பழையகால பாடல்
அமேஸான் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவர் என்னிடம் சொன்னார், வெறும் 10 சதவீதம் பேர் கூட பத்தாண்டுகளுக்கு முந்தைய படங்களைப் பார்ப்பதில்லை என்று. சர்வதேச அளவிலேயே அதுதான் நிலைமை. பெரும் செவ்வியல் படைப்புகள் என்று கொண்டாடப்பட்ட படங்களைக்கூட இளையதலைமுறை பார்க்கத் தயாராக இல்லை. பழைய தலைமுறையினர்தான் அவற்றைப் பார்த்து நினைவுகளை மீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தொடக்க காலகட்டத்தில் இந்த இணையதளங்கள் ஏராளமான திரைப்படங்கள் கைவசமிருந்தால் ரசிகர்கள் வந்துகொண்டே இருப்பார்கள் என நினைத்தனர். ஆனால் பழைய சினிமாக்களை இளையதலைமுறை பார்ப்பதில்லை என அறிந்தபின்னர்தான் புதிய படங்களுக்கான தேவை அவர்களின் கண்களுக்குப் பட்டது. அந்த தளங்களிலும் ‘நேற்று என்ன வந்தது?’ என்னும் கேள்வியே இப்போது உள்ளது.
காலத்தில் திரைப்படங்கள் பழமையடைவது மிக வேகமாக நிகழ்கிறது. இலக்கியம், இசை எல்லாம் அப்படி விரைவாக பழையன ஆவதில்லை. ஏனென்றால் அவை பதிவு செய்யப்பட்டுள்ள ஊடகம் முக்கியம் அல்ல. சிலப்பதிகாரத்தை ஏட்டிலும் அச்சிலும் படித்தோம். இப்போது இணையத்தில் படிக்கலாம். அனுபவம் வேறுபடுவதில்லை. ஆனால் சினிமா அது எடுக்கப்பட்ட ஊடகத்துடன் பிரிக்கமுடியாதபடி இணைந்தது. நாம் செவ்வியல் படைப்பு என்று கொண்டாடும் ஒரு படம் முப்பதாண்டுகள் பழையது என்றால் ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, நடிப்பு எல்லாமே பழையதாகியிருக்கும். அதன் ஊடகமான ஃபிலிம் அதற்கு ஒரு காட்சி சார்ந்த எல்லையை அளித்திருக்கும்.
இதுவே எதிர்மறையாகவும் செயல்படுகிறது. மற்ற கலைகள் ரசிகனின் கற்பனையைக் கோரி நின்றிருக்கின்றன. ஆகவே கற்பனை செய்ய முடியாதவர்கள் அதை ரசிக்க முடியாது. சினிமா அப்பட்டமானது, கண்முன் நிகழ்வது. ஆகவே அதை எவரும் ரசிக்கலாம், எல்லாரும் கருத்தும் சொல்லலாம். அதனால்தான் சினிமா மட்டும் அத்தனை பெரிய ஏற்பைப் பெற்று,பெரு வணிகமாக ஆகிறது. அதுவே அதன் எல்லை. இலக்கிய ஆக்கங்கள் நூறாண்டுகளை எளிதாகக் கடக்கின்றன. பலசமயம் காலம் செல்லச் செல்ல கூடுதலாக வாசிக்கப்படுகின்றன.
நடுவே சினிமாப்பாடல் ஒரு விந்தையான விதி கொண்டது. அதன் இசை காலாதீதமாக நிலைகொள்ளும். மிக மோசமான ஒலிப்பதிவு கொண்ட பழைய பாடல்கள் கூட மீண்டும் பாடப்பட்டு புதிய ஒலிப்பதிவுடன் வருகின்றன. இசைப்போட்டிகளில் சின்னப்பெண்கள் அறுபதாண்டுகளுக்கு முன் ஜானகி பாடிய பாடல்களைப் பாடுகிறார்கள். ஆனால் அவற்றுடன் இணைந்த காட்சியமைப்பை நம்மால் உட்கார்ந்து பார்க்கவே முடியாது.
அண்மையில் ஒரு மலையாளப் பாட்டைக் கேட்டேன். என் கற்பனையில் அது எழுபதுகளின் தொடக்கத்தில் வந்த பாடலாகவே ஓடியது. ஆனால் நான் அந்தப்பாட்டை முன்னர் கேட்டதில்லை. பிரேம் நசீரின் படமா என குழம்பி அகாட்சியை தேடிப்பார்த்தேன், ஒரு கறுப்புவெள்ளை படத்தை எதிர்பார்த்தேன். அது புதிய படம். மோகன் சிதாரா இசையமைத்தது. பழமையை நுணுக்கமாக மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்கள்.
வெள்ளரிப்றாவின்றே சங்ஙாதி என்ற இந்தப்படம் 2011 ல் வெளிவந்தது. சிறந்த படத்திற்கான விருது பெற்றிருக்கிறது. தந்தை 1969ல் ஒரு படம் எடுத்து வெளியிடமுடியாமல் கடன் பெருகி தற்கொலை செய்துகொள்கிறார். அந்த படச்சுருள் மகன் கையில் கிடைக்கிறது. அவன் அதை வெளியிட்டு அதில் நடித்தவர்களைத் தேடிச்செல்கிறான். அந்தப் படத்திலுள்ள பாடல் இது.
அந்தக் கால அசைவுகள், அந்தக்காலச் செயற்கைத்தன்மை எல்லாம் அமைந்து புன்னகைக்க வைக்கும் பாடல். எனக்கு ஆச்சரியம் ஷ்ரேயா கோஷலின் குரல். மலையாளத்தில் பாடியவர்களில் எஸ்.ஜானகி மட்டும்தான் மலையாளியாகவே பாடியவர். ஷ்ரேயா அந்த நுட்பத்தை இப்பாடலில் தானும் அடைந்திருக்கிறார்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
