கம்பராமாயண இசை நிகழ்வு, பதிவு
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினரால் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள பிரிஸ்கோ நகரில் கம்பராமாயண இசைக்கச்சேரி ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை சிறப்பாக நடந்தது. கம்பராமாயணம் என்றாலே சிறப்புதான் அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிறந்த 12 பாடல்கள் இந்த கச்சேரியில் பாடப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பழனி ஜோதி அவர்கள் தமிழ் மரபின் உண்மையான பெருமிதங்கள் எவை என எடுத்துக் கூறினார். மலையின் சிகரம் போல் நம் பண்பாட்டின் உச்சமாக கம்பராமாயணம் எப்படி வெளிப்படுகிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறி ரசிகர்களைக் கச்சேரியின் மனநிலைக்குள் கொண்டு வந்தார்.
“உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்” என்ற கடவுள் வாழ்த்துப் பாடலோடு கச்சேரி துவங்கியது.
“வன்மையில்லை ஒர் வறுமை இன்மையால்” பாடலின் நடுவில் ஒர் இடத்தில் இசையை நிறுத்தி ப்ரியா கிருஷ் குரலை மட்டுமே கொண்டு அனைவரையும் இன்மைக்கு அருகில் கொண்டு சென்று மெய்மறக்க வைத்தார். “தோள் கண்டார் தோளே கண்டார்” பாடலில் ப்ரியா கிருஷ் அரங்கத்தைத் தன்வசப்படுத்தினார். அனைவருமே மிதிலை சென்று ராமனின் எழிலை ரசித்தோம். மொத்த அரங்கமுமே இந்த பாடலுக்குச் சரணடைந்தது.
“எண்ண அரு நலத்தினாள் இணையள் நின்று வழி” என்ற இந்த பாடலில் இத்தனை அழகு உள்ளதா என்று கேட்டவர்கள் ஆச்சரியப்படும் வகையில் அத்தனை அழகையும் ப்ரியா கிருஷும் குழுவும் வெளிப்படுத்தினார்கள்.
கம்பன் உவமைகளை மழையெனப் பொழிந்த “கடலோ மழையோ முழு நீலக் கல்லோ” என்ற பாடலில் மிருதங்கமும் கஞ்சிராவும் இணைந்து இசை மழையாகவே பொழிந்தார்கள். மொத்த அரங்கையுமே தாளம் போட வைத்தார்கள்.
“குழைக்கின்ற கவரி இன்றி கொற்றவன்வெண் குடையும் இன்றி” என்ற இந்தப் பாடலில் காப்பியத் தலைவனான இராமனுக்குமே விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்பதையும், கோசலையின் உணர்வுகளையும் மிக அருமையாக பழனி ஜோதி எடுத்துக் கூறினார்.
“வெடிக்கின்றன, திசையாவையும்“
“கடல் வற்றி, மலை உக்கன“
“புரிந்து ஓடின, பொரிந்து ஓடின“
“நீர் ஒத்தன, நெருப்பு ஒத்தன“
என்ற நான்கு பாடல்களின் மூலம் போர்க்களத்தை கண்முன்னே நிறுத்தி விட்டார்கள் நம் இசைக் குழுவினர். அரங்கத்தின் வெப்பநிலையே சற்று உயரம் அளவிற்கு இசையை அமைத்திருந்தார்கள்.
“போர் மகளை, கலைமகளை, புகழ்மகளை” என்ற இந்த பாடலின் இசையும், குரலும் மரணத்தைப் பற்றிய உணர்வுகளை விவரிக்கும் விதத்தில் இருந்தது. இராவணன் இறந்த காட்சியை நேரில் பார்த்தது போன்ற அனுபவத்தை தந்தது. அதன் வெளிப்பாடாக அரங்கத்திலிருந்த பாதிக்கும் மேற்பட்ட ரசிகர்களின் விழிகளிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.
“இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்“
என்ற அழகான பாடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. கம்பனின் அற்புதமான பாடல் வரிகளாலும், ராலே ராஜனின் மிகச்சிறந்த இசையாலும், ப்ரியா கிருஷின் இனிமையான குரலாலும் கம்பராமாயண காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்றார்கள். உமா மகேஷின் வயலின் நெஞ்சமெல்லாம் நிறைந்தது. சாய் சங்கர் கணேஷின் பியானோ வாசிப்போ உன்னதம். ராஜு பாலனின் மிருதங்கம் அற்புதம். ஸ்கந்த நாராயணனின் கஞ்சிரா சிறப்பு சேர்த்தது. பழனி ஜோதியின் மிக அருமையான விளக்கத்தால் என்னைப் போல் கர்நாடக இசைக்கு புதியவர்களாலும் ஆழமாக ரசிக்க முடிந்ததோடு தொடர்ந்து கச்சேரியோடு பயணிக்க முடிந்தது. கம்பனின் பாடலில் உள்ள கம்பீரத்தை ராலே ராஜன் தன் இசையால் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கம்பனின் வரிகளில் இருந்த மகிழ்ச்சி, சிறப்பு, இழப்பு, துக்கம், அழகியல், மேன்மை ஆகியவற்றை அதன் அர்த்தங்களோடு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தார்.
உணர்வுபூர்வமான இசையால் பாடலின் வழியாக ரசிகர்களின் உணர்வுகளை இந்த இசைக்கச்சேரி தொட்டது. கால இடைவெளி கடந்து கம்பனின் காவியத்திற்குள் நம்மை அழைத்துச் சென்ற அனுபவம் சுகமானது. குழந்தைகளாலும் முழு நேரமும் இசையை ரசிக்க முடிந்தது. கம்பனின் காவியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினரின் இந்த மிகச் சிறப்பான நிகழ்வு எல்லைகளை தாண்டி தொடர்ந்து பயணிக்கட்டும்..
நன்றி!
ராதா பாலாஜி
டாலஸ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
