சோனம் வாங்சுக், லடாக்.

சோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர் – பாலா சோனம் வாங்சுக்- மாபெரும் போராட்டம் கங்கைக்காக ஓர் உயிர்ப்போர்

லடாக் பகுதி மாநில அந்தஸ்து கோரி நடத்திய போராட்டத்தை மைய அரசு ஒடுக்க முனைந்துள்ளது. இன்றைய சமூக ஊடகக் காலகட்டத்தில், ஒவ்வொரு அரசியல்கட்சியும் தனக்கான சமூக ஊடக அணியை தயாரித்து வைத்திருக்கும் சூழலில், இனி வரவிருப்பது மிகக்கடுமையான பிரச்சாரப் போர்.

பாரதிய ஜனதாக் கட்சியின் ஊடக அணி ஒற்றைப்படுத்தப்பட்டதும் திரிக்கப்பட்டதுமான ஒரு சித்திரத்தை மூர்க்கமாக முன்னிறுத்தி, அதை எதிர்ப்பவர்களை எல்லாம் தேசத்துரோகிகள் என முத்திரையடிக்கும். அதற்கு மறுபக்கமாக இந்தியா என்னும் அமைப்பை எதிர்க்கும் சக்திகள் சோனம் வாங்சுக் மற்றும் லடாக் போராட்டக்காரர்களை தங்களுடன் சேர்த்துக்கொள்வார்கள். தங்களைப்போல வெறுமொரு இந்திய எதிர்ப்பாளர் அவர் என முத்திரையடிப்பார்கள். லடாக்கில் நிகழ்வது ‘சுதந்திரப்போர்’ என ஆரம்பிப்பார்கள்.

இந்த முத்திரை பாரதிய ஜனதாவின் நோக்கங்களுக்கு மிகமிக உதவியானது. உண்மையில் இரு தரப்பும் சேர்ந்து ஒன்றையே செய்யவிருக்கிறார்கள். திரும்பத் திரும்ப அதுவே இங்கே நிகழ்கிறது.

இச்சூழலில் சோனம் வாங்சுக் மற்றும் லடாக் பற்றிய ஒரு சுருக்கமான சித்திரத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன். இதைப்பற்றி நடுநிலையுடன் சிந்தனை செய்பவர்களுக்கான ஒரு வழிகாட்டிக் கருத்து இது.

காஷ்மீர் மாநிலமாக இதுவரை இருந்து வந்தது உண்மையில் மூன்று கலாச்சாரப் பரப்புகள். ஜம்மு ஓர் இந்து நிலம். லடாக் ஒரு பௌத்த நிலம். காஷ்மீர் சமவெளி இஸ்லாமிய நிலம். இதில் காஷ்மீர் சமவெளியிலுள்ள இஸ்லாமியரில் சுன்னிகளில் ஒரு தீவிரப்போக்கு கொண்ட ஒரு பிரிவினர் மட்டுமே பாகிஸ்தான் ஆதரவு மனநிலையும், இந்திய எதிர்ப்பு அரசியலும் கொண்டவர்கள்.  அங்குள்ள ஷியாக்கள் பொதுவாக இந்திய ஆதரவாளர்கள். அங்குள்ள சூஃபி நம்பிக்கையாளர்களிலும் இந்திய எதிர்ப்பரசியல் பெரும்பாலும் இல்லை.  காஷ்மீரின் அரசியலை இந்த கலாச்சாரப் பின்புலம் இன்றி பேசமுடியாது.

ஆனால் சென்ற ஐம்பதாண்டுகளில் காஷ்மீர் பிரிவினைவாத அரசியல் பற்றி தமிழகத்தில் பேசிய எந்த ‘அரசியல் நிபுணரும்’ இந்த யதார்த்தம் பற்றிப் பேசியதில்லை. ஒட்டுமொத்த காஷ்மீரும் இஸ்லாமிய நிலம் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தனிநாடுக்கோரிக்கையோ, பாகிஸ்தான் ஆதரவோ கொண்டவர்கள் என்றும் அனைவருமே இந்திய எதிர்ப்பாளர்கள் என்றும் சொல்லப்பட்டது. இங்குள்ள பிரிவினைவாதிகள் அங்குள்ள பிரிவினைவாதிகளை போற்றிப்புகழ்ந்து ஒரு சித்திரத்தை உருவாக்கினர். இன்றும் தமிழில் கிடைக்கும் பலநூறு நூல்களில் இச்சித்திரமே உள்ளது.

உண்மையில் காஷ்மீரின் அரசியல்- சமூகச் சூழல் பற்றிய நேரடியான ஒரு சித்திரம் தமிழில் நான் எழுதிய பயணக்கட்டுரைகள் வழியாகவே உருவாகியது. அன்று நான் பொய்சொல்கிறேன் என்றெல்லாம் எழுதித்தள்ளினர். பின்னர் அதை அவர்களே ஏற்றுக்கொள்ளவும் நேர்ந்தது, ஏனென்றால் அப்பட்டமான தகவல்களை எளிதில் மறுக்கமுடியாது. அதன்பின் ஒரு சில கட்டுரைகளில் மெய்யான சித்திரம் வரத்தொடங்கியது.

