சூஃபிச் சுடர்களும் பிரபஞ்ச மெய்மையின் ஒருமைச் சமுத்திரமும். நிஷா மன்ஸூர்

(10 செப்டெம்பர் 2025 அன்று நாகர்கோயிலில் தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபி சுடர்கள் என்னும் நூலை வெளியிட்டு நிஷா மன்ஸூர் ஆற்றிய உரை)

தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள் கட்டுரைத் தொகுப்பின் நூல் அறிமுகம் என்கிற பெயரில் நூலின் உள்ளடக்கத்தை சுருக்கமாகச் சொல்வதைவிட இந்த நூலுக்குள் நுழைவதற்கான இரண்டு வாசல்களைத் திறந்து தருவதன் மூலம் இந்தத் தொகுப்பின் கட்டுரைகளை உள்வாங்குவதற்கும் அவை காட்டித்தரும் பாதையில் பயணிப்பதற்குமான முன் தயாரிப்பை நல்க முடியும் என நம்புகிறேன்.முதலாக சூஃபிஸம் என்றால் என்ன என்பதையும் அடுத்ததாக தமிழ் மண்ணுக்கான தனித்துவமான சூஃபிஸ மரபின் பண்பாட்டுக் கூறுகள் குறித்த அறிமுகத்தையும் பார்ப்போம்.

சூஃபிஸம் என்றால் என்ன ?

சூஃபிஸம் என்பது ஒரு மீள் பயணம், ஒரு வடியும் அலை.

எல்லையில்லாத சமுத்திரத்தில் வடியும் அலை ஒன்றில் மூழ்கி அது அடித்துச் செல்லும் பாதையில் அதன் நித்திய எல்லையற்ற மூல ஊற்றுக்குப் பயணிப்பது பற்றிய வாழ்க்கைத் தொழிலும் அறிவுத் துறையும் அறிவியலும் ஆகும்.

மாபெரும் குருநாதர் எனப் போற்றப்படும் ஷைகுல் அக்பர் முஹையத்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முக்கியமான  பிரார்த்தனை,

“இரட்சகா,உமது எல்லையில்லா ஒருமைச் சமுத்திரத்தின் ஆழத்தில் என்னைப் பிரவேசிக்கச் செய்வாயாக“இதுதான் சூஃபிஸ பாதையின் ஒற்றை இலக்கு ஆகும்.

ரூமி மெளலானாவின் ஞானகுருவான சம்ஸுத் தப்ரேஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பிரகடனம் இது,

“நான் சூஃபி. இக்கணத்தின் குழந்தை.

ஒரே கூரையின் கீழ் இரண்டு இரவுகள் உறங்குபவன் அல்லன்

ஒரே உணவுத்தட்டில் இரண்டு வேலைகள் உண்ணுபவன் அல்லன்.”  இதனை சூஃபியின் விளக்கமாக உணர்ந்து கொள்ளலாம்.

சூஃபிகள் எப்போதும் பரலோக ராஜ்ஜியத்தின் ரகசியங்களின் மீதும் பிரபஞ்ச ஊற்றின் கண்களின் மீதுமே கவனத்தைக் குவிப்பவர்களாக இருக்கிறார்கள்.

பதினோராம் நூற்றாண்டின் மாபெரும் சூஃபியான இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மரணித்தபோது அவர் தம் அந்திம காலத்தில் எழுதிவைத்திருந்த கவிதையொன்று அவரது  தலைமாட்டில் இருந்தது.அதில்,

“நானொரு பறவை; இவ்வுடல் எனது கூண்டு.

அதை அடையாளமாக வைத்துவிட்டு நான் பறந்து செல்கிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது. இதனை சூபி வாழ்வின் ஒட்டுமொத்த குறியீடு எனலாம்.

இன்னொரு விதமாகக் கூறினால் “சூஃபிஸம் ஒரு குறிப்பிட்ட மறை வெளிப்பாட்டையே முற்றிலும் சார்ந்திருப்பதால் அது வேறு எதனையும் அறவே சாராமல் தன்னிறைவு கொண்டுள்ளது. அதேசமயம் பகிர்வதற்கு பொருத்தமான அளவு உலகின் எல்லா நிலப்பகுதியில் நிலவும் பண்பாட்டுக் கூறுகளையும் கலை வடிவங்களையும் கருவியாக ஏற்றுக் கொள்ளவும் செய்கிறது“

நம் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒப்புவமையில்லாத சூபி ஞானியான கல்வத்து நாயகம் அவர்கள் தமது சீடர்களுக்கான தினசரி விர்து எனப்படும் தியான உச்சாடனங்களில் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ” எனும் இறைமறை வசனத்தைப் பரிந்துரைக்கிறார்கள். “நாம் அனைவரும் இறைவனிடமிருந்து வந்தோம் மீண்டும் அவனிடமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம் ” எனும் பொருள் கொண்ட இவ்வசனம் மரணித்த செய்தியைக் கேட்க நேர்பவர் மொழியும் வழங்கு சொல்லாக எளிமைப் படுத்தப்பட்டாலும் இதன் அசல் பொருளானது ஒரு மனிதன் தன் வாழ்வின் அநித்தியத்தையும் தன் ஆன்மாவின் ரகசியத்தையும் உணர்ந்துகொள்ளப் பயன்படும் மந்திரமாக ஜொலிக்கிறது.இதனையே ரூமி மெளலானாவின் கவிதை  இப்படிச் சொல்கிறது,

“ஆனால் நானறிவேன்

எனது ஆன்மா வந்தது வேறெங்கிருந்தோ

அங்கு சென்றடையவே விரும்புகிறேன் நான்

வேறேதோ மதுபான விடுதியிலிருந்து

பிறந்திருக்கிறது இந்த போதை

நான் அங்கு மீளும்போது

முற்றிலும் தெளிவடைந்திருப்பேன்

இப்போது இந்தக் கூட்டில்

அமர்ந்திருக்கும் நான்

வேறோர் நிலவுலகின் பறவை.

