ஓஷோ: மரபும் மீறலும்-8

ஓஷோவும் சிந்தனை மரபுகளும்
நண்பர் கே.வி.அரங்கசாமி ஓஷோ பற்றி முன்பு நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக இணையத்தில் ஒருவர் எழுதிய கட்டுரையை என்னிடம் காண்பித்தார். அது ‘டேய் முட்டாளே’ என்று வழக்கம்போல ஆரம்பிக்கிறது. ‘ஓஷோவை ஒழுங்காக படித்துப்பார், குர்ஜீஃப்பை படித்துப்பார், ஓஷோ நீ நினைப்பதுபோல் அல்ல’ என்று அந்த ஆசாமி பேசிச்செல்கிறார். முக்கியமாக காமம் பற்றி நான் சொன்ன விஷயம் அவரை சீண்டியிருக்கிறது. ‘ஓஷோ காமத்தை முன்வைக்கவில்லை, அவர் எந்த பெண்ணிடமும் உறவுகொள்ளவில்லை. அவர் அவர்களிடம் மானச லீலைதான் ஆடினார். இதை புரிந்துகொள்வதற்கு உனக்கு பக்குவம் போதாது’ என்றெல்லாம் பேசியிருந்தார். அதை பார்த்தவுடன் எனக்கு சட்டென்று இது வேறு ஒருவரைப்பற்றி சொல்லப்பட்டது நினைவுக்கு வந்தது. கிருஷ்ணனைப் பற்றியும் இதேதான் சொல்வார்கள். கிட்டத்தட்ட எல்லோரையும் பற்றியும் இதே வகையில்தான் சொல்லப்படும். முருகனைப்பற்றியும் இவ்வாறு சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கு பிள்ளை இல்லை என்பதால் முருகன் வள்ளி தெய்வானையோடு மானச லீலைதான் ஆடினார் என்றுகூட சொல்வார்கள்.
ஓஷோ எனும் தொன்மம்
ஓஷோ பற்றி இன்று எல்லாவகையான புராணங்களும் உருவாகிவிட்டன. அவரைப் பற்றிப் பேசுபவர்கள் அவர் மீதான நம்பிக்கையை மட்டுமே முன்வைக்கிறார்கள். அவை எல்லாமே அவரை ஒரு வகையான அவதாரபுருஷராகக் காட்டுபவை. அவரைப் பற்றிப் பேச தங்களுக்கு மட்டுமே தகுதியுண்டு என எண்ணுபவர்கள், அவரைகளை எவரேனும் விமர்சனம் செய்தால் வசைபாடிக் கொந்தளிப்பவர்கள் பெருகியுள்ளனர். பெரும்பாலான கதைகள் வழக்கமானவை.
இது கள்ளநோட்டு அச்சிடும் இயந்திரம்போல ஒருவகையான புராண இயந்திரம். அது தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருக்கிறது. எந்தவொரு ஆன்மீக ஞானி என்றாலும் அவர் இறந்து சில ஆண்டுகளுக்குள் அந்த புராண இயந்திரத்திற்குள் செலுத்தப்பட்டு ஒரு சுற்றுசுற்றி வெளியேவந்து விழுவார்கள். ஓஷோ வெள்ளெலும்பை பெண்ணாக்கிய கதை, ஒயினை கையால் தொட்டு தண்ணீராக மாற்றிய கதை (ஏனெனில் இவர் திருப்பிதான் செய்வார் என்பதால் !) போன்ற கதைகளை உருவாக்கி விடுவார்கள். இந்த புராண இயந்திரத்திற்கு ஒரு முறைமை உண்டு. அதை மாற்ற முடியாது.
நான் ஒரு எழுத்தாளன் என்பது எனக்கு ஒரு சாதகமான அம்சம். ஆன்மீக ஞானிகளைப் போல என்னை அவ்வாறு புராண இயந்திரத்திற்குள் போடமுடியாது. குறைந்தபட்சம் ‘இவர் வேறுமாதிரி ஆள்’ என்று சொல்வதற்குச் சான்றுகளாக எனது படைப்புகளாவது இருக்கும். ஞானிகளை நாம் அவர்களின் பக்தர்கள் வழியாகவும், அவர்களை விளக்கும் பிரசங்கிகள் வழியாகவும், அவர்களின் போலியான நகல்கள் வழியாகவும்தான் அறிமுகம் செய்துகொள்கிறோம். ஆகவே ஞானிகளை ஞானமிருந்தால் மட்டுமே நம்மால் அறியமுடியும் என்பதே இன்றைய நிலை.
