ஓஷோ: மரபும் மீறலும்-11
3 ஆறு தரிசனங்கள்
இந்திய சிந்தனை முறையில் ஆறு தரிசனங்கள் இருக்கின்றன. அவை, சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்ஸம், உத்தர மீமாம்ஸம் ஆகியன. அவை ஒவ்வொன்றும் ஒரு தனி மதமாக ஒருகாலத்தில் கருதப்பட்டவை. அவற்றில் வேத ஏற்பு மதங்களும் உண்டு, வேத மறுப்பு மதங்களும் உண்டு. அவற்றில் எவற்றுடன் ஓஷோவை எந்த அளவுக்கு இணைத்துப் பார்க்கமுடியும்?
சாங்கியம்
சாங்கிய தரிசனத்தின்படி இந்த உலகிலுள்ள பருப்பொருட்கள் அனைத்தும் பிரகிருதி அல்லது இயற்கை. இந்த பூமியைப்போல இப்பிரபஞ்சம் முழுக்க இருக்கக்கூடிய மொத்த பருப்பொருள்களையும் ஒட்டுமொத்தமாக சேர்த்தால் எதுவோ அதுதான் மகாபிரகிருதி. அந்த பிரகிருதி என்பது பொருள் (matter). அதில் மூன்று குணங்கள் உள்ளன – சத்வம், ரஜஸ், தமஸ். வேறொருவகையில் அம்மூன்று குணங்களையும் மாறாநிலை (தமஸ் / Static), செயலூக்கநிலை (சத்வம் / Dynamic), சமநிலை (ரஜஸ் / Neutral) என்று சொல்லலாம். இக்குணங்களுக்கிடையே சமநிலை இருக்கும்போது பிரகிருதியானது அசைவற்றதாக காலத்தில் மாறாததாக இருந்தது. ஒருகட்டத்தில் சமநிலை குலைந்தது. அந்த சமநிலை குலைவில் இப்பிரபஞ்சம் உருவாகி இவ்வளவு விஷயங்கள் வந்துள்ளன.
இதில் இரண்டு பிரிவுகள் உண்டு. பழைய சாங்கிய தரிசனத்தை நிரீஸ்வர சாங்கியம் (இறையிலி சாங்கியம்) என்பார்கள். பின்னாளில் வந்தது ஈஸ்வர சாங்கியம் (இறை சாங்கியம்). பழைய சாங்கியத்தை ஓஷோவுக்கு நெருக்கமானதாக பார்க்கலாம். அவர் இந்த சமநிலையின்மை என்ற கருத்தை பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அவருடைய உரையில் எங்கெல்லாம் இந்த விஷயம் வருகிறதோ அதெல்லாம் சாங்கியத்துக்கு மிக நெருக்கமானவை. ஏனென்றால் ஓஷோ பேசுவது யோகம். யோகம் என்பது சமநிலையிழப்பை வென்று சமநிலையை மீட்பதைப் பற்றிப் பேசுவது.அதன்பின் வந்த ஈஸ்வர சாங்கியத்தில் பரமபுருஷன் என்ற கருதுகோள் உள்ளே வந்தது. அதை ஓஷோ ஏற்பதில்லை. தூய இயற்கை என்னும் கருத்து எங்கெல்லாம் ஓஷோவிடம் வருகிறது என்பதைப் பார்ப்பது ஒரு நல்ல வாசிப்புமுறை. ஓஷோவை வகுத்துக்கொள்ள அது மிக உதவும்.
வைசேஷிகம்
விசேஷம் என்ற சொல்லில் இருந்து வந்ததே வைசேஷிகம். ஒவ்வொரு பொருளும் இங்கிருக்கின்றன. அவை மறுக்கமுடியாத இருப்பு கொண்டவை. அப்பொருள்களின் மிகச்சிறிய துகள் என்பது அணு. அணுவாதத்தைதான் வைசேஷிகம் என்பர். ஒரு பொருளுடைய அடிப்படை விசேஷ குணம் எதுவோ அதுதான் அப்பொருள். நெருப்பு என்பது எரிக்கும், தண்ணீர் என்பது அணைக்கும் என்பது அந்தந்த பொருள்களின் விசேஷ குணங்கள். அந்த விசேஷ குணங்கள் அந்தந்த பொருள்களின் ஓரோரு அணுக்களிலும் இருக்கிறது என்பது வைசேஷிகத்தின் கொள்கை.