நான் பறந்து வெளியேறும் நாள்

வெகு தொலைவில் இல்லை“

சூஃபி எனும் சொல்லாடல் ஸுஃப்பா எனும் மூலச்சொல்லில் இருந்து பிறந்தது. நபிகள் நாயகத்தின் அவையில் திண்ணைத் தோழர்கள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) என்று குறிப்பிடப்பட்ட  நூற்றுக்கணக்கான தோழர்கள் ஒரு திண்ணையில் தங்கி நபிகளாரின் ஒவ்வொரு அசைவையும் ஆவணமாக்கியதோடு மட்டுமின்றி வாழ்வியல் நெறிமுறைகள் சட்டதிட்டங்கள் போன்ற சமூக மனிதனுக்கான ஒழுங்குகளை போதிப்பதைத் தாண்டி ஆன்மீக ரகசியங்களையும் இறைமறையின் அகமியங்களையும் பயின்று வந்தனர்

அந்தத் திண்ணைத் தோழர்களின் நீட்சியாகவே இன்றுவரை உள்ள ஸூபிகள் இருக்கின்றனர். .அவ்வப்போது மனதில் ஏற்படும் சபலத்தை வெல்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளும் சாதாரண மனிதனைத் தாண்டி மனோ இச்சைகளுக்கெதிரான முழுமையான போரை மேற்கொள்வதே சூபிகளின் முழுமுதற் கொள்கையாகும். விரைந்து முன்னேறும் சூஃபியே ஷைகுவாக–சற்குருவாக இருந்து சீடர்களை வழிநடத்துகிறார்.அவர் இறைமறையாம் குரானுக்கு நெருக்கமானவர்.மனித உருவில் ஃபுர்கானை அடைவதற்கு நெருங்கி வருகிறார்.

உலக வாழ்வின் மீது பற்றற்றிருப்பது, எளிய உணவுகளை மட்டுமே உண்ணுவது, கிடைத்தவற்றைக் கொண்டு பொருந்திக் கொள்வது. என்று துறவற மனோநிலையில் வாழ்ந்தாலும் ஈராக்கின் ராபியத்துல் பஸ்ரியா  தமிழ்நாட்டின் குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பா  போன்ற மிகச்சிலரைத் தவிர ஏனைய அனைவருமே திருமண பந்தத்தை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிபூரணத்துவம் –இன்சானே காமில் என்பது சூஃபிஸத்தின் இலக்கு ஆகும். பரிபூரணம் என்பது கம்பீரம், அழகு,முழுமை ஆகிய பண்புகளின் கலவை ஆகும்.இந்த இறைப் பண்புகளைத் தரித்துக் கொள்வதுதான் சூஃபிஸம்.

அதாவது,

வீழ்ந்த மனிதனின் குறைபாடுகளை ஆன்மாவிலிருந்து அகற்றி

அவனது இரண்டாம் இயல்பாக ஆகிவிட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் தப்பெண்ணங்களைக் களைந்து இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனின் ஆதி இயற்கையின் குணநலன்களை ஆன்மாவுக்கு அளிப்பது என்பதாகும்.

ஹதீஸே குத்ஸியில் இறைவன் கூறுகிறான்,

“நான் மறைந்த புதையலாக இருந்தேன்.பிறகு அறியப்பட விழைந்தேன்,எனவே இவ்வுலகைப் படைத்தேன்” என்பதாக.

இந்தப் புனித நபிமொழிதான் எல்லா சூஃபிஸ சிந்தனைப் பள்ளிகளும் முன்மொழியும் நபிமொழியாகும்.

எல்லா சூஃபி சிந்தனைப் பள்ளிகளுக்கும் இறைமறை திருக்குர்ஆன்–நபிமொழி ஆகியனவே வழிகாட்டுபவை ஆகும். ஒப்பாரும் மிக்காருமற்ற பரிசுத்த புனிதரான நபிகள் நாயகமே சூஃபிஸத்தின் பெருந்தலைவர் ஆவார்.

“நீர் ஓராயிரம் ஆண்டுகள் வாழ்வதுபோல இம்மைக்குச் செயலாற்றுவீராக.ஆனால் நாளை மரணிக்கத் தயாராக இருப்பதுபோல மறுமைக்குச் செயலாற்றுவீராக” என்பது நபிகளாரின் பிரபலமான கூற்று.