புராணமாக்குதல், தன்வயமாக்குதல்தான் ஓர் ஆன்மீக ஞானியை நாம் வழக்கமாக உள்ளிழுத்துக்கொள்ளும் முறையாக உள்ளது. நமக்கு என்ன பிடிக்குமோ, ஏற்கெனவே நாம் எதை நம்பிக்கொண்டிருக்கிறோமோ, ஒரு ஞானி எப்படி இருப்பார் என்று எப்படிப்பட்ட வரையறையை வைத்திருக்கிறோமோ அதை கையில் வைத்துக்கொண்டு பொறுமையின்றி காத்துக்கொண்டிருப்போம். ‘ரொம்பநாளா இருக்கிறானே, சரி எழுபத்தஞ்சு வயசாச்சு இப்போ போயிடுவான்னு நினைக்கிறேன். அப்பாடா போயிட்டான்’ என்று அவனை எடுத்து அந்த இயந்திரத்திற்குள் போட்டு வெளியே தள்ளுவோம். சூளையில் இருந்து வெளிவரும் செங்கல்போல அவர்கள் ஒரே வார்ப்பாக வெளிவருவார்கள். எல்லா செங்கலிலும் சில எழுத்துகள் இருப்பதுபோல, ‘இந்தியன் ஸ்பிரிச்சுவாலிட்டி’ என்ற அச்சில் ஒரே மாதிரி ஆட்களாக அவர்களை அடித்து வெளியே தள்ளுவோம். ஓஷோவைப்பற்றிய இத்தகைய உரையை ஆற்றவேண்டியிருப்பது அத்தகைய புராண இயந்திரத்தில் இருந்து அவரை வெளியே எடுக்கவே. அவர் இதுபோன்ற சூளைச்செங்கல் அல்ல, அவர் வேறு என்று சொல்வதற்காகத்தான்.
எழுபதுகளுக்கு முன்னால் பிறந்த என்னைப்போன்ற ஆட்களுக்கு தெரியும், நம்முடைய அப்பாக்கள் வேறுமாதிரி ஆட்கள் என்று. நம் அப்பாக்கள் நம்மிடம் ஜோக் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு பாலுணர்வு உண்டா என்பதே சந்தேகமாக இருக்கும். அவர்கள் சிரிப்பதை நாம் பார்க்கமுடியாது. பெரும்பாலும் வீட்டிற்குள் அவர்கள் குரலை கேட்கவே முடியாது. என் அப்பா வீட்டிற்குள் பெரும்பாலும் பேசுவதே கிடையாது. வெளியேதான் அவரது குரலை கேட்கமுடியும். ஆனால் ஓஷோ நம்மிடம் பேசி சிரிக்கவந்த ஒரு அப்பா. நமது ஞானிகளின் படங்களை பார்த்தால், ஏதோ உருக்கநிலையில் கண்ணீரோடு இருப்பதுபோல இருக்கும். ஆனால் உண்மையில் அவர்கள் அப்படி இருந்தவர்கள் அல்ல. ஓஷோ ஓர் உரையில் சொல்கிறார், ‘அழுதுகொண்டிருக்கும் ஒரு அப்பாவி இளைஞனுடைய படம்தான் ரோமாபுரி சக்கரவர்த்திக்கு தேவைப்பட்டது. அதைத்தான் ஏசுவாக உருவகித்து வைத்திருக்கிறார். அந்த ஆள் இப்படி இருந்திருக்க மாட்டார், சிரித்துக்கொண்டுதான் இருந்திருப்பார். ஏனெனில் அவர் ஞானி’. ஆனால் நமக்கு எல்லா ஞானிகளும் சிரிக்காமல் சீரியஸாக இருக்கவேண்டும். நம்முடன் சிரித்து விளையாடவந்த ஒரு ஞானி என்று ஓஷோவை சொல்லலாம்.
முன்னர் சபாநாயகர் ஒருவர் இருந்தார். அவருடைய ஆங்கிலம் பற்றிய நகைச்சுவைகள் உண்டு. அவர் ஒருமுறை பாராளுமன்றத்தில் சொன்னார், ‘Prime minister has every rights to appoint and disappoint ministers’ என்று. அதேபோல ‘We have every rights to use and abuse Osho’ என்று சொல்லலாம். அதுதான் நாம் அவரிடம் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம். அது அடிக்கடி நமக்கு கிடைக்கக்கூடிய சுதந்திரம் அல்ல.