காஷ்மீர் பிரிவினைவாதிகள் இரு சாரார். அவர்களில் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்று சொல்பவர்கள் சாமானியர். தனிநாடு வேண்டும் என கோருபவர்கள் உயர்குடியினர். அவர்களுக்கு மொத்தக் காஷ்மீர் மீதும் தங்கள் தங்குதடையற்ற ஆதிக்கம் நிலவவேண்டும் என்னும் ஆசையே உள்ளது.

லடாக், ஜம்மு இரண்டு நிலமும் காஷ்மீர் சமவெளியின் வல்லாதிக்கத்தின் கீழ் இருந்தன என்பதே உண்மை. ஜம்முவும் சரி, லடாக்கும் சரி காஷ்மீரின் உருதுவையே பயிலவேண்டும்; அதிலேயே தேர்வுகள் எழுதவேண்டும். காஷ்மீரின் தனி அந்தஸ்து காரணமாக அங்கே தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு உட்பட எந்தச் சலுகையும் இல்லை. அவர்கள் அங்கே குடியேறி 100 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் அவர்களுக்கு அங்கே எந்த உரிமையுமில்லை, சொந்தமாக ஒரு குடில்கூட கட்டிக்கொள்ள முடியாது.

ஆகவே காஷ்மீர் மூன்றாகப் பிரிக்கப்பட்டதும் சரி, அப்பகுதிக்கு அளிக்கப்பட்டிருந்த தனி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் சரி, சரியான நடவடிக்கையே. அது லடாக் மற்றும் ஜம்மு பகுதிகளின் விடுதலைதான். அப்படி ரத்துசெய்யப்பட்டால் காஷ்மீர் மக்கள் கொதித்தெழுவார்கள், ரத்த ஆறு ஓடும் என்பதெல்லாம் வெறும் அரசியல் பாவலாக்கள். அப்படியெல்லாம் அங்கே வலுவான மக்கள்தரப்பு ஏதும் இல்லை. அதற்காக வாதிடுபவர்கள் உண்மையில் சுன்னிகளின் ஒரு தரப்பு மட்டுமே.

ஆனால் அதன்பின் மத்திய அரசு செய்துகொண்டிருப்பது ஒவ்வொன்றுமே மிக எளிய அதிகார அரசியல். அதன் விளைவுகளை இந்தியா அனுபவிக்கப்போகிறது. இந்திரா காந்தியின் அரசு எப்படிச் செயல்பட்டதோ அப்படிச் செயல்படுகிறது இன்றைய மைய அரசு. ஒரு சிறிய ‘அடுக்களைக்குழு’ முடிவுகளை எடுக்கிறது. அதிகாரிகளிடமிருந்து செய்திகளை அறிந்து முடிவெடுக்கிறார்கள். அதிகாரிகள் வழியாக அந்த முடிவுகள் மக்கள்மேல் அழுத்தப்படுகின்றன. களநிலவரம் பற்றி அறியும் எண்ணமே இல்லை. அதிகாரிகளின் போக்கு எப்போதுமே ஆணவம் சார்ந்தது. சென்ற காலகட்டத்தில் காஷ்மீரை வன்முறைக்கு கொண்டுசென்றது காங்கிரஸின் இந்த அணுகுமுறையே. அது அப்படியே தொடர்கிறது.

காஷ்மீர் சமவெளிக்குன முழுமையான மாநில அந்தஸ்து உடனே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.ஏனென்றால் அது அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி. ஓர் அரசு அளித்த வாக்குறுதியை அது பொருட்படுத்தாது என்றால் அது மோசடி செய்கிறது என்றே பொருள். அரசு மீது நம்பிக்கையிழந்த மக்களிடமிருந்தே வன்முறை உருவாகிறது. வன்முறையை ஒடுக்குகிறேன் என்ற பாவனையில்அரசு மக்களை ஒடுக்குகிறது.

லடாக்கின் யதார்த்தம் என்ன? நீண்டகாலம், லடாக் காஷ்மீரின் ஆதிக்கத்தின் கீழ் நசுக்கப்பட்டிருந்தது. லடாக்கிய மொழி சீனச்சாயல் கொண்டது. ஆனால் லடாக்கின் மக்கள் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத உருது மொழியில்தான் பள்ளிக்கல்வி பயிலவேண்டும். இந்த மோசடியால் லடாக்கில் இரண்டு சதவீதம்பேர் கூட பள்ளிக்கல்வியை முடிப்பதில்லை. காஷ்மீருக்கு அளிக்கப்படும் மொத்த நிதியும் காஷ்மீர் சமவெளியில் செலவிடப்பட்டது. லடாக் நிலம் மிகப்பெரியது, அங்கே ராணுவம் செய்யும் சாலைப்பணிகள் அன்றி வளர்ச்சிப்பணிகள் என்பதே கிடையாது. காஷ்மீரின் வன்முறையாளர்கள் லடாக்கிலும் ஊடுருவுவதனால் சுற்றுலாவும் தேங்கியிருந்தது.