பூமியில் இறைவனின் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் சமதர்ம சமுதாயத்தைக் கட்டமைப்பதற்காகவும் செயலாற்றுவது சூஃபிகளின் சமூக கடமையாகும். உலகோடு ஒட்டாமல் வாழ்வது சூஃபிகளின் வழமை அல்ல. சமூகத்துடன் இணங்கிக் கூடி வாழ்ந்தாலும்  மனதளவில் உலக ஆசாபாசங்களில் ஒட்டாமல் வாழ்வதுதான் சூஃபிகளின் வழமை ஆகும்.

“இவ்வுலகில் ஒரு அன்னியனைப் போல,அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல வாழ்வீராக” என்பது  இன்னொரு முக்கியமான நபிமொழி. ஆகவே“திரும்பிச் செல்வதற்கான  தயார்நிலையில்“தான் சூஃபி எப்போதும் இருப்பார். சிதிலமடைந்து துண்டுதுண்டான தனிமனித ஆன்மாவை அளவற்ற எல்லையற்ற இறை ஆன்மாவுடன் மறு ஒருங்கிணைப்பு செய்வதற்கான ஏக்கத்துடனே சூஃபியின் கண்கள் தவித்துக் கொண்டிருக்கும்.

அறிவியல் கண்டுபிடிப்புகளாலும்  தொழில்நுட்ப வளர்ச்சிகளாலும் மனிதன் வானத்தில் பறந்தபோதும் காலத்தின் குறுக்கு நெடுக்குகளின் அடுக்குகளினூடே ஆழப் பயணித்த போதும் அவனது மனதானது இச்சைகளின் வளர்ப்புப்பிராணியாகவே இருந்துகொண்டிருக்கிறது.

ஒரு துளை வழியாக இந்தப் பிரபஞ்சத்துள் பிரவேசிக்கும் மனிதன் தன் மூலத்தை/அசலை அடைந்து ஞானசாகரத்தில் திளைக்க வேண்டும்.ஆனால் வந்த அதே துளையையே வாழ்நாள் முழுதும் சிந்தித்துப் பின்னர் அதற்குள்ளாகவே வீழ்ந்து வீணாகி மறைந்து விடுகிறான். வந்த வழியே திரும்பிச் செல்வதற்கல்லவே வாழ்வெனும் அருள்.

இதனையே பட்டினத்தார் இவ்வாறு பாடுவார்,

“சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க

வெற்றம் பலம் தேடி விட்டோமே – நித்தம்

பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்

கறந்த இடத்தை நாடுதே கண்” 

“முடி சூழ்ந்த கண்ணில்

முளையடித்துக் கட்டிய மனசு” என்பார் நம் காலத்து பாணன் கவிஞர் விக்ரமாதித்யன். அவ்வாறு தன்னைப் பிரபஞ்சத்துடன் அடையாளம் கண்டுகொள்ளும்போது வாழ்வு இன்சான் எனும் மனிதன் காமிலான இன்சானாகப் பரிணமிக்கிறான் (இன்சானே காமில் –பரிபூரண மனிதன்).

சூஃபியும் எல்லா மனிதர்களைப் போலவே சாதாரண பிரபஞ்ச வாசலின் வழியாக இவ்வுலகத்திற்கு வந்தார். ஆனால் பெரும்பாலான மனிதர்களைப் போல தான் வந்த அந்த நுழைவாயில் வழியிலேயே வடிந்து செல்வதிலிருந்து  தவிர்த்து  தனது சிற்றலையை எல்லையற்ற பேரலையுடன் இணைத்துக் கொள்வதையே செயலாக்கிக் கொள்வார். இதற்கு தனது சொந்த முயற்சி மட்டுமே போதாது என்பதால் சற்குருநாதர் அந்த வாயிலில் கைதூக்கிக் காப்பவராக இருப்பார்.பரிபூரணத்தின் மையப்பகுதியில் இறைத்தூதர் சதா  காத்துக் கொண்டிருக்கிறார். வந்து சேராதவர்களுக்கு அவர் ஒரு மீட்புக் கயிற்றை வீசுகிறார்.அந்தக் கயிரே ஆன்மீக வம்சாவழி எனப்படும் ஸில்ஸிலா ஆகும்.ஒவ்வொரு சூஃபி சிந்தனைப் பள்ளியும் இவ்வாறே இறைத்தூதர் வசமிருந்துதான்  தோன்றி வருகின்றன.

“இறைவனின் பரிசுத்த மூச்சால் உள்ளிழுக்கப்பட்டு–உள்வாங்கப்பட்டு பிறகு வெளியேற்றப் படாமல் இருப்பதே சூஃபிஸத்தின் மேலான குறிக்கோள் ஆகும்.”

“சாந்தியடைந்த ஆத்மாவே…உம் இறைவனின் பக்கம் திரும்பிச் செல்.நீ அவன் மீது திருப்தியுற்றும் அவன் உம் மீது திருப்தியுற்றும் உள்ள நிலையில் எம் நல்லடியார்களுக்கு மத்தியில் நுழைந்துவிடு. என் சுவனபதிக்குள் நுழைந்துவிடு“

திருக்குர்ஆன்-89:27-30 வசனங்கள் குறிக்கும் இந்த நித்திய ஒருமைப்பாடுதான் சூஃபிகளின் உயரிய நோக்கம்.

2. தமிழ் மண்ணின் சூஃபிஸம்.

