இரும்புக் கழுகு மேலெழுந்துவிட்டது!
வெள்ளை யானை என்னும் நாவல் என் நண்பரும் தலித் இயக்க முன்னோடிகளில் ஒருவருமான எழுத்து பிரசுரம் அலெக்ஸ் வெளியிட்டது. அவர் இரண்டு பதிப்புகளை வெளியிட்டார். அதன் ஏழாவது பதிப்பு விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
அண்மையில் இந்நாவல் தெலுங்கில் எஸ்.குமார்- அவினேனி பாஸ்கர் மொழியாக்கத்தில் தெள்ளெ எனிகு என்னும் பேரில் தெலுங்கில் வெளியாகியுள்ளது. அதன் ஆங்கில மொழியாக்கம் இந்தியாவில் ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனத்தாலும் அமெரிக்காவில் எஃப்.எஸ்.ஜி நிறுவனத்தாலும் வெளியிடப்படவுள்ளது. மொழியாக்கம் பிரியம்வதா ராம்குமார்.
தெலுங்கில் இளையபடைப்பாளியான பிரசாத் சூரி எழுதிய மதிப்புரை இது
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், துல்லியமாகச் சொன்னால், 1870களில் நடக்கும் ஒரு கதை இது.
இந்த நாவல் ஒரு மாலை நேரத்தில் சென்னை நகரில் தொடங்குகிறது. அங்கு சக்திவாய்ந்த பிரிட்டிஷ் பேரரசின் நன்கு பயிற்சி பெற்ற அதிகாரியான ஏய்டன் என்ற வெள்ளை ஐரிஷ் மனிதர் பணியாற்றுகிறார். ஒரு நாள் சென்னை கடற்கரைச்சாலையில் தன் குதிரையில் கோட்டை நோக்கிச் செல்லும் அவர் காணும் காட்சியில் நாவல் தொடங்குகிறது
ஒரு வேளை உணவுக்காக, கொடிய அரக்கனின் குகை போன்ற ஒரு குளிர்க்கிடங்கான “ஐஸ் ஹவுஸ்“க்குள் வந்த துரதிர்ஷ்டவசமான ஆன்மாக்களின் கதை இந்நாவல். அங்கு கடுங்குளிர் எலும்புகளைக் கூட முறுக்கும். அதன் பிறகு, வாசகர்கள் வெறும் பார்வையாளர்கள். மனசாட்சியும் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியமும் உள்ள எவரும் அதன்பின் இந்தக் கதையைப் படிப்பதை நிறுத்த முடியாது.
நமது காலத்தின் சிறந்த கதைசொல்லியான ஜெயமோகன், வரலாற்றில் வெறும் அடிக்குறிப்புகளாகவே இருந்த வரலாற்று உண்மைகளை மிகவும் சிரமப்பட்டு ஆராய்ந்து, அவற்றை நமக்கான கதையாக மாற்றியுள்ளார்.
இந்தப் புத்தகம் உரையாடல்களின் வழியாக வெளிவரும் வெவ்வேறு வரலாற்று யதார்த்தங்களால் நிரம்பியுள்ளது. போக்குவரத்து மிகவும் எளிதாகிவிட்ட இன்றைய காலத்தில், வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்குக் கூட தென்னிந்தியா எப்படிப்பட்டது என்று தெரியாது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை ஊகிக்கக்கூடியதே. இந்த நாவல், அக்கால மக்கள் தங்ஜகள் நாட்டில் மிக அண்மையில் நிகழ்வனவற்றைக்கூட அறிந்திருக்கவில்லை என்று காட்டுகிறது. தொலைவில் நடக்கும் நிகழ்வுகள் தங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை சற்றும் அறிந்திருக்கவில்லை என்பதை விளக்குகிறது.
இந்நாவல் காட்டும் மாபெரும் பஞ்சத்தின் சித்திரங்கள் கொடியவை. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து மனித முன்னேற்றம் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிட்டன போல் உணர்ந்தேன்.
