கட்சியரசியலும் ஜனநாயக அரசியலும்
தமிழக மக்களை அரசியலற்றவர்களாக ஆக்கியதில் உங்களுக்குப் பெரும்பங்குண்டு என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அரசியலின்மை பற்றி நீங்கள் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். அரசியலற்றவர் என்று உங்களை முன்வைக்கிறீர்கள். மக்களை அரசியல்படுத்த அறிஞர்களும் களச்செயல்பாட்டாளர்களும் கடுமையாகப் போராடிவரும் சூழலில் நீங்கள் அதற்கு எதிரான எதிர்மறைச்சக்தியாக நிலைகொள்கிறீர்கள்.
அரசியல் சார்புநிலை என்பது ஒரு கீழ்நிலை அல்ல. அது ஒரு தெளிவு. நாம் எவர் என்றும் நமக்கு என்னவேண்டும் என்றும் அடையும் புரிதல் அது. அரசியல் அற்றவர்கள் என உண்மையில் எவருமே இருக்கமுடியாது. அரசியலை ஒளித்து வைத்துக்கொண்டு அரசியல் இல்லாதவர்களாக நடிக்கிறார்கள் பலர். நீங்களும் அத்தகையவர்தான்.
அரசியல் நிலைப்பாடுதான் ஒருவனின் அடையாளம். அவன் சிந்திப்பவன் என்பதற்கான சான்று அதுதான். பசப்புகளை விட்டுவிட்டு உங்கள் அரசியலை முன்வையுங்கள்.
செல்வ. அரங்கராசன்.
அன்புள்ள செல்வ அரங்கராசன்,
உங்கள் கடிதம் நம் இடதுசாரிகள் வழக்கமாக மேடையில் பேசும் வசனங்கள் மட்டுமே கொண்டது. ‘மக்களை அரசியல்படுத்துதல்’ என்று அவர்கள் சொல்வது மக்களை தங்கள் கட்சியில் சேர்ப்பதைத்தான். சேராதவர்கள் எதிரிகள். இது எல்லா அரசியல்கட்சியினரும் இன்று கொண்டிருக்கும் ஒரு நிலைபாடு. அவர்களின் ஏமாற்றம் புரிகிறது. இத்தனை ஆயிரம் கோடி பணம் செலவழித்து, இத்தனை ஊடகவல்லமையுடன் பிரச்சாரம் செய்தும் மக்களில் கணிசமானவர்கள் அவர்களுடன் சேராமலிருக்கக் கண்டு அடையும் சீற்றம் அது.
அரசியல்தரப்பினரின் பிரச்சாரங்களுக்கு நான் எதிர்வினை ஆற்றுவதில்லை. அது காற்றுக்கு எதிராக கம்பு சுற்றுதல். அரசியல்தரப்பினருக்குக் கேட்கும் செவி இல்லை. ஆனால் உங்கள் கருத்தை நம்பும் சிலரும் என் சூழலில் இருக்கிறார்கள் என்பதனால் அவர்களுக்காக ஒரு பதில்.
அரசியல் என்பது ஜனநாயகத்தின் ஒரு பிரிக்கமுடியாத செயல்பாடு. ஜனநாயகத்தில் நாம் வாழ்வதனால் நாம் அரசியலை அறியவும், அரசியல் சார்ந்த முடிவுகள் எடுக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் வாக்களிக்கவேண்டும். நம் வரிப்பணத்தை நமக்காகச் செலவழிக்கும் பொறுப்பை நாம் சிலருக்கு அளிக்கிறோம். அவர்கள் எவர் என நாம் முடிவுசெய்ய வேண்டும். அவர்கள் செய்வதைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் சரியாகச் செய்யவில்லை என்றால் பிறரை தேர்வுசெய்யவேண்டும்.இதுதான் ஜனநாயகத்தில் நாம் கொள்ளவேண்டிய அரசியல். இதை ‘ஜனநாயக அரசியல்’ என்று சொல்கிறேன்.
