பெருங்கனவுகளின் விளிம்பில்…

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பை தொடங்கியபோது அதை ஒரு நெகிழ்வான நண்பர்கூட்டமாக மட்டுமே நடத்தவேண்டும் என்னும் எண்ணம் எனக்கிருந்தது. அதை நண்பர்களுடன் பேசி புரியச்செய்து அது வெற்றிகரமான ஒரு இயக்கவடிவம்தான் என்பதை நிறுவ சில ஆண்டுகள் ஆகியது. இதற்கு மைய நிர்வாகம் என ஏதுமில்லை. தலைமையும் இல்லை. (சில இடங்களில் டிரஸ்ட் தேவைப்படுகையில் சில பெயர்கள் பதிவுசெய்யப்படுகின்றன). இதை சார்ந்த நண்பர்கள் தங்கள் ஊர்களில், தங்கள் ஈடுபாட்டின்படி இலக்கியச் செயல்பாடுகளை முன்னெடுக்கலாம். அவை இலக்கியம்- தத்துவம் சார்ந்தவையாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
இன்று இலக்கியவாதிகள் முற்றிலும் அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள். தங்களை எவரேனும் கவனிக்கவேண்டும் என்பது இலக்கியவாதிகளின் ஏக்கம். எவரேனும் கவனிக்கிறார்கள் என்றால் மட்டுமே அவர்கள் செயல்படவும் முடியும். ஆகவே அவர்கள் முகநூலுக்குள் நுழைகிறார்கள். முகநூல் என்பது தனிமைப்பட்டுப்போன நடுவயதினரின் உலகம். அவர்கள் வெவ்வேறு அரசியல் பாவனைகளுடன் அங்கே வெறுப்பை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.அங்கே செல்லும் எழுத்தாளர்கள் அவர்களால் அடித்துத் துவைக்கப்படுகிறார்கள். அல்லது மெல்ல தாங்களும் அப்படி ஆகிவிடுகிறார்கள். எங்கள் செயல்பாடுகளில் முதன்மையானது இலக்கியத்தைப் பயில்வதைப்போலவே அந்த இலக்கியவாதிகளுடன் உரையாடுவதும் ஆகும். அவர்களிடம் அவர்களின் படைப்பைக் கூர்ந்து வாசிக்கும் வாசகர்கள் உள்ளனர் என்று தெரிவிப்பதுதான் அது.

தமிழகத்திலும் ‘உலகமெங்கும்’ விஷ்ணுபுரம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எல்லா வார இறுதியிலும் குறைந்தது மூன்று நிகழ்வுகள். ஆனால் சிலசமயம் நிகழ்வுகள் ‘நெரிசலாகி’ நண்பர்கள் ஒன்றை விட்டுவிட்டால் மட்டுமே இன்னொன்றுக்கு செல்ல முடியும் என்ற அளவில் ஆகிவிடுகிறது.அத்தகையது சென்ற வாரம். எங்கெங்கே என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்று என்னால் நினைவுகூரவே முடியவில்லை. நானே எழுதியும் நண்பர்களிடம் விசாரித்தும் தெரிந்துகொண்டேன்.
நான் ஐரோப்பாவில் இருந்தேன். ஆஸ்திரியா நாட்டில் சாலிஸ்பர்க் அருகே மிட்டர்சில் என்னும் ஊரில் மலைத்தங்குமிடம் ஒன்றில் ஐரோப்பிய விஷ்ணுபுரம் குழுமம் நடத்தும் முதல் தத்துவப் பயிலரங்கம். 32 பேர் கலந்துகொண்டனர். (அவ்வளவுதான் இடம்). ஒரு நாள் இலக்கியப் பயிற்சி. மூன்றுநாட்கள் தத்துவப் பயிற்சி. இங்கே இந்த வகுப்பு தொடர்ந்து நிகழும். என்னுடன் சைதன்யா இருந்தாள். சைதன்யா நீலி இதழுக்காக நடத்திய காணொளி உரையாடல் இரண்டுநாட்களுக்கு முன்னர்தான் நடைபெற்றிருந்தது. (நீலி சைதன்யா உரையாடல்)