ஜெயமோகனுடன் ஒரு நேர்காணலில் இருந்து ஒரு கருத்தை நான் நினைவு கூர்ந்தேன். ஒரு படைப்பை பல கோணங்களில் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் படுவதில்தான் அதன் ஆழம் உள்ளது என்று கூறினார். தனது குதிரை வண்டியைச் சுற்றியுள்ள பஞ்சத்தில் சாகும் மக்கள், கைகளை நீட்டி, தங்கள் உயிரைக் காப்பாற்ற கெஞ்சுவதைப் பற்றி எய்டன் என்ன நினைக்கிறார் என்பதை நாவலில் பாருங்கள்.
அந்தப் பகுதியைப் படிக்கும்போது என் கண்களில் கண்ணீர் பெருகியது. மக்கள் உணவின்றி ஆயிரக்கணாக்காக அப்படியே அழிந்து போனதைப் பற்றிப் படித்தபோது, ”இது உண்மையா?” என்று யோசிப்பதற்குப் பதிலாக, “பாலஸ்தீனத்தில் மக்கள் இப்போது எதிர்கொள்ளும் அதே நிலைமைதன இது இல்லையா, நாம் வாழும் அதே பூமியில்?” என்று உணர்ந்தேன். காலம் மாறியிருக்கலாம்.காரணம் இயற்கையான பஞ்சம் அல்லது செயற்கையான போர் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் மானுட நிலைமைகள் மாறவில்லை.
வங்காளப் பஞ்சம் பற்றி நான் நீண்ட காலத்திற்கு முன்பு படித்த சுகுமார் சென் என்ற அறிஞரின கூற்று எனக்கு நினைவுக்கு வந்தது. ‘பசியால் வாடும் இந்த மக்கள் அனைவரும் தானியக் கிடங்குகளைத் தாக்கி ஏன் கொள்ளையடிக்கக் கூடாது? ஏன் அவர்கள் அதைச் செய்வதில்லை’ அந்த எண்ணம் இந்நாவலிலும் எனக்குள் மீண்டும் தோன்றியது.
சில நாட்களாக, இதே எண்ணங்கள் என்னை வேட்டையாடி வருகின்றன. நாவலின் ஒரு முக்கியக் காட்சியில், அனைத்துத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அந்த நேரத்தில், ஏய்டன் தனது கண்களுக்கு முன்பாக என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே நாமும் பார்க்கிறோம்.
லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்திற்கு பலியாக்கப்பட்டபோது, மீட்பு நடவடிக்கைக்கு முன்வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அப்பஞ்சங்களை பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு பல பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கான திட்டங்களைத் தயாரித்தது. பட்டினியால் வாடும் அந்த மக்கள் அனைவருக்கும் வேலை வழங்குவது போல. ஆனால் உழைப்பைச் சுரண்டுவதே நோக்கம். பக்கிங்ஹாம் கால்வாய் அப்படித்தான் தொடங்கப்பட்டது, அது தெலுங்கு மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு திட்டம் என்று நான் நம்புகிறேன். பலலயிரம் உயிர்களைப் பலிகொண்ட திட்டம் அது.
ஆனால் இந்த நாட்டில், கொடிய பசியால் கூட மக்களை கிளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது. பஞ்சத்தின் போது உயிர்வாழ சக மனிதனைக் கொன்று சாப்பிட்ட கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உணவு நிரம்பிய வண்டிகளும், செல்வக் குவியல்களும் தங்களைச் சுற்றி கிடப்பதைக் கண்டும்கூட இங்குள்ள மக்களுக்குப் பறித்து கொள்ளையடிக்க ஆசை வராததற்குக் காரணம் என்ன? அவர்களைக் கட்டிப்போட்ட அந்த “பொது மனநிலை”தான் என்ன?
