ஓஷோ: மரபும் மீறலும்-9

தத்துவப்படுத்தலும் ரத்து செய்தலும்

என் மகள் சைதன்யா சிறு குழந்தையாக இருந்தபோது எல்லா குழந்தைகளையும் போலவே அவளும் ஒரு ஞானியாக இருந்தாள். அதைப்பற்றி ஜெ.சைதன்யாவின் சிந்தனைமரபு என்று ஒரு நூல் எழுதியிருக்கிறேன். இரண்டு வயதுக்குள்ளாக அவள் சொன்ன மெய்ஞானக் கருத்துகள் அடங்கிய ஒரு நூல் அது. அவள் தொலைக்காட்சியில் டிஸ்கவரி சேனல் பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் பார்ப்பதற்கு பன்றி போல் ஒரு விலங்கு வந்தது. அவள் என்னிடம், ‘பாத்தியா பன்னி’ என்றாள். ‘ஆமா’ என்றேன். ஆனால் அதற்கு தும்பிக்கை இருந்தது. தனது தும்பிக்கையை கொண்டு எதையோ பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அதை பார்த்துவிட்டு, ‘அது பன்னியில்ல, யானை’ என்றாள். ‘ஆமா பாப்பா’ என்றேன். பின்பு அது பின்னால் திரும்பி ஓசையிட்டது. அதை பார்த்துவிட்டு, ‘அது யானை இல்ல’ என்று சொல்லி சில வினாடிகள் கழித்து ‘அது ரொம்ப கெட்டது’ என்றாள். அடையாளப்படுத்தவே முடியாத ஒரு விலங்கு இருக்குமென்றால் அது கெட்டதாகத்தானே இருக்கும். நமக்கு அது யார் என்று தெரிந்திருக்க வேண்டுமல்லவா ?

இத்தகைய ‘கெட்டது’ என்ற அடையாளப்படுத்தல்கள் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் மீது எப்போதும் உண்டு. எது வழக்கமில்லாததோ, எது வகுத்துக்கொள்ள முடியாததோ அது கெட்டது. அதற்காகவே ஒழுக்கம் சார்ந்த வகைப்படுத்தல்கள். நித்யா ஓர் உரையில் சொல்கிறார், ”Amorality என்பது  சிந்தனையின் ஒரு விதியாக உள்ளது”. அது பாலியல் மட்டுமல்ல, எல்லாவிதமான ஒழுக்கங்களுக்கும் அப்பாற்பட்ட தன்மை. சில சிந்தனையாளர்கள் தங்களை ஒழுக்கவாதிகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது ஒழுக்க குற்றச்சாட்டுகள்தான் முதலில் வரும். எனக்கு தெரிந்து உலக சிந்தனையாளர்களில் மிகத்தீவிரமாக ஒழுக்கத்தை முன்வைத்தவர்கள் டால்ஸ்டாயும் காந்தியும்தான். ஆனால் அவர்களுடைய வாழ்நாளில் அவர்கள் மிகப்பெரிய ஒழுக்க குற்றச்சாட்டுகளை சந்திக்க நேர்ந்தது. அவர்களைப் பற்றிப் பேச அவர்கள் ஒழுக்கவாதிகள் என எழுதி, அதை கோடிட்டு அடித்துவிட்டுத்தான் மேலே செல்லவேண்டும்.

ஏன் வகுத்துக்கொள்ளவேண்டும்?

ஓஷோவை வரையறுக்கும்போது அடுத்த கேள்வி எழுகிறது. அதை ஒரு முன் நிபந்தனையாக சொல்லிவிட்டுதான் மேற்கொண்டு பேசவேண்டும். ஓஷோ போன்ற ஒருவரை தத்துவப்படுத்தத்தான் வேண்டுமா என்பதே அந்த கேள்வி. தத்துவத்தில் அடிக்கோடிட்டு சொல்லவேண்டிய சில விஷயங்கள் உண்டு. அதுபோல வெட்டிவிட்டு பேசவேண்டிய சில விஷயங்களும் உண்டு. கோவிட் கிருமியை பலமிழக்கச்செய்து தடுப்பு மருந்தாக பயன்படுத்துவதைப்போல. தத்துவக்கல்வி உடையவர்கள் இவ்விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும். தத்துவ குருகுலங்களில் இந்த விஷயம் பேசப்படும். வெளிமேடைகளில் பெரும்பாலும் ஓங்கிச்சொல்லும் விஷயங்கள்தான் பேசப்படும்.

