவியல் உலகில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.

நீர்நிலைகளுக்கு பெயர் பெற்ற லண்டனின் மிக புராதன, மிக மிக அழகிய நகரமான Hampstead –ல்  பந்தயக்கார் ஓட்டுநரான (Morris-Goodall) அப்பாவுக்கும் எழுத்தாளரான (Margaret Myfanwe) அம்மாவுக்கும் பிறந்த ஜேன் அவரது குழந்தைப்பருவத்தில் பரிசாகக் கிடைத்த  ஒரு சிம்பன்ஸி பொம்மையிலிருந்து  தொடங்கிய தனது விலங்குகள் மீதான பேரன்பை வாழ்நாள் முழுக்க தொடர்ந்தவர்.

மனிதரல்லாத முதன்மை உயிரினங்களின் அறிவியலில் ( primatology) உலகளவில் இவரே முதன்மையானவர். சிம்பன்ஸிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்ட ஜேன் ‘’ மனிதர்களை விலங்கு உலகிலிருந்து பிரிக்கும் தெளிவான கோடு ஏதும் இல்லை’’ என்றார். 65 ஆண்டுகள்  சிம்பன்ஸிகளின் வாழிடங்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஜேன் காலப்போக்கில் மனிதர்களால் இயற்கை வாழிடங்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதன் ஆபத்தையும், அதற்கு தீர்வு மிக அவசரமாக தேவைப்படுகிறது என்பதையும் வலியுறுத்தும் காலநிலை செயற்பாட்டாளர் ஆகினார்.

1957 –ல் பள்ளிப்படிப்பை மட்டும் முடித்திருந்த ஜேன் கென்யாவின் விலங்குகளைக்  குறித்து அறிய ஆர்வம் கொண்டிருந்தார் . கென்யா செல்ல தேவையான செலவுகளுக்காக ஒரு உணவகத்தில் பரிசாரகராக வேலைசெய்து பொருளீட்டினார். கென்யா சென்று  தொல்லியலாளரும் புதைபடிம மனிதவியலாளருமான Dr.லூயி  மற்றும் தொல்லியலாளரான அவரது மனைவி  மேரியையும் சந்தித்தார். லூயி ஜேனை நைரோபி தேசிய அருங்காட்சியகத்தில் உதவியாளராகப் பணியமர்த்தினார்.  மனிதப்புதைபடிமங்களின் தேடலில் ஜேனின் பொறுமையையும் அவரது இயற்கை மீதான ஆர்வத்தையும் கண்ட லூயி   ஜேனை தான்சானியாவின் கோம்பே காடுகளில் சிம்பன்ஸிகளைக் குறித்த ஆய்வில் ஈடுபடச் சொன்னார். 

1960 ஜுலை 14-ம் தேதி ஜேன் கோம்பே காடுகளுக்குள் முதன்முதலில் நுழைந்தார். அங்கு பணியாற்றுகையில்தான் சிம்பன்ஸிகளுடனான அவரது பரிச்சயமும்  ஈடுபாடும் உண்டானது. லூயி தம்பதிகளுடன் இணைந்து ஜேன் சிம்பன்ஸிகளின் பாதுகாப்புக்கான ஒரு அமைப்பை அங்கு துவங்கினார்.

அந்த அமைப்பிலிருந்து ஆய்வுகளைச் செய்கையில் தான் சிம்பன்சிகள் அது நாள் வரை உலகம நினைத்திருந்ததுபோல் தாவரவுண்ணிகள் மட்டுமல்ல அவை இறைச்சி உண்பதையும், மழைநடனமிடுவதையும், படுபயங்கரமான போர்களில் ஈடுபடுவதையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக  புற்றிலிருந்து  கரையான்களை  எடுத்து உண்பதற்கான கருவிகளை அவை தயாரிப்பதையும் கண்டறிந்து உலகிற்குச் சொன்னார். 

