கலைஞனின் உயிர்த்தெழல்

முழுமையறிவு இணையதளம்

முழுமை அறிவு சார்பாக நான் நடத்தி வரும் இந்திய தத்துவப் பயிற்சி முகாம்கள் 2022ல் இப்போது மூன்று ஆண்டுகளைக் கடந்து விட்டிருக்கின்றன. முழுமையறிவு சார்பாக எல்லா வகுப்புகளையும் சேர்த்து இருநூறு நிகழ்வுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். தத்துவ வகுப்பின் முதல் வகுப்பின் ஆறாவது அணி செப்டம்பர் மூன்றாம் வாரம் நிகழ்ந்தது. அதன் ஐந்தாவது வகுப்பின் நான்காவது அணி செப்டெம்பர் இறுதி வாரம் நிகழ்ந்தது. ஆகவே நடுவே ஒரு வாரம் மலையிலேயே தங்கி விடலாம் என்று முடிவெடுத்திருந்தேன் . அமெரிக்கா செல்வதற்கு முன் எழுதவேண்டிய பணிகளும் நிறைய இருந்தன.

ஆனால் இடையில் சென்னைக்கு வந்து செல்ல வேண்டியிருந்தது. பொன்னி இதழாசிரியரும், முரசொலி நிர்வாகியும், மு.கருணாநிதி அவர்களின் அணுக்க நண்பருமான அரு.பெரியண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வுக்காக புதன்கிழமை கிளம்பி ரயிலில் சென்னை வந்தேன். வியாழக்கிழமை காலையில் அந்நிகழ்ச்சியில் பங்கெடுத்து விட்டு அன்று மாலையே மீண்டும் மலைக்கு திரும்ப திட்டமிட்டிருந்தேன்.

அன்பு காலை நான் மேடையில் இருக்கையிலேயே புதுச்சேரியில் இருந்து நண்பர்கள் அழைத்து ரமேஷ் பிரேதன் உடல்நிலை மோசமடைந்திருப்பதாகவும் மருத்துவமனையில் சேர்திருப்பதாகவும் சொன்னார்கள்.  என்னால் ஒரு முழுமையான உரையை நிகழ்த்தமுடியவில்லை. ஒன்பது நிமிடங்கள் மட்டுமே பேசினேன். அறைக்குச் சென்றபின்னரே முழுச்செய்தியையும் கேட்டுத்தெரிந்துகொண்டேன்.

முந்தைய நாள் இரவு ரமேஷுக்கு திடீரென்று மூளையில் உயர் ரத்த அழுத்த தாக்குதல் நிகழ்ந்து ரத்த உறைவு உருவாகி இருக்கிறது. அது தொடர்ந்து இதயம் பலவீனம் அடைந்திருக்கிறது. காலையில் மருத்துவமனைக்கு சென்றதுமே தேர்ந்த மருத்துவர்கள் அவர் உயிர் பிழைப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். மிகச் சிறிய குருதி அடைப்பு இருந்தால் அவற்றை உறைய வைத்து நகர்த்தி வெளியே கொண்டு வருவதோ அறுவை சிகிச்சை செய்வதோ சாத்தியமாகும். ஆனால் மூளையில் மூன்றில் ஒரு பகுதி முழுக்க குருதி நிரம்பி அது தண்டுவடத்தை நோக்கி சற்று வழிந்திருந்தது.ஆகவே மருத்துவ வழிமுறைகளின்படி செய்வதற்கு எதுவுமே இல்லை.

நான் திரும்பும்போது செய்திகளை கேட்டுக்கொண்டே இருந்தேன். உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் மூச்சு இதை ஓடிக்கொண்டிருந்தது .அவர் மயக்க நிலையில், கிட்டத்தட்ட மூளை இறந்த நிலையில் இருந்தார். என்ன செய்யலாம் என்று நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். மருத்துவர்கள் உயிர்காக்கும் கருவியை நீக்கலாம் என்றும், ஆனால் அந்த முடிவை அவருடைய உற்றார்தான் எடுக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.

