விபாஸனா இரண்டாம் நிலை பயிற்சி
அமலன் ஸ்டேன்லி அவர்களின் விபாசனா நிகழ்வுகள் முழுமையறிவு அமைப்பினூடாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பலர் முதல் நிலை பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
இரண்டாம் நிலைப் பயிற்சியை நடத்த அமலன் ஸ்டேன்லி எண்ணுகிறார். முதல்நிலைப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் எவரும் இதில் கலந்துகொள்ளலாம். முதல்நிலைப் பயிற்சி அடிப்படைகளால் ஆனது. இது அகநோக்கிய அடுத்தகட்ட பயணம்.
விபாசனா பயிற்சி உள்ளத்தை ஒருமையாக்கவும், தேவையற்ற உளச்சுமைகளை உதறிவிட்டு உள அழுத்தமில்லா நிலையை அடையவும், அதன் வழியாகச் செயலில் தீவிரமாக ஈடுபடவும் மிக அவசியமானதாக உலகம் முழுக்க பயிற்றுவிக்கப்படுகிறது. அமலன் ஸ்டேன்லி வியட்நாம், தாய்லாந்து , ஜப்பான், திபெத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உலக அளவில் புகழ்பெற்ற பல விபாசனா ஆசிரியர்களிடம் முறையான, நீண்டகாலப் பயிற்சியை பெற்றவர். (பார்க்க வி.அமலன் ஸ்டேன்லி, தமிழ்விக்கி)
விபாசனா தியானமுறை பௌத்த பிக்குகளால் பொமு 2 ஆம் நூற்றாண்டில், அதாவது நாம் கீழடி நாகரீகம் இருந்ததாகச் சொல்லும் காலகட்டத்தில் உருவானது. தொடர்ச்சியாக வெவ்வேறு ஞானியரால் அது விரிவாக்கம் செய்யப்பட்டது. நம் உள்ளத்தை ஒருமைப்படுத்துவதற்கான உச்சகட்ட பயிற்சியாக இது கருதப்படுகிறது
பலர் பயிற்சி இல்லாமல் நேரடியாக பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் விபாசனா பயிற்சிக்குச் சென்று ஓரிரு நாட்கள் தாளமுடியாமல் ஓடிவருவதைக் காண்கிறோம். எங்கள் பயிற்சி என்பது மிகநுணுக்கமாக படிப்படியாக உள்ளத்தை பயிற்றுவிப்பது. இது மரபார்ந்ததும் அறிவியல்பூர்வமானதுமாகும்.
நாள் அக்டோபர் 24 ,25 மற்றும் 26 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் இடமிருப்பவைஉருது இலக்கியம், கஸல் அறிமுகம்ஃபயஸ் காதிரி அவர்கள் நடத்தும் உருது இலக்கியம்- கஸல் அறிமுக நிகழ்வு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற ஒன்று. மரபான உருது கவிஞர்- பாடகர் குடும்பத்தில் வந்தவர் காதிரி. பாடகரும்கூட.உருது இலக்கியம் என்பது வடக்கே இருப்பது அல்ல. தமிழகத்தின் மிகச்சிறப்பான மரபுகளில் ஒன்று அது. உருது இலக்கியத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை, குறிப்பாக முகலாயர் காலம் முதல் வரும் கவிமரபை அறிமுகம் செய்யும் காதிரி அதன் மிகச்சிறப்பான வெளிப்பாடான கஸல் இசை மரபையும் அறிமுகம் செய்கிறார்.
நாம் லதா மங்கேஷ்கர், வாணிஜெயராம் முதல் ஹரிஹரன் வரை பலர் பாடிய கஸல் பாடல்களைக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் ரசிக்க அடிப்படைப்பயிற்சி அற்றவர்களாகவும் இருக்கிறோம். அந்த அறிமுகப்பயிற்சி நமக்கு முற்றிலும் புதிய ஓர் உலகைத் திறந்து தருவது. ஒரு பெரிய தொடக்கம்.
(அக்டோபர் 20 அன்று திங்கள்கிழமை தீபாவளி ஆதலால் இந்நிகழ்வு வெள்ளி சனி என இருநாட்கள் மட்டுமே நிகழும். கட்டணமும் அதற்கேற்பவே அமையும்.18 மாலையுடன் நிகழ்வு நிறைவடையும்.)
நாட்கள் அக்டோபர் 17 மற்றும் 18 (வெள்ளி, சனி)விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

மரபின்மைந்தன் முத்தையா தமிழ் விக்கி
மரபின் மைந்தன் முத்தையா நடத்திவரும் மரபிலக்கியம், சைவத்திருமுறைகள் அறிமுக வகுப்புகள் முன்னர் நான்கு முறை நடந்துள்ளன. மீண்டும் நிகழவிருக்கின்றன.
