விழா, சரண்யா ராஜேந்திரன்
முதல் முறையாக விருது விழாவில் பங்கெடுத்துள்ளேன் ஆசானே. ஒவ்வொரு ஆண்டும் வர வேண்டும் என நினைப்பேன் ஆனால் ஆதித்யா சிறு குழந்தை என தவிர்ப்பேன். இந்த முறை ஈரோடு, பெரியசாமி தூரன் விருது விழா. என் அவதானிப்புகள் சில.
தங்குமிடம், உணவு…
விழாவுக்கு வருவதற்கு ஒரு வாரம் முன்பே தங்குமிடம் உறுதியானதன் மின்னஞ்சல் வந்தது. பின்னும் ஆனந்தகுமார் சார், குழந்தையை அழைத்து வருவீர்கள் எனில் என்ன வயது என்று கேட்டுக் கொண்டார். பெண்களுக்கு மட்டும் தனியாக ஒரு மண்டபம் என்றும் அதன் பொறுப்பாளர் விஜயபாரதி, மதன் தனுஷ்கோடி என்றும் சொன்னார். நான் உண்மையில் ஒரு பெரிய மண்டபத்தின் ஹாலில் ஜமுக்காளம் விரித்து அத்தனை பேரும் படுத்துக் கொள்ள வேண்டும் என்றே நினைத்தேன். ஏனெனில் எங்கள் ஊரில் மணமகன், மணமகள் அறை தவிர வேறு அறைகள் இருந்தால் அதிசயம் தான். அப்படி இருந்தாலும் மொட்டை மாடியில் தகர கொட்டகை போல தான் இருக்கும். போர்வை எடுத்து வரவில்லையே என வெள்ளி அன்று என்னை நானே திட்டிக் கொண்டேன். ஆனால் இரு பெண்களுக்கு ஒரு பெரிய கட்டில், ஏசி, டிவி என சகல வசதிகளும் கொண்ட பெரிய அறை. மண்டபம் முழுக்க பல அறைகள். வெள்ளி இரவு நான் அந்த ஆச்சர்யத்திலேயே இருந்தேன். ஒவ்வொரு செயலையும் மிகச் சரியாக, சிறப்பாக திட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றிகள் நிச்சயம்.
வெள்ளி மாலை நான் வரும் போது புரோட்டா போட்டுக் கொண்டிருந்தார்கள் சமையல் ஆட்கள். மணம் மூக்கைத் துளைத்தது. இரவு அருமையான விருந்து என்றே சொல்ல வேண்டும்.
அடுத்து வந்த அத்தனை நேரத்து உணவுகளும் அப்படித்தான். ஓடி ஓடி ஆதித்யாவும் சாப்பிட்டான். அனைவரும் விரும்பிய உணவு வகைகள்.
குழுவில்…
ஒரு வாரம் முன்னரே WhatsApp குழுவில் இணைந்து கொண்டோம். கிட்டதட்ட 150 பேர். விழாவின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரின் tamilwiki பக்கம், அவர்களின் நேர்காணல், அவர்கள் எழுதிய கட்டுரைகள் என நண்பர்கள் அனுப்பிக் கொண்டே இருந்தனர். அத்தனையையும் படித்த பின்பு அவர்களை சந்திப்பதே நியாயம். கேள்விகள் இருப்பவர்கள் தனியாக தொடர்பு கொள்ள சொல்லி இருந்தனர். நண்பர்கள் அனுப்பிய ஒவ்வொரு கட்டுரையும், தரவும் மிகுந்த ஆழம் கொண்டது. வலங்கை, இடங்கை கட்டுரையை நவீன் தமிழாக்கம் செய்து அனுப்பினார்.
மொத்த தொகுப்பும் மண்டைக்குள் சேர்ந்து விட்ட பிறகே விழாவுக்கு கிளம்ப முடியும்.
விழாவில்…
வெள்ளி மாலை முதலே அரங்குகள் ஆரம்பம். உண்மையிலேயே அத்தனை செறிவான கேள்விகளை கேட்கும் அறிவார்ந்த கூட்டத்தை வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அங்கே தான் பார்க்கிறார்கள் என்றே சொன்னார்கள். படித்து தெளிந்த பின் எழும் கேள்விகளும், படிக்கும் கூட்டமும் அப்படித்தானே இருக்கும்.
