நீலநிழல் (குறுநாவல்)- 5
( 5 )
நாற்காலியில் எடைமிக்க உடல்கொண்டவன் போல கால் தளர்ந்து அமர்ந்துகொண்டேன். டாக்டர் சற்று அப்பால் பழைய மரநாற்காலியில் தலைதாழ்த்தி, தோள்கள் தளர்ந்து அமர்ந்திருந்தார்.
கடிகாரத்தின் ஓசை மட்டும் அறைக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. சிறையில் அன்று எவரும் தூங்கவில்லை என்று தோன்றியது. பேச்சொலிகள் முழக்கமாக ஒலித்தன. அவ்வப்போது வார்டர்கள் விசில் ஊதி அதட்டும் ஒலிகள். ஒருமுறை பாரா மாறும் விசில்களும் ஆணைகளும் கேட்டன.
சகாதேவன் வரும் ஓசை கேட்டது. அவருடன் முருகேசன் ஏதோ பேசிக்கொண்டு வந்தார்.
சகாதேவன் “டைம் ஆயிடுச்சு சார்… காலோஸுக்கு போகலாம்” என்றார்.
“நாய்க்கர் என்ன பண்றார்?”
“குளிச்சார், பெருமாளுக்கு பூஜை பண்ணணும்னார். அவரே ரெண்டு சின்ன கால்தடம் மாதிரி சாக்பீஸாலே தரையிலே வரைஞ்சு அதுக்கு பூபோட்டு கும்பிட்டார். புதுவேட்டி சட்டை கொண்டாந்து வைச்சிருந்தோம். அதை உடுத்திக்கிட்டு ரெடியாயிட்டார்… சிரிச்ச முகமாத்தான் இருக்கார்.”
டாக்டர் “அவங்காளுங்க வந்திட்டாங்களா?” என்றார்.
“அவங்க வக்கீலும் மத்த ஆளுங்களும் எல்லாம் அந்தப்பக்கம் விசிட்டர்ஸ் ஏரியாவிலே இருக்காங்க. உள்ள அனுமதி கெடையாது. பாடிய நீங்க செக் பண்ணி ஆளு இறந்தாச்சுன்னு சர்ட்டிஃபை பண்ணினதும் அவங்களுக்கு சட்டபூர்வமா ஹேண்டோவர் பண்ணிடுவோம். அதான் புரசீஜர்.”
“அந்த வக்கீல் அங்கதான் இருக்காரா?”
“ஆமா, நீங்க உள்ள இருக்கிற விஷயம் ஒரு மணிநேரம் முன்னாடித்தான் அவருக்கு தெரிஞ்சுது… அப்டியே டல்லாயிட்டார். அப்டி அவர பாத்ததே இல்ல. தலையை கையாலே தாங்கிட்டு நாக்காலியிலே உக்காந்திட்டிருக்கார்.”
நான் தலையை அசைத்தேன்.
“விசித்திரமான ஒரு ராத்திரி” என்று டாக்டர் சொன்னார். “அவரை செக் பண்றப்ப நான் ஒரு மனுசன்கூட இருக்கிற மாதிரியே இல்லை. ஏதோ தெய்வம் மாதிரி இருக்காரு.”
“சாவோட விளையாடுறார் மனுசர்… இத்தனை வாட்டி உயிர்தப்பியிருக்கார்… உயிர்தப்பியே சலிச்சுப் போயிருக்கும்போல. சாகிறதுக்கு அவரே ரெடியாயிட்டார்… யானையெல்லாம் அப்டித்தான் சாகுமாம். சாக அதுவே முடிவெடுத்து, ஒரு எடத்தை செலெக்ட் பண்ணி, அங்க போயி மரத்திலே சாய்ஞ்சு நின்னுக்கும். சாப்பாடு தண்ணி இல்லாம இருபது முப்பதுநாள் நின்னு அப்டியே விளுந்து செத்திரும்” என்றார் சகாதேவன்.
“எல்லா சாவிலேயும் ஒப்புக்குடுக்கிற ஒரு எடம் இருக்கு. என்னாலே முடியலை, போறும்னு பேஷண்டே ஒத்துக்கிடுவார்… அவ்ளவுதான், அதுக்குமேலே செய்ய ஒண்ணுமில்லை” என்றார் டாக்டர்.
“அவரு கெளம்பியாச்சு… அவருபாட்டுக்கு சிரிச்சுக்கிட்டே போகப்போறார். என்னமோ ஜாலி டிரிப்பு போற மாதிரி” சகாதேவன் சொன்னார்.