ஓஷோவை இன்னின்ன தத்துவ சிந்தனைகள் வழியாக அணுகமுடியும், அவருக்கு இன்னின்ன தத்துவ பின்னணி இருக்கிறது, அவரை இன்னின்ன தத்துவ முறைகளுடன் உரையாட வைக்கமுடியும் என்று இங்கு சொல்லும்போதே  அவரை தத்துவத்திற்கு வெளியே வைத்தும் பார்க்கவேண்டும், தத்துவத்துடன் அவரை நிறுத்திவிடக்கூடாது என்ற நிபந்தனையையும் அதனுடன் சேர்த்துக்கொள்வேன். அதுதான் ரத்துசெய்து பயன்படுத்துவது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் ஓஷோ வாழ்நாள் முழுக்க இத்தகைய தத்துவப்படுத்தல்களுக்கு எதிராக இருந்தவர் என்பதாலேயே. அத்தகையவரையே நாம் மீண்டும் தத்துவப்படுத்தக் கூடாது.

இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவின் மிகப்பெரிய சிலைஉடைப்பாளர் (Iconoclast) ஓஷோ தான். ஆனால் அவருக்குத்தான் நாம் இன்று அதிகமாக படங்களை வைத்திருக்கிறோம். ஏனெனில் அத்தகையவர்களுக்குத்தான் நாம் முதலில் சிலையே வைப்போம். நாராயணகுரு இலங்கைக்கு சென்றுவந்த மாணவர்களிடம் கேட்கிறார், ‘அங்கு புத்தருக்கு சிலைகள் உள்ளனவா’ என்று. ‘புத்தருக்குத்தான் சிலைகள் உள்ளன. ஏராளமான மிகப்பெரிய சிலைகள் அவருக்குத்தான் உள்ளன’ என்றனர் மாணவர்கள். நாராயணகுரு ‘அது அப்படித்தான் வரும். ஏனெனில் அவர்தான் வரலாற்றில் முதன்முறையாக சிலை வைக்கக்கூடாது என்று சொன்னவர்’ என்றார். ஓஷோவுக்கும் நாம் இன்று அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். ஆகவேதான் தத்துவப்படுத்தும் போதே அதை ரத்துசெய்யவும் வேண்டும் என்கிறேன்.

ஓஷோ பாணியில் ஒரு நகைச்சுவை சொல்லலாம். நான் காசியில் சாமியாராக திரிந்த காலத்தில் என்னுடன் கர்நாடகாவை சேர்ந்த இன்னொருவர் இருந்தார். அவர் தமிழ் பேசுவார். அவர் என்னிடம் ஓடிவந்து ‘மலையாளத்து சாமீ, வாங்க. ஹடயோகி ஒருவன் வந்திருக்கிறான். அனைவரும் சென்று பார்க்கிறார்கள். நாமும் போய் பார்க்கலாம்’ என்றார். ஏன் என்று கேட்டேன். ‘அவன் ஆண்குறியில் மூன்று செங்கல்களை கட்டி தொங்கவிட்டிருக்கிறான்’ என்றார். நான் சொன்னேன் ‘அந்த உறுப்புக்கு படைப்பூக்கம் மிக்க, மகிழ்ச்சியான பல வேலைகள் உள்ளன. செங்கலை கட்டி தொங்கவிடுவதற்காக அது உருவாக்கப்படவில்லை’.

