கரூர் சாவுகள், எழுத்தாளன் சொல்லவேண்டியவை
   
அன்புள்ள ஜெ.,
கரூர் விஜய் பரப்புரை நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பலியானது இந்திய அளவில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது . இது குறித்த உங்களின் கருத்து எதுவும் இதுவரை உங்கள் வலைப்பக்கத்தில் பதிவாகாமல் இருப்பது கவலை அளிக்கிறது. பொதுநிகழ்வுகள் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கப் போவதில்லை என்று நீங்கள் முன்னர் கூறியது என் நினைவில் உள்ளது. ஆனாலும் நீங்கள் மானுடத்தின் மீது கொண்டுள்ள ஆழமானஅன்புக்கும் அக்கறைக்கும் நீங்கள் கரூர் சம்பவம் பற்றியஅபிப்ராயம் தெரிவிப்பது முக்கியம்என்று நான் கருதுகிறேன். விலை மதிப்பற்ற உயிர்கள் சாதாரணநிகழ்வின் மூலம் பறிபோனதை நாம் எளிதாகக் கடந்து செல் ல இயலாது அல்லவா..பரிசீலிக்க வேண்டுகிறேன்.
அன்பின்
கீரனூர் ஜாகிர்ராஜா
அன்புள்ள கீரனூர் ஜாகீர் ராஜா,
உங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொண்டேன். ஆனால் சமகால அரசியலுக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை என்பதை நான் ஒரு கொள்கை முடிவாக கொண்டிருப்பதற்கான காரணங்கள் சில உண்டு .அரிதாக சிலவற்றுக்கு நான் எதிர்வினை ஆற்றுவும் செய்கிறேன் .
சில சமூகநிகழ்வுகள், உதாரணமாக விபத்துக்கள் அல்லது போராட்டங்கள் அல்லது குற்றங்கள் போன்றவை மிக நேரடியானவை. அவற்றின் காரணங்கள் மிக அப்பட்டமானவை. அவற்றைப் பற்றி ஓர் எழுத்தாளர் சொல்வதற்கு என்று பெரிதாக எதுவும் இல்லை என்பதுதான் உண்மை .வழக்கமான கண்டனமும் வருத்தமும் மட்டும்தான் தெரிவிக்க முடியுமே ஒழிய, அதற்கு அப்பால் குறிப்பிடும்படியாக எதையுமே சொல்வதற்கு இருப்பதில்லை. அந்நிலையில் ஏற்கனவே சூழலில் வந்த கண்டனங்கள், வருத்தங்கள், இரங்கல்களுடன் ஒன்றாக தன்னுடைய குரலையும் எழுத்தாளர் பதிவு செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அந்த கண்டனம் அல்லது வருத்தம் என்பது எழுத்தாளர் ஒருவகையான பெரிய மனிதர், பரவலாக அறியப்பட்டவர் என்ற அளவில் மட்டுமே அமைகிறது .எந்த இடத்தில் குறிப்பாக ஒன்றை, பிறர் சொல்லாத ஒன்றை, அவரால் சொல்ல முடியுமோ அங்கு மட்டுமே எழுத்தாளர் தன் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அத்தகைய ஒரு கருத்து எனக்கு இருக்கும் தருணங்களில் எல்லாம் வலிமையாக அதைத் தெரிவித்து இருக்கிறேன். சம்பிரதாயக் கருத்து என்பது இலக்கியத்தின் வழிமுறை அல்ல. இலக்கியவாதி அப்போது தன்னை ஒரு பெரிய மனிதனாக மட்டுமே வெளிப்படுத்திக் கொள்கிறார் .அல்லது சூழ்ச்சியும் தந்திரமும் கொண்டு தனக்கு என ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்கிறார். அது ஓர் இழிவு.