மீண்டும் ஓஷோத்தனமான நகைச்சுவை ஒன்று சொல்லலாம். ஒரு விடுதியில் ஒருவன் அறையெடுத்து தங்குகிறான். அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது அந்த அறைக்குள் மூன்று பெண்கள் வந்து அவனுடன் உறவுகொள்கின்றனர். அவனுக்கு என்னதென்று குழப்பமாக இருந்தாலும் சந்தோஷப்படுகிறான், சரி ஏதோ தவறாக வந்துவிட்டார்கள் போல என்று. வெளியே வந்து அறைக்கு பணம் செலுத்தும்போது அங்குள்ளவர் ‘நீங்கள் 3A தானே, உங்களுக்கு கட்டணம் கிடையாது. நாங்கள் உங்களுக்கு ஐம்பது டாலர் தருவோம்’ என்றார். அவனும் அதை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டான்.
ஒருவாரம் கழித்து மீண்டும் அதே அறையில் தங்குகிறான். அப்போதும் அதுபோலவே நடக்கிறது. ஐம்பது டாலர் பணத்தை பெற்றுக்கொண்டு செல்கிறான். இது அவன் நண்பர்கள் வட்டாரத்தில் பரவலாகிறது. அதன்பின் பலர் அந்த 3A அறையை கேட்டுவாங்கி தங்கி, ஐம்பது டாலர் வாங்கிச்செல்கிறார்கள். அதன்பின் டிரம்ப் காதுக்கு அவ்விஷயம் செல்கிறது. அவர் அதை பரிசீலித்து பார்ப்பதற்கு அதே அறையில் சென்று தங்குகிறார். அதே விஷயங்கள் நடக்கின்றன. வெளியே வந்த அவரிடம் ஆயிரம் டாலர்கள் கொடுக்கிறார்கள். ‘வழக்கமாக ஐம்பது டாலர்தானே கொடுப்பீர்கள்’ என்று கேட்கிறார் டிரம்ப். அதற்கு அவர்கள், ‘ஆமாங்க, ஆனா அமெரிக்க அதிபரின் ப்ளூ ஃபிலிம் அபூர்வமானது இல்லையா !’ என்றனர்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் பிறந்த மண்ணில், இப்படி இளைஞர்களிடம் சிரித்துப்பேசவும் விளையாடாவும் செய்யக்கூடிய ஒரு ஞானி, நாம் வீசக்கூடிய பந்துகளை எதிர்கொள்ள மறுமுனையில் மட்டையுடன் நிற்கக்கூடிய ஒருவர் மிக அபூர்வமானவர் என்பதை சொல்லவே. அவரை புரிந்துகொள்வதற்கு நமக்கு அவ்வளவு சிரமங்கள் உள்ளன. எனவே, புரிந்துகொள்வதை விட எளிது, ஏற்கெனவே இருக்கும் வார்ப்பாக அவரை மாற்றிக்கொள்வதுதானே. அதைத்தான் நாம் என்றுமே செய்துகொண்டிருக்கிறோம்.
நம் அப்பாக்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. சிடுசிடுப்பான அப்பா, ஊதாரி அப்பா, அன்பான அப்பா என்பதாக பலவிதம். ஆனால் எல்லா அப்பாக்களும் இறந்து பதினாறு நாட்கள் கழித்து ஒரே அப்பாதான். ஒரேமாதிரி புகைப்படம், ஒரேமாதிரி மாலை, ஒரேமாதிரி கதை. ‘எங்கப்பா இப்படித்தான் இருப்பார்’ என்று அத்தனைபேரும் ஒரே கதையைத்தான் சொல்வார்கள். ‘உங்கள் அப்பாவுக்கென்று தனியாக சில குணங்கள் இருந்திருக்குமல்லவா?’ என்று நான் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒருவரும் சொன்னதில்லை. எல்லா அப்பாக்களும் ‘அப்பா’ எனும் டெம்ப்ளேட்டில் பொருத்தப்பட்டுவிடுவார்கள். இதைத்தான் நாம் நமது ஞானிகளுக்கும் செய்கிறோம். ஓஷோ மறைந்து முப்பதாண்டுகளுக்கு பிறகு அவரை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.
ஓஷோவும் இந்தியப் பொதுமக்களும்.
இங்கு இரண்டு நிகழ்வுகளை சொல்ல விரும்புகிறேன். ஓஷோ புனேவில் இருந்தபோது அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. அவர் இந்திரா காந்தியை மிகக்கடுமையாக விமர்சனம் செய்தார். Below the belt என்று சொல்வார்களே, அந்த அளவுக்கான விமர்சனம். அதன் பிறகு மொராஜி தேசாய் பிரதமரானார். ஆனால் மொராஜி தேசாயின் சிறுநீர் பற்றித்தான் ஓஷோ அதிகமாக பேசியிருப்பதாக சொல்கிறார்கள். அவர் எல்லா அரசியல்வாதிகளுக்கும் எதிரி. அவர்கள் அவரை திருப்பி எதிர்த்தார்கள். பாரதீய ஜனசங்கம் அவரை கடுமையாக எதிர்த்தது. அவரைப்பற்றி தொடர்ந்து தவறான செய்திகள் வந்தன. அவர் ஆசிரமத்தில் போதைப்பொருள் புழங்குகிறது, பாலுறவு களியாட்டங்கள் நடைபெறுகின்றன என்பதாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருந்தன. இவ்வளவு செய்திகள் வந்தபோதிலும் இந்தியாவில் மக்கள் மத்தியில் அவரைப்பற்றி அவ்வளவு எதிர்மறையாக எதுவுமே நடைபெறவில்லை.
