ஒற்றைத்துளியில் மூழ்கிச் சாவது…

அன்புள்ள ஜெயமோகன்,

கடல் நாவலை வாசித்து முடித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடிக்கத்தக்க ஒரு நாவல் அத்தனை ஆழமும், அத்தனை அடுக்குகளும் கொண்டிருப்பது ஆச்சரியமானது. ஆழமான சிந்தனை, ஆன்மிகம் அல்லது வரலாறு பற்றிய பார்வை கொண்ட எழுத்தாளர்களால் ‘கதை’ சொல்ல முடிவதில்லை என்பதுதான் நான் புரிந்துகொண்டது. ஆனால் கதை என்னும் அபாரமான ஓட்டம் இருக்கும்போதே ஒரு படைப்பு சிந்தனையை உலுக்கி விரிவடையச் செய்யும் என்றும், ஒன்றுக்குமேல் ஒன்றாக பல அடுக்குகளை கொண்ட ஒரு பெரிய சித்திரத்தை அளிக்கும் என்றும் இந்நாவல் வழியாகவே அறிந்துகொண்டேன். இந்நாவலை வாசிக்க கடல் என்னும் சினிமாவின் பல காட்சிகளும் உதவின. உங்களுக்கு நன்றி.

சாம்– தாமஸ் இருவருக்குமான உரையாடல். அல்ல சாம்– பெர்க்மான்ஸுக்கான உரையாடலில் நடுவே ஊடகமாக தாமஸ். அவர்கள் வழியாக நிகழும் கட்டற்ற சொற்பெருக்குதான் இந்த நாவல். அதற்குள் வந்துசெல்லும் ஆழங்கள் அபாரமானவை. இந்த நாவல் சினிமாவாக வந்தபோது இத்தனை ஆழமான அடுக்குகள் இருக்கின்றன என்று தோன்றவில்லை. அந்த சதுரங்க விளையாட்டு ஒரு அபாரமான கற்பனை.

செலினா போன்ற ஒரு தேவதை. அவள்மேல் சாம் உள்ளுக்குள் உள்ளுக்குள் கொண்ட பிரியமே அவருக்கான மாபெரும் சிலுவையேற்றமாக ஆகிவிடுகிறது. இந்நாவலில் எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது இதுவே. இது என் வாழ்க்கையும்கூட. (மிகப்பெரிய அவமதிப்பு, வீழ்ச்சி. நேரில் சொல்லியிருக்கிறேன். இந்நாவலில் இந்த இடத்தை எழுத நான் சொன்னதை பயன்படுத்திக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்). நான் ஏன் ஏன் என்று பல ஆண்டுகள் எனக்குள் உழற்றிக்கொண்டிருக்கிறேன். அதில் நீங்கள் சாம் உணர்வதாகச் சொல்லும் அந்தப் பிரியம்தான் அவருக்கான தண்டனைக்கான காரணம். அதை நீங்கள் எனக்கான விடையாகச் சொல்கிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன். ஆனால் பிரியம் என்பது அத்தனை கொடியதா? சிலுவையேற்றத்துக்குரிய பாவமா அது? 

எஸ்.கே

அன்புள்ள எஸ்.கே.

உங்கள் வாழ்வின் நிகழ்வாக நீங்கள் சொன்னவற்றை நான் இந்நாவலை எழுதும்போது நினைத்திருக்கவில்லை. ஆனால் இந்நாவலைப்பற்றி இப்போது நிங்கள் சொல்வதை வாசிக்கும்போது உண்மைதான் என்னும் எண்ணத்தை அடைகிறேன். இவை எப்படி நமக்குள் ஒன்றுகூடும் என்பதை நம்மால் சொல்லிவிட முடியாது.

