சென்றகால ரத்தம், என்றுமுள்ள கண்ணீர்
நலம்தானே? இப்போதுதான் உங்கள் நாவல் பின்தொடரும் நிழலின் குரல் வாசித்து முடித்தேன். என் நண்பர்களிடம் அந்நாவல் பற்றிப் பேசினேன். இரண்டு வகையான கருத்துக்கள் வந்தன. ஒன்று, நாவல் கொள்கைவிவாதங்களை முறையாக எல்லா தரவுகளையும் இணைத்துக்கொண்டு செய்யவில்லை, உணர்ச்சிகரமான நிகழ்வுகளை நோக்கிச் செல்கிறது என்று ஒருவர் சொன்னார். இன்னொருவர் நாவல் முழுக்க ஜெயமோகனே வேறுவேறு கதாபாத்திரங்களாக நின்று பேசுவதாகச் சொன்னார். இரண்டும் இரண்டு வகை எதிர்நிலைகளாக எனக்கு தோன்றியது.
தன் அரசியல் நம்பிக்கைகளை ஆழமாக உலுக்கிய நாவல் என்று இதை நாலைந்து நண்பர்கள் சொன்னார்கள். அவர்களெல்லாம் கொஞ்சம் மூத்தவர்கள். அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள். எனக்கு அப்படி எந்த உலுக்கலையும் இந்நாவல் செய்யவில்லை. நான் கம்யூனிஸம், சோவியத் ருஷ்யா பற்றி எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டதுதான். லெனின் பற்றியே கூட விக்கிப்பீடியா அறிமுகம்தான். நான் கல்லூரியில் படிக்கையில் கல்லூரில் அரசியலே இல்லை. எல்லாருமே டெக்கிகள் ஆவதற்கான முயற்சியுடனும் கனவுகளுடனும்தான் இருந்தார்கள். நானேகூட ஒரு கனவு வைத்திருந்தேன் என்றால் என்றைக்காகவது ஒரு ஸ்டார்ட்டப் தொடங்கவேண்டும் என்னும் கனவைத்தான் சொல்லவேண்டும்.
எனக்கு இந்நாவலில் முக்கியமானதாகப் பட்டது கணவன் மனைவி உறவின் பலவகையான வண்ணங்கள் இந்நாவலில் வந்ததுதான். புக்காரினுக்கும் அன்னாவுக்கும் உள்ள உறவு. நாகம்மைக்கும் அருணாசலத்துக்கும் இடையேயான உறவு. வீரபத்ரபிள்ளைக்கும் அவர் மனைவிக்குமான உறவு. அத்தனைக்கும் மேலாக கே.கே.எம்முக்கும் அவருடைய காதலிக்குமான உறவு எல்லாமே அபாரமான நுணுக்கத்துடனும், இயல்பான தன்மையுடனும் இருக்கின்றன.
அதன் பிறகு எனக்கு அந்நாவலில் மிக முக்கியமாகத் தோன்றியது ஓர் அமைப்புக்குள் என்னென்ன அதிகாரவிளையாட்டுக்கள் நிகழும், அதையெல்லாம் எப்படியெல்லாம் சூழ்ச்சியாகச் செய்வார்கள் என்னும் சித்திரம். மிக நம்பகமாகவும், மிகமிக நுணுக்கமாகவும் அவை சொல்லப்பட்டுள்ளன. அதெல்லாம் ஒரு கார்ப்பரேட் உலகத்திலும் அப்படியே நிகழ்பவைதான்.
நான் சோவியத் ருஷ்யாவின் புரட்சி, வீழ்ச்சி எதையும் சரியாக அறியவில்லை. அவற்றை அறிவதற்கான பொறுமையுமில்லை. ஆனால் இறுதியில் கினியாழ்வின் கதையில் கிறிஸ்து வரும் காட்சிகளெல்லாம் எனக்கு இன்றைக்கு காஸாவில் நிகழும் போர்க்களத்தையும், அங்கே கொல்லப்படும் குழந்தைகளையும்தான் ஞாபகப்படுத்தின. கண்ணீருடன் மட்டுமே என்னால் படிக்கமுடிந்தது. அந்தக் கொல்லப்பட்ட ஆத்மாக்களுக்காக அருணாசலம் செய்யும் நீத்தார்க்கடன் ஒரு ஸ்பிரிச்சுவலான இடம் என்று நினைத்தது. இந்த உலகம் தோன்றியது முதல் இப்படி அநீதியாகக் கொல்லப்பட்ட அத்தனைபேருக்கும் நாம் கடன் கழிக்கத்தான் வேண்டும் என்று நினைத்தேன்.