தமிழ் மண்ணுக்கான தனித்துவமான சூஃபி மரபைக் கொண்டுள்ளவர்கள் நாம். சதக்கத்துல்லாஹ் அப்பா,பீர் முஹம்மது அப்பா,குணங்குடி மஸ்தான் சாஹிப் அப்பா,நூஹ் லெப்பை ஆலிம்,கீழக்கரை தைக்கா சாஹிப் வலியுல்லாஹ்,கல்வத்து நாயகம் ரலி என்று மிக நீண்ட ஆளுமைகள் கொண்ட வரிசை அது.

இயல்பாகவே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் அனைவரிடத்திலும் அந்தந்த நிலப்பகுதிக்கேற்ப பழமொழிகளும் சொலவடைகளும் கிஸ்ஸாக்கள் எனப்படும் மூத்தோர் வரலாறுகளும் வழங்கி வருகின்றன. மேலும் அரபு மொழியை எழுத்துருவாகவும் தமிழை உச்சரிப்பாகவும் கொண்ட அரபுத்தமிழ் எனப்படும் “அர்வி” மூலமாக பல வரலாற்று நூல்களும் இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்களின் தொகுப்புகளும் எழுதப்பட்டுள்ளன.

காயல்பட்டினத்தில் அடங்கியுள்ள உமர் வலியுல்லாஹ்வில் தொடங்கி கீழக்கரை சதக்கத்துல்லாஹ் அப்பாவில் உச்சம் பெற்ற ஞானமரபானது தமிழ்,அரபு,அரபுத்தமிழ் கவிதைகளாகவும் பாடல்களாகவும் விருத்தங்களாகவும் கண்ணிகளாகவும் வெளியாகியுள்ளன. உமர் வலியுல்லாஹ் அவர்களின் “கல்பைக் கழுவினாலே கரை சேரலாம்,கையைக் கழுவினால் கறைபோமோ” என்று துவங்கும் பாடல்கள் உள்ளிட்ட “மெஞ்ஞானப் புலம்பல்”  பாடல்கள் தமிழிலும் “இலாஹி கம் துபக்கீனி” “தரீக்கல் வஸ்ல்” “அல்லபல் அலிபு” என்பதுபோன்ற அரபுக் கவிதைகளும்  தமிழ் இஸ்லாமிய இலக்கிய ஞானமரபின் ஊற்றுக்கண்ணாக விளங்குகின்றன.

முகலாய மாமன்னர் ஒளரங்கசீப் அவர்களின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்து ஒளரங்கசீப்பின் “ஃபதாவா ஆலம்கீர் ”  எனும் மார்க்க விளக்கக் கிரந்தத்தைத் தொகுக்கும் குழுவுக்குத் தலைமை தாங்கிய“சதக்கத்துல்லாஹ் அப்பா” அவர்களின்  “வித்ரிய்யா”  எனும் நபிபெருமானாரின் புகழ் பாடும் காவியமானது 29 கண்ணிகளைக் கொண்ட 2105 பாடல்களை உள்ளடக்கியதாகும். மேலும் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள்தான் உமறுப்புலவர் எழுதிய “சீறாப்புராணம்” காவியத்திற்கு முன்னுரை வழங்கியவர்கள் ஆவார்கள்.

இதனைப்போலவே உமர் வலி அவர்களின் சீடராகவும் பிரதிநிதியாகவும் திகழ்ந்த  கீழக்கரை தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் அவர்கள் 28 கண்ணிகளைக் கொண்ட  “ஷிஃப் இய்யா” எனும் காவியத்தை இயற்றினார்கள். ஆனால் அதனை அச்சாக்கம் செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் மிகவும் கண்ணியமாக மதிக்கும் சதக்கத்துல்லாஹ் அப்பாவின் “வித்ரிய்யா” வுக்கு போட்டியாக எழுதப்பட்டதுதான் இந்தக் காவியம் என்று எவரும் பிற்காலத்தில் கூறிவிடலாகாது என்கிற பேணுதல்தான் காரணம். மேலும் அரபியிலும், அரபுத்தமிழிலும், தமிழிலும் பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவற்றில் நான்காயிரம் மஸ் அலாக்களை ( வாழ்வியல் சட்டக் கோர்வைகள்) ஒருங்கிணைந்த “மஸாயிலுத்தீன்” மற்றும் “குஸாலத்துத் திராயா” என்கிற அரபு நூல்களும் “மஃரிஃபத்தேசல்” மற்றும் நாற்பது மாலைகள் கொண்ட “அடைக்கல மாலை” எனும் தமிழ் நூல்களும் மிக முக்கியமானவை ஆகும்.

“காலமடங்கிலும் நீயே அதிலுன்னைக் கண்டதுண்டோ?

கோலமடங்கிலும் நீயே உனக்கொரு கோலமுண்டோ?

ஆலமனைத்தும் அடையாளம் உனை அறிதற்கென்றால்

ஆல நபிக்குன்னருள் புரிவாய் உன் அடைக்கலமே“

எனும் பாடல் வஹ்தத்துல் உஜூத்(ஒற்றை உள்ளமையின் வெளிப்பாடு)  எனும் ஞான மரபின் நீட்சியாகத் திகழ்கிறது.