இத்தரிசனம் அடிப்படையில் பொருள்முதல்வாத நோக்குடையதே. பின்னாட்களில் அதில் தன்மாத்ரங்கள் (Tanmātra) போன்ற கருதுகோள்கள் உள்ளே வரும்போது கடவுள் வந்துவிடுகிறார். ஆனால் அவ்வாறு கடவுளின் வருகைக்கு முன்னே இருந்த வைசேஷிகம் ஓஷோவுக்கு நெருக்கமானது. அவர் பல இடங்களின் அதன் மேற்கோள்களை எடுத்தாண்டிருக்கிறார்.
யோகம்
இது சாங்கியத்தின் துணைத்தரிசனம். சாங்கிய–யோகம் என்றே சொல்வதுண்டு. யோகத்தின் முதன்மை நூல் என்பது பதஞ்சலியின் யோக சூத்திரமே. ஓஷோ பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கு மிகப்பெரிய உரை எழுதியிருக்கிறார் (பதஞ்சலி யோகம் – ஒரு விஞ்ஞான விளக்கம்). ஓஷோவைப்பற்றி அதிகம் பேசக்கூடியவர்கள் பெரும்பாலும் இந்த நூலை படித்திருக்க மாட்டார்கள். இந்த நூலுக்கு வருவதற்கான வழி என்ன என்பதைத்தான் சொல்லவிரும்புகிறேன்.
கபிலரின் பழைய சாங்கியத்தில் கடவுள் கிடையாது. ஆகவே பதஞ்சலி யோக சூத்திரத்திலும் கடவுள் கிடையாது. ‘யோக சித்தவிருத்தி நிரோத’ என்று அந்நூல் தொடங்குகிறது. மனதின் செயலை நிறுத்துவதுதான் யோகம். அதை செய்வதற்கான யம -நியமங்களில் ஒன்றாக அது பக்தியை முன்வைக்கிறது. ஆனால் அடையவேண்டிய இறுதி இலக்கு கடவுள் அல்ல. பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கு ஓஷோ எழுதிய உரைக்கும், வெளியே பக்தி நோக்கில் எழுதப்பட்ட உரைகளுக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடு இதுதான்.
யோகம் வழியாக நீங்கள் சென்றடைவது என்ன ? பதஞ்சலி யோகம் காட்டக்கூடிய வழி என்ன ? அது கடவுளின் காலடியை சென்றடைவதோ சொர்க்கத்திற்கு செல்வதோ அல்ல. ஓஷோ தனது உரையில் இதை விரிவாக பேசுகிறார். ஆர்வம் கொண்டவர்கள் படிக்கவேண்டிய முக்கியமான நூல் இது. அதன் வழிநூலாக இன்னொரு நூலை எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. நான்கு அத்தியாயங்கள் எழுதினேன். தொடர்ந்து எழுதக்கூடும்.
சாங்கிய தரிசனத்தில் குறிப்பிட்ட கேள்வி எழுகிறது. ஆதி இயற்கை என்ற ஒன்று இருக்கிறது. அதில் செயலூக்கம், நிலைத்தன்மை, சமரசத்தன்மை என மூன்று குணங்கள் இருக்கின்றன. அந்த குணங்கள் அங்கு இருக்கவேண்டும் என்றால் அதை பார்க்கக்கூடிய ஒருவன் இங்கிருக்க வேண்டுமல்லவா ? பார்வையாளன் இல்லாமல் காட்சி இருக்கமுடியாதல்லவா ? உணர்பவன் இன்றி உணரப்படும் பொருள் இருக்காதல்லவா ? இவ்வாறு குணத்தை உணரக்கூடிய அந்த ஒருவன் யார் என்ற கேள்வி எழுந்தபோது, அவர்கள் புருஷன் என்ற கருதுகோளை முன்வைத்தார்கள். உயிருக்குள் இருந்துகொண்டு இயற்கையை பார்ப்பவன் யாரோ அவன் புருஷன். அந்த புருஷன்தான் மூன்று குணங்களையும் பார்க்கிறான். இயற்கையை பார்க்கக்கூடிய தன்னிலை (Subjectivity) யாரோ அவன்தான் புருஷன். இயற்கையை செயல்வடிவமாக பார்க்கக்கூடியவன் எனக்குள் இருக்கும் புருஷன்.
