வீழ்த்தப்படுபவர்களின் கதை
ஒருவன் தான் விரும்பும் வாழ்க்கைக்கு மாறாக, வேறு ஒரு வாழ்க்கையை வாழ சூழ்நிலை ஏற்படும்போது அந்த சூழல் ஏற்படுத்தும் ஒடுக்குமுறைகள் அவனை தொடர்ந்து போராடச்செய்து, அவன் விரும்பாத வாழ்க்கையில் அவனை வெற்றி பெறச்செய்கிறது.
திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதி சன்னதி, கடைவீதியின் பின்னனியில் விரைவுப் புனைவாக(Thriller) உருவாக்கப்பட்டதே ஜெயமோகனின் “படுகளம்” நாவல்.
படுகளம் நாவலை வாசித்து முடித்தவுடன் அதில் வரும் சம்பவங்களை கற்பனையில் அசைபோட்டு, விமர்சனம் எழுத முனைந்த போது, பெரும் தொடக்க இடர்பாடு ஏற்பட்டது. அது என்னவெனில் 256 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் நாயகனை ஏலே, மாப்ளே, அண்ணா, தம்பி, முதலாளி, நீங்க என்றே விளிக்கப்படுகிறதே ஒழிய எங்கும் நாயகனின் தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்படவில்லை. நாயகனை தவிர்த்து அனைத்து முக்கிய மற்றும் சிறு கதாபாத்திரங்களுக்கும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. விமர்சனம் எழுதும்போது வில்லன் காசிலிங்கம் என்று முன்வைக்கும் போது நாயகனை முன்வைக்க சாமானியன் என்ற பொதுப் பெயரை பயன்படுத்தியுள்ளேன்.
சாமானியன் ஒருவன் தன்னையும் தன் குடும்பத்தையும் சமூகத்தில் கௌரவமான தளத்தில் பொருத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு, முன்னேற்றத்தின் முதல் படியை தொடுகிறான். இம்முனேற்றத்திற்கு காசிலிங்கம் என்ற பண பலமும் அதிகார பலமும் கொண்ட முக்கிய புள்ளியிடமிருந்து அச்சுறுத்தல் வருகிறது. பாதிக்கப்பட்ட சாமானியன் காசிலிகத்தின் அச்சுறுத்தலை தவிர்க சமூகத்தில் உள்ள அதிகார அமைப்புக்கலான காவல் நிலையம், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வியாபாரிகள் சங்கம் என்று அனைத்திலும் முறையிடுகிறான். சாமானியனுக்கு ஏமாற்றமும் அவமானமும் இயலாமையும் மட்டுமே மிஞ்சுகிறது.
எல்லா அதிகார அமைப்புகளும் சாமானியனுக்கானது அல்ல. அதிகார அமைப்புகள் அதைவிட அதிகாரம் படைத்தவர்களுக்கானது என்பதை சாமானியன் உணருகிறான். காசிலிங்கத்தின் பணபலம், அதிகார பலம், அகங்காரம் இவை எவற்றையும் மீதம் வைக்காமல் சாமானியன் தனது ராஜதந்திர நகர்வுகளில் படிப்படியாக எப்படி நிர்மூலமாக்குகிறான் என்பதை நாவலில் சுவாரசியமான சம்பவங்களை கொண்ட பக்கங்களாக உருவாக்கியுள்ளார் ஜெயமோகன்.
படை வலிமையும் ராஜதந்திரமும் ஒருங்கிணைந்து செயல்படும்போதே இலக்கை அடைய முடியும் என்பதை குருஷேத்திர யுத்தம் கற்பிப்பதை போல் இந்த நாவலில் சாமானியன் தனது புத்திகூர்மையையும் வலிமையும் பயன்படுத்தி ஒவ்வொரு அதிகார அமைப்பையும் தனது கட்டுப்பாட்டில் செயல்படுத்தி, தனது பகையை கதிகலங்க வைக்கிறான்.
ஒருவன் தன்னை தகவமைத்துக் கொள்ள வன்முறையை நாடும் போது அவன், வன்முறை பாதையை தேர்ந்தெடுத்ததற்கான தர்க்க நியாயங்களை உருவாக்கிக் கொள்கிறான். இப்படி வன்முறை வழியை தேர்ந்தெடுத்தவன் எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வை கொண்டு அலைவான். ஏனெனில் அவனை கொல்வதற்கான தர்க்க நியாயங்களை எதிரிகள் கற்பித்துக்கொண்டிருப்பார்கள். இதுபோன்ற வன்முறையின் உளவியலை நாவல் தெளிவாக புலப்படுத்துகிறது.
சாதுவாக இருப்பவன் மிரண்டால் என்னவாகும் என்பதை, யதார்த்தத்தை மீறினாலும், பொருந்தக்கூடிய சம்பவங்களுடன் நாவல் படைக்கப்பட்டிருப்பதால் சுவாரசியம் சற்றும் குறையாமல் வாசிக்க முடிகிறது. மேலும் கதைக் காலம் சமகாலத்தை சேர்ந்ததாகவும் மொழிநடை எளிதாகவும் இருப்பதால் தீவிர வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள் மிக எளிதாக வாசித்து தீவிர வாசிப்பை சென்றடைய இந்த நாவல் பொருத்தமானதாக அமையும்.
–வ.லட்சுமணசாமி,
அன்புள்ள ஜெ
ஆலம், படுகளம் இரண்டு நூல்களையும் வாசித்தேன். இரண்டுமே ஆற்றல்மிக்கவர்களால் அழிக்கப்பட்ட சாமானியர்களின் எதிர்வினை என்ற அளவில் எடுத்துக்கொள்ளத்தக்கவை. சாமானியர்களிடமுள்ள ‘ஹீரோயிஸம்’ வெளிப்படும் தருணங்கள் அவை. உங்கள் எழுத்துக்களில் உள்ள நிதானமான விரிவான மனஓட்டங்கள் இல்லாமல் கதைகள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன. ஆனால் ஆலம் நாவலில் வாத்தியாருக்கும் அவர் மகனுக்குமான உறவு சீனியர் வக்கீலுக்கும் அவர் உதவியாளருக்குமான உறவு, வீரலட்சுமி குடும்பத்தின் சித்தரிப்பு ஆகியவை ஒரு நல்ல எழுத்தாளரால் மட்டுமே எழுதப்படத்தக்கவை. அவற்றை திரில்லர் எழுத்தாளர்கள் எழுத முடியாது. படுகளம் நாவலில் அம்மாவுக்கும் கதாநாயகனுக்குமான உரையாடலாகட்டும், வக்கீலும் கதாநாயகனும் குடிக்கும் காட்சியாகட்டும் அதேபோல பெரிய கலைஞர்கள் மட்டும் எழுதும் இடங்கள். அதனால்தான் பரபரப்பான நாவல் என்பதை தாண்டி இவை இலக்கியமாகின்றன.
ஜே.கிருஷ்ணகுமார்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