கீழக்கரை தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் சீடர்களில் ஐவர் மிக முக்கியமானவர்கள் ஆவார்கள். அவர்களில் ஒருவர்தான் குணங்குடி மஸ்தான் சாஹிப். ஏனைய நால்வர் புலவர் நாயகம் எனப் போற்றப்படும் சேகனாப் புலவர் மற்றும் “அரூஸிய்யா” எனும் ஞான பீடத்தை உருவாக்கிய மாப்பிள்ளை லெப்பை ஆலிம், சுன்த்து சுஃப்யான் எனும் அரபுத்தமிழ் கிரந்தத்தை இயற்றிய அம்மாபட்டினம் யூசுஃப் லெப்பை ஆலிம், மற்றும் அப்துல் காதிர் லெப்பை ஆலிம் ஆகியோர் ஆவர்.

தமிழின் முதல் நாவலாகக் கருதப்படும் 1879-ல் வெளியான மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய  “பிரதாப முதலியார் சரித்திரம்” நாவலுக்கு 21 வருடங்களுக்கு முன்னதாக 1858 ல் அரபுத்தமிழில் “மதீனத்துன் நுஹாஸ்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட “தாமிரப் பட்டினம்” நாவல் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுடையது. அதாவது தமிழ் பேசும் மக்களால் எழுதப்பட்ட முதல் நாவல் இதுவேயாகும். பின்னர் 1979 ல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியானது இந்நாவல். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின்  “மஙானி” எனும் இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாட்டு நூல் இன்றளவும் மார்க்க அறிஞர்களுக்கு ஒளிவிளக்காகத் திகழ்கிறது. இலங்கையின் முதலாவது அரபுக் கல்லூரியை “வெலிகம”  நகரத்தில் அமைத்த இவர்கள்   350 பள்ளிவாசல்களை அமைத்து இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் பங்களிப்புகளானவை தனியாக ஒரு கருத்தரங்கு நிகழ்த்தி ஆய்வுநூல் வெளியிடும் அளவு மகத்தானவை ஆகும்.

அடுத்ததாக பீரப்பா,

சூஃபிகளைப் பொறுத்தவரை நான்கு வகையான சூஃபி இறைநேசர்களை இறைவன் இந்த மண்ணுக்குப் பரிசாக அளித்திருக்கிறான்.

1)தர்க்க ரீதியாக,அறிவு ரீதியாக சகலத்தையும் நேர்த்தியான சூத்திரங்களுடன் மெய்ப்பிக்கும் ஞான ஆசிரியர்கள்.

2)தம் நஃப்ஸை (கீழான மனதை) வென்று வணக்க வழிபாடுகள் மூலமாகவும் இதயத்தைப் பரிசுத்தப்படுத்துவதன் மூலமாகவும் தனக்குள் பூரணமாகி மெளனித்து நின்ற மகான்கள்.

3) இறையணுக்கத்தில் தன்னை மறந்து மஜ்தூபாகி  (தன்னிலை மறந்து) அலையும் ஞானச் சிறகுகள்.

4)நீதியை நிலைநாட்ட அநீதிக்கெதிராக போரிட்டு தன்னுயிரைத் தியாகம் செய்த ஷுஹதாக்கள் (வீரமரணம் அடைந்தவர்கள்)

தக்கலை பீரப்பா முதலாவது வகையில் காலத்தை வென்று உறுதியாக நிற்கிறார்கள், இந்த வகைமையினர்கள் எந்த ஒரு இடத்திலும் தடுமாறுவதில்லை–தயங்குவதில்லை. இறைமை,பிரபஞ்ச உருவாக்கம்,தாத் எனும் இறைசுயத்தின் தன்மை,சிஃபாத் எனும் இறை குணங்களின் வகைமை,

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் மேன்மை,ஹக்கும் ஹல்க்கும் யாவை (படைத்தவனுக்கும் படைப்புக்கும்) என்கிற தெளிவு,சுவர்க்கம்,நரகம்,கேள்விகணக்கு,சிராத்துல் முஸ்தகீம் எனும் மயிர்ப்பாலம்,மலக்குகள்,ஜின்கள்,இன்னபிற படைப்பினங்கள் குறித்த விளக்கம்,ஸூர் ஊதுவதன் அகமியம்,மஹ்ஸர் மைதானத்தின் தாத்பர்யம்,மெய்ப்பொருளுடன் அடைக்கலமாகும் அப்து எனும் அடிமை ஆன்மாவின் படித்தரங்கள்  என்று எல்லாக் கேள்விகளுக்கும் துல்லியமான, கறாரான விளக்கங்கள் அவர்களிடம் உண்டு. ஷரகு எனும் ஷரீயத்துக்காக சுருட்டி மறைத்தவை போக சொல்லத்தகுந்த அனைத்தையும் தெள்ளத் தெளிவாக தமிழில் அட்சர சுத்தமாக விளக்கிக் கூறுயிருக்கிறார்கள் பீரப்பா.

“நீ கடலின் ஒரு துளி அல்ல,

ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்“

என்கிறார்கள் ஆசான் ரூமி மெளலானா.