அந்த புருஷன் யார் என்ற கேள்விக்கு அடுத்ததாக செல்கிறார்கள். நீங்கள் வெளியே பார்க்கும் இயற்கை துண்டுபட்ட இயற்கை. ஆனால் சாங்கியத்தின்படி இவையனைத்தும் ஒன்றுதானே, ஆதி இயற்கைதானே. அப்படியெனில் அதை பார்க்கும் உயிர்களில் இருக்கும் புருஷர்கள் எல்லாம் சேர்ந்து ஒரே புருஷன்தானே என்ற கேள்வி எழுகிறது. எனவே அந்த ஒற்றை புருஷனை பரமபுருஷன் என்றனர். உடனே ஒரு தாவலாக அந்த பரமபுருஷனே கடவுள் என்றாகியது.
யோகம் சொல்வதென்னவெனில், புருஷன் பிரகிருதியை பார்த்து அது வேறு, இது வேறு என்று நினைக்கிறான். எனவே துயருறுகிறான். எல்லா துயர்களுக்கும் காரணம் பிரகிருதி-புருஷ பேதம்தான். அந்த பேதம் அழிந்து பிரகிருதியின் ஒரு பகுதிதான் தான் என்று புருஷன் உணரும்போது, பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கக்கூடிய பரமபுருஷனின் ஒரு துளியாக தானும் ஆகும்போது, வேறுபட்ட நிலையை களையும்போது அடையக்கூடிய அபேத நிலைதான் முக்தி என்பது. மற்றபடி அது கடவுளை அடைவதை பற்றியல்ல.
நவீன அறிவியலின்படி சொல்வதென்றால், மனிதன் என்று இங்கு இருக்கும் ஒருவர், அலகிலாமல் விரிந்துகிடக்கும் பிரபஞ்சத்தில் இருக்கும் பல்லாயிரம் கருதுகோள்களில் ஒரு துளிதான். அதற்கப்பால் ஒன்றுமில்லை என்று தெரிந்துகொள்வது எளிது. ஆனால் அனுபவப்பூர்வமாக அப்படி ஆகக்கூடிய ஒரு தருணத்தை தியானம் செய்து, தன்னை ரத்துசெய்து, அடைவதற்கு பெயர்தான் யோகம். தான் யார் என்பதில் உள்ள ஒவ்வொரு அடையாளத்தையும் ரத்து செய்துகொண்டே வந்து புருஷன் மட்டுமாகி, பரமபுருஷன் மட்டுமாகி, பிரகிருதியின் ஒரு பகுதியாக மாறக்கூடிய ஒரு அபேத நிலையை / இரண்டின்மை நிலையைத்தான் யோகம் சொல்கிறது.
அதைத்தான் ஓஷோ சொல்கிறார். ஓஷோ அதை நவீனச் சூழலில் நின்று விளக்குகிறார். ஆகவே இந்த ஆறு தரிசனங்களில் ஓஷோவுக்கு மிக உவப்பாக இருந்ததும், கிட்டத்தட்ட அதன் பிரதிநிதியாக நின்று அவர் பேசியதும் யோக தரிசனமே. அவருடைய அந்த உரை மட்டும் தனியாக இருப்பதற்கு காரணம் அதுதான். யோகம் என்பது கடவுளை அடைவதற்காக அல்ல; தன்னை அடைவதற்காகக்கூட அல்ல. அது ‘தான் அல்ல தான்’ என்பதை அறிவதற்காகவே. அதை அனுபவபூர்வமாக உணர்வதற்காகவே. ஓஷோ அவருடைய பயிற்சிகள் வழியாக அதற்கான வழிமுறைகளையும் முன்வைத்தார் எனப்படுகிறது. அவருடைய நூல்களில் அதற்கு இன்றைய நவீன வாழ்க்கையிலுள்ள இயல்பான தடைகளை விரிவாகச் சுட்டிக் காட்டுகிறார். நுகர்வுவெறி முதல் தன்நலமே நாடும் முனைப்பு வரை. கட்டுப்படுத்தும் மரபான சிந்தனைகள் முதல் மிதமிஞ்சி நம்மை தூண்டிவிடும் தற்காலச் சிந்தனைகள் வரை. ஓஷோவின் கொடை என்பது இயல்பான யோகப்பயிற்சிக்குத் தடையாக ஆகும் அனைத்தையும் ஓஷோ எங்காவது சொல்லியிருப்பார் என்பதுதான்.
