வரலாற்றை கற்றல்

வரலாற்றைத் தெரிந்துகொள்வது எப்படி என பல கடிதங்கள். அவற்றிலுள்ள ஒரு மனநிலை என்பது இதுதான். ‘சரியான’ வரலாற்றைச் சொல்லும் ‘சரியான’ நூல்கள் சில உள்ளன. அவற்றில் ஒன்றையோ இரண்டையோ வாசித்தால் ‘சரியான’ வரலாற்று புரிதல் அமைந்துவிடும் என்று எண்ணுகிறார்கள். 

அப்படி ஒரு ‘சரியான’ வரலாறு இல்லை. ‘சரியான’ வரலாற்று நூலும் இல்லை. நாம் முழுக்க நம்பி அப்படியே ஏற்கத்தக்க வரலாற்றாசிரியரும் இருக்க முடியாது

வரலாறு என்பது ஒரு பெரிய விவாதக்களம். அது எப்போதுமே பலவகையான பார்வைகளும், முடிவுகளும் கொண்டதாகவே இருக்கமுடியும். ஒரு வரலாற்று மாணவன் எந்த ஒரு விஷயத்திலும் ‘முற்றறுதியான’ முடிவை கொள்ளவே முடியாது. அதை உணர்ந்தவனே உண்மையில் வரலாற்றை கற்கிறான்.

ஆகவே வரலாற்றில் ‘ஐயத்திற்கு இடமற்ற’ முடிவுகளைச் சொல்லும் எவரையும் அவன் வரலாற்றாசிரியனாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவர்கள் அரசியல்வாதிகள் அல்லது பண்பாட்டு அடிப்படைவாதிகள். அவர்கள் வரலாற்றில் ஏதேனும் ஒரு கருத்தை நிறுவி, அதைக்கொண்டு சில அடையாளங்களை உருவாக்கி, அந்த அடையாளங்களைப் பயன்படுத்தி மக்களை திரட்டி அதிகாரத்தை அடைய முயல்கிறார்கள். அதிகாரத்துக்கான வழி என்பது ‘தம்மவரை’ தொகுப்பதும் அவர்களுக்கு ‘பிறரை’ சுட்டிக்காட்டி வெறுப்பை உருவாக்குவதும்தான். அதற்குத்தான் எங்கும் வரலாறு அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு என்றால் என்ன என்பதைப் பற்றிய ஒரு தெளிவு நம்மிடம் இருக்கவேண்டும். சென்றகாலம் என்பது நம்மால் நினைத்தே பார்க்கமுடியாத அளவுக்கு பெரியது. கோடானுகோடி மனிதர்கள், கோடானுகோடி நிகழ்வுகள். அவற்றில் அனைத்தையும் நாம் அறியமுடியாது. நாம் அனைத்தையும் அறிய முயல்வதும் இல்லை. நாம் நம் ஆர்வத்துக்குரிய சிலவற்றையே அறிய முயல்கிறோம். அவ்வாறு அறிந்தவற்றை தொகுத்து ஒரு தொடர்ச்சியான ‘கதையை’ உருவாக்கிக்கொள்கிறோம். அதுதான் வரலாறு.

அதாவது வரலாறு என்பது ‘நிகழ்ந்தது’ அல்ல. நிகழ்ந்தவற்றில் இருந்து நாம் உருவாக்கிக்கொண்ட ஒன்றுதான். நாம் ஏன் அவ்வாறு ஒரு வரலாற்றை உருவாக்கிக்கொள்கிறோம் என்பதே கேள்வி. அவற்றை அறிவதனால் இன்று, இப்போது நமக்கு என்ன பயன் என்பதே முக்கியம்.

நாம் ஏன் வரலாற்றை அறிய முயல்கிறோம்? நாம் வாழும் வாழ்க்கைக்கு அறிவுசார்ந்த தொடர்ச்சி என்பது ஏதும் இல்லை. விலங்குகளின் வாழ்க்கையை அவை அறிவுசார்ந்து தொகுத்துக்கொண்டிருக்கவில்லை. அவற்றுக்கு இருப்பது உயிரியல் தொடர்ச்சி மட்டும்தான். நமக்கும் அது மட்டும்தான் தொடர்ச்சி. அறிவார்ந்த தொடர்ச்சி என்பது நாமே உருவாக்கிக்கொண்டது.

மனிதர்கள் அறிவார்ந்து யோசிக்க, சிந்தனைகளை ஏதேனும் வகையில் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்து ஐம்பதாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம். அதாவது புதிய கற்காலத்தில் அது தொடங்கியிருக்கலாம். அதில் இருந்தே வரலாறு என்பது தொடங்குகிறது என்று சொல்லலாம். அவர்கள் தங்கள் நினைவுகளை தங்கள் வாரிசுகளிடம் அளித்திருக்கலாம். ஓவியங்களாகவும் அடையாளங்களாகவும் பதிவுசெய்திருக்கலாம். அவ்வாறுதான் மனிதர்களுக்கு மட்டும் அறிவார்ந்த ஒரு தொடர்ச்சி உருவானது. அதையே பண்பாடு என்று சொல்கிறோம். பண்பாட்டின் நினைவுகளையே வரலாறு என்கிறோம்.

