தூத்துக்குடியின் பாவோ பாப் மரம்.
தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி வளாகத்தினுள் பாவோ பாப் (Baobab)மரமிருக்கிறது. நானூறு ஆண்டுகள் பழமையான மரம் என்கிறார்கள். ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த மரம் தூத்துக்குடிக்கு எப்படி வந்தது எனத்தெரியவில்லை. அராபிய வணிகர்கள் மூலம் வந்திருக்கக் கூடும். அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன். பொன் மாரியப்பன். ஞானராஜ், ராம்குமார், ஜெயபால், காசிம் மற்றும் சில நண்பர்கள் உடன்வந்திருந்தார்கள்.

நான்கு யானைகள் ஒன்றாக நிற்பது போன்ற தோற்றத்திலிருந்தது. அதன் பிரம்மாண்டம். உறுதி, அகன்ற கிளைகளின் கம்பீரம் தனித்துவமாக இருந்தது. மரத்தில் காய்ந்து உதிரும் நிலையில் இருந்த ஒரு பூவைக் கண்டேன். சிறிய பிஞ்சு ஒன்றையும் கண்டேன்.

இதன் பூக்கள் வெள்ளை நிறமாகவும் இருக்கும். அவை இரவில் பூக்கும் தன்மை கொண்டவை என்றார்கள். அது போலவே இதன் காய்கள் பலாக்காய் அளவிற்குப் பெரிதாக இருக்கக் கூடியவை. இவை ஆறு மாதங்களுக்குப் பின்பே பழமாகி விழத் தொடங்குகின்றன.


Tree of Life என அழைக்கபடும் இந்த மரத்தை தமிழில் பெருக்க மரம் என்கிறார்கள். உள்ளூர்வாசிகளில் சிலர் இதனைப் பொந்தன் புளி என்றும் சொல்கிறார்கள்.

30 மீட்டர் உயரம் மற்றும் 50 மீட்டர் சுற்றளவு வரை வளரும் பாவோபாப் மரம் தண்ணீரை உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்கிறது. ஒரு லட்சம் லிட்டருக்கு மேலாகத் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும் என்று படித்திருக்கிறேன். ஆப்பிரிக்காவின் கடுமையான கோடையில் இந்த மரத்திலிருந்து மக்கள் தண்ணீரை பெற்றுக் கொள்கிறார்கள். யானைகள் இந்த மரத்திலிருந்தே தண்ணீர் குடிக்கின்றன .

இந்த மரத்தின் பழம் அசாதாரணமாக ஊட்டச்சத்துக்கள் கொண்டது. மெக்னீஷியம், பொட்டாஷியம் சத்துகள் மற்றும் அதிகமான விட்டமின் சி உள்ளது என்று குறிப்பிடுகிறார்கள். ஆப்பிரிக்காவில் ஆரோக்கியம் மற்றும் அழகுக்கான இயற்கை ஆதாரமாகப் பாவோ பாப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மருத்துவத்திற்காகவும் இதன் பட்டை வேர், இலைகள் மற்றும் கூழ் பயன்படுத்தபடுகிறது. மரத்தின் கிளைகளிலிருந்து புதிய மரம் துளிர்த்து விடும் என்பதால் இந்த மரத்திற்கு அழிவேயில்லை

குட்டி இளவரசன் நாவலிலும் லயன்கிங் படத்திலும் இந்த மரத்தைக் காணலாம்.
ராஜபாளையம் சின்மயா பள்ளி வளாகத்தில் இது போன்ற பாவோ பாப் மரம் இருப்பதைக் கண்டிருக்கிறேன். குஜராத்தின் சில இடங்களிலும் இதே மரத்தைப் பார்த்திருக்கிறேன். இந்தியாவிற்குப் பாவோ பாப் மரங்கள் வந்தது குறித்து இப்போது விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இணையத்தில் இதற்கெனத் தனியே குழுவினர் இயங்கி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் உள்ள மரம் பள்ளிவளாகத்தினுள் காணப்படுகிறது. சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டுப் பழமையானது. இது வெறும் மரமில்லை. நூற்றாண்டுகளின் சாட்சியம்.
மரத்தின் அடியிலும் பள்ளியின் வெளியிலும் இந்த மரத்தின் சிறப்புகள் குறித்த அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். அத்தோடு இதனைப் பாதுகாப்பாகப் பராமரிப்பு செய்வதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும். பல்வேறு பள்ளி மாணவர்களை அழைத்து வந்து இதனைக் காணச் செய்யலாம்.
இந்த பாவோ பாப் மரத்தை தூத்துக்குடி புத்தகத் திருவிழா தனது சின்னமாக உருவாக்கிச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