ஓர் இதழாளர் மனமுடைந்து எழுதுகிறார், ‘இவர் தன்னை சாமியார் என்று மட்டும் சொல்லிக்கொள்ளாமல் இருந்திருந்தால் நடப்பதே வேறு. இவரை அடித்தே கொன்றிருப்பார்கள்’ என்று. சாமியார் என்ற வார்த்தைதான் அவரை இதுவரை காப்பாற்றி கொண்டுவந்திருக்கிறது,இந்தியாவில் சாமியார்களை எதுவும் செய்யமுடியாது என்கிறார் அந்த இதழாளர்.. அது உண்மையும்கூட. துறவி, தத்துவ ஞானி என்கிற விஷயம் அவர்களுக்கு அளவற்ற சுதந்திரத்தையும் அனுமதியையும் அளிக்கிறது. இந்திய மக்களுக்கு ஓஷோவை புரிந்ததா என்றால் புரியவில்லை. அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் வைத்து ஓஷோ போன்ற ஒருவரை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. மதித்தார்களா என்றால் அதுவும் இல்லைதான். ஆனால் அவருடைய சுதந்திரத்தை, வழிவிட்டு விலகிச்செல்லுவதற்கான அவருடைய உரிமையை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
புனேவில் ஒரு கூடைக்கார பெண்ணிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டியெடுக்கிறார். ‘ஓஷோ இப்படியெல்லாம் செய்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்கிறார். அந்தப்பெண் ஒரே வார்த்தையில் ‘அவர் சாமியார்’ என்று பதில் சொல்கிறார். பத்திரிக்கையாளர் மீண்டும், ‘அது உண்மைதான். இருப்பினும் அவர் இப்படியெல்லாம் செய்கிறாரே…’ என்றார். அந்தப்பெண் மீண்டும், ‘இல்லங்க, அவர் சாமியார்தானே’ என்கிறார். அதுதான் இந்தியாவின் பதில். அவரைப்போன்றவர்கள் நாம் இங்கு வகுத்து வைத்திருக்கும் வழக்கமான சட்டகத்திற்கு வெளியே இருக்கக்கூடியவர்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அதை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே நான் என்னுடைய நிபந்தனைகளுடன் அங்கு செல்லமாட்டேன் என சாமானியன் சொல்கிறான்.
நெடுநாட்களுக்கு முன்னர் குருநித்யாவின் மாணவர் பிரபுதத்தா அவர்களிடம் கேட்டேன், ‘அமெரிக்கா மாதிரி இங்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வரப்போகிறது. ஓர் அடையாள அட்டை எடுத்தாகவேண்டும் என்று அரசாங்கம் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?’. அதற்கு அவர் ‘சிறை செல்வேன். ஆனால் அட்டை வாங்கமாட்டேன்’ என்றார். அந்தச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் தொடர்ந்தும் அளித்தாகவேண்டும். இந்த பொதுச் சமூகத்தின் அத்தனை நிபந்தனைகளுக்கும் ஒரு ஞானி, அல்லது கலைஞன் கட்டுப்பட்டு இருந்தான் என்றால், இந்த பொதுச் சமூகத்தின் கண்களுக்கு எது தெரிகிறதோ அதுதான் அவன் கண்களுக்கும் தெரியும். பொதுச் சமூகம் நம்புவதை மட்டும்தான் அவனால் சொல்லமுடியயம். இங்கிருந்து அனைத்தையும் விட்டுவிட்டு ‘அங்கு’ செல்வதுதான் துறவேவொழிய, இங்கிருந்து வீடு, துணி, சோறு அனைத்தையும் எடுத்துக்கொண்டு அங்கு செல்வதல்ல துறவு. இங்கிருக்கக்கூடிய சௌகரியங்களை மட்டுமல்ல, அடையாளங்கள், மரியாதைகள், நெறிகள், ஒழுக்கங்கள், நம்பிக்கைகள் என அனைத்தையும் துறந்துதான் அங்கு செல்கிறார்கள்.