சைவத்தை அறிவதென்பது தமிழை, தமிழ்ப்பண்பாட்டை நுணுகி அறிவதுதான். சைவசித்தாந்தம் சைவத்தின் தத்துவ முகம். சைவத் திருமுறைகள் சைவத்தின் இலக்கிய முகம். சைவத்திருமுறைகளிலுள்ள புகழ்பெற்ற சில பாடல்களையே பரவலாகச் சைவர்கள்கூட அறிந்திருப்பார்கள். கூடுதலாக அறியமுயல்பவர்கள் நூல்களை வாங்குவார்கள், ஆனால் நூல்கள் வழியாக பயிலமுடிவதில்லை.
சைவத்திருமுறைகளைப் பயில ஒரு மரபு உண்டு. இன்றைய சூழலில் நவீன இலக்கியம் மற்றும் நவீன கல்விமுறை அறிமுகம் உடைய ஒருவர் அந்த மரபை இன்றைய சூழலுக்காக மறு ஆக்கம் செய்து கற்பிக்கவேண்டியுள்ளது. மரபின்மைந்தன் முத்தையா அத்தகையவர். நவீன இலக்கியமும் மரபிலக்கியமும் செவ்விலக்கியமும் சைவமும் அறிந்தவர்.
இந்த வகுப்பில் எளிமையான முறையில் தமிழின் மரபிலக்கியத்திற்குள் செல்வது எப்படி என தொடக்கம் அளிக்கப்படும். அதன்பின் சைவத்திருமுறைகளுக்குள் செல்லவும், அவற்றின் கவிச்சுவையையும் தத்துவத்தையும் புரிந்துகொள்ளவும் வழிகாட்டப்படும். இந்த வழிகாட்டல் ஒரு தொடக்கம். ஒருவர் அதிலிருந்து முன்சென்று தன் கல்வியைத் தொடரமுடியும்.
நாள் அக்டோபர் 10, 11 மற்றும்12, (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் நிகழ்வுகள்மரபிசைப் பயிற்சிஜெயக்குமார் நடத்தும் மரபிசைப் பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இவை கர்நாடக இசை எனப்படும் மரபிசையை கேட்டு ரசிப்பதற்கான பயிற்சிகள். எதுவுமே அறியாத தொடக்கநிலையினருக்கானவை. ராகங்களை அறிமுகம் செய்து, திரைப்பாடல்கள் வழியாக அவற்றை செவிக்குப் பழக்கப்படுத்தி, இசைப்பாடல்களை கேட்கச்செய்து இசைக்குள் இட்டுச்செல்லும் முயற்சி இது. பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் புதிய தொடக்கமாக அமைந்தவை.
நம்மில் பலருக்கும் மரபிசையை அறியவேண்டும், கேட்டு ரசிக்கவேண்டும் என்னும் ஆர்வமிருக்கும். அதற்கான முயற்சிகளைச் செய்தும் இருப்போம். ஆனால் இணையம் போன்றவை பெரும்பாலும் உதவுவதில்லை. நேரடியான வகுப்புகள் தேவை. தீவிரமான கவனத்துடன் அவ்வகுப்புகளை கவனிக்கவேண்டும். நேரடியாக ஈடுபட்டு பயிலவும் வேண்டும். அதற்காக அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்டவை இவ்வகுப்புகள்.
நாள் அக்டோபர் 31, நவம்பர் 1,2 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் நிகழ்வுகள்நவீனத் தியானம் உளக்குவிப்புப் பயிற்சிதில்லை செந்தில்பிரபு தமிழ்விக்கி
தில்லை செந்தில்பிரபு நவீன தியானம்- உளக்குவிப்புப் பயிற்சிகளை 30 ஆண்டுகளாக அளித்து வருபவர். கோவையில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி கல்விப்பணிகளையும் தியானப்பயிற்சிகளை அளிப்பதையும் சேவையாகச் செய்து வருகிறார். புகழ்பெற்ற ஏற்றுமதித் தொழில் ஆலோசகர், தொழில்முனைவோர் ஆக பணிபுரிகிறார்.
தில்லை செந்தில்பிரபுவின் தியான- உளக்குவிப்புப் பயிற்சிகள் எவருக்கானவை? எவருக்கு பயிற்சியில், தொழிலில் உள்ளம் குவியவில்லை? எவருக்கு எப்போதும் அகம் பரபரத்துக்கொண்டே இருக்கிறது? எவருக்கு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு உள்ளம் தாவிக்கொண்டிருக்கிறது? எவருக்கு மிகச்சிறு காரணங்களுக்காககூட எரிச்சலும் கோபமும் உருவாகிறது? எவருக்கு எப்போதும் ஓர் பதற்றநிலை, எரிச்சல் நிலை இருந்துகொண்டிருக்கிறது?
மிக எளிதான சோதனை இது. சற்றுநேரம் தனியாக அமர்ந்தால் உங்களுக்குள் எழுவது இனிமையான, நிம்மதியான எண்ணங்களா அல்லது எரிச்சலும் கோபமும் ஊட்டும் எதிர்மறை எண்ணங்களா? எதிர்மறை எண்ணங்கள் என்றால் உங்கள் மனம் நிலையழிந்துள்ளது. ஒருமையற்று உள்ளது. இது இன்றைய நவீன வாழ்க்கை நமக்கு அளிக்கும் மிகப்பெரிய நோய். இதிலிருந்து பெரும்பாலானவர்கள் தப்ப முடியாது.
