டாலஸில் ஒரு சந்திப்பு
அன்புள்ள ஜெ,
சென்ற பூன் கூடுகைக்கு டாலஸ், டெக்ஸாசில் இருந்து நான், மூர்த்தி, பாலாஜி, செந்தில்வேல் கலந்துகொண்டோம். அனைவருமே பல பத்தாண்டுகளாக உங்கள் வாசகர்கள். இதற்கு முன் நீங்கள் 2022 இல் டாலஸ் வந்தபோது நாங்கள் சந்தித்து இருந்தாலும், பூன்கூடுகை நட்பை இன்னும் வலுவாக்கியது. அதன்பின் அட்லாண்டா நண்பர் சிஜோ நவம்பர் இறுதியில் இங்கு வந்தபோது நண்பர்கள் மீண்டும் சந்தித்தோம். நட்புக்கூடுகையை ஏன் இலக்கியகூடுகையாக மாற்றி தொடர்ந்து சந்திக்ககூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.
தொடர்ந்து டிசம்பரில் நாங்கள் நால்வரும் நூலகத்தில் சந்தித்து இமைக்கணத்தில் வரும் சிகண்டி பகுதி பற்றி உரையாடினோம். முதல் கூடுகை என்றாலும், செந்தில் பாடி தொடங்கி வைக்க அனைவரும் தீவிரமாக பேச தயாரித்து வந்து இருந்தோம். முதல்முறையே இமைக்கணத்தின் தத்துவகட்டுமானம், உபநிடத முறையில் அமைந்து இருப்பது, இமைக்கணத்தின் விதைகள் முதற்கனலில் அமைந்திருப்பது, அதில் வரும் வராஹி படிமத்தை தொடர்ந்தால் 45000 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட இந்தோனேசிய குகை ஓவியம் முதல் சுமேரிய நாகரிகத்தில் கொபக்லீடேபே கோவிலில் உள்ள வாரகம் சிற்பம் (வேளாண்மை தொடங்குவதற்கு முன் முதல் கற்காலம்) மற்றும் தமிழக ஶ்ரீ முஷ்ணம் பூவாரகன் என்று மிகத்தீவிரமாக இருந்தது. முடிவில் இரு வாரங்களுக்கு ஒருமுறை சந்திப்பது என்று முடிவு செய்துகொண்டோம். கூடுகை முடிந்தபின் ஸ்டார்பக்ஸ் காஃபி உடன் மேலும் இலக்கிய பேச்சு இரண்டு மணிநேரம் நீடித்தது. பின்னர் இமைக்கணத்தில் பீஷ்மர், கர்ணன், விதுரர் என்று ஒரு ஒரு பகுதியாக பிரித்து படித்து கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து சந்திக்கும்போது எங்களுக்கு இமைக்கணத்தின் தத்துவ அடர்த்தியை தவறாக விளங்கி கொள்கிறோமோ, இன்னும் முதிர்ச்சி வேண்டுமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே ஒரு முறை இடைவெளி எடுத்துக்கொள்ளலாம் என்று விஷ்ணுபுர நண்பர் நிர்மல் எழுதிய கதைகள் பற்றி ஒருமுறை விவாதித்தோம். அதுவும் நன்றாகவே அமைந்தது, அதைப் பற்றி அவரிடமும் பகிர்ந்து கொண்டோம்.
மீண்டும் இமைக்கணத்திற்குத் திரும்பி மேலும் கூடுகைகள் ஒருங்கிணைத்தோம். மேலும் இரு நண்பர்கள் வெங்கட் மற்றும் சரவணன் இணைந்து கொண்டனர். திரௌபதி பகுதி வரும்போது இமைக்கணம் திரௌபதி பகுதியில் கேதுமாலன் என்றொரு கதை இருந்தது. அழகை, முழுமையை விரும்பி ஏற்று பின் துறந்து செல்லும் கதை. கலந்து உரையாடியபோது மூர்த்தி கேதுமாலம் என்பது இன்றைய ஈரான் பகுதியாக இருக்கலாம். பழைய காலத்தில் புவியை ஏழு தீவுகளாக வகுத்து அதில் ஜம்புத்வீப பகுதியில் நாம் இருப்பதைச் சொன்னார்.
மேலதிகமாக தேடும்போது, இந்த கேதுமாலன் கதை விஷ்ணுபுராணத்தில் இருக்கிறது. கேதுமாலம் நவகண்டங்களுள் ஒன்று. சுவாயம்புவ மனுவின் மகன் பிரியவிரதனுக்கு பத்து புத்திரர்களும், இரண்டு புத்திரிகளும் பிறந்தனர். பிரியவிரதன் உலகை ஜம்புத்வீபம், பிளக்ஷத்வீபம், சால்மலித்வீபம், குசத்வீபம், கிரௌஞ்சத்வீபம், சகத்வீபம், புஷ்கரத்வீபம் என்று ஏழு த்வீபங்களாகப் பிரித்து ஏழு புத்திரர்களுக்கும் பங்கிட்டுத் தந்தான்.
