இந்தியா மீதான அலட்சியம், சல்மான் ருஷ்தியின் விக்டரி சிட்டி.-2
சல்மான் ருஷ்தியின் இந்த நாவல் பாம்பா என்னும் ஒரு பெண்ணில் இருந்து தொடங்குகிறது. அவள் எந்த குலத்தை சேர்ந்தவள் என்பதும் அவளுடைய வரலாற்றுப் பின்னணி என்ன என்பதும் இந்நாவலில் இல்லை. குத்துமதிப்பான ஒரு கற்பனையே அளிக்கப்படுகிறது. ஆனால் பாம்பாவின் சிற்றரசை ஆக்ரமிக்கும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும்பொருட்டு அவளுடைய அன்னையும் பிற அரசகுடிப்பெண்டிரும் தீக்குளித்து இறக்கிறார்கள். பொதுவாக படை எடுத்து வருபவர்களிடம் தப்பும் பொருட்டு ஜோஹர் எனும் எரியூட்டலுக்கு ஆளாவது என்பது ராஜஸ்தானிய அரசு அரசகுடிக்கு மட்டுமே இருந்துவந்த ஒரு தனித்தன்மை. அதிலும் அவர்கள் சுல்தானியப்படையெடுப்பை ஒட்டி உருவாக்கிக்கொண்ட ஒன்று. தென்னிந்தியாவில் எங்கும் அது நிகழ்ந்ததற்கான சான்று இல்லை. இவ்வாறு தொடக்கம் முதலே இந்நாவல் ஒரு அந்தரத்திலேயே நிகழ்கிறது.
உயிர்தப்பும் பாம்பா அவள் பெயரைக்கொண்ட தெய்வத்திடமிருந்து மந்திர சக்திகளை பெறுகிறாள். அங்கு மாடு மேய்ப்போராக ஒளிந்து வாழும் இருவருக்கு (இவர்கள் ஹரிஹரன் புக்கரின் மாற்று வடிவங்கள் என்பது வெளிப்படை) சில விதைகளை கொடுக்கிறார். அந்த விதைகளை அவர்கள் விதைக்க அது முளைத்து வெற்றி நகராக மாறுகிறது. பிறகு அந்நகரின் வரலாறு பல்வேறு நிகழ்வுகள் வழியாக விரிகிறது. அது வெவ்வேறு காலகட்டங்களாக நகர்ந்து சரிகிறது. இந்தச் சித்தரிப்பில் வெவ்வேறு நார்ஸ்–கெல்டிக் தொன்மங்களின் சாயல்கள் கொண்ட மாயங்கள் நிகழ்கின்றன.
இந்தியாவில் நிகழும் கதையில் எந்த இந்தியச் சாயலும் இல்லை. எல்லா நிகழ்வுகளும் செயற்கையாக கட்டமைக்கப்பட்டவையாக, பெரும்பாலும் நவீனப்புனைகதை எழுத்தாளர்கள் எழுதும் வழக்கமான நிகழ்வுகளின் சாயல்கொண்டவையாக உள்ளன. இந்த அறுநூறு பக்க நாவலில் எங்குமே வாழ்க்கையின் நுட்பங்களோ, தவிர்க்கமுடியாமைகளோ வெளிப்படும் தருணங்கள் இல்லை. எங்குமே இந்திய வரலாற்றை அல்லது மானுட வரலாற்றை நோக்கும் ஒரு புனைவெழுத்தாளன் மட்டுமே கண்டடையும் புள்ளிகள் இல்லை. ஒரு கட்டத்தில் வெறும் சொற்சுழலாக மட்டுமே இந்நாவலை வாசித்துச்செல்லவேண்டியிருந்தது.
விஜயநகரத்தின் மெய்யான வரலாறு என்பது இந்நாவலை விட பல மடங்கு உத்வேகமும் திருப்பங்களும் அபத்தங்களும் நிறைந்தது. நம்ப முடியாத பெரும் துரோகங்களின் கதைகள் கொண்டது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் முதன்மை மன்னராகிய கிருஷ்ணதேவராயரின் மகன் திருமலைராயன் சிறுவனாக இருக்கையிலேயே அவருடைய அமைச்சரால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டான். மகனின் மரணத்தால் மனமடைந்து கிருஷ்ணதேவராயர் மறைந்தார். மொத்த விஜயநகர வரலாறும் துரோகங்களின் தொடர்தான். அதற்குக் காரணங்கள் மிக நுட்பமானவை. விஜயநகரை வெவ்வேறு பெருங்குடும்பங்கள்தான் ஆட்சி செய்தன. ஒரு குடும்பத்தை வீழ்த்தாமல் இன்னொரு குடும்பம் ஆட்சிக்கு வரமுடியாது.
