இன்று காந்தி என்னவாக இருக்கிறார்?
எந்தக் கேள்வியோ தேடலோ இன்றி, காந்தி பற்றிய முன்முடிவுகள் கொண்டோருக்கு இன்னும் எத்தனை புத்தகங்கள் எழுதப்பட்டாலும் உதவப் போவதில்லை. அவரைப் பற்றிய புரிதலை சிறிதளவேனும் வளர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு ‘இன்றைய காந்தி’ ஒரு சிறந்த கையேடு.
இன்றைய காந்தி- இந்துமதி மனோகரன்இந்துமதியின் இப்பதிவை வாசித்தேன்.
வசைகள், அவதூறுகள் வழியாகவே நம்மில் பலரும் காந்தியை அறிந்திருக்கிறோம். நேற்று அவரை வசைபாடியவர்கள் இன்று இந்துத்துவர்களின் அதியுக்கிரமான அவதூறு மழையைக் கண்டு திகைத்துப்போய் காந்தியை நோக்கிச் செல்லும் காலம் இது. காந்தி வெறுமொரு சென்றகாலப் பெயர் அல்ல. காந்தி காங்கிரஸின் நிறுவனர் அல்ல. காந்தி ரூபாய்நோட்டின் முகம் அல்ல. அவர் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் என இன்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இன்று ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை, இந்த பெருநிலத்தின் அறம்சார்ந்த வாழ்வை மேலென நினைக்கும் ஒவ்வொருவருக்கும் உரியவராக அவர் ஆகிவிட்டிருக்கிறார்.
இன்றைய சூழல் உருவாவதற்கு முன் 2011 ல் எழுதப்பட்ட இன்றைய காந்தி காந்தியை தமிழ் நவீன சிந்தனைச்சூழலுக்கு முற்றிலும் புதிய முறையில் அறிமுகம் செய்தது. காந்தி பற்றிய எல்லா கேள்விகளுக்கும் வரலாற்றைக்கொண்டு, ஆதாரங்களைக்கொண்டு பதில் சொன்னது. சொல்லப்போனால் ஏற்கனவே தெரிந்த ஆதாரங்களையே தர்க்கபூர்வமாக அடுக்கி உண்மையை வெளிப்படுத்தியது. தமிழ்ச்சூழலில் காந்தி பற்றி இருந்த வழக்கமான புகழ்மொழிகள், வழக்கமான வசைமொழிகள் இரண்டுக்கும் அப்பால் சென்று அவருடைய பல முகங்களை அறிமுகம் செய்தது. இதில் காந்தியின் வெற்றிகளும் தோல்விகளும் ஆராயப்பட்டுள்ளன. வழிபாட்டுணர்வு இல்லாமல் அவர் மதிப்பிடப்படுகிறார்.
காந்தி வெள்ளையரை எதிர்த்து சுதந்திரம் பெற்றுத்தந்த அரசியல்தலைவர் மட்டும் அல்ல. அவர் சூழியல் முன்னோடி. இன்றைய நுண்ணலகு அரசியலின் கோட்பாட்டாளர். உலகமெங்கும் இன்று நிகழும் ஜனநாயகப்போராட்டங்களின் முதல்வடிவை உருவாக்கியவர். நிர்வாகவியலில் மையப்படுத்தலுக்கு எதிரான பார்வையை முன்வைத்த கருத்தாளர்.
இன்றைய வாசகர்கள் காந்தியை இந்நூல் வழியாகக் கண்டடையலாம்
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