“இத்தனை வாட்டி அவர கொல்ல டிரை பண்ணியிருக்காங்க… எப்டி தப்பினார்?” என்று டாக்டர் கேட்டார்
“என்னைக்கேட்டா அவரு நிழல்னு சொல்றாரே அதிலே இருக்கு சூட்சுமம். அவரு எப்பவுமே தன் நிழலை பாத்திட்டிருக்காரு… அது ஒருத்தர் நிலைக்கண்ணாடியிலே பாக்கிற மாதிரித்தான்… நாம ஒருத்தர வெட்டப்போனா என்ன பாப்போம்? அவரு நம்மள பாக்கிறாரான்னு பாப்போம், இல்லியா? கண்ணு வேறபக்கம் திரும்பியிருந்தா நம்மள அவரு பாக்கலைன்னு நினைப்போம். ஆனா அவரு நிழல்ல நம்மள பாத்திட்டிருக்கார்… அதான் டிரிக்கு” சகாதேவன் சொன்னார்.
“ஓகோ” என்று டாக்டர் சொன்னார். அவருக்கு ஒரு சுவாரசியம் வந்தது போல் இருந்தது.
“அதோட அவருக்கு எடதுகை வாக்கு… அதை கவனிக்கணும். மிகப்பெரிய சண்டியருங்க முக்காவாசிப்பேரு எடதுகைக்காரனுக… நாம பெரும்பாலும் வலதுகை ஆளுங்க. நாம மத்தவனும் வலதுகைக்காரன்தான்னுதான் சாதாரணமா நினைப்போம். அந்தக் கணக்கிலேதான் அடிக்கவோ வெட்டவோ போவோம்… இவரு சட்னு இடதுகைய வீசுறப்ப எல்லாமே குழம்பிரும்…” என்று சகாதேவன் உற்சாகமாக சொன்னார். “இவரு எப்பவுமே ஆயுதத்தை வெளியே வச்சிருக்க மாட்டாரு. அது இடதுபக்கம் வேட்டிக்குள்ள இருக்கும். வலதுபக்கமா ஒருத்தன் வெட்டப்போனா சட்னு இடது கையிலே ஆயுதம் வந்திரும்… அதை எதிர்பார்க்கவே முடியாதுல்ல?”
“சரிதான்” என்றார் டாக்டர்.
“அப்றம் பல வாட்டி தப்பிச்சிட்டார். அதோட கொலைய எப்டி செய்வாங்க, என்னென்ன திட்டமிடுவாங்க எல்லாமே நுணுக்கமா தெரிஞ்சாச்சு… அதாவது, அவரோட சப்கான்ஷியஸுக்கே தப்பிக்கிறது எப்டீன்னு தெரியும். அதான் அவரு தப்பிக்கிறதிலே எக்ஸ்பர்ட்… அது தெரியாம வந்து உசிரக்குடுக்கிறானுக முட்டாள்கள்.”
“இப்ப தப்பிக்க முடியலை. சட்டமே பிடிச்சு கொல்லுது அவர” என்றார் டாக்டர்.
“அப்டித்தான் நான் நினைக்கிறேன். அவரோட பிரச்சினை ஈகோதான். அவருக்கு தப்பிச்சு தப்பிச்சு சலிச்சுப்போச்சு… உயிரோடு இருக்கிறதே அலுப்பா இருக்கு. ஆனா எதிரிகையாலே சாவுறது அவரோட ஈகோவுக்கு அசிங்கம்… ஒரு அருவாக்காரன் அவர வெட்டிக்கொன்னான்னா அவன் ஹீரோவா ஆயிடுவான்ல? அத அவரு எப்டி ஒத்துக்கிடுவார்? இப்ப சட்டம் அவரை தூக்கிலே போடுது. இது கௌரவம்தானே? போய்டலாம்னு முடிவு பண்ணிட்டார்…”
“அதைத்தான் வெள்ளையனும் திட்டம்போட்டிருக்கான்” என்றேன்.
சகாதேவன் திகைத்தவர் போலிருந்தார்.
“வெள்ளையன் யாரு?” என்றார் டாக்டர்.
“இவரு சாகணும்னு ஆசைப்படுற ஒருத்தன். ஆனா அவனே கொன்னா அந்த பழி சும்மாவிடாதுன்னும் பயப்படுறான்” என்றேன்.