பொதுவாக இந்த வகையான முடிவை நெருங்கிய உறவினர்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.நண்பர்கள் எடுக்க கூடாது, அவர்கள் அவருக்கு எல்லா வகையிலும் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் என்றாலும். மருத்துவமனையிலும் வெளியிலும் எல்லா வகையான ஏற்பாடுகளையும் நமது நண்பர்கள் செய்து கொண்டிருந்தாலும் கூட அந்த முடிவை அவருடைய சகோதரிகளே எடுக்கும்படி சொல்லிவிட்டோம்.

பின்னர் ‘எதற்கும் மூன்று நாட்கள் பார்ப்போம்’ என்று நண்பர்கள் பிறகு முடிவெடுத்தனர். மூன்று நாட்களில் மருத்துவமனையில் வைத்து பார்த்தார்கள். மருத்துவமனையிலேயே அவருடைய இறுதி நெருங்கி விட்டது என தெரிந்தது. கருவிகளை நீக்கம் செய்யத் தேவையில்லாமலேயே இதயம் நின்று விட்டது.

அந்தச் செய்தியை சனிக்கிழமையன்று சொன்னார்கள். அன்று காலையிலேயே இன்று மாலைக்குள் உயிர் விலகும் என்ற தகவல் வந்திருந்தது. மாலையில் அது உறுதிசெய்யப்பட்டது. அப்போது மலையில் இருந்தேன், நண்பர் சரவணனும் அந்தியூர் மணியும் கூடவர நடை சென்றுகொண்டிருந்தேன். எஞ்சியோர் தத்துவ விவாதங்களுக்கான தயாரிப்பில் இருந்தனர்.அஞ்சலிக்குறிப்பை போட்டுவிட்டு வகுப்புக்குச் சென்று அதை தொடர்ந்தேன்.

மூன்று நாட்களாக இருந்து வந்த பதற்றம் அகன்று ஓர் எடைமிக்க உணர்வுதான் உருவானது. 2011 முதல் ரமேஷின் உடல்வதைகளை அறிந்தவன் என்ற வகையில் இந்த இறப்பு ஒரு விடுதலைதான் என்ற எண்ணம் எழுவதே தவிர்க்க முடியவில்லை.ஏனென்றால் இதற்கு முன் இரண்டு தருணங்களில் இதற்கு இணையான நெருக்கடிக்குள் சென்று அவர் மீண்டு வந்திருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் உடலில் ஒரு பகுதி இறந்தது.

ஆனால் விஷ்ணுபுரம் விருது அவருக்கு என்று தெரிவிக்கப்பட்ட பின்னர்  அவர் உடல் நிலையில் அபாரமான ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது . எப்போதும் உற்சாகமாக பேசலானார். எழுதிக்கொண்டிருக்கும் நாவல் ஒரு வருடத்திற்கு மேலாக பாதியில் நிற்கிறது என்றும், உடனடியாக முடித்து விடுவேன் என்றும், ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றும் சொன்னார். ஒவ்வொரு நாளும் முப்பது முதல் ஐம்பது பேர்வரை புது வாசகர்கள் அவரை கூப்பிட்டு பேசிக் கொண்டிருந்தார்கள் .அவருக்கு மின்னஞ்சல்கள் வந்து கொண்டே இருந்தன. அவருடைய நூல்களை பற்றிய மதிப்பீடுகளும், ஐயங்களும், புதிய வாசகர்கள் அவற்றை அணுகும் போது வரும் திகைப்புகளும் வந்தன. 

அவை அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன. .“இதைத்தான் வாழ்நாள் முழுக்க எதிர்பார்த்தேன் ஜெயமோகன்” என்று என்னிடம் சொன்னார். “என்றோ ஒருநாள் நான் கண்டெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சொல் அழியாது என்று நான் நம்ப விரும்பினேன்…” என்றார்.  