நியாயம்
இது வைசேஷிகத்தின் துணை தரிசனம். நியாயம் என்றால் நாம் பேச்சுவழக்கில் சொல்லும் நியாயமேதான். அதாவது தர்க்கம் (Logic). ஒரு நியாயமும் இல்லை என்று சொல்வது logic இல்லை என்ற பொருளிலேயே. நாம் பேசக்கூடிய அத்தனை தர்க்க முறைகளும் நியாய சாஸ்திரத்திற்கு உட்பட்டுதான் இருந்திருக்கின்றன. நெடுங்காலமாக நியாய தரிசனம் வைதிக மரபுக்கு வெளியேதான் இருந்திருக்கிறது. நியாய சாஸ்திரத்திற்கு பௌத்தர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். சொல்லப்போனால் ஒவ்வொரு பௌத்த குருவும் நியாயத்துக்கு உரை எழுதுவார். அந்த உரையின் அடிப்படையில்தான் அவர் தன்னை முன்வைப்பார்.
இன்றைக்கு ஒரு டீக்கடையில்கூட ஒரு விஷயத்தை விவாதித்து நிறுவமுடியாது என்பதை கவனித்திருக்கிறீர்களா ? விவாதிக்கக்கூடியவர்கள் இங்கே இருப்பீர்கள். எந்தவொரு விஷயத்தையும் எங்கும் விவாதித்து நிறுவமுடியாது. ஏனெனில், ‘நீ ஆயிரம் சொல். என்னால் ஏற்கமுடியாது’ என்றுதான் ஒருவன் இறுதியில் சொல்வான். இல்லையெனில், ‘இதை பிறகு பேசுவோம்’ என்று சொல்லி கிளம்பிச்சென்றுவிடுவான். ‘ஆமாங்க, நீங்க சொல்வது சரிதான்’ என்று உங்களிடம் இதற்குமுன் யாராவது சொல்லியிருக்கிறார்களா ? என்னிடம் யாரும் சொன்னது கிடையாது. எனது நெருங்கிய நண்பரான கிருஷ்ணன்கூட என்னிடம் எந்தவொரு விஷயத்தையும் ஒப்புக்கொண்டது கிடையாது. ஏனெனில் நமக்கு பொதுவான தர்க்கமுறை என்று ஒன்று கிடையாது.
இன்னின்ன தர்க்கங்களின்படி ஒன்றை சொன்னால் அதை மறுக்க முடியாது. அறிவியலுக்கு தர்க்கம் உண்டு. அறிவியலில் ஒரு விஷயத்தை சொல்லும்போது அதை சரி என்றோ தவறு என்றோ சொல்லிவிடலாம். ஆனால் இன்று அறிவியலுக்கு வெளியே சரி, தவறு என்பது கோட்பாட்டுத்தளத்தில் கிடையவே கிடையாது. முடிவற்ற தர்க்கங்களே உள்ளன. இல்லையெனில் கருத்து மோதல்களில் முடியும். ஆனால் பழைய காலத்தில் எல்லா தரப்பினரும் அமர்ந்து தங்களுக்குள் விவாதித்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பொதுவாக இருந்தது நியாயத்தின் தர்க்கமுறை. நீங்கள் விவாதிக்க சென்றால் உங்களிடம் கேட்கப்படும் கேள்வி, ‘நீ எந்த ஆசிரியனின் மாணவன் ? எந்த மரபில் இருந்து வருகிறாய் ? உனது நியாய நூல் எது ?’ என்பதுதான். அவருடைய நியாய நூலின்படி அவர் வாதிடுவார். அந்த நியாயத்தின்படி அவருடைய கருத்து மறுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்வார். இத்தகைய புறவய தர்க்கமுறையைத்தான் (Objective Logical system) நியாயம் என்ற பெயரில் சொல்கிறார்கள்.