இன்று பொதுவெளியில் பெரிய மனிதர்களாக தங்களை முன்வைக்கும் ஒவ்வொருவருக்கும் தேவையான நிபந்தனை என்பது ஒவ்வொன்றிலும் அவர்களுக்கு இருக்கும் நிலைப்பாட்டை முன்வைப்பது. அதை ஊடகமும் மக்களும் அவர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அது அரசுச் சார்பா, அரசு எதிர்ப்புச் சார்பா, எந்த நிறுவனம் சார்ந்தது என்பதுதான் முக்கியமானது. அதை எவரும் நேர்மையாக, இயல்பாகச் சொல்வதில்லை. அவர்கள் தங்களுக்கு என உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு பொதுவெளிப் பிம்பத்தின் ஒரு பகுதியாகவே அந்த கருத்துரைப்பை உருவாக்கி கொள்கிறார்கள் . எழுத்தாளர்களில் சிறந்த பெரியமனித உதாரணம் வைரமுத்து. எந்த நிகழ்வுக்கும் அவருடைய மிகச்சம்பிரதாயமான கவிதை வெளிவந்துவிடும். ஓர் அலுவலகத்தின் அறிக்கை போலவே அது இருக்கும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தையும் பற்றி என்ன சொல்வார்கள் என்பது சாதாரணமாக பொதுவெளியில் புழங்கியவருக்கும் தெரிந்தே இருக்கும். எவருமே அதை மீறி ஒன்றை சொல்லி சொல்வதில்லை. அவ்வாறு சொல்லவும் அவர்களால் முடியாது. அவர்கள் அதுவரைக்கும் சொல்லி வந்த பலவற்றுடன் அது இணைந்து செல்ல வேண்டும் .அதில் முரண்பாடுகள் இருக்கக் கூடாது. ஒருவருக்கு தான் முன்பு சொன்ன ஒரு கருத்திலிருந்து வளர்ந்தோ மாறுபட்டோ இன்னொரு கருத்து இருப்பது ஏற்றுக்கொள்ளப்படுவதே இல்லை.
இந்த சம்பிரதாயக் கருத்துக்களின் மிகப்பெரிய பிரச்சனை என்ன என்றால் அதில் இருக்கும் போலித்தன்மை அல்லது நடிப்புதான்.கரூர் நிகழ்வை ஒட்டி ‘தூங்க முடியவில்லை’, ‘உடைந்து போய்விட்டேன்’, ‘வாழ்வே அர்த்தம் அற்று போய்விட்டது’, ‘என்ன அர்த்தம் இதற்கெல்லாம் என்று எண்ணி எண்ணி மருகுகிறேன்’ என்றெல்லாம் முகநூலில் பதிவு போட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் இப்போது காந்தாரா அல்லது இட்லி கடை எது சிறப்பு என்று விவாதத்திற்கு ஈடுபட்டு அகன்று சென்று விட்டார்கள். எந்த வகையிலும் அவர்களுக்கு கரூர் நினைவில் வருவதில்லை. அந்த கண்டனம் அல்லது வருத்தம் வெளிப்பட்ட பதிவை கூட கரூர் அளித்த எளிய அகத்தொந்தரவை களைந்து அடுத்த கூட்டுக் களியாட்டத்திற்குச் செல்வதற்கான ஒரு வழிமுறையாகத்தான் வெளிப்படுத்தினார்களோ என்ற ஐயம் எனக்கு உள்ளது .
எழுத்தாளர் அவ்வாறு ஒன்றை எளிதில் தன் உள்ளத்தில் இருந்துகழுவி விடக்கூடாது .அவரைப் பாதிக்கும் ஒன்று அவனுக்குள் இருக்க வேண்டும் .அதன் நஞ்சும் கசப்பு அவருக்குள் ஊற வேண்டும். இல்லை என்றால் அவருடைய ஆளுமை மிக மேலோட்டமாக ஆகிவிடும். சமகாலம் விரிக்கும் இந்த வலைக்குள் எழுத்தாளர் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.
எழுத்தாளர் மூன்று விஷயங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒன்று, அவருடைய பார்வை என்பது ஆய்வு நோக்கு சார்ந்ததாக இருக்கக் கூடாது. ஆய்வாளருக்கு ஆய்வு முறைமை, அதற்கான அமைப்பு இரண்டும் இருக்கவேண்டும். எழுத்தாளரிடம் அவை இல்லை. அவர் ஆய்வாளர் அல்ல. ஆனால் இங்கே ஆய்வாளர்களாக வெளிப்படுபவர்களிடம் எந்த வகையான ஆய்வு அமைப்பும் இல்லை, ஆய்வு முறைமையையும் அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் சாதாரண மனிதனுக்குரிய ஒரு வகையான உணர்ச்சி கொந்தளிப்பைச் சேர்த்து ஆய்வாளரின் மொழியில் கருத்துச் சொல்கிறார்கள். தனக்கு உரிய ஒரு கட்சிச் சார்பு அல்லது அமைப்புச் சார்பை முன்வைப்பதற்கான ஒரு பாவலாவாக மட்டுமே அதைச் செய்கிறார்கள்.
