நிழல்களின் ஆடல், கடிதம்

அன்பு ஆசிரியருக்கு,

அன்பின்பாலும் தங்கள் படைப்புகள் என்னுள் ஏற்படுத்தும் எண்ண இடறல்களாலும் அவற்றைப்பற்றி உரையாடவும் தெளிவு பெறவும் பல முறை முயன்றும் எனது நினைவுக் குறைகளாலும் வாசிப்பு தடைகளாலும் கடிதமாக மின்னஞ்சலாக மாறாமல் அப்படியே விட்டிருக்கிறேன். எல்லாவற்றுக்குமான இழுவைத்தன்மை ரப்பரைபோல ஒரு எல்லையில் விடுபட்டுத்தானே ஆக வேண்டும். இந்த முறை காவியமும் நீலநிழலும் அந்தத்தடையை உடையச் செய்திருக்கிறது. 

காவியம் படிக்க ஆரம்பிக்கும்போது என் பால்ய நினைவுகள் அந்த நிழலைப் போல பீடித்தாட்டியது. விக்கிரமாதித்ததனும் வேதாளமும் அதன் கதைகளும் விடாது ஆட்டும் முருங்கை மரமும் அதை தன் தோளில் தூக்கிச் செல்லும் அம்புலிமாமாவின் புகைப்படங்களும் நாவலுக்குள் செல்லவிடாமல் தடுத்தபடியே இருந்தது. ஆரம்ப அத்தியாயங்களின்போது ஒருமுறை இருமுறை மும்முறை என முயன்றபடிதான் என்னை நான் அதில் ஈடுபடுத்திக்கொண்டேன். குணாட்யர் உள்ளே வந்தபின் முயற்சி எளிதாகியது. நாவல் கூறும் தத்துவ விசாரங்கள் மனம் புரிந்து ஏற்றாலும் அவற்றை தெளிவான வார்த்தைகளாக வரையறுக்க நம் பிற வாசகர்களைப் போல இயலவில்லை. இனி பின்னாளில் நமக்கு வந்தால் வரம். வராவிடில் சாபம் என்று ஏற்பேன். 

காவிய நிழல்களின் பிடியிலிருந்து விலகி இருளுக்குள் செல்ல மனம் தவித்தது. அதற்குள்ளாக நீலநிழல் என்னை பிடித்தாட் கொண்டுவிட்டது. வைரவேல் நாயக்கரும் அவர்தம் மீசையும் அதை அவர் வருடும் விதமும் என்னுள் இல்லாத மீசையை என்னுள்இருப்பாக்கி வெறுமனவும்  நீவச் செய்தது இரத்தத்தின் பிசுபிசுப்பை கைகளில் உணர்ந்தபடிதான் இந்த குறுநாவலை முடித்தேன். தன்நிழலுடன் அவர் ஆடும்  பலவித ரூப ஆட்டங்களே நம்மையும் அதில் ஒருவராக்கி விளையாட வைத்து விட்டது. ஒருவரின் இரக்கமற்ற தன்மையையே பிரதானமாக்கி அததற்கான நியாயங்களைக் கற்பித்து வாசிக்கும் வாசகர்களையும் ஏற்கச் செய்வது ஆசிரியரின் திறன். ஒரு பிரமிப்பூட்டும் திரையனுபவமாக ஆவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் இக்குறுநாவல் கொண்டிருக்கிறது. 

 அறம் படித்தவர்கள் கண்டிப்பாக திகைக்கத்தான் நேரிடும். அதன் பாத்திரங்களுக்கு முழு நேரெதிரான  பாத்திரங்களாக வைரவேல் நாயக்கரும் வெள்ளையனும் வருகிறார்கள். அதிலிருந்த கருணையும் அன்பும் இரக்கமும் இதில் அறவேனும் இல்லை. ஆனால் நிழல் வருவதால் நம்மால் விடுபட இயலாமல் போகிறது. இருவேறு படைப்புகளை ஒப்பிட மனம் விழையவில்லை. இருப்பினும் அதன் குணாம்சத்தை வெளிப்படுத்த இதுதான் வழி. மிக்க நன்றி ஆசானுக்கு என் நினைவிலிருந்து மீளா அரியபடைப்புகள் 

எப்படியோ கடிதத்தை முடித்துவிட்டேன். மனமே இப்போதுதான் வில்லிலிருந்து விடுபட்ட அம்பின் சுதந்திரத்துடன் இருக்கிறது. 

ராமசாமி பிரீதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.