நம்முடைய செவிகளை விட மிகமிக கூரிய செவித்திறன் கொண்ட விலங்குகள் நாம் அன்றாடம் கேட்கும் ஓசைகளை எப்படி எடுத்துக்கொள்ளும்? அவற்றுக்கு அவை மிகப்பெரிய ஒலித்தாக்குதல்களாக இருக்கும் இல்லையா? அவை வதைபடும் இல்லையா? அதைப்போல சராசரியை விட கூரிய உள்ளம் கொண்டவர்களுக்கு அனுபவங்கள் பலமடங்கு தீவிரமானவை. கூர்மை என்பது மென்மை என்றும் பொருள்படலாம். அங்கே மெல்லிய தொடுகைகள் கூட அடிபோல விழலாம். மலர் விழுந்தது தாளாமல் வலி கொண்டு கத்தினாள் காதலனுக்காகக் காத்திருந்த கன்னி ஒருத்தி என்று சம்ஸ்கிருதச் செய்யுள் ஒன்றுண்டு. அது ஓர் அதிமென்மை நிலை. அதுதான் ஆன்மிக சாதகர்களின் நிலையும். பிறருடைய பாவத்துளி அவர்களுக்கு பாவக்கடல். நம் கோப்பை சிந்தும் நீர்த்துளியில் எறும்பு மூழ்கிச்சாகக்கூடும்,

ஆன்மிகசாதகர்களை வழிபாட்டுணர்வுடனும் கூடவே சந்தேகத்துடனும் சாமானியர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வழிபாட்டுணர்வு அவர்களை தெய்வமாக ஆக்கச்செய்கிறது. துளி ஐயம் எழுந்ததும் இழுத்து மண்ணில் விழச்செய்கிறார்கள். எந்த ஆன்மசாதகனுடனும் ஜனங்கள் சிலுவையுடன், பிரார்த்தனை மாலையுடன் வந்துகொண்டிருக்கிறார்கள். சிலுவையை ஏந்தியிருப்பது இருள். பிரார்த்தனை மாலையை வைத்திருப்பது ஒளி.  நீ எங்களைப் போன்ற சாமானியன் என்று அவர்களின் இருண்ட ஆழம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அந்த சாதகன் தன் மேன்மையை வெளிப்படுத்துந்தோறும் இருண்ட ஆழம் சீற்றம் கொள்கிறது. ஒளிகொண்ட பக்கம் நெகிழுந்தோறும் இருண்ட பக்கம் இறுகிக்கொண்டே செல்கிறது. இந்த உலகில் வாழ்ந்த எல்லா புனிதர்களும் சாமானியர்களின் கல்லடியை வாங்கியவர்களே. அந்தக் கற்களைச் சாமானியர் இயல்பாக பூக்களாகவும் ஆக்கிக்கொள்வார்கள். 

சாமானியரை அஞ்சியே பழங்காலத் துறவியர் மடங்களுக்குள் மறைந்துகொண்டனர். மலைக்குகைகளில் வாழ்ந்தனர். சாமானியர் முன் நின்றிருக்கையில் ஆன்மசாதகன் எப்படியோ தன்னை ஒருவகையில் சித்தரித்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். அடக்கம் கூட அப்படிப்பட்ட சித்தரிப்புதான். ஒரு சிறு கண்ணசைவு போதும். சாமானியர் அவனுள் உள்ள பாவத்தின் துளியை கண்டடைந்துவிடுவார்கள். ஏனென்றால் அப்படிக் கூர்மையாக அவர்கள் அவனை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சாம் பல்லாயிரம் சாத்தான்களால் கூர்ந்து பார்க்கப்பட்டுக்கொண்டே இருந்த தேவன் அல்லவா?

பிரியம் பாவம் அல்ல. ஆனால் எது பாவம்? நோன்பு என ஒன்றை கொண்டால் அதற்கு எதிரான எதன்மீது ஆர்வம்கொள்வதும் பாவமே. கிறிஸ்துவுக்காக இனிப்பை முழுமையாக துறப்பது ஒரு நோன்பு. அந்த துறவிக்கு ஒருதுளித் தேன் நஞ்சுக்கு நிகரான பாவம் அல்லவா? 

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.