ஜூலை 10 அன்று குருபூர்ணிமா. அன்றுதான் மிட்டர்சில் நிகழ்வு தொடக்கம். ஆகவே ஜூலை 10 அன்று ஒரு இணையச் சந்திப்பை நிகழ்த்தினேன். வெண்முரசு பற்றி உரையாடினேன்.நூறுபேர் கலந்துகொண்டார்கள். காவியம் நாவல் உருவானது, வெண்முரசுக்கும் அதற்குமான உறவு, ஒரு பெருஞ்செயலைச் செய்வதும் அதை நீங்குவதும் என பல தளங்களிலான பேச்சும் கேள்விபதிலும்.(வெண்முரசு நாள் உரையாடல்- ஜெயமோகன். இணையம்)
அன்று ஈரோடு அருகே வெள்ளிமலையில் குரு சௌந்தர் குருபூர்ணிமா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கதக் நடனம், பாடல், வெண்முரசு விவாதம் என விரிவான முழுநாள் நிகழ்ச்சி. அதைத் தொடர்ந்து அவர் நடத்திய யோகப்பயிற்சி மூன்றுநாள் நடைபெற்றது. (குருபூர்ணிமா, நடனங்கள், இலக்கிய அரங்கு- யோகேஸ்வரன் ராமநாதன் )

அந்த வாரம் முழுக்க எங்கெங்கோ நிகழ்ச்சிகள். ஓசூரில் நண்பர் பாலாஜிக்குச் சொந்தமான பள்ளியில் நண்பர் வேணு வேட்ராயனும் சரண்யாவும் கவிஞர் தேவதேவனுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். கவிஞருடன் உடனுறைதல். தேவதேவனின் பேச்சைக் கேட்பதற்கான இரண்டு நாட்கள். அதை பற்றி பலர் கடிதங்களில் உணர்ச்சிபூர்வமாக எழுதிக்கொண்டிருந்தார்கள். முந்தைய வாரத்தில் நண்பர் சுப்ரபாரதி மணியனுடன் ஒரு சந்திப்பை கோவை சொல்முகம் குழுவினர் கோவை விஷ்ணுபுரம் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பெங்களூர் சொல்லாழி நண்பர்கள் பாவண்ணனுடன் ஒரு சந்திப்பை ஆட்டக்கலாட்டா நூல்விற்பனையக அரங்கில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதே நாளில் அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்கள் கூடி என்னுடைய மத்தகம் கதை பற்றி விவாதித்தனர். அடுத்த நாளே சேலத்தில் வெண்முரசு வாசகர் வட்டத்தின் சந்திப்பு நிகழ்ச்சி.

மேலும் மேலும் நிகழ்ச்சிகள். வரும் ஆகஸ்ட் மாதத்தில் 14,15,16 தேதிகளில் ஈரோட்டில் தமிழ்விக்கி தூரன் விருதுவிழா நிகழ்கிறது. இம்முறை கர்நாடகத்தின் புகழ்பெற்ற தொல்லியலாளர் ஒருவரும் தமிழகத்தின் தொல்லியல்- வரலாற்றாய்வாளர்களும் வாசகர்களுடன் உரையாடுகிறார்கள். தமிழகத்தில் இன்று இதற்கான வாய்ப்புள்ள நிகழ்வுகள் மிகச்சிலவே உள்ளன. நவீன இலக்கியம் என்பது ஒரு வகை வம்புப்பேச்சு என்னும் உளப்பதிவு தேர்ந்த வாசகர்களிடம் உண்டு. அதைக் களைவதற்கான முயற்சிகள் இவை.
வாரந்தோறும் முழுமையறிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஜெயக்குமாரின் மரபிசை வகுப்பும் அஜிதனின் மேலையிசை வகுப்பும் ஜூலை இறுதியில் நிகழ்கின்றன. ஏ.வி.மணிகண்டனின் நவீனக்கலைவகுப்பு ஆகஸ்ட் முதல்வாரம். ஆகஸ்ட் மூன்றாவது வாரம் நான் தத்துவ வகுப்பை நடத்துகிறேன். ஆகஸ்ட் நான்காவது வாரம் ஜெயக்குமார் ஆலயக்கலை வகுப்பை நடத்துகிறார். முழுமையறிவு நிகழ்ச்சிகள் ஒரு பெரிய அறிவு- கலை இயக்கமாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