இந்த அரசியல் ஒவ்வொருவருக்கும் தேவை.நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முற்படாமலிருப்பதும் சரி, நாட்டில் என்ன நிகழ வேண்டும் என சிந்தித்து முடிவெடுக்காமல் பொறுப்பின்றி வாக்களிப்பதும் சரி ,மிகப்பிழையானவை. மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஜனநாயக அரசியலுக்குள் இல்லை என்பது உண்மை. அவர்களுக்கு இந்த அரசியலை புரியவைப்பதையே ‘மக்களை அரசியல்படுத்துதல்’ என்னும் சொல்வழியாக குறிப்பிடுகிறார்கள். மக்களை ஜனநாயகப்படுத்துதல் என்று வேண்டுமென்றாலும் சொல்லலாம்.
இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது கட்சியரசியல். ஏதேனும் ஒரு கட்சி சொல்வதை முழுக்க நம்புவது, கண்மூடித்தனமாக அதற்கு ஆதரவளிப்பது, உணர்ச்சிகரமான கட்சிவழிபாடு அல்லது தலைமை வழிபாடு, தன் சொந்த அடையாளமாகவே ஏதேனும் ஒரு கட்சிச்சார்பை கொண்டிருப்பது என்பதெல்லாம் அரசியல் அடிமைத்தனம் மட்டுமே. அது உண்மையில் ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது.
இப்படிச் சொல்கிறேன். ஒரு வாக்காளனாகவும், குடிமகனாகவும் நின்று ஜனநாயகத்தில் தன் கடமையை ஆற்றுபவனே உண்மையில் அரசியல்படுத்தப்பட்டவன். ஏதேனும் ஒரு தரப்புக்கு மூளையை அடகு வைத்துவிட்டவன் உண்மையில் அரசியல்நீக்கம் செய்யப்பட்ட அடிமை மட்டுமே. அவன் உண்மையான ஜனநாயகத்துக்கு எதிரானவன்.
இன்றைய சூழலைப் பாருங்கள். தூய்மைப்பணியாளர்கள் தனியாருக்குக் கையளிக்கப்பட்டு, அவர்களின் ஏற்கனவே குறைவான ஊதியமும் முக்கால் பங்காக குறைக்கப்பட்டபோது அவர்கள் ஒரு போராட்டத்தை நடத்தினர். அவர்களை போலீஸ் நடவடிக்கை வழியாக அப்புறப்படுத்தியது தமிழக அரசு. அவர்களை முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை. அவர் கூலி படம் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு திமுக அனுதாபி அதை நியாயப்படுத்தவேண்டும். கொஞ்சம் மனசாட்சியுள்ளவர் என்றால் பேசாமல் இருந்துவிடவேண்டும்.
ஆனால் திமுகவை குற்றம்சாட்டி குமுறும் பாரதிய ஜனதாக்கட்சியினர் அவர்களின் தலைவரான இந்திய பிரதமர் இதே போன்றுதான் விவசாயிகளின் போராட்டத்தை எதிர்கொண்டார் என்பதையும், அப்போது இவர்கள் அவரை நியாயப்படுத்தினார் என்பதையும் மறந்துவிடவேண்டும். இன்று திமுகவை அதிமுக விமர்சிக்கிறது. ஆனால் ஆட்சியில் இருந்தபோது அதிமுக இதையே செய்தது. அன்று இன்றைய முதல்வர் கொந்தளித்து நியாயம் கேட்டார்.
கட்சியடிமைகளுக்கு மக்கள் நலன், நாட்டு நலன் முக்கியமே அல்ல. அவர்கள் கட்சிக்கு விசுவாசமானவர்கள், கட்சி மக்களுக்கு தீங்குசெய்தால் அவர்கள் கட்சியுடன் இணைந்து மக்களை அழிக்கவே முற்படுவார்கள். ஆகவேதான் கட்சியடிமைகள் மக்கள்விரோதிகள் என்று சொல்கிறேன். ஓர் எழுத்தாளன், சிந்தனையாளன் ஒருபோதும் எந்தக் கட்சிக்கும் முழுநேர விசுவாசியாக இருக்கலாகாது என்கிறேன்.
