தடாகத்தின் விழியன்னங்கள்.
சில பாடல்கள் சில மாதங்களுடன், சில மனநிலைகளுடன் இணைந்துவிடுகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப்பாடலை நான் ஓர் ஆடி மாதத்தில் மழைக்குளிர் கலந்த காற்று வீசும் மதியநேரத்தில் கேட்டேன். மீண்டும் இப்போது அதே மனநிலையை அதே சூழலை ஏசுதாசின் அந்தக் குரல் உருவாக்குகிறது. அத்துடன் ஓ.என்.வி குறுப்புக்கே உரிய அழகான மிகைக்கற்பனை.
நான் இன்று அந்த ’நீ’ அல்லது ’உன்’னை ஒரு பெண்ணாக எண்ணிக்கொள்ளவில்லை. சௌந்தர்ரிய லஹரி சூடி நின்றிருக்கும் இயற்கையாக கற்பனைசெய்துகொள்கிறேன். கற்பனாவாதம் ஒரு வயதில் நம்மை ஆட்கொள்கிறது. மண்ணில் கால்தொடாத உலகங்களில் வாழ்கிறோம். பின்னர் மெல்ல மெல்ல யதார்த்தங்களுக்குள் நுழைகிறோம். வெற்றுக்கற்பனைகள் என கற்பனாவாதத்தை இகழவும் விலகவும் தொடங்குகிறோம்.
கற்பனாவாதத்தை விட்டு விலகுவது முதிர்ச்சியின் ஓர் அடையாளம் என்று சொல்லப்படுகிறது. அது உண்மை அல்ல. கற்பனாவாதத்தை விட்டு விலகுவதென்பது நடைமுறைத் தர்க்கபுத்தி வலுவடைவதன் அடையாளம் மட்டுமே.அதன் நன்மைகள் பல உண்டு. ஆனால் இழப்புகளும் அதற்கிணையானவை. கற்பனாவாதம் மட்டுமே மொழியை அதன் உச்சங்கள் நோக்கி கொண்டு செல்கிறது. யதார்த்தவாதம் என்றுமே மொழியின் நடைமுறைத்தன்மையை மீறுவதில்லை. மொழி அதற்கு சிறகு அல்ல, ஒரு பயன்படுபொருள் மட்டுமே. ஆகவே மொழியில் ஓர் இயந்திரக்கச்சிதத்தை மட்டுமே யதார்த்தவாதம் அடைகிறது. அந்தக் கச்சிதமே மொழியின் சிறந்த நிலை என நம்புபவர்கள் மொழியை அறிவதே இல்லை.
கச்சிதமான நடையே நல்ல நடை என நம்புவதுபோல இலக்கியத்தில் நுணுக்கமான வீழ்ச்சி பிறிதொன்றில்லை. ஏனென்றால் அப்படி கச்சிதம் என ஒன்றில்லை. கச்சிதம் என நாம் எண்ணுவது கொடுப்பவனும் பெறுபவனும் சந்திக்கும் அந்த தொடர்புறுத்தல்புள்ளியைச் சார்ந்தது. ஆனால் அது மிக எளிதில் மாறிவிடும். நேற்று மிகக்கச்சிதமானவை என்று சொல்லப்பட்ட கு.ப.ராஜகோபாலன் எனக்கு மிக வளவளவென்று எழுதுபவராக இன்று தோன்றுகிறார். காலம்கடந்து நின்றிருக்கும் கச்சிதம் என ஒன்றில்லை.
ஆனால் கற்பனாவாதம் அடையும் மொழியின் உச்சம் என்பது தொடர்புறுத்தலின் விளைவு அல்ல. மொழியை மொழிகடந்த ஒன்றைநோக்கிக் கொண்டுசெல்லும்போது உருவாகும் நுண்மையும் ஒளியும்தான் அது. மொழி முற்றிலும் புதிய சொல்லிணைவுகளை அடையலாம். இசைத்தன்மையை அடையலாம். படிமத்தன்மையை அடையலாம். படிமங்களுக்குள் படிமம் என விரியலாம். புரிந்துகொள்ளமுடியாத மயக்கநிலையை எய்தலாம். அது காலத்தால் பழையதாவதில்லை. ஏனென்றால் அது சென்று தொடும் அந்த ஆழம், அதை நனவிலி என்று சொல்லலாம், கூட்டுநனவிலி என்று சொல்லலாம், என்றுமுள்ள ஒன்று. மானுடரின் கூட்டான அகம் அது.