துறவறம் மேற்கொள்பவர் உயிரோடு இருக்கும் தங்கள் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்துவிட்டுத்தான் போகவேண்டும். இரிக்கப் பிண்டம் என்று அதை சொல்வார்கள். இருக்கும்போதே அளிக்கப்படும் பிண்டம் அது. இப்படி எனது குடும்பத்தில் ஒருவர் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். இது பேசும்போது எளிதாக இருக்கும். ஆனால் அம்மா உயிருடன் இருக்க, தன் முப்பத்தாறு வயதில் ஒருவர் அம்மாவுக்கு இறுதிக்கடன் செய்வதை பார்ப்பது கடினமான விஷயம். அந்த அம்மாவின் முகம் என் நினைவில் உள்ளது. அதையெல்லாம் ஏன் செய்யவேண்டும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இது பல ஆண்டுகளாக இங்குள்ளது. ஆனாலும் சாமானியர்களால் அதை புரிந்துகொள்ள முடியாது. அதேசமயம் மரபின் மீதான அச்சத்தாலும் ஏற்பாலும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், அனுமதித்திருக்கிறார்கள்.
நான் தொடர்ந்து இதுபோன்ற ஆட்களைச் சந்தித்திருக்கிறேன். கிட்டத்தட்ட துறவிபோன்ற ஒரு நிலையில் அலைந்து கொண்டிருக்கும்போது ஓஷோ போன்று குறைந்தது இரண்டு பேரை பார்த்த நினைவுண்டு. ஒருவர் என்னிடம் சொன்னார், ‘எனக்கு பிச்சையெடுப்பது பிடிக்காது, எவரிடமும் எதையும் வேண்டுவது பிடிக்காது. முக்கியமாக அவர்களிடமிருந்து எனக்கு மோசமான அதிர்வுகள் வருகின்றன. உலகியலாளன் எனக்கு ஒரு லௌகீக முகத்தை காட்டுகிறான். அது எனக்கு நேரவிரயம். உணவுக்காக அரைமணிநேரம், ஒருமணி நேரத்தை எல்லாம் என்னால் செலவழிக்க முடியாது’. நான் கேட்டேன், ‘அப்படியென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?’. அவர் ‘நான் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு திருட்டை செய்வேன். அந்த பணத்தை வைத்து சாப்பிட்டுக்கொள்வேன்’ என்றார். எனக்கு சற்று பதற்றமாகியது. ஏதேனும் குறியீட்டுரீதியாக பேசுகிறாரா என்ற சந்தேகத்துடன் ‘திருட்டுங்களா ?’ என்றேன். ‘திருட்டேதான்’ என்றார்.
அ.லெ.நடராஜன் எழுதிய சுவாமி விவேகானந்தர் வரலாறு என்ற புத்தகத்தில் ஒரு நிகழ்வு வருகிறது. விவேகானந்தர் துறவியாகி இந்தியா முழுக்க அலைந்து கொண்டிருக்கும்போது காசிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பத்து துறவிகள் சென்று தங்குகின்றனர். அவர்களில் ஒருவர் ஊருக்குள் சென்று பத்து துறவிகள் தங்கியிருப்பதாகவும் அவர்களுக்கு உணவு தரும்படியும் கேட்கிறார். ஊர்க்காரர்கள் உணவுதர மறுத்துவிடுகின்றனர். அதனால் விவேகானந்தர் உட்பட அனைத்து துறவிகளும் கையில் தடிகளுடன் ஊருக்குள் சென்று வீட்டுக்கதவுகளை தட்டி மிரட்டி உணவு வாங்கி சாப்பிடுகின்றனர். அதைப்பற்றி விவேகானந்தர் சொல்லும்போது, ‘இது சரியா அல்லது தவறா என்பதல்ல. சரி, தவறுகளுக்கு அப்பாற்பட்ட வேறொன்று உள்ளது, அதுதான்’ என்கிறார். இதற்குமேல், இந்த உலகின் விதிகளை கொண்டு அவர்களை மதிப்பிட முடியாது. இது இங்கே பல ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கிறது.