ஓஷோ அந்த நியாய முறைமையின்மீது மிகுந்த மதிப்புடன் தன்னை முன்வைப்பதை பார்க்கலாம். தன்னை தார்க்கிகன் (logician) என்று சொல்கிறார். ‘I am not a visionary. Sometimes i am a logician’ என்கிறார். Pure Logic என்ற சொல்லை ஓஷோவின் உரைகளில் பார்க்கலாம். அது நியாயத்திற்கு நெருக்கமானதாக உள்ளது.
எனது ஆசிரியர் பேசும்போது வேடிக்கையாக ஒன்றை சொல்வார். ஐந்து விரல்களில் கட்டைவிரல் வேதாந்தம். மற்ற நான்கு விரல்களும் சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம் ஆகியன. கட்டை விரலானது மற்ற எல்லா விரல்களையும் தொடுவதுபோல வேதாந்தம் மற்ற அனைத்து தரிசனங்களோடும் உரையாடும் என்பார். அப்போது ஒருவர், ‘குரு, அப்போ நியாயம்?’ என்று கேட்டார். ஆசிரியர், ‘It is Middle finger’ என்றார். வேடிக்கையாக மட்டுமல்ல, உண்மையிலேயே மற்ற அனைத்து தரிசனங்களுக்கும் நியாயம் தனது நடுவிரலையே காட்டுகிறது.
உண்மை என்பதை பற்றிய நியாயத்தின் ஒரு கண்ணோட்டம் உள்ளது. உண்மை என்பது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வரையறுக்கப்பட்டு பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்றே. அப்படித்தான் உண்மைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. அறிவியல் உண்மைகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட நிபுணர் குழுவுக்கு உடன்பாடான உண்மைகளே ஒழிய அதைத்தாண்டிய முழுமையான உண்மை (Absolute truth) என்பதை அறிவியலில் சென்றடையவே முடியாது.
தடுப்பூசி என்பது கோவிட்டுக்கு மருந்து என்று அறிவியலாளர்கள் சபை முடிவெடுத்துவிட்டால் அது உண்மைதான். சிறிது காலம் கழித்து அவர்களே அது வேண்டாம் என்று சொல்லவும்கூடும். எண்பதுகள் வரைக்கும் மனநோய்க்கான சிகிச்சையாக தலையில் மின்சாரம் செலுத்திக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அது சட்டப்படி குற்றம் என்கிறார்கள். நாற்பதுகள் வரைக்கும் அலோபதி மருத்துவத்தில் எந்தவொரு நோய்க்கும் உடலில் இருந்து இரத்தத்தை வெளியேற்றுவதை ஒரு சிகிச்சை முறையாக செய்துகொண்டிருந்தார்கள். இன்று யாரும் அவ்வாறு செய்வது கிடையாது. ஆகையால் ஒரு குறிப்பிட்ட சூழலில், காலகட்டத்தில் சிலரால் பொதுவான உடன்பாட்டால் ஏற்கப்பட்டதுதான் உலகியல் உண்மை. எனவே நியாயத்தை பொறுத்தவரை, முழுமையான உண்மை என்பது என்ன, அது எங்கு உள்ளது என்ற கேள்வியே கிடையாது. ஒரு விஷயத்தை எப்படி பொதுவாக வரையறுத்துக்கொள்வது என்பதை பற்றி மட்டும்தான் அவர்கள் பேசுவார்கள். அப்போதைக்கு அதுதான் உண்மை. அச்சூழலுக்கு அதுதான் உண்மை. அதற்கப்பாலுள்ள உண்மை என ஒன்றில்லை.