சாவுச்செய்தி அறிந்ததும் “ரெண்டு வருஷம் முன்னாடியே குடுத்திருக்கலாமோ?” என்று நண்பர் செந்தில் சொன்னார் . விஷ்ணுபுரம் விருது பெறவிருப்பவர்களின் பட்டியல் என்பது இலக்கியமறிந்த எவரும் அறிந்ததே. தோராயமாக எந்த ஆண்டு என்று கூடச் சொல்லிவிட முடியும். அதில் சாகித்ய அக்காதமி, இயல் போன்ற பிற முக்கியமான விருதுகளைப் பெறுபவர்கள் விலகினால் பின்பிருந்தோர் முன்னால் வருவார்கள்.  ரமேஷுக்கு முன்னால் விருது பெறவிருந்த சிலர் வேறு முக்கியமான விருதுகளை பெற்றதுதான் அவருக்கு நான்காண்டு முன்னதாகவே விருது வர காரணமாகியது. விஷ்ணுபுரம் விருது பெறுபவர்களில் என்னைவிட வயது குறைவான முதல் எழுத்தாளர் ரமேஷ்.

முன்னரே விருதை கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுவது நியாயமே. ஆனால் விருதை முன்னரே கொடுப்பது என்பது அவர் உடல்நிலை மோசமாக இருப்பதையும், அவர் உயிர்வாழ மாட்டார் என்பதையும் நாம் ஏற்பது போல ஆகிவிடும் என்ற தயக்கம் இருந்தது. அவருடைய முறை எப்போது வருகிறதோ அப்போது மட்டுமே அளிக்கலாம் என்று எண்ணினோம். பொருளாதார ரீதியாக உதவுவது என்பது வேறு, விருது என்பது வேறு என்ற எண்ணமும் இருந்தது.  அவர் விருது அளிக்கும்  வாசக ஏற்பை அனுபவித்து மகிழ்ந்து நிறைவுற்று மறைந்தார் என்ற எண்ணம் இப்போது மகிழ்ச்சியை அளிக்கிறது.

எத்தனை பேர் புதுச்சேரி அஞ்சலி நிகழ்வுக்கு வருவார்கள் என்ற மனக்குழப்பம் எனக்கு இருந்தது .மிக குறைவானவர்கள் வந்து அந்நிகழ்வு நிறைவு தராமல் போய்விடுமோ என்று தோன்றியது. ஏற்கனவே நாங்கள் அத்தகைய ஒரு பிழையை செய்து விட்டோம் என்று எண்ணமும் எங்களுக்கு உண்டு. ஞானக்கூத்தனின் மறைவின் போது சென்னையில் அவர் வாழ்ந்தமையாலும், அவருக்கு நீண்டகால வெவ்வேறு அரசியல் மற்றும் திரைப்படத் தொடர்புகள் இருந்தமையாலும் அவருடைய இறுதி நிகழ்விற்கு திரளாக பலர் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். எங்கள் சார்பில் எட்டு பேர் சென்று மலர்வளையம் வைத்தோம். ஆனால் குறைவான கூட்டம் காரணமாக அவருடைய அஞ்சலி நிகழ்வு தமிழின் முதன்மைக் கவிஞர் ஒருவருக்கு  நிகழவேண்டிய வகையில் நிகழவில்லை என சென்றவர்கள் சொன்னார்கள். இப்போதும் குற்ற உணர்வு உண்டு ,அதை அரங்கசாமி அவ்வப்போது கூறிக் கொண்டே இருப்பார் .