பெருங் கடலானது என்னவிதமான மூலக்கூறுகளைத் தன்னுள் கொண்டுள்ளதோ அவை அத்தனையும் ஒரு துளிக்குள்ளும் உண்டு. அவற்றின் அளவில் குறைவு இருக்கலாம்.கைகளில் முழுக்கடலையும் அள்ள இயலாது.ஆனால் கைகளுக்குள் இருப்பது கையளவு கடலாகவேதான் இருக்கும். இதையேதான் பீரப்பா இவ்வாறு கூறுகிறார்கள்,

“நீயே யுனைப்புகழ்ந் துற்றவந் நாளுன்னை நீயுணர்ந்து

நீயே யுனக்கு ஸுஜூதுசெய் தாய்பின் நினைந்துருவாய்

நீயே புவிக்குள் றசூலாக வந்தவன் நேர்வழிக்கும்

நீயே துணையெனக் கல்லாது வேறில்லை நிச்சயமே“

இவ்வளவு அப்பட்டமாக உடைத்து நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல இந்த ஞான விளக்கத்தைச் சொல்ல பீரப்பாவால்தான் முடியும்.

இறைவன் இந்தப் பிரபஞ்சத்தின் சகலவிதமான படைப்புகளையும் உருவாக்க, தன்னையன்றி இன்னொரு பொருளின் மீது தேவையாகவில்லை. ஏனெனில் அவன் தேவையற்றவன்.இந்த நுணுக்கமான புள்ளியை மையப்படுத்தி சகலவிதமான சூத்திரங்களுடன் இதனை மெய்ப்பிக்கிறார்கள்.

அதே சமயம் எல்லையற்ற இறைமையின் ஆகிருதியானது யாராலும் முற்றுமுழுதாக அறியக்கூடியதோ தெரியமுடிந்ததோ அல்ல என்னும் சத்தியத்தை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறார்கள்.

“அல்லாஹு லில்லாஹி ஆதியானவனே

***ஆராருமணுகாத தீதாருள்ளோனே***

வல்லானே எல்லாம் வணங்க உரியோனே

மாறாத சோதிவடிவான பெரியோனே

லில்லாஹி யென்றன் பிரானே வல்லோனே

இறையோனே நீ யெற்குன் உதவியருள்வாயே

பொல்லாத சூமரென்னை வெல்லாமலடியேன்

புண்ணியனே யுன்றனடைக் கலமதானேன்“

(ஞானப்புகழ்ச்சி-47)

இந்தப் பாடலில் வரும் ஆராருமணுகாத தீதாருள்ளோனே எனும் வரி அதனைத்தான் சொல்கிறது.ரட்சகனின் பிரமாண்டமான ஆகிருதியானது எவராலும் அறிய முடிந்தது அல்ல.

எவ்வளவுதான் ஹக்கில் (படைத்தவன்) மூழ்கித் திளைத்திருந்தாலும் ஹல்க்கின்(படைப்பு)  தான்மை முற்றிலுமாக அழிவதே இல்லை.அப்படித்தான் அதன் கட்டுமானம் வரையறுக்கப்பட்டுள்ளது. வஹ்தத்துல் உஜூத் (ஏக உள்ளமை) எனும் கோட்பாட்டை உலகுக்குத் தந்த முஹையத்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் “எவ்வளவுதான் கீழே இறங்கி வந்தாலும் ரப்பு ரப்புதான். எவ்வளவுதான் மேலேறிச் சென்றாலும் அப்து அப்துதான்” என்று இத்தன்மையையே கூறுகிறார்கள்.

“எல்லை அறிந்ததுன்னை வணங்கவல்லார்க்கு

இரங்கியிருப்போனே துணை செய்வாயே” (ஞா.பு:17)

என்கிற வரிகளும்.

“வேதியர்க ளாருமறி யாதபொருளேயான்

விரும்பி நின்னோடிரந்ததற்கு நுதவியருள் வாயே“(ஞா.பு:48)

என்கிற வரிகளும் இன்னும் பற்பல பாடல் வரிகளும் இதனையே வலியுறுத்துகின்றன

அல்லாஹ் அறிபொருள்,தெரிபொருள் அல்லன்” என்கிறார்கள் கம்பம் நகரில் வாழ்ந்த ஞானவள்ளல் ஷைகுணா ஜல்வத்து நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களது மிஃராஜ் எனும் விண்ணேற்றத்தில் உடன் வந்த வானவர்களின் தலைவரான ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “ஸித்ரதுல் முன்தஹா” எனும் தலத்திற்கு மேலாக முன்னகரத் தனக்கு வலிமை இல்லையென்றும் ஒருவேளை அப்படி முன்னகர முயன்றால் தனது கட்டுமானம் சிதைந்து அழிந்து விடுவேனென்றும் சொன்னது நபிகளாரின் வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு சொன்னார்கள் என்றால் அவ்வல் அஹதாக இருந்த மெய்ப்பொருள் ஆகிர் அஹமதாகப் பூத்ததன் பிறகுதான் ஜிப்ரயீலின் ஆன்மா உருவாக்கப்படுகிறது. எப்படி ஒரு பிள்ளை தான் பிறப்பதற்கு முன்னர் தாய் தந்தையரின் கோடானுகோடி உயிரணுக்களுக்குள் தனித்த அடையாளமின்றி சங்கமித்து விடுகிறதோ அதேபோல ஜிப்ரயீல் ஆனவர் தனது ஆன்மா உருவான “ஸித்ரதுல் முன்தஹா” எனும் தலத்துக்கு மேலாகச் செல்லும் போது “மகாமே மஹ்மூத்” எனும் திருத்தலத்தில் அடையாளமின்றிக் கரைந்து விடுவார்.