வரும் அக்டோபரில் நான் அமெரிக்கா செல்கிறேன். என் நூலான Stories of the True வெளியீட்டை ஒட்டிய விளம்பர நிகழ்வுகள் பல உள்ளன. கூடவே வழக்கம்போல பூன் முகாம். அங்கே இம்முறை இரண்டு நாள் தத்துவமுகாம் இரண்டாம் நிலை. கூடவே தத்துவ முகாம் முதல்நிலையும் நிகழும். அமெரிக்காவில் இந்நிகழ்வை தொடர்ச்சியாக நடத்தும் எண்ணம் உண்டு.
நான் அமெரிக்காவில் இருந்து திரும்ப வந்ததுமே இந்த ஆண்டு டிசம்பர் தொடக்கவாரத்தில் நானும் அஜிதனும் லண்டன் செல்கிறோம். லண்டனில் என் நூலின் வாசிப்பு நிகழ்வுகள் இரண்டு. (லண்டன், மற்றும் பிர்மிங்ஹாம்). லண்டனில் அஜிதன் நடத்தும் மேலைத்தத்துவ அறிமுக முகாம் நிகழ்கிறது. ஆர்வமுள்ள நண்பர்கள் கலந்துகொள்ளலாம், அறிவிப்பு வரும். டிசம்பர் இறுதியில் விஷ்ணுபுரம் விருது விழா. ஜனவரிக்கான திட்டங்கள் தனி.

இந்த வகுப்புகள் வழியாக நாங்கள் ‘வாசகர்களை’ மட்டும் உருவாக்கவில்லை. ஆகவே ‘பெருவாரியான’ பங்கேற்பை நாங்கள் விரும்பவில்லை. நிகழ்ச்சிகளை முடிந்தவரை தீவிரமாகவே நடத்துகிறோம். அந்த தீவிரத்துடன் இணைந்துகொள்பவர்களே எங்களுக்குத் தேவை. இணையம் இன்று உருவாக்கிக் கொண்டிருக்கும் முடிவற்ற வம்புகளுடன் தொடர்புடையவர்களை விலக்கிவிடுகிறோம். அவர்களால் செயல்களில் ஈடுபட முடியாது, ஒருங்கிணைப்பை உருவாக்கவும் முடியாது, கசப்புகளையே விளைவிக்க முடியும். இன்னொரு வட்டம் உருவாகவேண்டும் என திட்டமிட்டோம். எதிர்பார்த்ததற்கும் பல மடங்கு வீச்சுடன் மிகப்பெரிய இளைஞர்வட்டம் ஒன்று திரண்டுகொண்டிருக்கிறது. உலகம் எங்கும்.
நாங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பது அடுத்த தலைமுறை ஆசிரியர்களை. அந்தத் தகுதிகளுடன் திரண்டு வந்துகொண்டிருப்பவர்கள் எவர் என்று கூர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் விரிவான கனவுகள் இன்று எங்களுக்கு உள்ளன. நாங்கள் இப்போது எண்ணியிருப்பது மிகப்பெரிய ஒரு கல்வி இயக்கத்தை உருவாக்குவதைப்பற்றி…. விரைவில் அதை அறிவிப்போம்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