கட்சிவிசுவாசிகளின் சார்பு நிலைகள் ஒழுக்கரீதியாகக்கூட மிகமிக ஓரம்சார்ந்தவை. என் நண்பர் கோணங்கி மேல் அவருடைய முன்னாள் நண்பர்கள் இருவர் முகநூலில் ஒரு பாலியல்குற்றச்சாட்டைச் சொன்னார்கள். கோணங்கியை முகநூலில் வசைபாடித் தள்ளினர். அவருடைய நண்பர்கள்கூட வசைபாடினார்கள். நான் அவரை அறிவேன் என்பதனால் அவரை ஆதரித்தேன். என்னையும் வசைபாடினர். சில சிற்றிதழ்கள் எங்களை வசைபாட தனி இதழ்கூட வெளியிட்டனர்.
அண்மையில் இடதுசாரியினருக்கு அணுக்கமானவராக இருந்த முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி காலமானார். அவர் ஒரு சிந்தனையாளரோ, படிப்பாளியோகூட அல்ல, இடதுசாரிக் கட்சிக்கு விசுவாசமானவர், அவ்வளவுதான். அவர் சாவை இடதுசாரிகள் கொண்டாடிக்கொண்டிருந்தபோது வசந்திதேவியின் மகன் ஓர் அறிக்கையை வெளியிட்டார். வசந்திதேவி பற்றிய மிகக்மிகக் கடுமையன ஒழுக்கக் குற்றச்சாட்டுகள் அதிலிருந்தன. அவர் உண்மையான வாசிப்போ, புரிதலோ கொண்டவர் அல்ல என்பதையும் அவர் மகன் எழுதினார். அவர் ஓர் அமெரிக்கக் குடிமகன். ஓர் அஞ்சலியில்கூட உண்மையைச் சொல்வது அவர்களின் மரபு. இங்கே அது பெரிய கொந்தளிப்பை உருவாக்கியிருக்கவேண்டும். ஆனால் ஒரேயொரு இடதுசாரிகூட அதில் எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. ஆழ்ந்த மௌனம்தான்.
அரசியல்சார்பு உருவாக்கும் மனநிலை இதுதான். அறநிலைபாடு இருக்காது. பொதுப்புத்திப் புரிதலும் இருக்காது. கட்சிநிலைபாடு மட்டுமே இருக்கும். ஒருவன் ஒரு கட்சிநிலைபாட்டை எடுத்தான் என்றால் தன் சுயசிந்தனையை அழித்துக்கொள்ளவேண்டும், தனக்காகச் சிந்திக்கும் பொறுப்பை கட்சிக்கு அளித்தாக வேண்டும்.அது சிந்தனை ரீதியான சாவு. அதையே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
எந்தக் கட்சிக்கும் நான் ஆதரவாளன் அல்ல. நிரந்தரமாக எதையும் ஆதரிப்பவனும் அல்ல. ஒரு சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அப்படி நிரந்தரமான கட்சிச் சார்பு இல்லாமல், பிரச்சினைகளின் அடிப்படையில் நிலைபாடு எடுக்கக்கூடியவர்களாக எஞ்சும்வரைத்தான் அங்கே உண்மையான ஜனநாயகம் திகமும். ஜனநாயக அரசியலில் நம்பிக்கை கொண்டவர்கள் கட்சியரசியலில் நம்பிக்கை கொண்டவர்களை விட மிகுதியாக இல்லாமலாகும்போது ஜனநாயகம் அழியும்.
உலகத்தில் எங்கே மெய்யான ஜனநாயகம் உள்ளதோ அங்கெல்லாம் ஜனநாயக அரசியலில் நம்பிக்கை கொண்டவர்களே மிகுதி. ஏதேனும் தரப்பை மூர்க்கமாக எடுக்கும் கட்சியரசியல் நம்பிக்கைகொண்டவர்கள் பெருகும் நாடுகளில் மிக விரைவாக ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் வரும். ஏனென்றால் கட்சியரசியலாளர்கள் தங்கள் கட்சியோ அரசோ என்ன செய்தாலும் அதை ஆதரிப்பார்கள். அக்கட்சியை, அத்தலைவரை சர்வாதிகாரம் நோக்கி தள்ளுவார்கள். இதற்கும் உலக அளவில் பல உதாரணங்கள் உண்டு.