ஆதித்யாவுக்கு வரைய நோட்புக், பென்சில், அழிப்பான், கலர் பென்சில்கள் என வாங்கி வைத்திருந்ததால் அவன் அதைக் கொண்டு வரைந்து கொண்டே இருக்க, இங்கே நான் உரைகளை கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு அரங்கும் சரியான நேரத்தில் முடிக்க வைக்க நண்பர்கள் இருந்தார்கள். சிறிய இடைவேளை பின் அடுத்த அரங்கு என்பதால் ஆதித்யாவையும் கொஞ்சம் கவனிக்க முடிந்தது. ஆனால் இடைவேளையில் நான் முழுக்கவே அங்கங்கே பேசிக் கொண்டிருந்த நண்பர்களை சுற்றி சுற்றி வந்தேனென்றே சொல்ல வேண்டும். அதுவும் போதாமல் அத்தனை புத்தகங்கள் வேறு சுற்றிலும். எதை வாங்க, எதை விட.
சனி காலை பறவைகள் பார்க்க வெள்ளோடு பறவைகள் சரணாலயம் சென்று விட்டு விரைவாக அரங்குக்கு வந்தோம். மிக நல்ல உணவு, நல்ல இடத்தில் உறக்கம்(இலக்கியம் பேச ஆள் இருந்தால் எப்படி வரும் உறக்கம்), அறிவுக்கு அத்தனை அரங்குகள் என எந்த குறையும் இல்லாத நாட்கள் அல்லவா.. அத்தனை குழந்தைகள் அங்கே.. மானசா தொடங்கி வரிசையாக மியூசிக்கல் சேர் விளையாடும் அளவு அவ்வளவு பிள்ளைகள். அவர்கள் உலகில் அவர்கள்… ஆனால் நாதஸ்வரம் இசைத்த போது அசையாத அவர்களைப் பார்த்தேன். பாடல் முடிவில் மானசாவின் மழலை அத்தனை இனிமை.
நண்பர்கள்…
கொற்றவை படிக்கும் குழுவில் இருந்த நண்பர்கள் ஈஸ்வரி, பிரீத்தி அவர்களின் குடும்பம், என் பிரியமான விஜயபாரதி சாரின் குடும்பம், மதன் குடும்பம், தம்பி சபரீஷ், சக்திவேல் அவன் அப்பா(சக்திவேலுக்கு ஊட்டும் போது அப்பாவிடம் எனக்கும் ஊட்ட சொல்லி சாப்பிட்டேன்), தம்பி சிவகுரு நாதன் குடும்பம், தம்பி மோகன் தனுஷுக், முனைவர் பத்மநாபன், கப்பல்காரன் ஷாகுல் அண்ணா மற்றும் அவரின் நண்பர்கள் என அத்தனை பேர்… பெயர் மட்டுமே என நான் கண்டிருந்த அனைவரும் உங்கள் தளத்தில் இருந்து எழுந்து வந்தாகவே தோன்றியது.
அத்தனைக்கும் மேல் கவிஞர் தேவதேவன்..
மீண்டும் மீண்டும் இலக்கியச் சுற்றம் தரும் நிறைவை, மகிழ்வை, நிம்மதியை சொல்லில் சொல்லி விட முடியுமா என்ன.. சனி இரவு இலக்கியம் என்னை தூங்க விட்ட நேரம் விடி வெள்ளி வந்து விட்டது.
ஞாயிறு காலை நீங்கள் நடத்தும் வகுப்பில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என குழந்தைகள் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு ஓடியே வந்து விட்டேன். நல்லூழ் அல்லவா…
வகுப்பு முடிந்து மதிய உணவும் தந்து தான் அனுப்பினார்கள் நண்பர்கள்.
இதற்கு மேலும் என்ன வேண்டும் உலகில்… இனி வேறு எந்தக் காரணமும் சொல்லி எந்த விழா நிகழ்வையும் தவற விடக் கூடாது என்ற உறுதியோடு…
பிரியமுடன்
சரண்யா
திண்டுக்கல்
சிறப்பு விருந்தினர்கள் அரங்குகள், அவர்களின் உரை, நாதஸ்வர கலை உலகம், உங்கள் உரை எல்லாம் தனியாக ஒரு கடிதம் எழுத வேண்டிய அளவுக்கு செறிவானது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