சிம்பன்ஸிகளைப் பற்றிய உலகின் பல தவறான அறிதல்களையும் நம்பிக்கைகளையும் உடைத்து உண்மையில் சிம்பன்ஸிகள்  மனிதனுக்கு மிக மிக நெருங்கிய உயிரினங்கள் என்பதை ஜேன் தெரிவித்தார். 1963-ல் 29 வயதான ஜேனின்  7500 சொற்களையும், 37 பக்கங்களையும் கொண்ட சிம்பன்ஸிகளைக் குறித்த பல முதல் நிலைத்தகவல்களைக் கொண்ட ஆய்வறிக்கையை நேஷனல் ஜியோகிராஃபிக் சஞ்சிகை வெளியிட்டது.

அந்தக் கட்டுரையில்  இடம்பெற்றிருந்த  கோம்பே காடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்தவர்தான் அவரது காதல் கணவர் ஹியூகோ. அந்தக்கட்டுரை சிம்பன்ஸிகளின் வாழ்வை மட்டும் காட்டவில்லை கோம்பே காடுகளில் ஆய்வுகளின் போது ஜேனுக்கு உண்டான நோய்கள், உடல்நலகுறைவு, அதிலிருந்து அவர் மீண்டது, சிம்பன்ஸிகளை நெருங்குவதில் இருந்த சிக்கல்கள், தடைகள், காட்டிலிருந்த கொல்விலங்குகளால் உண்டான ஆபத்துகள் ஆகியவையும் விவரிக்கப்பட்டிருந்தது. அந்தக்கட்டுரை  இன்றுவரையிலும் உலகின் மிக முக்கியமான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சிம்பன்ஸிகளின் இணைசேர்தல், கருவுறுதல், குட்டிகளை ஈனுதல், பாதுகாத்தல் போன்ற பல விஷயங்களை ஆய்வு செய்து உலகிற்கு புதிய பல உண்மைகளை ஜேன் தெரிவித்தார்.சிம்பன்ஸி அன்னைகள் நாலரை வருடத்திலிருந்து 6 வருடத்துக்கொருமுறைதான் கருத்தரித்து, ஒன்றிலிருந்து இரண்டு குட்டிகளை மட்டும் அளிப்பவை,  முதல்முறை அன்னைகள் ஆண் சிம்பன்ஸிகளிடமிருந்து குட்டிகளை மறைத்து வைக்கின்றன, அனுபவம் வாய்ந்த அன்னைகளே ஆண் சிம்பன்ஸிகளுக்கு குட்டிகளைக் காட்டுகின்றன போன்ற புதிய தகவல்களை ஜேன் உலகிற்கு சொன்னார்.

தன் மகன் க்ரப்பை வளர்ப்பதற்கான பல படிப்பினைகளை சிம்பன்ஸிகளிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்லும் ஜேனின் மீது அத்தனை பிரியமுண்டாகியது எனக்கு. க்ரப்புடன் அடர் காட்டில் ஆய்வுகளைச் செய்த ஜேன் அவனை காட்டுவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க கூண்டில் அடைத்து வைத்திருப்பார். அர்ப்பணிப்புடன் ஆய்வுகளைச் செய்பவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருபபோம் எனினும் ஜேன் போல மகனை கூண்டில் வைத்துவிட்டு சிம்பன்ஸிகளை ஆய்வுசெய்யும்  அர்ப்பணிப்பை நான் வேறெங்குமே கேள்விப்பட்டதில்லை.

அவரது கண்டுபிடிப்புக்களைப்பற்றி சொல்கையில்  லூயி  ’’சிம்பன்ஸிகளும் மனிதகளைப் போலத்தான் என்பதை  ஒத்துக்கொள்ளும் முன்பு நாம் கருவி என்பதையும், ஏன் மனிதன் என்பதையுமே மறுவரையறை செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.ஜேனின் பங்களிப்பை, கண்டுபிடிப்புக்களின் முக்கியத்துவத்தை உலகம் அவர் கல்விக்கூடத்துப் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே அங்கீகரிக்கும் என லூயி உணர்ந்திருந்தார் எனவே இளங்கலை படித்திருக்காத ஜேனை கேம்ப்ரிட்ஜில் முனைவர் பட்டம் படிக்க ஏற்பாடு செய்தார்.