ஜம்புத்வீபம் பகுதியை பெற்ற அக்னிதரன் தன் நிலப்பகுதியை நாபி, கிம்புருஷன், ஹரி, இளவிரதன், ரம்யன், ஹிரன்வனன், குரு, பத்ரஷ்வன், கேதுமாலன் என்ற ஒன்பது புத்திரர்களுக்குப் பிரித்துக் கொடுத்தான்.
இந்த ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாகப் பிரிக்கப்பட்டது, அவற்றில் ஒன்று பாரத வர்ஷம். மற்ற எட்டு வர்ஷங்கள் கேதுமூல வர்ஷம், ஹரி வர்ஷம், இலாவிருத வர்ஷம், குரு வர்ஷம், ஹிரண்யக வர்ஷம், ரம்யக வர்ஷம், கிம்புருஷ வர்ஷம், பத்ராஸ்வ வர்ஷம். நாபியின் மகன் ரிஷபன் (சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர்). ரிஷபதேவருக்கு சுனந்தா மற்றும் சுமங்களா என இரண்டு மனைவிகள். சுனந்தாவிற்கு பாகுபலி மற்றும் சுந்தரி என இரண்டு மக்கள் பிறந்தனர். சுமங்களாவிற்கு பரதன் மற்றும் பிராமி என்ற இரண்டு மக்கள் பிறந்தனர். இதில் பரதன் ரிஷபதேவரின் மூத்த மகன்.
கோசல நாட்டின் அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட வடபகுதியை பரதனுக்கும், போதானப்பூர் (இன்றைய ஹாசன் மாவட்டம்) நகரை தலைநகராகக் கொண்ட தென்பகுதியை பாகுபலிக்கும் பங்கிட்டு வழங்கினார் ரிஷபதேவர்.
உலகை வென்ற பரதன், தன் தம்பியின் நாட்டை வெல்லாததல் அவர் கையில் வைத்திருந்த அபூர்வ சக்தி படைத்த சக்ராயுதம் சுழலாமல் நின்று விடுகிறது. பின்பு சகோதரர்களுக்கிடையே போர் நடைபெறுகிறது. இதில் பாகுபலி வெற்றிவாகை சூடுகிறார். ஆனால் பாகுபலிக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியைத் தரவில்லை. பாகுபலி துறவறம் பூண்டு சமண சமயத்தை தென்னிந்தியாவில் பரப்பி வந்தார். பிற்காலத்தில் பரதன் இந்திய நாட்டின் பேரரசனாகி மறைந்தபின் பாரதவர்ஷம் என்றும் பரதகண்டம் என்றும் அழைக்கப்படலாயிற்று. இந்த நிரையில் வந்த 22 வது தீர்த்தங்கரர் கிருஷ்ணனின் சித்தப்பா நேமிநாதர். 24 வது தீர்த்தங்கரர் மகாவீரர். கேதுமாலன் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவருக்கு சித்தப்பா.இந்த முதல்கட்ட துப்பறியும் வேலை தவிர, அந்த பகுதி ஒன்றின் உண்மை மதிப்பு, அழகு, முழுமை தேடல், அதன் பின்னடைவு, அதற்கு தீர்வு என அனைத்தையும் முன்வைக்கிறது. இது மீண்டும் எங்களுக்கு தயக்கத்தை உருவாக்கியது.
இதனிடையில் சென்ற பூன் தத்துவமுகாமில் நீங்கள் அளித்த புறவய சட்டகத்தை மருத்துவத்துக்கு போட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆவலில் சொல்வனத்தில் ஒரு மருத்துவக் கட்டுரைத்தொடர் எழுதத் தொடங்கி இருந்தேன். அதில் வரும் சித்த மருத்துவப்பகுதிக்காக தேடியபோது புதுமைப்பித்தன் நாசகார கும்பல் கதைக்கு சென்று சேர்ந்தேன். அந்த கதை என்னை மிகவும் பாதித்தது. எனவே புதுமைப்பித்தன் படிக்கலாமா என்று கேட்டேன். நண்பர்களும் முழு மனதாக ஒத்துக்கொண்டார்கள்.
இதனிடையில் ஆஸ்டின் சௌந்தர் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு கலந்து கொள்ளமுடியுமா என்று ஆஸ்டினில் இருந்து நண்பர் ஸ்கந்தா கேட்டார். டாலஸ் நண்பர்கள் ஆஸ்டின் சென்று கலந்துகொண்டோம். நண்பர் மூர்த்தி இது குறித்து உங்களுக்கு எழுதி இருந்தார்.
நேரில் சந்தித்தபோது சௌந்தர் அவர்கள் எங்கள் கூடுகையில் கலந்துக்கொள்ள ஆவலாக உள்ளதாக சொன்னார். அடுத்தமுறை அவரும், அவர் மனைவி ராதாவும் ஆஸ்டினில் இருந்து மூன்று மணி நேரம் பயணம் செய்து வந்து கலந்துகொண்டனர். அன்னபூர்ணா என்ற புதுநண்பரும் இணைந்துகொண்டார். துன்பக்கேணி, கயிற்றரவு, கபாடபுரம் போன்ற கதைகள் விவாதித்தோம். அதன் பின் ஒன்றாக உணவருந்தச் சென்றோம். கூடுகை நன்றாக இருந்ததாக சௌந்தர் பின்னர் செய்தியும் அனுப்பினார்.