சென்ற இருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட லடாக்கின் வாழ்க்கை என்பது இருநூறாண்டுக்கு முன்பிருந்த அதே நாடோடி வாழ்க்கையே. லடாக்கியர் வட இந்தியாவுக்கு நாடோடி விற்பனையாளர்களாக வரவேண்டிய நிலை. மலைமக்களாகிய அவர்களுக்கு அது மாபெரும் சித்திரவதை. (லடாக்கில் இருந்து பஞ்சம்பிழைக்க ராஜஸ்தான் சென்று அங்கே தெருக்களில் கொதிக்கும் வெயிலில் கம்பிளி விற்பவர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றை யூடியூபிலேயே பார்க்கலாம்)

சோனம் வாங்சுக் லடாக்கின் இந்தப் பரிதாபநிலையைக் கண்டு போராட முன்வந்தவர். அடிப்படையில் அவர் காந்தியர். மேலைநாட்டுக்கல்வி பயின்ற அறிவியலாளர் என்றாலும் இயற்கைப்பாதுகாப்பு, தற்சார்புப் பொருளியல் பற்றிய பிரக்ஞை கொண்டவர். லடாக்கின் கல்வியிலுள்ள பின்தங்கிய நிலை கண்டு அதற்காக இளைஞர்களை திரட்டி பயிற்சி அளிக்க ஆரம்பித்தவர். லடாக்கில் கோடையில் பல இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதைக் கண்டு அதற்கான வழிமுறைகளை உருவாக்கியவர். லடாக்கின் இயற்கைவளங்களைப் பாதுகாக்கப் போராடுபவர். முழுக்கமுழுக்க அறவழிப்போராட்டம் செய்பவர்.

இப்போது சோனம் வாங்க்சுக்கை தேசவிரோதி என்றும், வன்முறையாளர் என்றும் முத்திரையடித்துவிட்டனர். இனி லடாக்கின் நிலவரம் என்ன என்றே தெரியாத இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்களிடம் அதை நிறுவிவிடுவார்கள். மொத்த லடாக்கையும் இந்தியாவுக்கு எதிரியாக்குகிறார்கள். இவர்களே அங்கே வன்முறையை உருவாக்கி அதை ஒடுக்க வன்முறையை கைக்கொள்வார்கள். அதற்கு இந்தியாவின் தேசியவெறி மூர்க்கர்கள் ஆதரவளிப்பார்கள்.

லடாக் மக்கள் பௌத்தர்கள். இக்கணம் வரை உறுதியான இந்திய தேசியவாதிகள். அவர்கள் கோருவது தங்கள் பகுதி மத்திய அரசின் அதிகாரிகளால் ஆட்சி செய்யப்படும் யூனியன் பகுதியாக இருக்கக்கூடாது, ஒரு மாநிலமாக இருக்கவேண்டும் என்பதையே. தங்கள் பகுதியின் நிலம், இயற்கைவளம் பாதுகாக்கப்படும் தனிச்சட்டப்பாதுகாப்பு தேவை என்பதை மட்டுமே.

இது அசாதாரண கோரிக்கையும் அல்ல. ஏற்கனவே சிக்கிம் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலும் இந்த மாநில அந்தஸ்து, பழங்குடிக்கௌன்ஸில் அரசியல், சட்டப்பாதுகாப்புடனே உள்ளன. லடாக் கேட்பது சிக்கிம் போன்ற ஒரு நிலையை. அது மிகமிக அடிப்படையான ஒரு கோரிக்கை. ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கோரிக்கை.

ஏன் அதை புறக்கணிக்கிறார்கள்? முதல் விஷயம் அம்மக்களின் மக்கள்தொகை குறைவு. ஆகவே ஓட்டுசக்தி இல்லை. அங்கே உள்ள கனிவளம் நேரடியாக மைய அரசின் கையில் இருக்கவேண்டும் என நினைக்கிறார்களா? அல்லது என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஆணவம் மிக்க அதிகாரிகளின் பேச்சை மட்டும் கேட்கிறார்களா?

லடாக் மக்கள் இந்தியப்பற்று கொண்டவர்கள். அவர்களை தேசவிரோதிகளாகக் கட்டமைத்தால் எல்லைப்பகுதியில் உருவாகும் அபாயம் பற்றி இவர்கள் அறியாமலிருக்கிறார்களா? அப்பழுக்கற்ற காந்தியவாதியான சோனம் வாங்சுக் இடத்தில் ஒரு தீவிரவாத தலைவர் வந்தால்தான் உண்மையில் அரசின் நோக்கம் நிறைவேறுமா? திகைப்பாக இருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.