ஏன் அது தேவைப்பட்டது? நாம் கூடி வாழ ஆரம்பித்தோம். அதற்கு நமக்கு பொது அடையாளங்கள் தேவைப்பட்டன. குடும்பம், வம்சம், இனக்குழு, கிராமம் போன்ற அடையாளங்கள். அந்த அடையாளங்களை நிலைநிறுத்தவேண்டும் என்றால் அதற்கு வரலாறு தேவை. இங்கேதான் நாம் நீண்டகாலமாக வாழ்கிறோம், இவர்களெல்லாம் நம் ஆட்கள், நாம் இப்படியெல்லாம் வாழ்கிறோம் என நாமே வரையறுக்கவேண்டியுள்ளது. அதன் அடிப்படையில்தான் ‘நாம்’ என்னும் அடையாளம் உருவாகிறது. அதற்காகவே வரலாறு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

தொன்மையான வரலாறு என்பது ‘பிறப்புத்தொடர்ச்சி வரலாறு’ அல்லது ‘வம்ச வரலாறு’ (Genealogical history) மட்டும்தான். அதுவே வளர்ந்து நாடுகளின் வரலாறு ஆக மாறியது. அரசர்களின் வரலாறுகளாக ஆகியது. நூறாண்டுகளுக்கு முன்பு வரைக்கும்கூட வரலாறு என்பதே ஆட்சியாளர்களின் வரலாறுதான். மதவரலாறு அதன்பின் உருவானது. அதன் பின்னர்தான் மக்களின் வரலாறு, பண்பாடுகளின் வரலாறுகள் எழுதப்பட்டன. பொருளியல் வரலாறு, கலைவரலாறு, சிந்தனை வரலாறு, இலக்கிய வரலாறு என வெவ்வேறுவகை வரலாறுகள் அதன்பின் உருவாகி வந்தன. இன்று பொருட்களின் வரலாறு, தொழில்நுட்பத்தின் வரலாறு என்றெல்லாம் நுண்வரலாறுகள் உருவாகியுள்ளன.

வரலாற்றை உருவாக்கும் பார்வைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. முதலில் வரலாறு குடும்ப, இனக்குழு, அடையாளங்களை வரையறை செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் வட்டார அடையாளம், இன அடையாளம், மொழி அடையாளம் ஆகியவற்றை வரையறை செய்யும்பொருட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் தேசம், அரசு ஆகியவற்றை கட்டமைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. இன்றைய வரலாறு மானுடம் என்னும் உலகளாவிய பொதுத்தன்மையை உருவாக்கும் பொருட்டே எழுதப்படுகிறது.

இன்று எழுதப்படும் சிறந்த வரலாறு என்பது மானுடகுலத்தின் வளர்ச்சியையும் ஒருங்கிணைப்பையும் முன்வைப்பதாகவே இருக்கமுடியும். மானுடகுலத்தின் கலை, இலக்கியம், தொழில்நுட்பம் போன்ற ஒவ்வொன்றும் எப்படி வளர்ந்து வந்துள்ளது என்று ஆராய்ந்து நிறுவுவதாகவே அது அமையமுடியும்.

இன்றைய வரலாறு இரண்டு. தொகைவரலாறு (Macro History) நுண் வரலாறு (Micro History). நுண்வரலாறு என்பது வரலாற்றின் ஒரு சிறிய அலகை பற்றி மட்டும் எழுதுவது. உதாரணமாக, ஒரு சிற்றூரின் வரலாற்றை எழுதுவது, அல்லது கலப்பை போன்ற ஒரு பொருளின் வரலாற்றை எழுதுவது நுண்வரலாறு. தொகை வரலாறு என்பது உலகளாவ மானுடகுலத்தின் வரலாற்றை எழுதுவது. நுண்வரலாறுகளை தொகுத்து ஒட்டுமொத்தமாக எழுதுவது.

ஒரு நுண்வரலாறு தொகைவரலாற்றில் சரியாக சென்று அமையவேண்டும். தர்க்கபூர்வமாகச் சரியாக இருக்கவேண்டும். தொகைவரலாறு என்பது எல்லா நுண்வரலாறுகளையும் கருத்தில்கொண்டிருக்கவேண்டும்.

ஆகவே வரலாறு என்பது ‘எழுதிவைக்கப்பட்ட ஒன்று’ அல்ல. எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒன்று. அதை எப்படி எழுதுகிறார்கள் என்பதையே ஒரு வாசகன் கவனிக்கவேண்டும். எந்த நோக்கத்துடனும் எழுதப்படுவது வரலாறு அல்ல. அது மதப்பெருமைக்கோ, தேசியப்பெருமைக்கோ, பண்பாட்டுப்பெருமைக்கோ எழுதப்படுவது அல்ல. வரலாறு வரலாறாகவே நிலைகொள்வது. அதன் தரவுகள் புறவயமானவையா, அதன் முறைமை சர்வதேசத்தன்மைகொண்டதா என்பதையே அவன் கருத்தில்கொள்ளவேண்டும். வரலாறு என்பது விவாதங்களால் நிலைநிறுத்தப்படுவது. ஆகவே தன்முனைப்போ, மிகையுணர்ச்சியோ இல்லாமல் நிதானமாக விவாதிப்பவர் மட்டுமே வரலாற்றாசிரியர் என கொள்ளத்தக்கவர். வசைகளின் மொழியில் பேசுபவர் உள்நோக்கம் கொண்ட அரசியல்வாதி மட்டுமே.

வரலாறு எந்நிலையிலும் விவாதமாகவே நீடிக்கும். அந்த விவாதத்தில் நாம் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அதுவே வரலாற்று வாசகனின் நிலை.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.