அடுத்த கூடுகை உங்கள் பிறந்தநாள் மற்றும் புதுமைப்பித்தன் பிறந்தநாள் சிறப்பாக நாசகாரகும்பல், மகாமாசானம், சிற்பியின் நரகம், காஞ்சனை கதையும், உங்களின் கிரீட்டிங்ஸ் கதையும் பேசினோம்.பாலாஜி மனைவி ராதாவும் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.
அடுத்து ஒரு நாவல் பற்றி பேசலாம் என்று பாலாஜி சொல்லி, அ முத்துலிங்கம் அவர்களின் “கடவுள் தொடங்கிய இடம்” பற்றி பேசினோம். இதற்கு ஆஸ்டின் நகரத்தில் இருந்து 3 மணிநேரம் பயணம் செய்து பாலா மற்றும் அவர் மனைவி கவிதா, கிரி, ஆஸ்டின் சௌந்தர் மற்றும் அவர் மனைவி ராதா ஆகியோர் வந்திருந்தார்கள். அட்லான்டாவில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வந்து சிஜோ எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நிகழ்வுக்குப் பின் ஆஸ்டின் நண்பர்கள் மாதம் ஒருமுறை வந்து கலந்துகொள்வதாக வாக்களித்துப் பிரிந்தனர். பிறகு அ. முத்துலிங்கம் அவர்களின் 12 சிறுகதைகள் மூன்று கூடுகையிலாக கலந்துரையாடினோம்.
மீண்டும் ஆஸ்டின் நண்பர்களுடன் சேர்ந்து மத்தகம் குறுநாவல் வாசிப்பு கூட்டம் சென்ற சனிக்கிழமை நடந்தது. இந்த முறை 5 மணி நேரப் பயண தூரத்தில் இருந்து சான் அண்டனியோ கோபியும் கலந்துகொண்டார்.
ஒருநாள் பயணம் செய்து எலுமிச்சைசாதம் கட்டிவந்து பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வந்து இலக்கியக்கூடுகையில் கலந்து கொள்வது எல்லாம் உங்கள் மேல்கொண்ட தீரா அன்பினால்தான் சாத்தியமாகிறது. ஆஸ்டின், சான் அன்டோனியோ நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்.
மத்தகம் உரையாடலில் குறுநாவல் வடிவம், அதை ஒட்டி அளிக்கும் வாசக இடைவெளி, என்னைப்போலவே முதல் மூன்று அத்தியாயங்களை மட்டும் அடிக்கடி படித்துக்கொள்ளும் நண்பர்கள், கதையில் ஒரு சிறுவரியாக வரும் பாகனுக்கு பையன்களை பிடிக்கும் என்ற குறிப்பு நுட்பம், கதைக்கு வெளியே கேரள வரலாறு மற்றும் குறுநாவல் அளிக்கும் காலஅளவில் ஒரு சித்திரத்தை உருவாக்கி காட்டுதல் என்று தீவிரமான கலந்துரையாடல் நடைபெற்றது.
முதல் கூடுகைக்குப் பின் கடந்த 8 மாதங்களில் ஏற்பட்ட மாற்றம், திரும்பி பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.சென்ற பூன் முகாமில் ஒருநாள் காலை காபியின் போது நீங்கள் பறவை பார்க்க உலகெங்குமிருந்து கேரளா வருபவர்கள் பற்றி, ஒரு பறவை பார்ப்பதற்கு நாள்கணக்கில் காத்து இருப்பார்கள் என்று சொன்னீர்கள். நான் அந்த அனுபவத்துக்கு பிறகு அவர்கள் என்னவாக உருமாறுகிறார்கள், அது வெறும் ஆர்வம் மட்டுமா என்று கேட்டேன். நீங்கள் அது தெரியாது, அவர்களாக வந்து சொன்னால்தான் உண்டு. வேண்டும் என்றால் நீங்கள் அதைப்போல ஒன்றை தீவிரமாக செய்து கண்டு அடையுங்கள் என்று சொன்னீர்கள். அதன் ஒரு துளி என்றே இந்த கூடுகை ஒருங்கிணைத்தலை உணர்கிறேன்.
நண்பர்கள் அனைவரும் மிகுந்த மனநிறைவையும், அடுத்த கூடுகைக்கான எதிர்பார்ப்பும் இருப்பதாக ஒவ்வொரு முறையும் உணர்கிறோம். சொல்லவும் செய்கிறோம். கலந்துகொண்ட, இனி கலந்துகொள்ளப்போகும் அத்துணை நண்பர்களுக்கும் நன்றியும், அன்பும்.
எல்லாவற்றிற்கும் உங்களுக்கு தீரா அன்பும், நன்றியும் ஜெ!
அன்புடன்,
பிரதீப் பாரதி, டாலஸ்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