ஏன் சாமானியர்களுக்கு ஓஷோ மீது ஒவ்வாமை இருந்தாலும் காழ்ப்பு வரவில்லை ? ஏன் அவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒருவரை எப்படியோ ஏற்றுக்கொள்கிறார்கள் ? ஏனெனில் இதேபோன்ற ஒருவர் அவர் தெருவிலும் இருப்பார். ஒவ்வொரு ஊரிலும் அவ்வாறான ஒருவர் இருக்கிறார். ஏதேதோ செய்திருக்கிறார்கள். மாந்திரீகச் சடங்குகள், பலிபூஜைகள் செய்திருக்கிறார்கள், நிர்வாண பூஜைகள் செய்திருக்கிறார்கள். நான் நடைப்பயிற்சி செல்லும் வழியில் ஒரு ஆலமரம் உள்ளது. அதனடியில் ஆறேழு சமாதிகள் உள்ளன. எல்லாமே துறவிகளின் சமாதிகள். அங்கு வந்த ஒரு விவசாயியிடம் அதுபற்றி கேட்டேன். அதில் இருந்த ஒரு சாமியார் பெண்களை வைத்து நிர்வாண பூஜைகளெல்லாம் செய்திருக்கிறார் எனவும், அதை தான் சிறுவயதில் பார்த்திருப்பதாகவும் சொன்னார். அவருக்கு அதற்குமேல் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர் ஒரு ஞானி என பக்தியுடன் சொன்னார். ஊருக்குள் உட்கார்ந்து இதை செய்யக்கூடியவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர் இன்று ஆலமரத்தடியில் சமாதியாய் இருக்கிறார். யாரோ இரண்டுபேர் ஆண்டுக்கு ஒருமுறை வந்து தீபம் ஏற்றி மாலையிட்டுவிட்டு செல்கிறார்கள்.இந்தியாவில் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் ஒரு சித்தருடைய சமாதியாவது இருக்கும் என்று ஜெயகாந்தன் சொல்வார். அத்தனைபேரையும் நமது சமுதாயம் ஏற்றுக்கொண்டுதான் இருந்திருக்கிறது. அவர்கள்மீது பகைமையை உண்டாக்கிக்கொள்ளவில்லை.
இங்கு ஓஷோவின் நகைச்சுவை ஒன்று நினைவுக்கு வருகிறது. சர்தார்ஜி ஒருவர் ரயிலில் சென்றுகொண்டிருக்கிறார். எதிரில் ஒரு முஸ்லிம் பெரியவர் இருக்கிறார். அவர் ஒரு டப்பாவை திறந்து அதில் இருக்கும் பத்து சுருட்டுகளில் ஒன்றை எடுத்து புகைக்கிறார். சர்தார்ஜிக்கு அதன் நாற்றம் தாங்கமுடியவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த பெரியவர் கழிவறைக்கு சென்றபோது, சர்தார்ஜி அந்த டப்பாவில் மீதமுள்ள ஒன்பது சுருட்டுகளையும் எடுத்து தனது ஆசனவாயில் செருகிவிட்டு வைத்தார். அந்த பெரியவர் திரும்பிவந்து ஒரு சுருட்டை எடுத்து முகர்ந்து பார்த்தார். அது நாற்றமடித்ததால் தூக்கி வெளியே வீசிவிட்டார். இன்னொன்றை எடுத்தார். அதுவும் நாற்றமடித்தது. இப்படியாக ஒன்பது சுருட்டுகளையும் தூக்கி வீசிவிட்டு, இன்னொரு டப்பாவை எடுத்தார். அதில் இருந்த பத்து சுருட்டுகளில் ஒன்றை எடுத்து புகைத்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த சர்தார்ஜி, அந்த பெரியவர் மீண்டும் கழிவறைக்கு சென்றவுடன் அத்தனை சுருட்டுகளையும் எடுத்து முன்புபோலவே செய்துவிட்டு திருப்பி வைத்துவிட்டார். அந்த பெரியவர் திரும்பிவந்து அந்த ஒன்பது சுருட்டுகளையும் முகர்ந்துவிட்டு தூக்கி வெளியே போட்டுவிட்டார். அரைமணிநேரம் கழித்து சர்தார்ஜி பெரியவரிடம் ‘சுருட்டு இருக்குங்களா ?’ என்று கேட்கிறார். ‘அந்த பழக்கமே விட்டுப்போச்சுங்க’ என்கிறார் பெரியவர். சர்தார்ஜி ‘எனக்கு பழகிடுச்சுயா…’ என்றார்.
ஓஷோவும் மேலைநாடுகளும்
இந்திய சமுதாயத்திற்கு நெடுங்காலமாக பழகிப்போனவர்கள் நம் ஞானிகள். ஓஷோ போன்றவர்கள் நமக்கு பழகினவர்கள்தான். ஆனால் அமெரிக்கர்களுக்கு அப்படியல்ல. எண்பதுகளில் ஓஷோ அமெரிக்கா செல்கிறார். ஓரிகோனில் பிரம்மாண்டமான ஓஷோ கம்யூனை உருவாக்கினார். மிகச்சில ஆண்டுகளிலேயே ஒட்டுமொத்த அமெரிக்காவும் அவருக்கு எதிராக திரும்பியது. அவர்களால் ஓஷோவை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவரை அவர்கள் வேட்டையாடினர், சிறையிலடைத்தனர், நாடுகடத்தினர். அமெரிக்கா தன்னை சுதந்திர சிந்தனை கொண்ட சமூகம் என்று சொல்லிக்கொள்கிறது. ஆனால் அது அன்று செய்த அந்த நடவடிக்கை சார்ந்து குற்றவுணர்வும் தாழ்வுணர்வும் அவர்களுக்கு உண்டு. நாம் ஒரு தவறான விஷயத்தை செய்துவிட்டால் நாமே அதை நியாயப்படுத்தி பேசத்தொடங்குவோம். இன்று ஓஷோவை பற்றி நாம் பேசுவதைவிட அவர்கள் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதுவும் எதிர்மறையாக. காரணம் அந்த குற்றவுணர்வுதான்.