எழுத்தாளரின் கருவி என்பது தனி அனுபவம் மட்டும்தான். தனி அனுபவத்திலிருந்து தன்னுடைய நுண்ணுணர்வாலும் கற்பனையாலும் அவர் சென்றடைய கூடிய பொது அனுபவச் சித்திரமும், அதிலிருந்து அவர் உருவாக்கும கருத்துக்களும் தான் முக்கியமானவை .அந்த கருத்துக்கள் அவர் பல்வேறு வகையில் அடைந்த வாழ்க்கை அனுபவத்தின் ஒட்டுமொத்தமாக அமைகின்றன. அந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து அவர் பொது உண்மையை நோக்கி செல்லும் பாதை என்பது அவருடைய வாசகர்களுக்கு தெரிந்ததாகவே இருக்கும். அது நுண்ணுணர்வும் கற்பனையும் கலந்த ஒன்று. கற்பனை என்பது பொய்யை உருவாக்குவது அல்ல, மெய்யை துலக்குவது என்றுதான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன்.
இரண்டாவதாக, எழுத்தாளர் ஒருபோதும் பொதுவெளியில் இருக்கும் உணர்ச்சி நிலைகளுக்கு கட்டுப்பட்டவராக இருக்கக் கூடாது .பொதுவெளியில் உருவாகும் கருத்துக்களுக்கு ஏற்ப தன்னுடைய கருத்துக்களை அமைக்கும் எழுத்தாளர் தன்னுடைய ஆளுமையைக் பொதுவெளியில் கரைத்துக் கொள்கிறார். கற்பூரத்தை காற்றில் திறந்து வைப்பது போல தன்னை அழித்துக் கொள்கிறார் . பொதுவெளி தன்னை கரைப்பதற்கு எதிராகவே எழுத்தாளர் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டே இருக்கிறார். இந்த போராட்டம்தான் அவருடைய வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஒரு எதிர்ப்பு நிலையை உருவாக்குகிறது. ஏதோ ஒரு வகையில் அது மிதமிஞ்சிப்போய் பொதுச்சிந்தனைக்கு எதிரான ஒன்றாகவே தன் அகத்தை அவர் கட்டமைத்துக் கொண்டு வாய்ப்பு உண்டு என்றாலும் எதிர்நிலையும் எச்சரிக்கையுமே பாதுகாப்பனது என்று நினைக்கிறேன்.
பொதுக்கருத்துக்கு என்பது மிக எளிதாகத் திரண்டு வரக்கூடியது. பொதுச் சமூகத்திற்கு அவ்வாறு பொதுக் கருத்தை உருவாக்கிக் கொள்வதற்கு ஒரு நீண்ட பின்புலமும் உள்ளது .அது எவ்வாறு அந்த பொதுநிலைபாட்டை உருவாக்கிக் கொள்ளவும் என்பதும் அதன் கூட்டுஉள்ளம் செல்லும் வழி என்ன என்பதும் எவருக்கும் தெரிந்த ஒன்றாகவே இருக்கும். அதை எழுத்தாளராக நுணுக்கமாக பின்தொடர ஆரம்பித்தால் அவரும் அந்த பிரம்மாண்டமான கூட்டு மனதின் ஒரு பகுதியாக ஆகிவிடுவார் .அந்தபொதுமையையே தானும் வெளிப்படுத்துவார் .அது அவரை காலப்போக்கில் மிக எளிய சிந்தனை உள்ளவராக ஆக்கிவிடும். ஓர் எழுத்தாளன் அவ்வாறு ஆவது என்பது ஒரு விதமான அறிவுத் தற்கொலை. ஆன்மீகமான அழிவு
என் நண்பர் மலையாள இதழ் ஆசிரியர் ஒருவர் சொன்னார். கேரளத்தில் ஒரு பெரு நிகழ்வு என்றால் முதல் கட்டுரை எவரிடமிருந்து என்று சொல்லி விட முடியும். அந்த முதல் கவிதை முதல் பெரும்பாலும் உடனடியாக நாளிதழ்களிலோ இதழ்களிலோ வந்துவிடும். பெரும்பாலும் அட்டைப்படக் கட்டுரையாகவோ கவிதையாகவோ அது இருக்கும் .அது எளிதில் புகழைப் பெறுவதற்காக ஒரு வழி. ஆனால் இந்த வழி என்பது எழுத்தாளனுக்கு உகந்ததல்ல, அது ஒரு மலினமான பாதை. செய்தி வெளிவந்துகொண்டிருக்கையிலேயே எழுத அமர்ந்து விடுகிறார்கள் என்று ஏளனமாக அவர்களைப் பற்றிச் சொல்லுவதுண்டு. டெலிபிரிண்டர் கவிதைகள் என்று அவற்றை ஒரு நண்பர் சொன்னார். தானாகவே வெளிவந்துவிடும்.