ஆகவே நான் என்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் செய்தியனுப்பி அவர்கள் கண்டிப்பாக இறுதி நிகழ்வுக்கு வர வேண்டும் என்றும், அமைப்பு சார்பாக வருவதாக இருந்தால் மலர்வளையத்துடன் வரவேண்டும் என்றும் அறிவித்தேன். ஈரோடு, சேலம், கோவை, மதுரை, சென்னை, பெங்களூர் என விஷ்ணுபுரம் நண்பர்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து வந்திருந்தனர்.

நான் தத்துவ வகுப்பில் ஞாயிறு நிகழவிருந்த வகுப்பை இரவு 9 மணிமுதல் 12 மணி வரை நடத்தி முடித்தேன். ஞாயிறு நிகழவிருந்த கூட்டு விவாதத்தை கிருஷ்ணன் மற்றும் அந்தியூர் மணி தலைமையில் நிகழும் படி ஏற்பாடு செய்துவிட்டு, இரவு ஒரு  மணிக்கு மலையிலிருந்து நேரடியாகவே கிளம்பி, அந்தியூர் சேலம் வழியாக புதுச்சேரி வந்தேன். என்னுடன் இரண்டு வண்டிகளிலாக பத்து நண்பர்கள் வந்தனர். அஜிதன் நாகர்கோயிலில் இருந்து கிளம்பி  பேருந்தில் வந்து சேர்ந்தான்.

உடனடியாக இறப்பு இல்லத்துக்குச் நான் செல்ல விரும்பினாலும் நண்பர்கள் சிறிது ஏற்பாடுகள் மிஞ்சி உள்ளன என்றும் அதன் பிறகு நான் அங்கே செல்லலாம் என்றும் சொன்னார்கள். ரமேஷின் குடும்பத்தினர் அவர்களின் குலவழக்கப்படி சற்று எளிமையான நிகழ்வுக்கே ஏற்பாடு செய்திருந்தனர். நிறையபேர் வருவார்கள் என்னும் செய்தியும் அவர்களுக்குத் தெரியவில்லை.  நம் நண்பர்கள் ஒரு எழுத்தாளனுக்கு உரிய பெருமையுடன் அது நிகழ வேண்டும் என்று எண்ணினார்கள்.

கே.வி. அரங்கசாமி இறுதி நிகழ்வின் பொருட்டு துபாயிலிருந்து கிளம்பி சென்னை வந்து, சென்னையிலிருந்து கார் வழியாக புதுச்சேரி வந்து சேர்ந்தார் .அரங்கசாமி வந்து சேர்ந்த பிறகு அவருடைய பொறுப்பில் சாலை முழுக்க துணிப்பந்தல் போடவும் , நிறையபேர் அமர்வதற்கான நாற்காலிகள் போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதுச்சேரியிலேயே மிகப்பெரிய மலர்த்தேர்தான் வேண்டும் என்று அரங்கசாமி உறுதியாக இருந்தார். 

ஏற்பாடுகள் முடிந்ததாக எனக்கு தகவல் வந்த பிறகு நான் கிளம்பிச் சென்றேன். என் சார்பில் மறைந்த படைப்பாளிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் செந்தில்குமார், அரங்கசாமி, விஜயசூரியன் ஆகியோர் மலர்வளையம் வைத்தனர். வெவ்வேறு ஊர்களின் சார்பில் விஷ்ணுபுரம் நண்பர்கள் மலர்வளையம் வைத்தனர். அங்கே தமிழின் படைப்பிலக்கியத்தளத்தின் நண்பர்கள் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். ஒவ்வொரு முகத்தை பார்க்கும் போதும் அவர்கள் வந்திருப்பதற்காக ரமேஷின் பொருட்டு ஒவ்வொரிடமும் தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பர் கோணங்கியைப் பார்த்தேன். அவரை தழுவிக் கொண்ட போது அவருடன் நிகழ்ந்த அந்த வகையான சந்திப்புகளுடன் ரமேஷின் நினைவும் எழுந்தது.  எப்போதெல்லாம் ரமேஷை நான் சந்தித்தேனோ அப்போதெல்லாம் அவரை தோள் சேர்த்து தழுவிக் கொள்ளும் வழக்கம் எனக்கு இருந்தது. “குண்டர்களை தழுவுறது எனக்குப் புடிக்கும், மல்யுத்தம் பண்ற மாதிரி ஒரு ஃபீல் இருக்கு” என்று ஒருமுறை அவரிடம் சொன்னேன். அவர் சிரித்தது நினைவிலெழுந்தது.

