ஒரு திறப்புவிழா
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
காந்தியவாதி G.S. லட்சுமண ஐயர் தன் இறுதி காலம் வரை தலித் மாணவர்களுக்காக நடத்தி வந்த D.S. ராமன் – சரோஜினி தேவி விடுதியின் புதிய வளாகம் அக்டோபர் ஐந்தாம் தேதி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களால் திறக்கப்படவுள்ளது. விடுதியின் முன்னாள் மாணவரான மதிப்பிற்குரிய அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனர் கா. தங்கவேல் அவர்களின் பெருமுயற்சியில் விடுதியின் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. மேலும் லட்சுமண ஐயரைப்பற்றி புத்தகம் கொண்டு வர வேண்டும் என்பது சிவராஜ் அண்ணாவின் நீண்டகால கனவு. மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களின் விருப்பமும் கூட. புத்தகத்தை ‘சத்திய மானுடம்‘ என்னும் தலைப்பில் அவரைப் பற்றிய ஆவண நூலாக அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியிடுகிறோம்.
புத்தகத்தில் லட்சுமண ஐயர் அவர்களைப் பற்றி பல்வேறு ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள், அவருடைய நேர்காணல் மற்றும் உங்களின் ‘காந்தியும் தலித் அரசியலும்‘ கட்டுரையுடன் நான் லட்சுமண ஐயரின் வாழ்வைப் பற்றி எழுதியதும் அடங்கியுள்ளது. என் எழுத்து அச்சாகி புத்தகமாக வருவதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் ஜெ. எழுதுதலும் அறிதலுமே எனக்கு நிறைவளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. என் தன்னறம் அதுவே என்று உணர்கிறேன். உங்களின் மாணவனாக உங்கள் ஆசி வேண்டுகிறேன். புத்தகம் அச்சாகி வந்ததும் உங்களுக்கு அனுப்புகிறோம். விழா அழைப்பிதழை இந்த கடிதத்தோடு இணைத்துள்ளேன் ஜெ.
ஞானசேகரன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