எழுத்தாளர் முன்பின் முரண்படுவதற்கு அஞ்ச கூடாது என்பது மூன்றாவது நெறி என்று சொல்லலாம். எழுத்தாளருடைய வழி என்பது அந்தந்த தருணத்தில் இயல்பாக எதிர்வினை ஆற்றுவது மட்டுமே. அது தன்னிச்சையாக இருக்க வேண்டும். அவருடைய உள்ளம் அக்கணத்தில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதுதான் முக்கியம். அதற்கு அர்த்தம் இல்லாமல் இருக்கலாம் .ஒருவேளை அது முரட்டுத்தனமாக அல்லது அசட்டுத்தனமாகக் கூட இருக்கலாம். ஆனால் அது தன்னிச்சையாக இருக்க வேண்டும். திட்டமிட்ட ஒன்றாக இருக்கக்கூடாது.
அந்தத் திட்டமிட்டத் தன்மைதான் ஒருமையை உருவாக்குகிறது. நேற்றும் முந்தையநாளும் சொன்ன அனைத்திற்கு ஒரு தொடர்ச்சியை உருவாக்குகிறது. அந்தத் தொடர்ச்சி தன்னியல்பாக அமையலாம். அது அவருடைய கருத்துப் பரிணாமம். ஆனால் அவர் யோசிக்க கூடாது, திட்டமிடக்கூடாது. ஓர் எழுத்தாளரிடம் “நேற்று அப்படிச் சொன்னாய், என் இன்று இவ்வாறு சொல்கிறாய்” என்று கேட்பது என்பது ஒரு இலக்கிய வாசகன் செய்யக்கூடியதல்ல. அக்கணத்தில் எதிர்வினை ஆற்றுவதன் வழியாக கலைஞர் வெளிப்படுத்தும் உள்ளுணர்வு மட்டுமே அவருடைய அறிவுப் பங்களிப்பாக இருக்கும்.அவருடையது அகப்பங்களிப்பே ஒழிய தர்க்கபூர்வமான பங்களிப்பு அல்ல .
ரமேஷின் மரணத்தை காத்திருக்கும் போது தான் கரூரின் செய்தி எனக்கு வந்தது. அந்த செய்தி எனக்கு எந்த வகையில் பாதிப்பை அளித்திருக்கும் என்பதை உங்களால் எளிதில் உணர முடியும். கொந்தளிப்பு , வருத்தம், கசப்பு. ‘விதியே தமிழ்ச்சாதியை….’ என பாரதி குமுறிய அதே உணர்வுநிலை. அதைத்தான் நாம் எழுத்தாளர் அனைவருமே உணர்வோம். அந்நிகழ்வில் ஓர் அரசு என்ன செய்யமுடியுமோ அதைச் செய்துள்ளது, காவல்துறை மிகப்பொறுப்பாகவே செயல்பட்டுள்ளது என்பதே செய்திகள் மற்றும் காணொளிகள் வழியாக எனக்குப் புரியவந்தது. அந்நிகழ்வை ஒருங்கிணைத்த கட்சி அனுபவமின்மையால் முறையாக ஏற்பாடுகள் செய்யவில்லை, கெடுநிகழ்வு நிகழ்ந்தபின் துணிந்து அதற்குப் பொறுப்பேற்று அங்கு நின்று அடுத்தபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும். மன்னிப்பு கோரியிருக்கவேண்டும். இனி நிகழாது என அறிவித்திருக்கவேண்டும்.இங்கே நடப்பதெல்லாம் எப்போதும் கட்சியரசியலில் உள்ள வழக்கமான குற்றம்சாட்டுதல், சதிக்கோட்பாடுகளைப் புனைதல் மட்டுமே. ஆனால் இதை எல்லா கட்சிகளும் செய்கின்றன, ஏதேனும் ஒரு கட்சி செய்யாது என்று என்னால் சொல்லமுடியவில்லை.