எனக்கு அரசியலுண்டு, அது கட்சி அரசியல் அல்ல. ஏனென்றால் அரசு மேலிருந்து கீழ்நோக்கி அதிகாரத்தைச் செலுத்துகிறது. அந்த கீழிறங்கும் அதிகாரம் வழியாக எந்த உண்மையான மாற்றத்தையும் உருவாக்கிவிட முடியாது என நான் நினைக்கிறேன். ஆகவே அரசைக் கைப்பற்றும் நோக்கம் கொண்ட கட்சியரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை.
எந்தக் கட்சியானாலும் சரி, அது என்னென்ன கொள்கைகளை சொல்லிக்கொண்டாலும் சரி, அதிகாரத்தை நோக்கிச் செல்லுந்தோறும் பல சமரசங்களைச் செய்துகொண்டே இருக்கும். அதிகாரத்தை அடையும்போது சமூகத்திலுள்ள வெவ்வேறு அதிகாரச் சக்திகள் நடுவே ஒரு சமரசப்புள்ளியாகவே அது இருக்கும். இன்று அதானியை எதிர்க்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது அதானியுடன் சமரசம் செய்துகொண்டே ஆகவேண்டும் என்பதே யதார்த்தம். நேற்று அதிமுகவை எதிர்த்த திமுக இன்று அந்த அதிகார சக்திகளுடன் தான் கூட்டுவைத்துள்ளது.
அதேபோல ஆட்சிக்கு வந்து அரசாகச் செயல்படும்போது எந்தக் கட்சியும் அதிகாரத்தின் தரப்பாகவே இருக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளை அப்படித்தான் கையாளும். அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் துப்புரவுப்பணியாளர்களை இப்படித்தான் கையாளமுடியும்.
நான் நம்பும் அரசியலென்பது கீழ்மட்டத்தில் செயல்படும் அரசியல். மக்களின் கருத்தை மாற்றுவதற்கான அரசியல். நுண்ணலகு அரசியல் என்று அதைச் சொல்கிறேன். அதற்கு அதிகார நோக்கம் கிடையாது. ஆட்சியை பிடிக்க முயலவில்லை. ஆகவே சமரசம் செய்வதில்லை. தான் நம்பும் கருத்தை மக்களிடம் கொண்டுசென்றபடியே இருக்கிறது அது.
மக்களின் கருத்து மாறும்போது அது ஓர் மக்கள்சக்தியாக மாறி அரசாங்கத்தை கட்டுப்படுத்தும். அரசு மக்களுக்கு அவர்கள் கோருவதைச் செய்தே ஆகவேண்டும். கீழிருந்து மேலே செல்லும் மாற்றம் இது. இதையே நான் நம்புகிறேன். சென்ற நூறாண்டுகளில் இந்தியச் சமூகத்தில் நிகழ்ந்த எல்லா மாற்றங்களும் இப்படி நுண்ணலகு அரசியலால் உருவானவை மட்டும்தான்.
காந்தி முன்வைத்த அரசியல் இதுவே.இது விறுவிறுப்பானது அல்ல. இதில் வெறுப்பும் காழ்ப்பும் கொக்கரிப்பும் இல்லை. இது கண்ணுக்கே தெரியாதது. ஆனால் இதில் ஆன்மாவை அடகுவைக்கும் கீழ்மை இல்லை. நம்பி ஏமாறும் கசப்பும் இல்லை. துளியளவு பங்களிப்பாற்றினாலும் அந்த அளவுக்கு நிறைவு அமையும்.
ஆனால் கட்சியரசியலை சார்ந்து தங்கள் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளும் பலவீனர்களும், மனச்சோர்வு நோயாளிகளும் இதில் செயல்பட முடியாது. இலட்சியவாத உறுதிகொண்ட, செயலாற்றும் விசைகொண்ட, ஆற்றல்மிக்கவர்களே இதை கடைப்பிடிக்கமுடியும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