இந்த நாட்டில் உள்நாட்டுப் போர்களும் பிரெஞ்சுப் புரட்சிகளும் ஏன் நடக்கவில்லை? ரோமானியப் பேரரசுக்கு எதிராக அடிமைகள் கிளர்ச்சி செய்த வரலாறு போன்ற ஒன்று ஏன் நமக்கு இல்லை? அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நான் “வெளை யானை” நாவலில் பதில்களைக் கண்டேன். இந்த நாவல் வரலாற்றைப் பற்றிய நமது புரிதலையும் கண்ணோட்டத்தையும் முற்றிலுமாக மாற்றுகிறது.
எழுத்தின் சக்தியைப் புரிந்து கொள்ள, ஒருவர் இது போன்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும். “நான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டால்” என்று வழக்கமாக சொல்லும் தேய்வழக்குபோல, எனக்கு அதிகாரம் இருந்தால், இந்த நாவலை துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் விநியோகிப்பேன். ஷரன் குமார் லிம்பாலேவின் “சனாதனம்” நாவலைப் படித்தபோது எனக்கு முன்பு இதே உணர்வு ஏற்பட்டது.
வரலாற்றில் இறந்த மக்களின் மௌன அலறல்கள் அலைகின்றன. இந்த நாவலில் அந்த அலறல்களைக் கேட்கலாம். இந்த நாட்டின் வரலாற்றிலும், நமது சுதந்திரப் போராட்டத்திலும், பல ஹீரோக்களின் கதைகளைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் அனைவரும் அநீதி மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடினர். உண்மைதான் ஆனால் இந்த நாட்டில், உயிர்வாழ்வதற்காக கடினமாக உழைத்து வாழும் லட்சக கணக்கான சமூகங்கள் இருந்தனரே. அவர்கள் அனைவரும் அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
வெள்ளையர் இந்த நாட்டைக் கொள்ளையடித்தார்கள. தனது கொள்ளைக்காக, அவர் ரயில்வே, சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைக் கட்டினார். இதன் காரணமாக, இந்த நாட்டின் வரலாறு மாறியது. நவீன யுகம் விழிப்புணர்வு பெற்றதிலிருந்து அடிமைத்தனத்தில் வாடிக்கொண்டிருந்த சமூகங்கள்; தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்க்கும் ஞானத்தைப் பெற்றனர். ஆனால் ஏன் பெரும் கிளர்ச்சிகள் நிகழவில்லை. இந்த நாடு ரத்தினங்களின் கருவறையாக இருக்கலாம், ஆனால் அன்றும் இன்றும், அந்த செல்வத்தை யார் அனுபவிக்கிறார்கள்?
இந்த நாவல் ஒரு அம்பேத்கரின் பிறப்புக்கு வழிவகுத்த நிலைமைகள் மற்றும் காந்தி எவ்வாறு மகாத்மா ஆனார் என்பதைப் பற்றி மறைமுகமாக நமக்குச் சொல்கிறது.
மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. இது வாசிப்பை ஒரு இனிமையான அனுபவமாக மாற்றியது.
ஒரு அறப்பேருரையைக் கேட்ட பிறகு கூறப்படும் வாழ்த்து போல இதைச் சொல்கிறேன. அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்கட்டும். இந்த நாவலை எழுதியவருக்கு, அதை வெளியிட்டவருக்கு, அதை மொழிபெயர்த்தவருக்கு, அதைப் படித்தவருக்கு.
இரும்புப் பருந்து எழுந்துவிட்டது
அறுவடைக்கு நெருப்பு விளைந்துவிட்டது
துரோகங்கள் அழிக்கப்படடும்
பிழைகள் களையப்படட்டும்
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் தோழமை
அடித்தளங்களாக நிலைகொள்ளட்டும்
இல்லங்கள் பொலிவுறுக
அனைத்து மானுடருக்கும்
அமைதி அமைதி அமைதி
பிரசாத் சூரி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