நான் கவனிப்பதும், சொல்லவிரும்புவதும் வேறு. கைக்குழந்தையுடன் அங்கு சென்றபெண்களின் முகங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது வரும் கடுமையான ஒவ்வாமை. ஒரு பெண் தன்னுடைய கைக்குழந்தையுடன் சென்றாள். கைக்குழந்தை கீழே போடப்பட்டு செத்துப் போய்விட்டது. அந்தப்பெண் விஜய் தன்னை பார்க்க வரவேண்டும், வந்து பார்க்க வேண்டும் என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்கிறாளே ஒழிய குழந்தை பற்றி பேசுவதில்லை. அரசு தனக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கூச்சல் இடுகிறார்கள். எவருமே தங்கள் பிழை என எதையும் உணர்வதாக தெரியவில்லை. இந்த அறியாமைதான் பெரும் ஒவ்வாமையை உருவாக்குகிறது. அரிய மானுட உயிர்கள் என நாம் நினைக்கிறோம், அவர்கள் அப்படி நினைப்பதாகவே தெரியவில்லை.
அவர்களை பாமர மக்கள், எளிய மக்கள் என்று பார்க்கும் ஒரு கோணத்தில் இரக்கமும் ஏற்படுகிறது. அதே சமயத்தில் அறியாமை உருவாக்கும் கசப்பும் பெருகுகிறது. இந்த அறியாமையை யார் இவர்களிடம் உருவாக்கி, ஏன் நீடிக்க வைக்கிறார்கள்? இந்த அறியாமைக்கு யார் பொறுப்பு? இந்த அறியாமை இப்போது இந்தக் கட்சி சார்பில் இத்தனை சாவாக வெளிப்படுகிறது. ஆனால் எல்லா கட்சி சார்பிலும் இதுதான் அல்லவா வெளிப்படுகிறது. சாவு நிகழாமல் இருந்திருந்தால் இந்த கட்டுப்பாடில்லாத வெறியை ‘மக்களின் எழுச்சி’ என்று கொண்டாடியிருப்பார்கள். ஊடகமும் அவ்வாறே சித்தரித்திருக்கும்.
எல்லா கட்சிகளிலும், எல்லா மதங்களிலும் இதே மூர்க்கம்தானே வெளிப்படுகிறது ?இந்த பெருந்தொகையான சாவுகளை இன்னும் எங்கும் எதிர்பார்க்கலாம் .இது தொடர்ந்து தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முன்பு இதெல்லாம் நிகழ்ந்தது இல்லை என்பது போல, இதற்கு ஒரே ஒரு தரப்பே பொறுப்பு என்பது போல, இங்கே கூச்சல் விடுக்கப்படுகிறது. மகாமகப் படுகொலைகள் என்று சுந்தர ராமசாமி எழுதிய நிகழ்வு நம் நினைவில் இல்லை. அதன் பிறகு அத்தகைய நிகழ்வுகள் எத்தனை நடந்து இருக்கின்றன. இது ஏதோ ஏழைமக்களின் பிரச்சினையா? சென்னையில் விமானப்படை நெரிசலில் இறந்தவர்கள் எல்லாம் உயர்வர்க்கத்தினர் அல்லவா? அங்கும் இருந்தது இதே கண்மூடித்தனமான மூர்க்கம்தானே?
இத்தகைய சாவுகள் நிகழாத இடங்களிலேகூட இதை பார்த்திருக்கிறேன். அங்கே சாவு நிகழ எல்லா வாய்ப்பும் உண்டு. பொதுவெளியில் பெரும்பாலான இளைஞர்கள் முற்றிலும் போதையில், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெற்றுக்கூட்டமாக கொந்தளிக்கிறார்கள். அங்கே ஒரு சாமானியனுக்கு எந்த உரிமையும் இல்லை. மதுரை சித்திரைத்திருவிழாவுக்குச் சென்று பாருங்கள். எந்த நெறியும் இல்லாத, எவராலும் கட்டுப்படுத்தப்படாத பல்லாயிரம் பேர் போதைவெறியில் கும்மாளமிடுவதைக் காணலாம். எங்கும் இதெல்லாம் திரும்பவும் நடப்பதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன.