1999ல் ரமேஷ் எங்கள் வீட்டுக்கு  வந்திருந்தபோது அஜிதன் சின்னப்பையன், எல்கேஜி. என் வாசகர் ஒருவர் மாஸ்டர் என்ற ஒரு உடற்பயிற்சிப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். அது வீட்டிற்கு மாதந்தோறும் வரும். அஜிதன் அதில் இருக்கும் மாபெரும் பயில்வான்களின் படங்களை வெட்டி ஒட்டி வைத்து தன்னுடைய முருங்கைக்காயைப் போன்ற கைகளை தூக்கி ‘மசில்’ பிடித்து பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். அவனிடம் ரமேஷைச்  சுட்டிக்காட்டி ‘இவர் யார் தெரியுமா? என்று நான் சொன்னேன். “பெரிய சுமோ பயில்வான்!”

உடனடியாக அவன் தன்னுடைய படச்சேமிப்பை புரட்டி நாலைந்து சுமோ பயில்வான்கள் படங்களை பார்த்து உறுதி செய்து கொண்டான் .மறுநாள் நான் ரமேஷுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஜன்னல் இடுக்கில் மூன்று மண்டைகள் தெரிந்தன. என்ன என்று நான் கேட்டபோது இரண்டு பேர் ஓடிப் போய்விட்டார்கள். அஜிதனிடம் என்னடா என்று கேட்டேன். “என்னோட ஸ்கூல் ஃபிரன்ட்ஸ் .எங்க வீட்டுக்கு பெரிய சுமோ பயில்வான் வந்திருக்கார்னு சொன்னேன். அதான் பாக்க வந்தாங்க” என்று அவன் சொன்னான்.

பெரும்பாலும் குண்டர்களுக்கே உரிய பெருந்தன்மையும், வேடிக்கைச்சிரிப்பும் கொண்டவர் ரமேஷ். குண்டர்களில் அந்த பெருந்தன்மை அற்றவர்கள் மிகக்குறைவு என்பது என் அனுபவம். எவர்மேலும் அவருக்கு வஞ்சம், நிரந்தர வெறுப்பு இருந்ததில்லை. அவர் மிகக்கடுமையாக அவமதிப்பை உணர்ந்தது அவர் நம்பியவர்களால் கைவிடப்பட்டபோது. ஆனால் மிக விரைவாக அதிலிருந்து வெளிவந்தார். அதன்பின் அதைப்பற்றியும் நையாண்டியாகவே பேசிக்கொண்டோம்.

நீண்ட இரவு பயணமும் தூக்கமின்மையும் அளித்த களைப்பு. கூடவே வெயில். நான் நேரடியாக வெயிலில் நின்று நீண்ட நாள் ஆண்டுகளாகிறது என்று அஜிதன் பிறகு சொன்னான். மண்டை ரத்தம்போலச் சிவந்துவிட்டது. நான்கு மணிக்கு உடல் மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. 

ஒரு முதன்மைப் படைப்பாளிக்கு எவ்வாறு அந்நிகழ்வு நிகழவேண்டுமோ அவ்வளவு சிறப்பாக நிகழ்ந்தது. மலர்த்தேரில் அவர் உடல்  மிகப்பெரிய மேளதாளத்துடன் கொண்டுசெல்லப்பட, உடன் தமிழின் இன்று எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் ஏறத்தாழ அனைவருமே சென்றனர். பல இளம் படைப்பாளிகள், இன்னமும் ஒரு கதைகூட வெளிவராதவர்கள் சிலர் கூட, நெடுந்தொலைவு பயணம் செய்து வந்திருந்தார்கள். அவர்களில் பலரிடம் அப்பயணத்திற்கான பணம்கூட இருந்திருக்காது.