விஜயநகரின் இறுதிப்போர்க்களமான தலைக்கோட்டையில் விஜயநகரத்தின் அமைச்சரும் அரசரும் ஆகிய ராமராயர் மறைந்துவிட்டார் என்று எதிரிகள் வதந்தி கிளப்ப தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்கும் பொருட்டு அவர் யானை மேலே தோன்றினார். அக்கணமே அவர் அம்பெய்து வீழ்த்தப்பட்டார். அவர் வீழ்ந்ததும் படை பின்வாங்கியது. அது ஒரு சூழ்ச்சி. எதிரிப்படைகளை விட விஜயநகரப்படை மிகப்பெரியது. ஒரு தனிமனிதருக்கு ஒரு கணத்தில் உருவான ஏதோ ஒரு தாழ்வுணர்ச்சியால் ஒரு பேரரசு அழிந்தது. அவர் பிராமணர் என்பது அந்த தாழ்வுணர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்.
விஜயநகரம் அழிந்ததே ஒரு அபாரமான சித்திரம். ஓராண்டுக்காலம் அது தொடர்ச்சியாக இடிக்கப்பட்டது. கல்லால் ஆன அதன் கட்டிடங்கள் நெருப்பு மூட்டி சுட்டுப்பழுக்கவைத்து, அதன் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்றி கற்களை வெடிக்க வைத்து யானைகளைக் கொண்டு இடித்துத் தள்ளப்பட்டது. பல நூற்றாண்டு காலம் விஜயநகரம் மயான நகரமாக திகழ்ந்தது. இன்று கூட விஜயநகரத்தைப் பார்ப்பவர்கள் அந்த மாபெரும் இடிபாடு விரிiவை ஒரு பெரும் மாய அனுபவமாகத்தான் அடைய முடியும். அந்நகரம் மறக்கப்பட்டது. அங்கிருந்த அரசகுடியினர் வெவ்வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்தனர். பின்னர் அந்நககரத்தை ராபர்ட் சிவெல் (Robert Sewell) கண்டடைந்தார். மறக்க முடியாத நகரம் என்ற பெயரிலே அதைப் பற்றி ஒரு நூல் எழுதினார். அதனூடாக விஜயநகரம் உலகின் கவனத்திற்கு வருகிறது.
இந்த மெய்யான வரலாறு அளிக்கும் திகைப்புகளில் ஒரு துளி இல்லாமல் முற்றிலும் செயற்கையாக கட்டமைக்கப்பட்ட மாயப்படிமங்களால் ஆன ஒரு நாவல் இது. இத்தகையவை யாருக்காக எழுதப்படுகின்றன? இந்தியாவைப் பற்றி மெல்லிய ஆர்வம் கொண்ட ஐரோப்பிய, அமெரிக்கர்களுக்காக. மேலோட்டமாக மட்டுமே அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு அப்பால் அதை அறிய எந்தக் கவனத்தையும் அளிக்கத் அளிக்கத தயாராக இல்லை என்றும் எண்ணும் ஒரு மேல் நாட்டு வாசகர்கூட்டம் உள்ளது. அவர்களுக்கான படைப்பு இது அவ்வகையில் ஓர் அமெரிக்க ’பெஸ்ட்செல்லர்’ நூலுக்கான அனைத்து இலக்கணங்களும் கொண்ட படைப்பு இது என்று சொல்ல முடியும்.
இதன் வாசிப்பு இரண்டு வகைகளில் மட்டுமே செயல்படுகிறது. ஒன்று மாயதார்த்தம் பற்றி தெரிந்தவர்களுக்கு ஒவ்வொன்றும் எந்தெந்த திசைகளுக்கு செல்லும் என்பதை எளிதாக ஊகித்து அதை ரசிக்க முடிகிறது, அவ்வாறு நாம் ஊகிப்பதை அவ்வப்போது ருஷ்டி சில உத்திகள் வழியாக தோற்கடிப்பதையும் ரசிக்க முடிகிறது. இந்நாவலின் கதையோட்டத்தின்படி ஒரு பானையிலிருந்து ஒரு சம்ஸ்கிருத காவியம் மீட்டெடுக்கப்படுகிறது. அதிலுள்ளதே இந்நாவலின் கதை.(முப்பதாண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய விஷ்ணுபுரம் நாவல் இந்த வடிவம் கொண்டது, இந்நாவலை விட மிக நுட்பமான அடுக்குள் கொண்டது) ருஷ்டியின் இந்நாவலில், அதாவது அந்த மூலக்காவியத்தில் உள்ள பேசுபொருட்கள் எல்லாமே சமகாலத்தைச் சேர்ந்த அரசியல்தலைப்புகள்.