பெரும்பாலான பொது நிகழ்வுகளில் கட்டற்ற நெரிசல் என்பது எப்போதும் உள்ளது. வெறிகொண்ட இளைஞர் கூட்டம் எந்த வகையான நெறிகளுக்கும் அப்பாற்பட்டு கட்டிடங்கள் மேல் ஏறுவதும் வீடுகளை தாக்குவதும், பேருந்துகளை அடிப்பதும், சாலைகளை மறிப்பதும் இங்கே அனுமதிக்கப்படுகிறது. அது இளமையின் இயல்பாகவோ அல்லது பொது மக்களின் அடிப்படை உரிமையாகவோ கருதப்பட்டு நம்மால் ஏற்கப்படுகிறது. கட்டின்மையை நாமே அனுமதிக்கும் வரை நம்மால் இத்தகைய நிகழ்வுகளை நம்மால் தவிர்க்க முடியாது . அண்மையில் மஞ்ஞும்மல் பாய்ஸ் என்னும் படத்தில் இந்த குடிவெறியும் கட்டின்மையும் கொண்டாடப்பட்டபோது நான் கடும் கண்டனத்தை தெரிவித்தேன். என்னை தமிழ் அறிவுஜீவிகள் உட்பட பெரும்பாலானவர்கள் வசைபாடினார்கள். அது ‘எளியமக்களின்’ இயல்பாம். அதை கண்டிக்கக்கூடாதாம்.
இப்படி ஒரு சாவு நிகழும்போதும் அதிலிருந்து பொதுமக்களின் கட்டுப்பாடின்மை, இளைஞர்களின் பொறுப்பின்மையை விலக்கிவிட்டே பேசுகிறார்கள்.பொதுமக்கள் பற்றி இங்கே நாம் குறைசொல்லக்கூடாது. அரசை குறைச் சொல்வதே ‘மோஸ்தர்’. அல்லது அரசியல் தலைவர்களை குறைச் சொல்லவேண்டும். பொதுமக்கள் புனிதர்கள். அவர்கள் என்ன செய்தாலும் அது சரி. ஆகவே என் கருத்து ஒருவகையில் எல்லா தரப்பினராலும் வசைபாடப்படும். உண்மையில் செய்யவேண்டியது பொதுவெளியில் மக்களின், குறிப்பாக குடிவெறியினரின் நடத்தையை எப்படி கட்டுப்படுத்துவது என்பதைப்பற்றி மட்டுமே. அந்த ஒரு விஷயத்தை தவிர மிக அனைத்தையும் அரசியல் கட்சிகள் இன்று பேசிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிகழ்வில் பல சாமானியர்களின் குரல்கள் வெளிவந்தன. அவர்கள் விஜயை பார்க்கச் சென்றவர்கள் அல்ல. கடைகண்ணிகளுக்குச் சென்றவர்கள், வேலைக்குச் சென்றவர்கள், பள்ளிக்குச் சென்றவர்கள். அவர்களின் பாதைகள் முழுக்க மறிக்கப்பட்டன. அவர்கள் வெயிலில் நடுத்தெருவில் சிக்கிக்கொண்டனர். செத்திருக்கவும்கூடும். அவர்களின் உரிமை இங்கே எவருக்கும் பொருட்டு அல்ல. அரசியல்வாதிகள் அதை கவனிக்கவே போவதில்லை. ஏனென்றால் இதே வெறியை தங்களின் தேவைக்காக அவர்கள் நாளை உருவாக்கவிருக்கிறார்கள்.
இதுதான் நான் பேசவேண்டியது. ஆனால் இந்த தருணத்தில் நான் இதைச்சொன்னால் இன்றுள்ள அரசியல் கூச்சல்காரர்கள் இதை இன்னொரு அரசியல் என்று மட்டும்தான் எடுத்துக் கொள்வார்கள். இந்தக் கருத்து ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமோ பாதகமோ என்று மட்டுமே பார்ப்பார்கள். இது எந்த வகையிலும் இப்போது கவனிக்கப்படாது .இந்த உணர்ச்சி நிலைகள் கடந்து சென்ற பிறகு இதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது என்னைப் போன்ற ஒரு எழுத்தாளர் செய்வதாக இருக்கும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 


