லட்சுமண ஐயர், விலையில்லா நூல்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

தங்களுக்கு கோபிசெட்டிபாளையம் G.S. லக்ஷ்மண ஐயர் என்ற காந்தியத்தின் சாட்சி மனிதரைப் பற்றி தெரிந்திருக்கும். நாங்கள், குக்கூ நண்பர்கள் மூலமாக இரு வருடங்களுக்கு முன்புதான் இவரைப் பற்றி அறிந்தோம். அதிலிருந்து இவரைக்குறித்து கிடைக்கும் தகவல்களும், இவரை அறிந்தவர்கள் வாயிலாக தெரியும் நிகழ்வுகளும், அவர் விட்டுச்சென்ற நிறுவனங்களும், அவர் வாழ்ந்த தியாக வாழ்க்கையும், அவர் அளித்த கொடைகளும் எங்களை மீள முடியாத வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றன. இத்தகைய மனிதர்களும் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள், அவர்களைப் பற்றிய தகவலோ, நினைவுகளோ நம்மில் பலருக்கும் நாம் வாழும் தற்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கும் இல்லை என்பது இன்னொரு வியப்பு.

கோபிசெட்டிபாளையத்தில் அவருடைய தந்தையார் ஸ்ரீனிவாச ஐயரால் தொடங்கப்பட்டு இவரால் தொடர்ந்து நடத்தப்பட்டு, 120 வருடங்களுக்கும் மேலாக  தொடர்ந்து நடந்து வரும் வைர விழா பள்ளியில் படித்த திரு ‘அக்னி’ தங்கவேல் ஐயா அவர்கள் திரு லக்ஷ்மண ஐயரின் நினைவை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டி, அங்கு ஐயரால் நிறுவப்பட்ட ஹரிஜன மாணவர் விடுதியின் மேல் கட்டமைப்பு பணிகளை (ஒரு நூலகம் நிறுவுவது உட்பட) மேற்கொண்டுள்ளார். அந்த முயற்சியில் இணைந்து செயல்பட குக்கூ நண்பர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

அக்டோபர் 5, 2025 அன்று நடக்கப் போகும் திறப்பு விழாவில், 2011-இல் காலமான ஆனால் அதற்கு முன்பே மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் போன ஐயரைப் பற்றிய ஒரு நினைவூட்டலை ஒரு புத்தக வடிவில் கொண்டுவரலாம் என்று உத்தேசித்துள்ளோம். இந்த புத்தகம் கவிஞர், வாசிப்பாளர் மற்றும் இளைஞருமான திரு ஞானசேகரனின் எழுத்தில் வெளி வருகிறது. ஐயர் தலித் மக்களுக்காக செய்த சேவைகள், அவற்றின் தற்போதைய வடிவம், அந்தப் பள்ளியில் படித்த மாணவர் சிலரின் நினைவுக்குறிப்புகள், அவர் தொடர்பான சில படங்கள்,  பொருந்தக்கூடிய சில கட்டுரைகள் போன்றவை இந்த புத்தகத்தில் இடம்பெற உள்ளன. அத்துடன் காலச்சுவடு மாத இதழில் பிரசுரமான இவரது நேர்காணல், பாவண்ணன் எழுதிய சில குறிப்புகள், இவரைக் குறித்து தினமணி மற்றும் வேறு இதழ்களில் வந்த செய்திக் குறிப்புகள் மற்றும் சில கட்டுரைகள் போன்றவற்றையும் இந்த புத்தகத்துடன் இணைப்புகளாக வைக்க உத்தேசித்திருக்கிறோம்.

இந்தப் புத்தகம் தன்னறம் நூல்வெளியின் விலையில்லா வெளியீடாக வரும்.

எதிர்மறை எண்ணங்களை வளர்ப்பதிலும், பிரிவினைவாத அரசியலை உயர்த்திப் பிடிப்பதிலும், உரக்கப்பேசி மூடக்கருத்துகளை நிலைநாட்டுவதிலும் முனைந்து, லக்ஷ்மண ஐயர் போன்ற உண்மையான தியாகிகளையும் நற்செயல் புரிந்தோர்களையும் மறைத்து, தகுதியில்லாதவர்களை முன்னிறுத்தும் மூடர் கூட்டத்துக்கு நடுவே, காந்தியத்தைப் பற்றியும் தலித் அரசியலைக் குறித்தும் ஒரு சரியான, நடுநிலையான புரிதலையும் நம்பிக்கையையும் நீங்கள் உங்கள் எழுத்தின் மூலம் எங்களுக்கு அளித்துக்கொண்டே இருக்கிறீர்கள். அவ்வாறு நம்பும் ஒரு குழுவுக்காகவே, அது எவ்வளவு சிறு குழுவாக இருந்தாலும் சரி, இந்தப் புத்தகம் கொண்டுவரப்படுகிறது.   

ரவீந்திரன்–மீனாக்ஷி

ravindran.appasamy@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.