ஜெ.ரவீந்தர்
அன்புள்ள ரவீந்தர்,
ஒரு நாவலின் கதைக்களம், அதன் தர்க்கங்கள், அதற்குரிய தரவுகள் எல்லாமே ஏதோ ஒரு காலத்துடனும் இடத்துடனும் சம்பந்தப்பட்டவை. அவை காலத்தால் பின்னகரும். இந்நாவலை எழுதும்போதே நான் ஒரு பேட்டியில் சொன்னேன், லெனின் யார் என்று கலைக்களஞ்சியத்தில் தேடும் காலம் வரும், அப்போதும் இந்நாவல் பேசும் பேசுபொருள் எஞ்சியிருக்கும் என்று. ஒரு கலைப்படைப்பில் எப்போதும் எஞ்சியிருப்பவை உணர்வுகள், மெய்யியல்தருணங்கள்.
உங்கள் வாசிப்பில் இந்நாவலில் மேலெழுந்து வந்திருப்பவை எனக்கு வியப்பளிக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திற்கும், ஒவ்வொரு வாசகருக்கும் அப்படி ஒரு பிரதியை அளிப்பதையே நாம் நல்ல படைப்பு என்று சொல்கிறோம். பின்தொடரும் நிழலின் குரல் அப்படி பல அடுக்குகள் கொண்ட படைப்பு. எல்லா இடங்களிலும் அது நுணுக்கமும் ஆழமும் கொண்டது என்றே நான் சொல்வேன். இன்று உருவாகி வந்துள்ள தலைமுறைக்கு அரசியல் கனவுகள் இல்லாமலிருப்பதும், உலகியல் இலக்குகளே கனவுகளாக இருப்பதும் இயல்பானதே. அவர்களுக்கு இந்நாவல் நம்பிக்கைகளின் வன்முறை பற்றிய நாவலாக பொருள்கொள்ளக்கூடும். அமைப்பின் வன்முறையாகவும் தெரியக்கூடும். அடிப்படையில் கேள்வி சிந்தனையின் சுதந்திரம் பற்றியதுதானே?.
பின்தொடரும் நிழலின் குரல் போன்ற ஒரு நாவல் அனைவருக்குமானது அல்ல. எளிமையான யதார்த்தவாத நாவலை, கதையை, வாசித்துச்செல்வதுபோல அதை வாசிக்கமுடியாது. தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த கதைக்களத்தையும் கதைமாந்தர்களையும் புனைவில் எதிர்பார்ப்பவர்களுக்குரிய படைப்பு அல்ல அது. அந்நாவலுக்கு வரலாறு, அரசியல், கருத்தியல், மதம் என பல பின்புலங்கள் உள்ளன. அவற்றை அறிந்திருக்கவேண்டும், அல்லது அந்நாவலே அவற்றை முன்வைக்கையில் அதன்வழியாகவே அவற்றை அறிந்துகொள்ளும் கவனம் இருக்கவேண்டும்.
தீவிரமான தத்துவ- கருத்து விவாதங்கள் கொண்ட நாவல்கள் தமிழில் இல்லை. நாம் சுருக்கமான, அகவயச் சித்திரங்கள் கொண்ட நவீனத்துவ நாவலுக்குப் பழகியவர்கள். தத்துவார்த்தமான நாவல்கள் விரிவான உரையாடல்கள், தன்னுரைகள், கடிதங்கள், கட்டுரைகள் என விரிபவை. தஸ்தயேவ்ஸ்கி முதல் தாமஸ் மன் வரை செவ்வியல் நாவல்களின் பெரும்பட்டியல் உள்ளது. சமகாலப் படைப்புகள் அந்த விவாத அம்சத்தை வெவ்வேறு புனைவுத்திகளுடன் இணைத்து விரித்தெடுக்கின்றன. உம்பர்ட்டோ எக்கோ, மிலன் குந்தேரா என அப்படியும் ஒரு நீண்ட பட்டியல் உண்டு.
இந்த வகையான தத்துவவிவாத நாவல்களில் நேரடி யதார்த்தம் ஓர் எல்லையில் மீறப்பட்டேயாகவேண்டும். ஒவ்வொரு தரப்புக்கும் மிகச்சிறந்த குரலே ஒலிக்கமுடியும். அப்போதுதான் விவாதம் கூர்மையடையும். அதுவே நல்ல படைப்புக்கான அடித்தளம். ஆனால் ஒரு சூழலில் அப்படி எல்லா தரப்புக்கும் உரிய மிகச்சிறந்த தரப்பினர் இயல்பாகப் புழங்குவது யதார்த்தம் அல்ல. அனைத்து முதன்மைக் குரல்களையும் ஆசிரியரே உருவாக்கவேண்டும். ஆசிரியரின் மிகச்சிறந்த மொழி அனைத்துக் கதைமாந்தர்களுக்கும் அளிக்கப்படவேண்டும்.அதற்கு ஆசிரியரின் தன்னிலை ஒவ்வொரு தரப்பாகவும் உருமாறியாகவேண்டும். எல்லா கதைமாந்தரிலும் ஆசிரியரின் ஆளுமை கொஞ்சமேனும் இருந்தாகவேண்டும்.
