நிகழ்ந்த வாழ்வு

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன், நான் பத்மநாபபுரத்தில் தங்கியிருந்து, தக்கலை தொலைபேசி நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, என் அண்ணாவின் ஆணையால் நாகர்கோயில் பார்வதிபுரத்தில் வீடுகட்ட ஆரம்பித்தேன். அருண்மொழியின் பேரில் நிலம் இருந்தமையால் அவள்பேரிலேயே கடன் வாங்கினேன். என் பெயரால் கூட்டுறவுக்கடன். மேலும் பல கடன்கள். ஒரு கட்டத்தில் அருண்மொழி கவரிங் நகையுடன் அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள். நாங்கள் இருவரும் சேர்ந்து கையில் வாங்கியது ஆயிரத்தி ஐநூறு ரூபாய். மொத்தத்தில் வீட்டுச்செலவுக்கே பணமில்லா நிலை.

அப்போதுதான் பாஷாபோஷிணியில் எழுதும்படி அழைப்பு. என் நண்பர் கே.ஸி.நாராயணன் அப்போது பாஷாபோஷிணி ஆசிரியர். எனக்கு மலையாளம் எழுதுவது கடினம். சமாளிக்கலாம், ஆனால் என்ன எழுதுவது? ஏற்கனவே மலையாளத்தில் கட்டுரை, குறுங்கட்டுரை வடிவங்களில் ஏராளமாக எழுதிக்கொண்டிருந்தார்கள். ஓ.வி.விஜயன் எழுதிய அரசியல் குறுங்கட்டுரைகள் மிகப்புகழ்பெற்றவை (ஒரு செந்தூரப்பொட்டின் நினைவாக என்னும் தொகுப்பு) மாதவிக்குட்டி எழுதிய இரண்டு தன்வரலாறுகள் ( பால்யகால நினைவுகள், நீர் மாதுளம் பூத்தகாலம்) மலையாளத்தின்  ‘கிளாஸிக்’ எனப்பட்டவை. பயணக்கட்டுரைகளில் ஆஷா மேனன் பெரிய கவனத்தைப் பெற்றிருந்தார். எம்.பி.நாராயணபிள்ளையின் அங்கதக்கட்டுரைகளும் புகழ்பெற்றவை. 

நான் எழுத எனக்கென இருந்தது என் வாழ்க்கைதான் என்று எண்ணினேன். அந்த வாழ்க்கை எவருக்குமில்லை. அத்துடன் என் நிலம், தமிழகமும் அல்லாத கேரளமும் அல்லாத தென்திருவிதாங்கூர், தனித்துவம் கொண்டது. தனக்கான பெரும் பண்பாட்டு மரபு உடையது. அதை எழுதலாமென்று துணிந்தேன். என் நடை மலையாளத்தின் பொதுவான நடையாக இருக்கலாகாது என உறுதிகொண்டேன். என் ஆசிரியரின் ஆசிரியர் எம்.கோவிந்தன். அவர் முன்னெடுத்த ‘நாட்டுமலையாள’ இயக்கம் மேல் எனக்கு பெரும் ஈடுபாடு இருந்தது. சம்ஸ்கிருதத்தை கூடுமானவரை தவிர்த்து மக்களின் பேச்சுமொழியருகே வரும் உரைநடையில் எழுதுவது அது. அவ்வாறு எனக்கான தனிநடை உருவானது. ஆனால் அது வட்டார வழக்கு அல்ல. நவீனக்கவித்துவத்தின் செறிவுகொண்ட நடை அது.

என் தொடர் பெரும்புகழ் பெற்றது. அந்த நடையின் தனித்துவம் பெரும்பாலும் அனைவராலும் புகழப்பட்டது. மாத்ருபூமி பதிப்பகம் அக்கட்டுரைகளை கல்பற்றா நாராயணனின் அற்புதமான முன்னுரையுடன் உறவிடங்கள் என்னும் பெயருடன் வெளியிட்டது. தொடர்ச்சியாக இன்றுவரை அச்சிலிருக்கும், புகழ்பெற்ற நூல் அது.  அந்நூலை சங்கீதா புதியேடத்து Of Men Women and witches என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அது Juggernaut  பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

அந்நூலிலுள்ள பல கட்டுரைகளை தமிழில் பின்னர் நான் மீண்டும் எழுதினேன். பல கட்டுரைகள் முழுக்க மலையாளத்தன்மை கொண்டவை, ஆகவே மொழியாக்கம் செய்யப்படவில்லை. தமிழில் என் தன்வரலாற்றுக்கட்டுரைகளை மேலும் தொடர்ச்சியாக எழுதினேன். அவை என் இணையதளமான www.jeyamohan.in தளத்தில் வெளிவந்தன. அவற்றின் தொகுப்பே நிகழ்தல் என்னும் நூல். முதற்பதிப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. மேலும் சில பதிப்புகள் வெளிவந்துள்ளன. இப்போது விஷ்ணுபுரம் பதிப்பகம் அதன் புதியபதிப்பை வெளியிடுகிறது.

இந்நூல் அனுபவக்கட்டுரைகளின் தொகுப்பு. ஆனால் அனுபவங்களின் நேரடிப்பதிவு அல்ல, கட்டுரைகளும் அல்ல. கதைகளின் வடிவம் இவற்றுக்குண்டு. உத்வேகம் மிக்க வாசிப்புத்தன்மை கொண்ட ஆக்கங்கள் இவை. புனைவுச்சாயல் கொண்டவை. நிகழ்வுகளை தொகுத்து அவற்றுக்கு சிறுகதையின் வடிவத்தை அளிப்பதில் புனைவம்சம் பங்களிப்பாற்றுகிறது.

இந்நூலை வெளியிட்ட உயிர்மை மனுஷ்யபுத்திரனுக்கும், பின்னர் வெளியிட்ட நற்றிணை மற்றும் கிழக்கு பதிப்பகங்களுக்கும், இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.

ஜெயமோகன்

எர்ணாகுளம்

ஏப்ரல் 10, 2025

நிகழ்தல் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.