மகாமே மஹ்மூத்–நூரே முஹம்மதிய்யா எனும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஆன்மா உருவான திருத்தலம் அது. “நான் ஏக இறைவனின் ஜோதியில் நின்றும் உள்ளவன்,என்னுடைய ஜோதியில் நின்றும் சகல வஸ்துகளும் உருவாகின” என ஹதீஸே குத்ஸியில் நபிகளார் கூறியதன் படி ஜிப்ரயீல் உட்பட எதுவுமே இல்லாத அஹதாகி நின்ற மெய்ப்பொருளும் ஜோதியாக இலங்கிய நூரே முஹம்மதியாவும் மட்டுமே பல்லாயிரக்கணக்கான யுகங்கள் தனித்திருந்த தலம் அது.

மகாமே மஹ்மூதுக்கு மேலே சென்றால் அங்கே முஹம்மது நபிகளாரின் ஆன்மா இல்லை.அஹதாய்த் தனித்திருந்த பொக்கிஷமான, தன்னுள் சகலத்தையும்  கொண்டிருக்கும் ஆதியனாதி மெய்ப்பொருளான அல்லாஹ் மட்டுமே இருப்பான்.அவனை அவனே அறிவான்,அவன் மட்டும்தான் அறிவான். “அல்லாஹு அக்பர்” எனும் இறைமையின் மகத்துவத்தை ஒவ்வொரு இறைநம்பிக்கையாளனும் தினந்தோறும் பலநூறு முறை கூறிக்கொண்டே இருக்கிறான்.அதன் பொருள் “இறைவன் பெரியவன்” என்பதாகும்,எந்த அளவுக்குப் பெரியவனென்றால் படைப்பினங்களின் அறிவின் விஸ்தீரணத்தைக் காட்டிலும் பெரியவன்,இதுவரை அறிந்தவற்றை விடவும் இனி அறியப்போவதைக் காட்டிலும் பெரியவன்,வானம் எவ்வாறு நம் பார்வையின் எல்லையைக் காட்டிலும் விரிந்து பரந்துள்ளதோ பிரபஞ்சம் எவ்வாறு நம் அறிதலின் விஸ்தீரணத்தைக் காட்டிலும் பற்பல மடங்குகள் ஆழமும் நீளமும் கொண்டதோ அதேபோல இறைவன் நாம் யூகிக்க இயலாத அளவு பெரியவன். வேதியர்களாலும் அதனை கற்பனிக்கவோ அறியவோ முடியவே

முடியாது.

அந்த மெய்ப்பொருளிடத்தில்

“கல்லாரெனை மண்ணில் பகை செய்யாமல் கத்தனே யானுன் அடைக்கலமதானேன்” என அடைக்கலமாகலாம்.

“கருடனினைவிட் டெனைப்படைத்த ஹக்கேயெனது தீவினையால்

குருடன்வனத்திற் கோலிழந்த குறிபோல் முறையிட்டுனையடியேன்

வருடிப் புகழ்ந்துன்னோடிரப்பேன் வடிவேயுனது வல்லபத்தால்

திருடனளவுற் றிரங்கியின்னஞ் செய்வாய்றகுமத் தெனசீமானே“

(ஞானப்புகழ்ச்சி-82) என இரந்து நிற்கலாம்

“ஆதியுனக்கிணை யற்றவனே யழிவற்றுல காள்பவனே

நீதிகொடெத்திசையும் படைத்தஞ்சில் நினைத்திடு முட்பொருளே” எனப் புகழ்ந்து துதிக்கலாம்

“பொல்லாக் குபிர்களும் வருங்குற்றமும்

பொருந்தாப் பிணிதுன்பம் பலவாபத்தும்

நில்லா வறுமையும் மனச்சலிப்பும்

நினைப்பு மறப்பும்வந் தெய்திடாமல்

எல்லா வினைகளு முசீபத்தும்வந்

தென்னை யணுகாமல் காத்தருள்வாய்

அல்லா வுனைப்புகழ்ந்துன் னோடிரப்பேன்

அடியேன் துஆப்பேறீ டேற்றுவாயே” எனப் பிரார்த்தித்து கண்ணீரும் கம்பலையுமாக மன்றாடலாம்.

இவ்வாறாக இந்த இகவாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஒளி விளக்காக வழிகாட்டி நிற்கின்றன பீரப்பாவின்  பாடல்கள். பீர்முஹம்மது அப்பா என்பது நிச்சயமாகத் தனி மனிதர் அல்ல,அது ஓர் இயக்கம்.ஒற்றை ஆளுமையே  ராணுவமாக நின்று தேசத்தைக் காப்பதைப்போல பீரப்பாவின் பாடல்கள் பிரபஞ்ச ரகசியத்தையும் எல்லையற்ற மெய்ப்பொருளான இறைவனின் மகத்துவத்தையும் நபிகளாரின் முக்கியத்துவத்தையும் இன்னும் இன்னும் வாழ்வின் ஒவ்வொரு கணங்களுக்கான பிரார்த்தனைகளையும் அறியத்தந்து பூரணப்புதையலாக ஜொலிக்கின்றன.

