ரமேஷ், கடிதங்கள்
   
அன்புள்ள ஜெயமோகன்,
ரமேஷ் பிரேதன் அவர்களின் இறுதி நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் எழுதியதை வாசித்தேன். ஒரு படைப்பாளியின் வாழ்க்கை, மற்றும் அவருடைய இறுதி ஆகியவற்றில் உள்ள ஒருவகையான காவியத்தன்மையை அந்த குறிப்புகள் காட்டிந்.அவருடைய படைப்புகளுக்கு ஒரு பின்புலமாக இந்த வாழ்க்கை குறிப்புகள் மற்றும் இதைப் பற்றிய நினைவுகள் எப்போதும் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த குறிப்புகளுக்காக ஒரு வாசகனாக நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவருடைய படைப்புலவுக்கு செல்வதற்கான மிகச் சிறந்த ஒரு வழி இந்த குறிப்புகளே என்று தோன்றுகிறது.
அவருடைய வாழ்க்கை மரபணு குறை பாடலான மிக எடையாலும் ரத்த அழுத்தத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டது என்பதை உணரும்போதுதான் அவருடைய உடல் அரசியல் என்பதை மேலும் உணர முடியும் என்று தோன்றுகிறது. அவருடைய படைப்புகளில் உள்ள கருத்துக்களை வைத்துக்கொண்டு அவரை எளிய முற்போக்கு அரசியல் சார்ந்து அடையாளப்படுத்தும் வாசிப்புகளுக்கு மத்தியில் அவருடைய புனைவுலகின் உண்மையான சாராம்சம் என்பது உடல் என்பதன் மீதான உள்ளம் மற்றும் பண்பாட்டின் தாக்குதலே என்னும் கோணத்தை உங்கள் தளத்தில் வரும் சில கடிதங்களில் இருந்து மட்டுமே உணர முடிகிறது. அந்த கோணத்தில் அவரை அணுகுவதற்கு இந்த குறிப்புகள் மிக உதவியாகவே மிக நன்றி.
செல்வராசன்
அன்புள்ள செல்வராசன்,
ஒரு படைப்பாளி விருதுபெறும் தருணத்தில், அவருடைய மறைவின்போது அவரைப்பற்றி வரும் வாசிப்பு சார்ந்த நேரடிப்பதிவுகளே அவரை அறிமுகம் செய்ய மிகமுக்கியமான வழிகள். பிற கருத்துக்கள் எல்லாமே விருப்பு வெறுப்பு மற்றும் சமகால எளிய அரசியல் சார்ந்தவையே.
ஜெ
   
அன்புள்ள ஜெயமோகன்,
நான் ரமேஷ் பிரேதன் அவர்களின் ஒருசில கதைகளை ஆங்காங்கே படித்திருந்தாலும்கூட உங்களுடைய தளத்தில் அவர் விருது பெற்ற பிறகு வந்த கடிதங்களில் இருந்த சில குறிப்புகள் அவரை சரியான வகையில் அணுகுவதற்கு எனக்கு உதவியாக இருந்தன. குறிப்பாக அவருடைய படைப்பில் இருந்த கசப்பு மற்றும் உடல் அணுகுமுறை இரண்டையுமே பல கடிதங்கள் குறிப்பிட்டு இருந்தன. அந்த கோணத்தில் மட்டுமே அவரை அறிய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அவருடைய இறுதி நாட்களைப் பற்றி நீங்கள் எழுதிய குறிப்புகளை படித்தேன். அந்த குறிப்புகளையும் கடிதங்களில் இருந்த செய்திகளையும் இணைத்துக் கொண்டு அவரை அணுகுவது எனக்கு இன்னும் எளிதாக இருந்தது .தொடர்ந்து அவரை படிப்பேன் என்று நினைக்கிறேன் .
இணையத்தில் அதிகமாக உலவுபவன் இல்லை என்றாலும் ரமேஷ் பிரேதனைப் பற்றி தேடிய போது அவர் விருது பெற்ற நாள் இருந்து தொடர்ச்சியாக பலர் அவரை இழிவு படுத்தி எழுதியதை பார்த்தேன். அவர் மறைந்த போது கூட பலர் அதை ஒரு வம்பாக மட்டுமே சுருக்கியிருந்ததை கண்டேன். மரணத்தின் போது கூட அதை வம்பாக மட்டுமே பார்க்கும் இந்த பார்வை எனக்கு மிகுந்த கசப்பை கொடுத்தது. அவ்வாறு வம்புகளை எழுதியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் என்பதையும் கவனித்தேன். நான் அரசியல் பார்வையெல்லாம் இல்லாதவன். ஆனால் இந்த அணுகுமுறை கசப்பை அளித்தது. இவர்களை பற்றி என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
சதானந்த்
அன்புள்ள சதானந்தன் ,
ஒருவர் தன்னை பிராமணர் மட்டுமே என்று உணரும்போது ரமேஷ் பிரேதன் மீது காழ்ப்பு கொள்வதில் வியப்பொன்றுமில்லை. அவருக்கும் பிராமணர்கள் மீது அதே ஒவ்வாமை இருந்தது. அவருடைய படைப்புகளிலேயே வெளிப்பட்டதுதானே?
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 


