ரமேஷ் பிரேதன், தனிவாழ்க்கை- கடிதம்
அன்புள்ள ஜெ
எழுத்தாளர்களின் தனிவாழ்க்கை முக்கியமானது என்று நீங்கள் தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறீர்கள். அண்மையில்கூட எழுதியிருந்தீர்கள். (எழுத்தாளர்களின் வாழ்க்கை.) அவ்வகையில் ரமேஷ் பிரேதன் அவர்களின் தனிவாழ்க்கையைப் பற்றி இங்கே பேசுவது பிழையில்லை என நினைக்கிறேன். இதை ரமேஷ் பிரேதன் அவர்களே தன் முகநூலிலே மிக விளக்கமாக எழுதியிருக்கிறார். மிகமிகக் கடுமையாகக்கூட எழுதியுள்ளார்.
ரமேஷ் பிரேதன் அவர்கள் பிரேம் என்னும் எழுத்தாளருடன் ஓரினப்பாலுறவில் இருந்தார். அதை அவர்கள் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு தங்களை ஒரு மாற்றுக் குடும்பம் என்று கூறினர். வழக்கமான குடும்ப அமைப்புகள் எல்லாம் வன்முறையாக ஆகிவிட்டன என்றும், அங்கே துரோகமும், கசப்புகளும் மட்டுமே உள்ளன என்றும் சொன்னார்கள். இன்று தேவையாக உள்ளது தங்களுடையது போன்ற மாற்றுக்குடும்பம்தான் என்று வாதிட்டார்கள். அன்றைக்கு பல இளைஞர்களுக்கு இதனால் இவர்கள்மேல் ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது.
இந்த ஜோடியுடன் மாலதி மைத்ரி சென்று சேர்ந்து வாழ்ந்தார். ரமேஷ்தான் மாலதியின் பெயரிலும் ரமேஷ் பிரேம் பெயரிலும் வெளிவந்த படைப்புகளை உண்மையில் எழுதியவர் என்று ரமேஷ் இன்று சொல்கிறார். மாலதியின் குழந்தைக்குத் தந்தையாக ரமேஷ் சட்டபூர்வமாகப் பொறுப்பேற்றார். அப்போது ரமேஷ்தான் ஒரே சம்பாதிக்கும் நபர். அவருடைய பிரெஞ்சு இன்ஸ்டியூட் சம்பளத்தில் அவர்கள் வாழ்ந்தனர். அதன்பின் பிரேமுக்கு டெல்லியில் பேராசிரியர் வேலை கிடைத்தது. (அதற்கு உதவியவர்கள் வெங்கட் சாமிநாதன், செ.ரவீந்திரன் முதல் பலர். அவர்களை இப்போது அவர் குறிப்பிடுவதே இல்லை)
வேலைகிடைத்ததும் ரமேஷை பிரேமும் மாலதியும் கைவிட்டார்கள். குழந்தையுடன் டெல்லி சென்றனர். ரமேஷ் அனாதையாக புதுச்சேரியில் அலைந்தார். நண்பர்கள் உதவிசெய்தனர். மிகுந்த எடைகொண்டவர். கடுமையான ரத்த அழுத்தமும் உண்டு. ஆகவே வேலை செய்யமுடியாத நிலை. ஒரு தோப்பிலே காவல்காரராக இருந்தார். அதன்பின் பாரதி நினைவு இல்ல திண்ணையில் கொஞ்சநாள் இருந்தார். அப்போதுதான் நீங்கள் அவரை தற்செயலாகச் சந்திக்கிறீர்கள். அவர் இன்று இருக்கும் வீடு முதலியவை நீங்கள் அவருக்கு உருவாக்கி அளித்தவை. மணி ரத்னமும் உதவினார். பத்தாண்டுகளாக ரமேஷ் நீங்கள் மற்றும் பிற நண்பர்களின் உதவியுடன் வாழ்கிறார்.
இப்போது ரமேஷ் இந்த ‘வன்முறையும் துரோகமும் இல்லாத’ மாற்றுக்குடும்பம் பற்றி என்ன சொல்கிறார்? இன்றைக்கு அவருக்கு உதவி செய்பவர்கள் எல்லாருமே வழக்கமான குடும்பம் உள்ளவர்கள்தானே?
எஸ்.செல்வகுமார், புதுடெல்லி
அன்புள்ள செல்வகுமார்,
ரமேஷின் தனிவாழ்க்கை அவரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அது எப்போதும் அவர் படைப்புகளை வாசிப்பதற்கான பின்புலமாக இருக்கும். ஆனால் அவை அவருடைய புனைவுநூல்களுக்கான, அவருடைய கருத்துக்களுக்கான பின்புலமாக மட்டுமே விவாதிக்கப்படவேண்டும். தனி வம்புகளாக அல்ல. அவருடைய வாசகன் அவரை உருவாக்கிய உணர்வுநிலைகள் என்ன என்று அறிவதற்காக மட்டுமே அவற்றை கவனிப்பான். அவற்றிலுள்ள பிற மனிதர்கள் அவனுக்கு கதைமாந்தர் மட்டுமே.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