ஓஷோவின் மெய்ஞானம் என்பது இத்தகைய தத்துவச் செங்கல்களை கட்டி தொங்கவிடுவது அல்ல. அது கவிதை மாதிரி. கவிதையை, இலக்கியத்தை ஓரளவுக்குமேல் தத்துவப்படுத்தினால், அல்லது ஓரளவுக்குமேல் கோட்பாடாக்கினால், அது அதை கொன்று பிணக்கூறாய்வு செய்வதைப்போல ஆகிவிடும். நான் இலக்கிய விமர்சனம் எழுதும்போது முதலிலேயே அந்த விமர்சனத்தை மேலே கோடுபோட்டு ரத்து செய்துவிட்டுத்தான் எழுதுவேன். ஒரு கதையை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துபார்க்கும்போது, ‘இதை ஆராயலாம். ஆனால் அதற்கு அப்பால்தான் கவிதை இருக்கும். இது அறுதியானது அல்ல’ என்று சொல்லி அதை ரத்து செய்துதான் பயன்படுத்துகிறேன். ஓஷோவை நான் தத்துவார்த்தமாக வகுத்துவிட்டதாக நீங்கள் எண்ணாமல் இருக்கும்பொருட்டே இதை முன்னெச்சரிக்கையாக சொல்கிறேன்.

எப்படி வகுத்துக்கொள்ளவேண்டும்?

ஓஷோவை நாம் வகுத்துக்கொள்ளும்போது இந்திய மரபில் அவரை எங்கு பொருத்துவது என்பது முக்கியமான கேள்வி. நாம் மீண்டும் மீண்டும் அவரை மேற்கோள்களாகவே பேசிக்கொண்டிருக்கிறோம். இந்திய மரபு என்பது எப்படிப்பார்த்தாலும் ஐயாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளாக நமக்கு எழுத்துவடிவிலான தத்துவ சிந்தனைகள் கையில் கிடைக்கின்றன. இந்த தத்துவ சிந்தனைகளின் எந்தெந்த முனைகள் ஓஷோவை வந்து தொடும், எவையெவை தொடாது ? நீண்ட பருந்து பார்வையில் இத்தகைய சித்திரத்தை அளிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்திய சிந்தனை முறைமைகளில் எதனெதனுடன் அவருக்கு உடன்பாடு இருக்கும், எதனெதனுடன் அவருக்கு முரண்பாடு இருக்கும்? எப்படி அவரை இந்தியாவின் பிரம்மாண்டமான மரபில் வைத்து புரிந்துகொள்வது? மறுப்பதென்றால் எப்படி மறுப்பது? நான் இந்த உரையில் மறுக்கத்தான் போகிறேன். ஆனால் எப்படி மறுக்கிறேன் என்பதை சொல்ல இத்தனையையும் சொல்லவேண்டியுள்ளது.

ஏன் அவரை அப்படிச் சிந்தனைமரபில் பொருத்திப்பார்க்கவேண்டும்? என்னைப் பொறுத்தவரை சிந்தனையில் முற்றிலும் புதியதாக ஒன்று நிகழ முடியாது. எல்லா சிந்தனைகளும் வளர்ச்சிகளும் தொடர்ச்சிகளும்தான். ஓஷோ முளைத்த அந்த வேரைத் தெரிந்துகொள்வது ஓஷோவை ஆழ்ந்து தெரிந்துகொள்வதுதான். அத்துடன் ஓஷோ ஏன் அந்த ஏற்பை அடைந்தார், ஏன் இன்றும் ஏற்கப்படுகிறார், ஏன் அவர் மறுக்கப்பட்டார் என்று புரிந்துகொள்ளவும் அவரைச் சிந்தனை மரபில் பொருத்திப் பார்ப்பது அவசியமாகிறது.