அங்கு ஜேன் முனைவர் பட்டத்திற்காக மிகக்குறுகிய காலத்தில் செய்த  The Behaviour of Free-living Chimpanzees in the Gombe Stream Reserve என்னும் தலைப்பிலான ஆய்வு விலங்குலகின் பல புதிய கதவுகளை உலகிற்கு திறந்துவைத்தது. இளங்கலை படிக்காமல் கேம்ப்ரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்ற வெகு சிலரில் ஜேனும் ஒருவர்

அடர் வனங்களில் பலவருடங்களை ஆய்வுக்காகச் செலவழித்த ஜேனின் முதல் கணவர் நேஷனல் ஜியோகிராஃபியின் முதன்மை வன உயிர்ப்புகைப்படக்கலைஞரும் ஜேனின் ஆய்வை படம்பிடிக்க வந்தவருமான   ஹியூகோ வான்(Hugo van Lawick.)   அவர்கள் காடுகளில் சந்தித்து காதல் கொண்டு 1964-ல் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களது மகன் Grub என்று செல்லப்பெயர்கொண்ட Hugo Eric Louis van Lawick.

ஹுயூகோவுடன் 1974-ல்  விவாகரத்தானபின்னர் இரண்டாவதாக 1975-ல் தான்சானிய அரசியல்வாதியும் தான்சானிய தேசியப் பூங்காவின் முன்னாள் இயக்குநருமான டெரெக்கை (Derek Bryceson ) மறுமணம் புரிந்து கொண்டார், டெரெக் 1980-ல் மறைந்தார். 

அதுவரை  விலங்கியலாளர்களின் வழக்கமாயிருந்ததைப் போல விலங்குகளுக்கு எண்களை இடுவதில் விருப்பமில்லாத ஜேன் சிம்பன்ஸிகளுக்கு,   டெஸ் , ஃப்ளோ, பிஃபி, டேவிட் போன்ற  பெயர்களை வைத்தார்.1977-ல் அவரது பெயரிலேயே ஜேன்குடால்  நிறுவனத்தை வாஷிங்டனில் துவங்கினார். அந்த அமைப்பு சூழல் பாதுகாப்பு, சூழல் ஆரோக்கியம் மற்றும் வாழிட அழிப்புக்கெதிரான விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான உலகளவிய விரிந்த பிரச்சாரத்தையும் அது குறித்த கல்வியையும் ஆய்வையும் மேற்கொண்டிருந்தது.ஜேன் இந்த அமைப்பின் பொருட்டு வருடத்தின் 300 நாட்கள்  அவரது இறுதிநாள் வரையிலுமே தொடர் பயணத்திலிருந்தார்.  இந்நிறுவனத்தின் 25 கிளைகள் உலகெங்கும்  இயங்குகின்றன. 

2014 –ல்  நியூயார்க் டைம்ஸுக்களித்த நேர்காணலில் ‘’ சிம்பன்ஸிகளுக்காக ஒருவர் ஆண்டு முழுவதும் பயணம் செய்து, மிக முக்கிமான செயல்களைச் செய்கிறார் என்பது எனக்கு தொடர்ந்து வியப்பை அளிக்கிறது. அந்த ஒருவர் நான்தான்’’ என்றார்.

அதே நிறுவனத்தின் நீட்சியயாக  1991-ல் பள்ளிக்குழந்தைகளும் பங்களிக்கும் Roots & Shoots,  என்னும் அமைப்பையும் சூழல் பாதுகாப்புக்காக உருவாக்கினார் ஜேன். துவக்கத்தில் 12 பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்களுடன்  இருந்த அந்த அமைப்பு  இப்போது 75 நாடுகளில் மிகத்தீவிரமான செயல்பாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

2025-ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர விருது உள்ளிட்ட மிக உயரிய  ஏராளமான விருதுகளையும் ஜேன் பெற்றிருக்கிறார்.  விலங்குகள் குறித்த அவரது அவதானிப்புகளை பல நூல்களாக எழுதியிருக்கும் ஜேனின் மிகப்பிரபலமான நூல்  Reason For Hope: A Spiritual Journey.