உதாரணமாக, ஆணும் பெண்ணும் நிகராக வாழ்ந்த ஒரு பொற்காலம் அந்த வெற்றிநகரில் அமைந்திருந்ததாக ருஷ்தி குறிப்பிடுகிறார். பாம்பாவின் நோக்கமே அதுவாக இருந்தது. அது நிகழவில்லை. உண்மையில் இந்தியாவெங்கும் ஒரேவகையான பெண்ணடிமைத்தனம் இருக்கவில்லை. ஒவ்வொரு இடத்திலும் அதன் இயல்புகள் நுணுக்கமாக வேறுபட்டன. விஜயநகரைப் பொறுத்தவரை அரசி என்னும் இடம் அரசனுக்கு நிகரானதாகவே இருந்தது. பிற இடங்களில் பெண்கள் போருக்குச் செல்லவில்லை, அதிலும் விஜயநகரம் விதிவிலக்கு. உதாரணமாக, விஜயநகரப் பேரரசின் படையில் பெண் போராளிகள் இருந்தார். விளமர் எனும் குடியைச் சேர்ந்த வில்லாளிகளில் பெண்கள் நிறையபேர் உண்டு. வில்லில் தேர்ச்சி பெறுவதன் பொருட்டு ஒரு மார்பை வெட்டி கொண்டார்கள் அவர்கள் என்று ஒரு கதை உண்டு. அவர்களின் சிற்பங்களை அகோபிலத்திலும், சிவசைலத்திலும் காணலாம். இந்தியாவின் பெண்ணடிமைத்தனம் பற்றி ஓரு சராசரி அமெரிக்க வாசகனுக்கு இருக்கும் பொதுப்புரிதலையே ருஷ்டி இங்கே கையாள்கிறார்.
பாம்பா ஓர் அழிவற்ற அன்னை. 200 ஆண்டுகளுக்கும் மேல் அவள் உயிர்வாழ்கிறாள். அத்தகைய அன்னையுருவகங்கள் இந்தியாவில் உண்டு. ஆனால் அவர்களின் வண்ணங்களும் இயல்புகளும் வேறு. தென்னிந்திய வரலாற்றிலேயே ராணி ருத்ராம்பா, ராணி மங்கம்மாள் போன்ற அன்னையுருவங்கள் உண்டு. மங்கம்மாளின் துயரம் நிறைந்த முடிவு பாம்பாவின் முடிவை விட ஆழமான ஒரு வரலாற்று நிகழ்வு. ஆனால் பாம்பா கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸில் உர்சுலாவின் சாயலுடன் படைக்கப்பட்டிருக்கிறார். பாம்பா அவர் உருவாக்கிய நகர் பற்றி அவரே எழுதிய காவியத்தின் பலவகையான விளக்கங்களாக இந்நாவல் உள்ளது. ஆனால் இதில் இந்தியக் காவியங்களின் அழகியலோ, மனநிலையோ இல்லை. இந்நாவலை வாசித்தால் பாம்பா எழுதியது ஒரு லத்தீன் அமெரிக்க மாயயதார்த்த நாவல் என்று தோன்றிவிடும்.
‘பாலியல் சமத்துவம்’ என்னும் கருத்தை வரலாற்று மாயப்புனைவாக ஆக்கியிருப்பதாக இந்நாவல் பற்றிய மதிப்புரைகளில் வாசித்தேன். பாலியல் சமத்துவத்தை வலியுறுத்துவது, அதன் அடிப்படையாக அனைத்து விதைகளையும் அளிக்கும் அன்னைமரமாக ஒரு பெண்ணை உருவகிப்பது எல்லாமே எத்தனை தேய்ந்துபோன உருவகங்கள். எந்த அரசியலெழுத்தாளனும் பேசும் ஒரு கருத்துக்கு செயற்கையாக படிமங்களை அளிப்பதா ஒரு இலக்கியப் படைப்பாளியின் வேலை? பாலியல்சமத்துவம் என்னும் அந்த பேசுபொருளுக்குள்ளேயே பொதுப்புத்தியால் கண்டடைய முடியாத வாழ்க்கையின் உண்மைகளை, வரலாற்றின் உள்ளுறைகளை வெளிப்படுத்தவில்லை என்றால் எதற்காக இலக்கியம் எழுதவேண்டும்? இத்தனை பக்கங்கள் வழியாக ருஷ்டி உருவாக்குவது மிகச்சாதாரணமான அரசியல் கருத்துநிலையைத்தான் என்பது அளிக்கும் சலிப்பு மிகப்பெரியது.
நான் எப்போதும் இந்திய ஆங்கில இலக்கியத்தைப் பற்றி ஓர் ஒவ்வாமையை அடைவதுண்டு. அவை இந்தியாவின் நுணுக்கமான பண்பாட்டுத்தகவல்களை அறியாத இந்திய உயர்குடியினருக்காகவும் அமெரிக்கர்களுக்காகவும் எழுதப்படுகின்றன. அவற்றை இந்திய எழுத்து என்று ஒரு அமெரிக்க இலக்கிய வாசகன் வாசிப்பானாயின் அவன் இந்திய பண்பாட்டுக்கும் இந்திய மக்களுக்கு மிகப்பெரிய அநீதி ஒன்றை இழைக்கிறான். ஒருவரைப் பற்றி மேலோட்டமாக தெரிந்து கொள்வது என்பது உண்மையில் அவர்மீது பெரும் அலட்சியத்தை காட்டுவதுதான். எப்படி ஓர் அமெரிக்கர் இந்தியாவை பார்க்க விரும்புகிறார், எப்படி அவருடைய எல்லைகள் அமைந்திருக்கும் என நன்கறிந்து அதற்குள் நின்று எழுதப்பட்ட ஒரு செயற்கையான நாவல் இது. உலகெங்கும் இத்தகைய படைப்புகளே இந்தியாவின் இலக்கியமாக வாசிக்கப்படுவது என்பது மிகவும் துரதிஷ்டவசமானது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