ஆகவே செவ்வியல் கற்பனாவாதத்தை ஒரு போதும் முழுக்கக் கைவிடாது. யதார்த்தவாதச் செவ்வியல் படைப்புகளான டால்ஸ்டாயின் நாவல்களிலும் தாமஸ் மன்னின் நாவல்களிலும் கூட மகத்தான கற்பனாவாதத்தருணங்கள் உண்டு. இப்படிச் சொல்லலாம். செவ்வியல் அதன் அடித்தளத்தை யதார்த்தவாதத்தில் கட்டியிருக்கும். அதன் உச்சங்கள் கற்பனாவாதத்தை நோக்கி நீண்டிருக்கும்.
நமக்கு வயதாகும்போது, மொத்தவாழ்க்கையும் ஒற்றைச்சித்திரமாகக் கண்ணில் தெரியத்தொடங்கும்போது, யதார்த்தவாதம் சலிப்பூட்டுகிறது. நவீனத்துவப்படைப்புகளிலுள்ள இருண்மையும் கசப்பும் ஒவ்வாமையை உருவாக்குகின்றன. பின்நவீனத்துவ வடிவ விளையாட்டுக்கள் அர்த்தமிழக்கின்றன. இனிய அழகிய கற்பனாவாதம் ஒரு மதியத்தூக்கத்தின் கனவுபோல ஒளிமிக்க இடங்களுக்கு கொண்டுசெல்கிறது.
சரோவரம் பூசூடி
என் சகி நின்னே போலே
ஓமல் சகி நின்னே போலே.
சலஜ்ஜம் ஆரே திரயுந்நு
ஈ சாரஸ நயனங்கள்
சாரஸ நயனங்கள்.
கைதப்பூவின் அதரம் நுகரும்
காற்றின் எந்தோரு லஹரி
மணமுள்ள சம்பக மலரின்றே
கவிளில் தழுகும் காற்றினு லஹரி
நின்முகசௌரஃப லஹரியில் முழுகும்
தென்னலாயெங்கில் !
ஞானொரு தென்னலாயெங்கில்!
காற்றின் கைகளில் ஊஞ்ஞாலாலிடும்
காடினு எந்தொரு லஹரி
ஸுர பகருந்நொரு சுரபீ மாஸம் புணரும்
காடினு லஹரி
நின் பத சும்பன முத்ரகள்
அணியும் மண் தரியாயெங்கில்!
ஞானொரு மண் தரியாயெங்கில் !

தடாகம் மலர்சூடியது
படம் முகூர்த்தங்கள்.
கவிஞர் ஓ.என்.வி.குறுப்பு
இசை எம்.கே.அர்ஜுனன்
பாடகர் ஏசுதாஸ்
தடாகம் பூ சூடிக்கொண்டது
என் தோழி உன்னைப்போல!
அருமைத்தோழி உன்னைப் போல!
நாணத்துடன் யாரைத் தேடுகின்றன
உன் விழி அன்னங்கள்?
தாழம்பூவின் அதரத்தை சுவைக்கும்
காற்றுக்கு என்ன ஒரு மிதப்பு!
மணமுள்ள செண்பக மலரின்
கன்னம் தடவும் காற்றுக்கு என்ன ஒரு போதை!
உன் முக நறுமணப் போதையில் மூழ்கும்
தென்றலாக மாட்டேனா?
நானொரு தென்றலாக மாட்டேனா?
காற்றின் கைகளில் ஊஞ்சலாடும்
காட்டுக்கு என்னவொரு மயக்கம்
மோகமூட்டும் ஆடிமாதம் தழுவும்
காட்டுக்கு மயக்கம்
உன் காலடி முத்தங்களை அணியும்
மணல்துகள் ஆகமாட்டேனா?
நானொரு மணல்துகள் ஆகமாட்டேனா?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