இந்த உளநிலைக்கு பல காரணங்கள். அன்றாடவாழ்க்கையே கடுமையான போட்டியாக ஆகியிருப்பது. மிகக்கடுமையான மன உழைப்பு இல்லாமல் வாழமுடியாத நிலை. (கடுமையான உடல் உழைப்பு உள்ளத்துக்கும்கூட நல்லது). அனைத்தையும் விட இன்று தொழில், குடும்பம் என எல்லா தளங்களிலும் அமைப்புகள் வலுவடைந்துள்ளன. நாம் வெவ்வேறு அமைப்புகள் சார்ந்து மட்டுமே வாழமுடிகிறது. அந்த அமைப்பின் அதிகாரக்கட்டுமானத்தில் ஒரு பகுதியாக நாம் அமைகிறோம். ஆகவே நம்மை எவரோ மேலிருந்து சாட்டையால் அடிக்கிறார்கள். நாம் கீழிருப்பவர்களை அடிக்கிறோம். இதுவே மனச்சோர்வை, மனச்சிதறலை உருவாக்குகிறது.
இந்தியத் தியானமுறைகளை மேலைநாட்டு உளவியல் கொள்கைகளுடன் இணைத்து மகரிஷி மகேஷ் யோகி 1970களில் நவீனத் தியானமுறையை உருவாக்கினார். அது 1950 களில் உலகப்போரின் அழிவுக்குப்பின் உருவான மனச்சோர்வுக் காலகட்டத்தில் பிறந்தவர்களின் இளையதலைமுறை உருவான காலகட்டம். வியட்நாம் போர், பல்வேறு புரட்சிகளின் தோல்வி ஆகியவற்றால் அந்த உளச்சோர்வு பெருகியது. அதை பீட் தலைமுறை என்பார்கள். ஹிப்பி இயக்கம் உருவானது. அவர்களுக்காக மகேஷ் யோகி உருவாகிய தியானமுறை அவர்களில் பெரும்பாலானவர்களை மீட்டது. அதன் வழியாக அது உலகம் முழுக்க பரவியது.
அந்த வழியில், மேலும் மேலும் நவீன உளவியல் மற்றும் நிர்வாகவியல் கொள்கைகளை இணைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட தியான முறைகள் இன்று உலகமெங்கும் உள்ளன. அந்த மரபில் வந்த தியானப்பயிற்றுநர் தில்லை செந்தில் பிரபு . எந்த தியான முறையிலும் ஆசிரியருடனான நேரடி உறவு, அவர் உங்களை அறிந்திருப்பது முக்கியமானது. ஆகவே இந்த நேரடிப்பயிற்சி அளிக்கப்படுகிறது
நாள் நவம்பர் 7, 8 மற்றும் 9
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
ஆயுர்வேத- வாழ்க்கைமுறை அறிமுகம்ஒருவரிடம் அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டால் ஆம் என்று சொல்லலாம். ஆனால் மூன்று கேள்விகளை மேற்கொண்டு அவரிடம் கேட்கலாம்.
இயல்பான நிறைவான தூக்கம் உள்ளதா, தூங்கி எழுந்தால் புத்துணர்வாக உணர்கிறீர்களா?இயல்பான செரிமானம் உள்ளதா? அதன்விளைவாக இயல்பான கழிவகற்றல் நிகழ்கிறதா?உடலில் எங்கேனும் வலி அல்லது அசௌகரியத்தை உணர்கிறீர்களா? குறிப்பாகக் காலையில்?இவற்றுக்கான பதில்களில் இருந்தே ஒருவர் தன் உடல்நிலை சீராக இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும்.
ஆனால் கறாராகப்பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு இம்மூன்றிலும் சிக்கல் இருக்கும். சென்றகாலங்களில் நாற்பது கடந்தவர்களுக்கான சிக்கல் இது. இன்று இளமையிலேயே உருவாகி வந்துள்ளது. காரணம், இன்றைய வாழ்க்கைமுறை. இதிலுள்ள அவசரம், போட்டி ஆகியவை.
ஆயுர்வேதம் எல்லா நோய்களுக்கும் தீர்வு அளிக்கும் முறை அல்ல. ஆனால் வாழ்க்கைமுறைச்சிக்கல்களுக்கு அது நிரந்தரமான தீர்வுகளை அளிக்கும். வாழ்க்கைமுறைச் சீரமைப்பு, இயற்கையான மூலிகை மருந்துகள் வழியாக. அதற்கு முதலில் ஒருவர் தன் உடல் பற்றி ஆயுர்வேதம் சார்ந்த பார்வையை அறிந்திருக்கவேண்டும். தன்னைத்தானே மதிப்பிட அறிந்திருக்கவேண்டும். தன்னை சீரமைக்க அது அவசியம். அதன்பொருட்டே இந்தப் பயிற்சிகள்.
சுனீல் கிருஷ்ணன் முறையான ஆயுர்வேத கல்விகொண்டவர், புகழ்பெற்ற நவீன எழுத்தாளர், காந்தியவாதி.
அவருடைய வகுப்புகள் நவம்பர் 14 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