அவரது The Book of Hope: A Survival Guide for Trying Times,  என்னும் மற்றொரு நூல் உலகின் மிக முக்கியமான 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.ஜேனின் In the Shadow of Man (1971).  மற்றும்   The Chimpanzees of Gombe: Patterns of Behavior (1986). ஆகிய இரு கட்டுரைகளும் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவை.

ஆப்பிரிக்க காடுகளில் ஜேன் நெருக்கமாகச் சந்தித்த  மலேரியா, முதலைகள், விஷம் துப்பும் நாகப்பாம்புகள், கொல்விலங்குகள், ராட்சஷ விஷ மரவட்டைகள் ஆகியவற்றையும் சொல்லும் அவரது கட்டுரைகள் உலகப் பிரசித்தி பெற்றவை.அவரது விலங்குலகம் குறித்த பலநூறு ஆவணப்படங்களும், திரைப்படங்களும் ஜேனின் கண்கள் .வழியாக நமக்கு விலங்குலகைக் காட்டுபவை.

20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான மிகப்பிரபலமான இயற்கை அறிவியலாளராக இருந்த ஜேன் ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த இயற்கை அறிவியல் துறையில் அவரைத்தொடர்ந்து பல பெண்களும் வர காரணமாயிருந்தார் என்பதுவும் அவரது முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று. அவர்களில் சிம்பன்ஸிகளின் ஆய்வில் பெரும்பங்காற்றிய   பெண்களான Dian Fossey, Biruté Galdikas, Cheryl Knott மற்றும் Penny Patterson,ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அவரது இறுதிப் பயணத்திட்டம் லாஸ் ஏஞ்சலீஸ் காடுகளின் நெருப்பு பிடிக்கும் எல்லைகளில் நெருப்புத் தடுப்பாக 5000 மரங்கள் நடும் நிகழ்வுதான். அவரது மரணத்திற்குப்பின்னர் இன்று நடப்பட்ட முதல் மரம் ஜேன் குடால் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

ஜேன் மீது பெரும் அபிமானம் கொண்டிருக்கும் ஜாஜாவிடம்  ஜேனின் மறைவு குறித்து இன்று பேசிக்கொண்டிருக்கையில் ஜேன் தனது பாட்டியின் சாயலில் இருப்பதாக சொன்னார் ஜாஜா.  இயற்கை வளங்களைத்  தொடர்ந்து சுரண்டுகிற, யானை வழித்தடங்களில்  பெருநிருவனங்களை அமைக்கிற, பனைமரங்களை  செங்கல் சூலைகளில் எரிக்கக்கொண்டு செல்கிற, அரசியல் ஆதாயங்களுக்காக பலநுறு மரங்களை வெட்டுகிறவர்களுகு மத்தியில் அர்ப்பணிப்புடன் கடைசி நொடி வரை. இயற்கையின் பாதுகாப்புக்காக உழைக்கும் ஜேன் போன்றவர்கள்தான் நமது சொந்தமாக இருக்கமுடியும். எனக்கும் ஜேன் பேரன்னையாகத்தான் தெரிகிறார்.

நம்பிக்கை மற்றும் மன உறுதிக்கான தூதராக ஜேன் உலகெங்கும் அறியப்பட்டார். அவரது முக்கியச் செய்தியாக ’’நம்பிக்கை கொள்வது என்பது நமது கையில், என் கையில், உங்கள் கையில் இருக்கிறது நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் சின்னஞ்சிறு மாற்றங்களைச் செய்யமுடியும்’’ எனச் சொன்ன ஜேன் அவரது வாழ்க்கையையே அந்த செய்திக்கான  உதாரணமாக விட்டுச் சென்றிருக்கிறார்.ஜேனுக்கு அன்பும் அஞ்சலியும்

அன்புடன்

 லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.