அகப்பாலை
மருபூமி வாங்க
அன்புள்ள்ள ஜெ
அஜிதனின் மருபூமி சிறுகதைத் தொகுதியை இப்போதுதான் வாசித்தேன். நான் முன்னரே அஜிதனின் சிறுகதைகளை இணையத்தில் வாசித்திருக்கிறேன். ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என்பது என் மதிப்பீடு. சாவு பற்றிய ஒரு அற்புதமான காவியம்போல் இருந்தது. பொதுவாக வாழ்க்கையைப் பற்றிய சலிப்பும், ஒருவகையான நிறைவும் கொண்டபின்னர்தான் சாவு பற்றி நினைப்பார்கள். நாவல்களும் அப்படித்தான் பேசுவது வழக்கம். கள்ளமில்லாத குழந்தைப்பருவம் சாவை வெவ்வேறு புள்ளிகளில் எதிர்கொள்ளும் தருணங்களை ஆழமான கவித்துவத்துடன் சொன்ன கதை அது.
இந்த தொகுதியில் போர்க்ரோஸ்ட், மாரிட்ஜானின் உடல் ஆகியவையும் அழகான கதைகள். மாரிட்ஜானின் உடல் கதையிலுள்ள நுட்பமான கவித்துவத்தை பலமுறை வாசித்து ரசித்தேன். பொதுவாக இளம் படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் நேரடியான, உணர்ச்சிகரமான, வலுவான கதைகளையே எழுதுவது வழக்கம். அதுதான் எளிதில் வாசகர்களிடம் சென்று சேரும். அத்துடன் அவர்களின் உணர்ச்சிநிலைகளும் அப்படிப்பட்டவை. கொஞ்சம் கலைத்திறன் குறைவான இளம் கதையாசிரியர்கள் அரசியல் கருத்துக்களையும் சமூகக்கருத்துக்களையும் கதையாக்குவார்கள். இளம்படைப்பாளிகள் கவித்துவத்தை நம்பியே கதைகளை எழுதுவதும், அக்கதைகள் கவித்துவவெற்றிகளை அடைவதும் மிகமிக அரிதானவை. அதற்கு தன் கலைமேல் நம்பிக்கையும், இலக்கியவாசிப்பும், பயிற்சியும் தேவை. அஜிதனின் எல்லா கதைகளுமே கவித்துவமானவை. ஒரு குழந்தையிறப்புப் பாடல்கூட கவித்துவமானது.
ஆனால் இந்தத் தொகுதியின் அற்புதமான படைப்பு மருபூமிதான். பாலைநிலம் என்னும் அனுபவம் ஒரு பெரிய சிம்பனி போல தொடங்கி வலுத்து உச்சம் அடைந்து அப்படியே பொழிந்து அடங்குகிறது. பாலைநிலத்தை நடந்து கடப்பவர் தனக்குள் உள்ள பாலை ஒன்றைத்தான் கடந்துசெல்கிறார். அந்த அகப்பாலையின் வெம்மைமீதுதான் மழை பொழிகிறது. அந்தக்கதையின் உருவகங்களை படிக்கப்படிக்க வியப்புதான். அழகான நஞ்சுக் கனிகள். துணைவரும் ஓணான். தனிமையில் வந்து சூழும் பிரமைகள். ஒவ்வொரு வரியிலும் அழகும் நுட்பமும் கொண்ட இதற்கிணையான கதை உங்கள் படைப்புகளிலேயே ஒன்றிரண்டுதான்.
அஜிதனுக்கு வாழ்த்துக்கள்.
எம்.பாஸ்கர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