ஒரு வசதிக்காக அவரை ரிஷி என்று சொல்லலாம். அது மிக பொதுவான ஒரு சொல். மகாபாரதத்திலோ புராணத் தொகுதிகளிலோ ரிஷி என்ற சொல் மிக நெகிழ்வான பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்க்கலாம். துறவி என்ற பொருளில் அல்ல. மணமாகி குடும்பமாக இருக்கும் ரிஷிகள் இருக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு குழந்தைகள் இருக்கின்றன. பல ரிஷிகளுக்கு பல்வேறு பாலுறவுகளும் இருந்திருக்கின்றன. பல ரிஷிகளில் இருந்து மன்னர் குலங்கள் உருவாகியிருக்கின்றன. அதுபோல துறவு பூண்ட ரிஷிகளும் உள்ளனர். இவர்களை பற்றிய கதைகளைத்தான் நாம் கேட்டு வளர்ந்திருக்கிறோம்.துர்வாசர் என்று ஒரு ரிஷி இருக்கிறார். கோபம்தான் அவரது அடையாளமாக சொல்லப்படுகிறது. அவருக்கு பிறந்த குழந்தைகள் உள்ளன. அவை எதுவும் அவர் மணவுறவில் பெற்றுக்கொண்ட குழந்தைகள் அல்ல. குந்திக்கு பிறந்த கர்ணனைப்போல. நமக்கு ரிஷி என்பவர் அறிஞரோ யோகியோ கவிஞரோ எவராகவேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் சாதாரணமானவர் அல்ல. அவ்வளவுதான்.

உதாரணமாக தீர்க்கதமஸ் என்பவருடைய கதை உள்ளது. அவருடைய கதை விந்தையானது. அசுரகுலத்தின் ரிஷிகளில் ஒருவர் பிருஹஸ்பதி. அவர் நாஸ்திக ஞானிகளில் ஒருவர். அவருடைய சகோதரர் உதத்யர். அந்த உதத்யருடைய மனைவி மமதா. உதத்யரால் மமதா கருவுற்றிருந்தார். அந்தவேளையில் அவளுடன் உறவுகொள்கிறார் பிருஹஸ்பதி. உள்ளே கருவடிவில் இருக்கும் தீர்க்கதமஸ் தனது காலால் பிருஹஸ்பதியின் விந்துவை தடுத்து வெளியே தள்ளுகிறான். எனவே பிருஹஸ்பதி கோபித்து ‘நீ குருடனாவாய்’ என்று சபித்தார். பிறவியிலேயே குருடாக தீர்க்கதமஸ் வெளியே வருகிறார். குருடாக இருந்ததாலேயே அதிக ஒலிக்கூர்மையுடன் இருந்ததால் மிக இளம் வயதிலேயே வேதங்களை கற்றுத்தேர்ந்து வேதஞானம் உடையவராக ஆனார்.

அதேசமயம் தீர்க்கதமஸ் காமமே வடிவானவராக இருக்கிறார். அவருக்கு ஒரு பெண்ணை மணம்செய்து வைக்கிறார்கள். ஆனால் அவர் அங்கிருக்கும் அனைத்து பெண்களிடமும் பிரகாச மைதுனம் என்ற வழிமுறையில் ஒளிவடிவாக சென்று உறவுகொள்கிறார். இது தெரிந்தவுடன் அவருடைய மனைவி அவரை ஒரு படகில் வைத்து கங்கையில் விட்டுவிடுகிறாள். கங்கை வழியாக சென்றுகொண்டிருந்த அவரை அசுர மன்னனான பலி என்பவன் காப்பாற்றுகிறான். பலியின் மனைவி சுதேஷ்ணையுடன் அவர் உறவுகொள்கிறார். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் பிறக்கிறார்கள். அவர்களில் இருந்து அங்கம், வங்கம், கலிங்கம், சுங்கம், புண்ட்ரம் என்ற ஐந்து நாடுகள் உண்டாகின்றன. அந்நாடுகளின் மன்னர் குடி அவரில் இருந்து பிறப்பதால் அவர் ஒரு பிரஜாபதி.