அவ்வாறுதான் அது நிகழவேண்டும். ஒரு படைப்பாளியின் இறுதி நிகழ்வு ஏன் அதற்குரிய மகத்துவத்துடன் நடக்க வேண்டும் ?ஆம், அவர் வாழும் காலத்தில் அவருடைய சமூகம் அவரை கௌரவித்திருக்கவேண்டும். அவருடைய இறுதிச் சடங்கை ஊர் கூடி நிகழ்த்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எப்போதுமே தமிழ்ச் சமுதாயத்தில் நிகழ்வதில்லை. தமிழ்ச் சமுதாயத்தில் பேச்சாளர்களுக்கும் ,எளிய யூடியூபர்களுக்கும் இருக்கும் இடம்கூட எழுத்தாளர்களுக்கு இல்லை. நடிகர்களுக்கும் அரசியலாளர்களுக்கும் இருக்கும் இடம் பேச்சாளர்களுக்கும் கிடையாது. ஆகவே எழுத்தாளர்கள் தங்களுக்கான கௌரவத்தை தாங்களேதான் தேடிக் கொள்ள வேண்டும். 

உடல்நலிந்து கைவிடப்பட்ட நிலையில் ரமேஷ் இருந்தபோது உடனிருந்தவர்கள் எழுத்தாளர்களே. இந்த நேரத்தில் பலரைச் சொல்லவேண்டும். மாணவராக மிக வறிய நிலையில் இருந்தபோதும் மனோமோகன் ரமேஷுடன் இருந்தார். நம் நண்பர்கள் சிவாத்மா, கடலூர் சீனு, விசாகன் என அவருடைய வாசகர்கள் அவருடன் இருந்தனர். தனக்கு என்ன நடந்தாலும் சிவாத்மாவிடம் தெரிவிக்கவேண்டும் என்றுதான் ரமேஷ் அறிவுறுத்தியிருந்தார். கோணங்கி அவரை வந்து சந்தித்துக்கொண்டே இருந்தார்.ஜீவகரிகாலன் பதிப்பாளராகவும் நண்பராகவும் ரமேஷுடன் இருந்தார். நானறியாத பலர் அவருக்கு நிதியுதவியும் பிற உதவிகளும் செய்திருக்கிறார்கள். 

அவரை எழுத்தாளர் சமூகம் கைவிடவில்லை என்பதை உறுதியாகப் பதிவுசெய்ய வேண்டும். 1948ல் புதுமைப்பித்தன் மறைந்தபோது நிகழ்ந்தவற்றை இன்று ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்த புதுமைப்பித்தன் பற்றிய கட்டுரைகளில் காணலாம். (புதுமைப்பித்தன் களஞ்சியம்) புதுமைப்பித்தனை தமிழ்ச்சமூகம் பொருட்படுத்தவில்லை. அவருடைய உடன்பிறந்தார் கைவிட்டனர்.  ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் அவருடன் நின்றனர், அவர் குடும்பத்தைக் காத்தனர். அக்களஞ்சியத்தில் எத்தனை எழுத்தாளர்கள் நெகிழ்வும் தீவிரமுமாக அவருடனிருந்தனர், எத்தனைபேர் அவருக்காக எழுதினர் என்பதை வெங்கடாசலபதியே உணர்ச்சிகரமான வியப்புடன் எழுதியுள்ளார்.

