புதிய மொழி
தாவோ கோவிலுக்குச் செல்வது எப்படி என்றொரு ஆங்கிலக் கவிதை தொகுப்பை மலையாள கவிஞர் சச்சிதானந்தன் வெளியிட்டுள்ளார். இருமொழிகளில் வெளியாகியுள்ள இந்தத் தொகுப்பை INTERNATIONAL POETRY NIGHTS IN HONG KONG வெளியிட்டுள்ளது. இதில் மிகச்சிறந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன

இந்தத் தொகுப்பின் முதல்கவிதை திக்குவாய் பற்றியது. மிக அழகாக எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை திக்குவாயை ஒரு குறீயிடாக மாற்றுகிறது. திக்குவாய் குறித்த கேலிகள். அவமானங்களைப் புறந்தள்ளி அதனைப் புதியதொரு மொழியாக அறிவிக்கிறது.
••

திக்குவாய் என்பது ஒரு குறையல்ல.
அது ஒரு பேச்சு முறை.
திக்குவாய் என்பது வார்த்தைக்கும் அதன் அர்த்தத்திற்கும்
இடையில் விழும் மௌனம்,
எல்லோரும் திக்கிப் பேசும் போது,
திக்குவாய் அவர்களின் தாய்மொழியாக மாறுகிறது:
இப்போது நம்மிடம் இருக்கும் மொழியைப் போல.
மனிதனைப் படைத்தபோது கடவுளும் திக்கிப் பேசியிருக்கக வேண்டும்.
அதனால்தான் மனிதனின் அனைத்து வார்த்தைகளும்
வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன.
அவரது பிரார்த்தனைகள் முதல் கட்டளைகள் வரை,
அனைத்தும் தடுமாறுகின்றன.
கவிதையைப் போல,
கே. சச்சிதானந்தன்.
(நீண்ட இக்கவிதையின் சில பகுதிகளை மட்டுமே மேலே கொடுத்துள்ளேன்.)
கவிதை என்பதே சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்ல முடியாமல் திக்கிப் பேசியதே ஆகும். அது நேரடி பொருளைத் தராது. நாமாகப் பொருள் கொள்ள வேண்டும் என்ற கவிஞரின் பார்வை சிறப்பானது.
இந்தியாவின் சிறந்த கவிஞர்களில் ஒருவராக அறியப்படும் கே. சச்சிதானந்தனின் கவிதைகள் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. அவரும் நிறைய உலகக் கவிதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
கவிதையில் திக்குவாய் குறித்த சச்சிதானந்தனின் பார்வை நமக்குள் படிந்திருந்த பொதுப்பிம்பத்தை மாற்றுகிறது.
ஒருவர் திக்கிப் பேசும் போது படிகளில் உருண்டோடும் கோலிகளைப் போலச் சொற்கள் தாவித்தாவி வெளிப்படுவதாகவும், திக்கிப் பேசும் போது சொல் இசையாவது போலவும் உணரச் செய்கிறது.
புதிய மொழியைக் கற்றுக் கொள்ளும் போது நாம் எல்லோரும் திக்குவாயர்களே என்பதைப் புரிய வைக்கிறது.
••
,
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