ஓஷோவை ஒரு வில்லனாக, தீய சக்தியாக, ஒருவகையான நவீன சாத்தானாக சித்தரிக்கக்கூடிய குறைந்தது மூன்று சினிமாக்களை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். நானே ஒரு சினிமா பார்த்திருக்கிறேன். அதில் ஓஷோ போன்று ஒருவர் வருவார். அங்கு கொத்தடிமைகளை வைத்து வேலை வாங்குவார்கள், மைக்கில் ஆணைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நெற்றியில் சாத்தானின் அடையாளத்தை போட்டிருப்பார்கள். அனைவரையும் சித்திரவதை செய்வார்கள். அத்தகைய ஒரு படம். பரிதாபமாகத்தான் இருந்தது. ஏனெனில் ‘சாத்தான் வழிபாட்டாளர்’ என்பது அவர்களுக்கு தெரிந்த ஒரு டெம்ப்ளேட். அந்த டெம்ப்ளேட் அவர்களுக்கு ஆயிரமாண்டுகளாக உள்ளது. அதை ஓஷோவின்மீது போடுகிறார்கள். குறைந்தது இரண்டு அல்லது மூன்று சினிமாத்தொடர்கள் இருக்கின்றன. சமீபத்தில்கூட ஒரு சீரியல் வந்தது. பலரும் அதை பார்த்திருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து ஒன்று வந்தால் அது உண்மையாகத்தான் இருக்கும், வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என்ற நம்பிக்கை நமக்குண்டு.
அவர்கள் ஓஷோவைப் பற்றின அத்தகைய சித்திரத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனர். ஏனெனில் ஓஷோ போன்ற ஒருவரை புரிந்துகொள்வதற்கான தத்துவார்த்தமான கருவி அவர்களிடம் இல்லை. ஆயிரமாண்டுகளாக அவர்களுடைய பண்பாட்டில் அது இல்லை. முன்காலத்தில் அங்கும் அப்படிப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். கிரேக்க நாட்டில் டையோஜெனிஸ் (Diogenes) ஒரு குழாய்க்குள் வாழ்ந்திருக்கிறார். அந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அலெக்ஸாண்டர் அவரிடம் சென்று ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டபோது, ‘அந்த வண்டியை கொஞ்சம் நகர்த்திவை, நிழலடிக்கிறது’ என்றாராம். நாஸ்டிக் மரபுகள் (Gnosticism) இருந்திருக்கின்றன. ஆனால் அவை எதுவுமே ஓஷோ போன்ற ஒருவரை புரிந்துகொள்ள உதவவில்லை. ஓஷோ அங்கு சென்று ஒரு குகையில் பட்டினி கிடந்திருந்தால் அவரை கிறிஸ்தவ புனிதர்களில் ஒருவராக சேர்த்திருப்பார்கள். ஆனால் ஐநூறு வைரங்கள் பதிக்கப்பட்ட நெற்றிப்பட்டை அணிந்துகொண்டு உட்கார்ந்திருக்கும் ஒருவரை எப்படி புரிந்துகொள்வது, எங்குசென்று சேர்ப்பது ?
இந்த உரைக்காக நான் தயார் செய்துகொண்டிருந்தபோது, ஓஷோவின்மீது அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டுகள், வழக்குகளை புரட்டிப்பார்த்தேன். ஆவணங்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த ஆவணங்களை வைத்து நீங்கள் ஆவணப்படத்தில் உள்ள சித்திரத்தை நம்பமுடியாது. ஏனெனில் ஒரு குற்றம்கூட ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கொலை, கட்டாய உழைப்பு, அடிதடி உள்ளிட்ட பல வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கின்றன. எதுவுமே ஜூரி முன்னிலையில்கூட பதிவு செய்யப்படவில்லை. அவரை அழைத்து மிரட்டினார்கள், சிறையில் வைத்தார்கள், பின்பு வெளியே அனுப்பினார்கள். அவருடைய மொத்த சொத்தும் தேசியமயமானது. அவர்மீது வைக்கப்பட்ட உச்சகட்ட குற்றச்சாட்டே, அந்த குறிப்பிட்ட கிராமத்தின் ஆதிக்கத்தை எடுத்துக்கொள்ள முயன்றார் என்பதே.