அதேசமயம் தர்க்கநோக்கில் தெளிவான வேறுபாடு இருக்கும். ஆளுமைச்சித்திரத்தில் தெளிவான வரையறை காணப்படும். தர்க்கம் என்பது அதன் உச்சியில் ஏறத்தாழ ஒன்றுபோலவே இருக்கும். ஊசிமுனை ஊசிமுனையை சந்திக்கும் புள்ளி அது. அதுவே நல்ல தத்துவநாவலின் அடையாளம். பின்தொடரும் நிழலின் குரல் வெளிவந்தபோது ‘எல்லா தரப்பையும் நியாயப்படுத்துகிறார்’ என்ற குற்றச்சாட்டு பொதுவாசகர்களிடமிருந்தும், அம்பை போன்ற எழுத்தாளர்களிடமிருந்தேகூட, வந்தது இதனால்தான். இது வாசிப்பு மற்றும் புரிதலின் எல்லையை காட்டுவது.
இவ்வியல்பை எல்லா தத்துவ விவாதம் கொண்ட செவ்வியல் நாவல்களிலும் காணலாம். தஸ்தய்வேவ்ஸ்கி நாவல்களில் சட்டென்று ஒரு சிறிய கதாபாத்திரகூட தஸ்தயேவ்ஸ்கியின் குரலில் பேச ஆரம்பிப்பதை வாசகர் அறியலாம். பெரும்பாலான கதாபாத்திரங்கள் உணர்வெழுச்சியுடன் தங்கள் தரப்பைச் சொல்வதையும் காணலாம். தாமஸ் மன் நாவல்களில் அந்த உணர்வெழுச்சி இருக்காது, ஆனால் உருவகத்தன்மை இருக்கும்.
இத்தகைய நாவல்கள் நம் சூழலிலுள்ள எளிய வாசகர்களுக்கு அறிமுகம் இல்லை. அவற்றை வாசிப்பதற்கான பொறுமையோ கவனமோ அடிப்படை அறிவுத்தளமோ இங்கே குறைவு. ஆகவேதான் நீங்கள் சொன்ன நண்பர் அதை ஒரு குறைபாடாகச் சொல்கிறார்.
ஆனால் இந்த கருத்து- தத்துவத்தளம் என்பது ஒரு பீடம்தான். எல்லா தரப்பையும் அவற்றின் கூரிய முனைகளை மட்டுமே நல்ல புனைவு அறிமுகம் செய்யும். அவற்றை வலுவான சொற்றொடர்கள், உருவகங்கள் வழியாக முன்வைக்கும். அதன் பின் உணர்வுநிலைகளுக்கும், அங்கிருந்து கவித்துவத்திற்கும், தரிசனத்திற்குமே செல்லும். அவ்வாறென்றால் அது நாவல் அல்ல. ஒரு கட்டுரை நூலிலுள்ள நீண்ட நேரடி விவாதம் நல்ல நாவல்களுக்குரியது அல்ல. (விதிவிலக்கான சில நாவல்களில் அதுவும் உண்டு. மாஜிக் மௌண்டைன் ஓர் உதாரணம்)
ஆகவேதான் வெறும் கட்டுரைகளை, அதிலும் மொழித்தீவிரம் அல்லது உருவகக் கவித்துவம் கைகூடாத அரசியல் விவாதக்கட்டுரைகளை வாசிக்கும் இன்னொரு வாசகர் உணர்வுநிலைகளைக் குற்றம் சொல்கிறார். பின்தொடரும் நிழலின் குரல் கதை அல்ல, அரசியல் விவாதமும் அல்ல, இரண்டும் இணைந்து மேலெழும் புனைவுவகை. அத்தகைய புனைவு தமிழில் அந்நாவல் வழியாகவே அறிமுகமாகியது. அதற்கான வாசகர்கள் அடுத்த தலைமுறையில்தான் சிலர் உருவாகி வந்தனர்.
ஐஸ்வரியாவின் மொழியாக்கத்தில் விரைவில் ஆங்கிலத்தில் வெளியாகவிருக்கும் நாவல் அது. மேலும் வாசகர்களை அது அடையக்கூடும்.
ஜெ
பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க பின் தொடரும் நிழலின்குரல் வாங்க
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