பொதுவாக தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என்பன நம்மைப்போன்ற மண்மீது பற்றுக் கொண்டுள்ள எளிய மனிதர்களுக்கானவை.சூஃபி ஞானியரை இந்தக் கட்டுக்குள் அடக்குவது  ஏற்புடையதன்று.  கன்னியாகுமாரி மாவட்ட மக்களுக்கு இந்த மண்ணின் பற்று பெருமை ஆகியன கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்.

தேசம்,மாநிலம்,மாவட்டம்,நகரம்,சிற்றூர்,கிராமம்,இனக்குழு, குடும்பம் என்று வட்டங்கள் குறுகிக் கொண்டே வந்து ஒற்றை மனிதனில் மனித கவனம் மையம் இந்தச்  சூழலில்  வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே சென்று மொத்தப் பிரபஞ்சத்தையும் தன்னுடைய மையமாக்கிக் கொள்ளும் சூஃபிகளின் பாதையில்தான் நாம் பயணிக்க வேண்டும்.

இந்த நூலானது தமிழ் மண்ணின் சூஃபிகளின் படைப்புகளை–அவை சுட்டிக் காட்டும் ஞானக் குறிப்புகளை புரிந்துகொள்ள உதவும் அருஞ்சொற்பொருள் அகராதியாக இருக்கின்றது. முனைவர் முஹம்மது சலீம் அவர்களின் எண்ணென்ப, எழுத்தென்ப ஆகிய மிக முக்கியமான நூல்களுக்குப் பிறகு இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. தக்கலை மெஞ்ஞானி ஷைகு பீர் முஹம்மது அப்பாவின் இலக்கியப் படைப்புகள் குறித்தும் அவற்றில் ஆன்மீகக் கோட்பாடுகள் மற்றும் சமூகப் புரிதல்கள் குறித்ததுமான கட்டுரை ஆகியன குறிப்பிடத்தக்க கட்டுரைகள் ஆகும்.

இவற்றின் மூலமாக நாம் பீரப்பாவை அணுகும்போது 

பீரப்பாவின் மெஞ்ஞானப் பாடல்களான,

ஞானப்புகழ்ச்சி

ஞானமணி மாலை

ஞானக்குறம்

ஞான இரத்தினக் குறவஞ்சி

ஞான நடனம்

ஞான முச்சுடர் பதிகங்கள்

ஞான விகட சமத்து

மகரிபத்து மாலை

மெஞ்ஞான அமிர்த கலை

மிகுராசு வளம்

ஈடேற்ற மாலை

பிஸ்மில் குறம்

திருநெறி நீதம்

ஞானத் திறவுகோல்

ஞானக் கண்

ஞானப் பால்

ஞான உலக உருளை

ஞான மலைவளம்

மெஞ்ஞானக் களஞ்சியம்

ஞானப்பூட்டு

ரோசு மீசாக்கு மாலை

ஞான ஆனந்தக் களிப்பு

ஞானச் சரநூல்

ஆகிய பாடல்களைப் புரிந்து கொள்ளவும் அவற்றுடன் இணைந்து இறைத்தேடலின் பாதையில் பயணிக்கவும் உதவியாக இருக்கும்.

அடுத்ததாக நம் தமிழ் மண்ணின் மஹ்மூத் தர்வேஷ் ஹாமீம் முஸ்தஃபாவின் கட்டுரைகள். கன்னியாகுமரி மண்ணின் பிரத்யேக தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் கூறுகளையும் தமிழ் மண்ணின் சூஃபிஸ இலக்கியச் செறிவையும் சமகால அரசியல் சமூகப் போக்குகளின் மீதான அறச்சீற்றத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் முக்கிய ஆளுமையாக அண்ணன் ஹாமீம் முஸ்தஃபா திகழ்கிறார். அவரது அனைத்து படைப்புகளையும் ஒட்டுமொத்தமாக ஆய்வு  செய்து ஒரு முழுநாள் ஆய்வரங்கம் நிகழ்த்த வேண்டியது காலத்தின் அவசியமும் இந்த படைப்பாளிக்குக் கொடுக்க வேண்டிய கண்ணியமும் ஆகும்.

மேலும் நூஹ் லெப்பை ஆலிம் அவர்களது வேதபுராணம் தொடர்பான கட்டுரையை தக்கலை பஷீர் எழுதியிருக்கிறார்.

நூஹ் வலியுல்லாஹ் அவர்கள் நிகழ்த்திய கராமத் எனும் அற்புதங்கள் குறித்த கட்டுரையை ரஹ்மத் ராஜகுமாரனும்,

கோட்டாறு ஞானியார் சாகிப் குறித்த கட்டுரையை 

சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அவர்களின் மகனான செந்தாமரை கே.பி.எஸ்.ஹமீது அவர்களும் எழுதியுள்ளானர். நன்னூல் பதிப்பகத்தார் அழகிய முறையில் அச்சிட்டுள்ளனர்.

நன்றி

எல்லாப் புகழும் இறைவனுக்கே

அன்புடன்,

நிஷா மன்சூர்

தொடர்புக்கு–nisha.mansur@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.