அப்படிப்பார்த்தால் அது மற்ற அனைத்து தரிசனங்களுக்கும் தனது நடுவிரலையே காட்டிக்கொண்டிருக்கிறது. அவ்வாறு தர்க்கபூர்வமான ஒன்றுமட்டுமே உண்மை என்று நம்பக்கூடிய ஒரு தரப்பு இங்கு நீண்டகாலம் இருந்துள்ளது. நமது ஆயிரக்கணக்கான ஆன்மீக சொற்பொழிவுகள் எதிலுமே இடம்பெறாத தரப்பு அது. அதேசமயம் நம் மரபில் இருக்கும் மையத்தரப்பும்கூட. இராமானுஜர் தனது எதிர்த்தரப்பினருடன் நியாயத்தின்படிதான் பேசியிருப்பார். ஆனால் நமது வைணவ மேடையில் நியாயத்தை பற்றி யாரும் பேசமாட்டார்கள். அதுபோலவே சங்கரரும். இன்று ஒரு அத்வைத மேடையில் சங்கரரை புகழ்ந்து பேசுவார்களேவொழிய நியாயத்தை பற்றி பேசமாட்டார்கள். ஆனால் அது இங்கு உள்ளது. அதை நவீன காலகட்டத்தில் பேசக்கூடிய ஒருவராக ஓஷோ இருக்கிறார்.
பூர்வமீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை
பூர்வமீமாம்ஸை வேள்விச்சடங்குகளை முன்வைக்கக்கூடிய தரிசனம். ஓஷோ நூறு சதவீதம் ஒத்துப்போகாத விஷயம் இதுதான். அவர் வெறும் கிண்டல் வழியாகவே அதை நிராகரித்துச் செல்கிறார். ஆனால் உத்தர மீமாம்ஸையாகிய வேதாந்தத்துடன் அவர் உரையாடுவதற்கான இடம் உள்ளது. கீதைக்கு அவர் எழுதிய உரை அதற்கான மிகப்பெரிய சான்று. அந்த உரையை அவருக்கே உரித்தான முறையில் தொடங்குகிறார். ‘தான் பார்க்காத ஒன்றைப்பற்றி பார்க்கமுடியாத ஒருவனுக்கு ஒருவன் விளக்கியதுதான் கீதை’ என்று ஆரம்பிக்கிறார். சஞ்சயன் எதையும் பார்க்கவில்லை. திருதராஷ்டிரனுக்கு கண் தெரியாது. இவனுக்கு அவன் சொன்னதுதான் கீதை என்று தொடங்குகிறார். ஆனால் மிகப்பெரிய உரையை கீதைக்கு எழுதுகிறார்.
அத்வைதத்திற்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது இந்திரனைப்போல. இந்திரனுக்கு உடலெங்கும் ஆயிரம் குறிகள் இருந்தன. பின்பு அவற்றையெல்லாம் கண்களாக மாற்றிக்கொண்டான். ஆண்களை பொறுத்தவரை கண்ணும் குறியும் ஒன்றுதான் என்று சொல்வார்கள். அத்வைதம் ஆயிரம் குறிகள் கொண்ட தத்துவம். அதற்கு எல்லா தத்துவங்களுடனும் உறவு உண்டாகமுடியும். எல்லா தத்துவ தரப்புகளிலும் ஒரு டீஸ்பூன் அளவுக்காவது அத்வைதம் இருக்கும். ஜென் தத்துவம், சூஃபி தத்துவம், நவீன பௌத்த சிந்தனைகள் உள்ளிட்ட பலவற்றிலும் அத்வைதம் உண்டு.
பிரம்மமும் ஜீவனும் இரண்டல்ல என்பதே அத்வைதத்தின் வாதம். மிக விரிவான அளவில் இந்த வாதத்தை ஏற்றும் மறுத்தும் ஓஷோ பேசியிருக்கிறார். ஓஷோவின் உரையாடல் புள்ளி அத்வைதத்திற்கு நெருக்கமானது. பெரும்பாலும் தூய அத்வைதிகள் ஓரளவுக்கு ஓஷோவுடன் உரையாடக்கூடியவர்களாகவும் அவரை ஏற்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். குரு நித்யா உட்பட.
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