மயானத்தில் இருந்து நான் காரிலேயே கிளம்பி கோவை வந்தேன். மீண்டுமொரு முழு இரவுப்பயணம், துயில்நீத்தல். உற்றார் சாவுக்காக ஒரு நாள் துயில்நீக்கவேண்டும் என மரபுண்டு. இரண்டு நாட்கள் துயில் நீத்திருக்கிறேன். அஜிதன் மீண்டும் நாகர்கோயிலுக்குச் சென்றான். அரங்கசாமி  அன்றே சென்னை சென்று மீண்டும் துபாய்க்குக் கிளம்பினார்.

ரமேஷுக்கான விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அது முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது போலவே மிகச்சிறப்பாக டிசம்பர் 21, 22ஆம் தேதிகளில் நிகழும். இதை ரமேஷுக்காக நாங்கள் தமிழின் முதன்மை நாளிதழ்களிலெல்லாம் அளித்திருந்த இரங்கல் செய்திகளில் தெரிவித்திருந்தோம். ரமேஷுகான ஓர் இலக்கிய விழாவாகவே அது அமையும். அவருடைய முகம், அவருடைய எழுத்து விஷ்ணுபுரம் அரங்கிலே முழுமையாக திகழும். கலைஞர்கள் மறைவதில்லை. கலைஞன் உயிர் நீங்கும்போது அவன் மறுபடியும் பிறக்க தொடங்குகிறான். அவன் மீதான வாசிப்புகள் கூர்மை அடைகின்றன. அவன் மீதான விமர்சனங்களும் கசப்புகளும் மறைகின்றன .அதன் பிறகு அவன் என்ன எழுதினான் என்பதே நிற்கும்.

தன் உடல் ஒவ்வொரு நாளும்  சிதைந்து கொண்டிருக்கும் போது கூட தன்னுள் இருந் அனலை ஊதி ஊதி மேலெழுப்பிக் கொண்டவன், எழுதி தன்னை நிறுவிக்கொண்டவன், அவ்வளவு எளிதாக இந்த பண்பாட்டில் இருந்து மறந்துவிட மாட்டான். இன்று அவனுக்காக இச்சமூகத்தின் பெரிய முகங்கள் வந்து நின்றிருக்காமல் இருக்கலாம். பொதுமக்கள் திரண்டு வந்து அவனுக்கு அஞ்சலி செலுத்தாமல் இருக்கலாம். (அவனுக்கான இறுதிநாள் நேரடி ஒளிபரப்பை நடத்திய சுருதி டிவியும் கபிலனும் நன்றிக்குரியவர்கள்) ஆனால் எவர் அவனை வாசித்தார்களோ, அவனை தங்களுள் ஒருவராக நினைத்தார்களோ அவர்கள் அனைவரும் அங்கு இருந்தனர். அவர்கள் அவனை அரசனுக்குரிய கௌரவத்துடன் இடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அவனுடைய சொற்கள் இங்கு என்றும் வாழும்.அதை விஷ்ணுபுரம் விழாவின் ஊடாக மீண்டும் நிறுத்துவோம்.

ரமேஷுக்கு அளிக்கப்படவிருந்த விருது அந்த விழாவில் அவரை பிரதிநிதித்துவம் செய்பவருக்கு அளிக்கப்படும். விருதுத் தொகை மட்டும் இந்த ஆண்டுமட்டும் இணையாக பங்கிடப்பட்டு அவர் பெயரில் விஷ்ணுபுரம் –ரமேஷ் பிரேதன் சிறப்பு விருதாக இளம் படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும்.  எவருக்கு விருது என பின்னர் அறிவிப்போம். அவர்கள் ஒவ்வொருவரின் சொல்லிலும் முன்னோடி என ரமேஷ் மீண்டும் பிறந்து வருவார். ரமேஷ் நினைவாக என்ன செய்யலாம் என்பதை ஓராண்டுக்குள் கூடி ஆலோசித்து முடிவுசெய்வோம்.

வாழ்ந்து நிறைந்த என் இனிய குண்டனுக்கு மீண்டும் அஞ்சலி.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.