இதேபோல இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒருவர் வந்து ஆசிரமம் அமைத்து சட்டப்பூர்வமாக சேவையாற்றிக்கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர்மீது அதேபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஒரு குற்றம்கூட நிரூபிக்கப்படாத நிலையிலும் அவரை இந்தியாவை விட்டு துரத்தினால், இதே அமெரிக்கா நம்மைப்பற்றி என்ன சொல்லும் ? நாம் அவ்வாறு செய்தது கிடையாது. ஆனால் நாம் காட்டுமிராண்டிகளாகவும் அவர்கள் நவீன சிந்தனையின் முகங்களாகவும் அறியப்படுகிறார்கள்.
அமெரிக்கா சென்றுவந்த ஒருவருக்குத்தான் இந்த வேறுபாடு தெரியும். ஆனால் அங்கு குடியேறியவனுக்கு அது தெரியாது. ஏனெனில் அவன் அங்கு இரந்துண்டு ஏற்று வாழக்கூடிய இடத்தில் இருப்பவன். அமெரிக்கர்களை விட மிகப்பெரிய தேசபக்தர்கள் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள்தான். நான் பார்த்தவரைக்கும் இந்த அளவு தேசபக்தி உடைய மக்களே உலகில் கிடையாது. சிங்கப்பூரிலும் அப்படித்தான். சிங்கப்பூர் தேசிய தினத்தன்று, அங்கிருக்கக்கூடிய இந்தியர்கள் தேசபக்தியில் உருகி, தேசியக்கொடியை சட்டையாக அணிந்துகொண்டும், அதை கையில் வைத்து ஆட்டிக்கொண்டும் இருப்பார்கள். இதில் பத்தில் ஒரு பங்காவது இந்தியாவில் இருக்கும்போது இருந்திருந்தால் நாம் இன்று இப்படி இருந்திருக்கமாட்டோம் .அதனால் அத்தகையவர்களுக்கு அது தெரியாது. ஆனால் அங்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும், அமெரிக்கா ஒரு ஜனநாயக தேசமல்ல, அது அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ தேசம் என்று. அது அளிக்கும் சில சலுகைகள் உள்ளன. ஆனால் அந்த சலுகைகளுக்கு அப்பால் யாரும் எதுவும் பேசமுடியாது.
ஓஷோ அந்த எல்லைக்கோட்டை தாண்டிச்சென்றார். அவருடைய தவறு என்பது, அது ஒரு ஜனநாயக தேசம் என்று சொல்லி அவரை அழைத்து சென்றவர்களை நம்பி அங்கு சென்றதுதான். தனது கருத்துகளை முன்வைக்க இங்கே இடமில்லை என்றும், தனக்கு இங்கே எதிர்ப்பு இருப்பதாகவும், இன்னும் நவீனமான, அடுத்தகட்டத்தில் இருக்கும் சமூகத்தில் இருந்துகொண்டுதான் தான் பேசமுடியும் என்றும், எனவே அங்கு சென்று ஒரு கம்யூனை உருவாக்குவதாகவும் சொல்லித்தான் அங்கு சென்றார். அங்கே அவமதிக்கப்பட்டு மீண்டும் திரும்பிவந்தார். ‘இதுதான் எனது நிலம். எல்லா மீறல்களுக்கும் இடமளிக்கும் நாடு. இங்கிருந்து அல்லாமல் வேறு எங்கிருந்தும் எதையும் என்னால் சொல்லமுடியாது’ என்று இங்கு வந்து சொன்னார்.
ஒரு நம்பூதிரி நகைச்சுவை உண்டு. நம்பூதிரி ஒருவர் ரயிலில் இருந்து இறங்க முற்படுகிறார். அப்போது சிலர் கீழே இருந்து ரயிலில் ஏற முற்படுகிறார்கள். நம்பூதிரி, ‘கொஞ்சம் இருங்க, நான் இறங்கிக்கிறேன்’ என்றார். கீழே இருந்தவர்கள் ‘நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நாங்க ஏறிக்கிறோம்’ என்றனர். அப்போது நம்பூதிரி சொன்னார், ‘நீங்க வேற வண்டியில ஏறமுடியும். ஆனா நான் இதுல இருந்துதான் இறங்க முடியும்’. ஓஷோ போன்ற ஒருவர் இங்கிருந்து தவிர வேறு எங்கிருந்தும் பேசமுடியாது.
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