இப்படியொரு ரிஷி நமக்கு சொல்லப்பட்டிருக்கிறார். எனக்கு ஆறு அல்லது ஏழு வயதாக இருக்கும்போது இந்தக்கதையை என் பாட்டியிடம் இருந்து கேட்டிருக்கிறேன். மகாபாரதத்தை வீடுகளிலும் கோயில்களிலும் படிக்கிறார்கள். அங்கும் இந்த கதையை கேட்டிருக்கிறேன். தமிழகத்தில் பாரதம் படிப்பது மிகக்குறைவு. ஆனால் வடக்கில் அதிகம் படிக்கிறார்கள். அங்கு பாராயணம் என்பது அவர்கள் வாழ்வின் ஒரு பகுதி. இக்கதைகளை படித்து வந்தவருக்கு ஓஷோ எப்படி அந்நியமானவராக தெரிவார் ? அவர் இன்னொரு வகையான தீர்க்கதமஸ் போல, அவ்வளவுதானே. இந்த நீண்ட மரபில் அவர் எங்கும் அந்நியமானவராகவோ தவறானவராகவோ தென்படவில்லை. அவரை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவ்வாறு புரிந்துகொள்ள முடியாதவை எவ்வளவோ உள்ளன.

மீண்டும் இங்கு ஒரு நம்பூதிரி நகைச்சுவை சொல்லலாம். இரண்டு நம்பூதிரிகள் தங்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டனர். ஒருவர் கேள்வி கேட்பார். அதற்கு பதில் தெரியவில்லை என்றால் மற்றொருவர் அவருக்கு ஒருபணம் தரவேண்டும் என்பது போட்டி. இருவருக்குமே ஒன்றும் தெரியாது. இருவருமே ஒருவருக்கொருவர் பணம் கொடுத்துக்கொள்கின்றனர். அப்போது ஒருவர் சொன்னார், ‘எனக்கு தெரியாதது எல்லாவற்றுக்கும் நான் உனக்கு பணம் தரவேண்டும் என்றால் இந்த உலகத்தையே தரவேண்டியிருக்குமே’ என்று.

ஒரு சாமானியனுக்கு தனக்கு தெரிந்ததை கொண்டு மொத்த உலகையும் மதிப்பிடவேண்டிய கட்டாயம் இல்லை. ‘எனக்கு தெரியாதது இருக்கும்ங்க. எனக்கு ரிஷிகளை பற்றி, துறவிகளை பற்றி தெரியாது. மாற்று ஆன்மிகம் பேசுபவர்களின் ஒழுக்கம் பற்றி தெரியாது. தெரியாதவொன்று இருந்துவிட்டு போகட்டும். அதுபற்றி எனக்கு கருத்து கிடையாது’ என்பார்கள். ஆனால் நாளிதழ்கள் படிக்கக்கூடிய நடுத்தரவகை ஆட்களிடம் எந்தவொன்றை பற்றி கேட்டாலும் கருத்து சொல்வார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்படி பட்ஜெட் போடவேண்டும் என்பது பற்றி கருத்து சொல்வார். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டால் பத்தாவது ஃபெயில் என்று சொல்ல தயங்கமாட்டார். ஆனால் படிப்பற்ற ஒரு சாமானியனிடம் கேட்டால் ‘நமக்கு அதெல்லாம் தெரியிறதில்லீங்க. நமக்கு தெரிந்ததைத்தான் சொல்வேன்’ என்பார். அந்த சாமானியர்தான் ஓஷோவை ஏற்றுக்கொண்டவராக இங்கே இருந்தார். அவரை இங்கே இருந்த எத்தனையோ வகை ரிஷிகளில் ஒருவர் என்று முதலில் எடுத்துக்கொள்ளலாம்.

மிக எளிமையாக அவரை இப்படி வகுத்துக்கொண்டு மேலே செல்லலாம். வழிபாடும், நிராகரிப்பும் இல்லாமல் அவரை அணுக அது உதவும். எளிய ஒழுக்கவியல் அதிர்ச்சிகள், அறவியல் எடைபோடல்கள் இல்லாமல் அவரை புரிந்துகொள்ள இதுவே அடிப்படையான வழிமுறை.

(மேலும்)

(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2025 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.