சகாதேவன் ஒன்றும் சொல்லவில்லை. முருகேசன் உள்ளே வந்து கைக்கடிகாரத்தை காட்டினார்.
“கெளம்பலாம்” என்றார் சகாதேவன்.
நாங்கள் குளிர்ந்த பனிப்படலம் பரவியிருந்த கற்பாளங்களை மிதித்து ஓசையெழுப்பியபடி நடந்தோம்.
சிறையில் ஓசைகள் அடங்க ஆரம்பித்தன. கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்த அமைதி உருவானது. எங்கள் காலடிகள் முரசொலி போல ஒலித்தன.
தூக்குமேடை அருகே டிஐஜியும் ஏழு ஆயுதமேந்திய காவலர்களும் நின்றிருந்தார்கள். டிஐஜி ஏதோ மென்றுகொண்டிருந்தார். காவலர்கள் பதற்றமடைந்தவர்கள் போலிருந்தனர்.
நானும் டாக்டரும் டிஐஜி அருகே சென்று நின்றோம். அவர் என்னை பார்த்து புன்னகைக்காமல் தலையசைத்தார். சகாதேவன் வாட்சைப் பார்த்தார். நானும் பார்த்தேன். மூன்று ஐம்பது. டிஐஜியிடம் சகாதேவன் மெல்ல சொல்ல அவர் தலையசைத்தார்.
சகாதேவன் நீண்ட வராண்டா வழியாக சென்று கையசைத்தார். தொலைவில் அரையிருளில் வெள்ளை ஆடையின் அசைவை கண்டேன். நாயக்கர் இரண்டு காவலர்களால் அழைத்து வரப்பட்டார். கைகளில் விலங்கு போடப்பட்டிருந்தது. அவர்கள் அவரை தொடவில்லை. அவர் இயல்பாக நிதானமாக நடந்துவந்தார்.
தூக்கு மேடைக்கு அருகே வந்ததும் நாயக்கர் அந்த மேடையையும் அதில் தொங்கிய கயிற்றையும் ஏறிட்டு பார்த்தார். முகம் சாதாரணமாக இருந்தது. பிறகு திரும்பி என்னைப் பார்த்து “இதான் அது, என்ன சார்?” என்றார்.
நான் பேசாமல் நின்றேன்.
“அந்த முதல் அரிவாள்… அதுக்கப்றம் எவ்ளவு அரிவாள், கத்தி, வாள், வேல்கம்பு, துப்பாக்கி… கடைசியிலே இந்த வெறும் கயிறு… சரிதான்” என்று புன்னகைத்தார்.
“கடைசியா ஏதாவது சொல்லணுமா?” என்று நான் கேட்டேன்.
“சொல்லணும்… யாராவது கேட்டா சொல்லுங்க. வெயிலுக்கு பயந்து படமெடுத்த பாம்போட பத்தியோட நெழலிலே போயி உக்காந்திருக்கிற தவளையை பத்தி ராமாயணத்திலே வருது… அந்த தவளைதான் சந்தோசமான தவளை” அவர் புன்னகைத்தார். நான் கண்களை திருப்பிக்கொண்டேன்.
டிஐஜி தலையை அசைக்க அவரை காவலர்கள் மேலே அழைத்துச் சென்றார்கள். ஓர் அமைதியான சடங்கு போல எல்லாம் நிதானமாக நடந்தன. எவரும் பேசிக்கொள்ளவில்லை. பெரும்பாலும் சைகைகள். அல்லது மெல்லிய முனகலோசை.
நாயக்கரின் கைகள் பின்பக்கம் சேர்த்து விலங்கிடப்பட்டன. அவர் கால்களைச் சேர்த்து கயிற்றால் கட்டினார்கள். அவர் முகத்தில் சாம்பல்நிறமான துணி உறை மாட்டப்பட்டது. அவர் மேடையின் பலகை மேல் நிறுத்தப்பட்டார். கழுத்தில் சுருக்கு மாட்டப்பட்டது. சுருக்கின் முடிச்சு கழுத்துக்கு மேல் புறங்கழுத்தில் அமையும்படி ஹேங்மேன் சரியாக பொருத்தினார். அதன்பின் எல்லாம் சரியாக உள்ளது என்று கைகாட்டினார்.
நான் நாயக்கரை பார்த்துக்கொண்டிருந்தேன். புலியின் பதினான்கு ஆயுட்காலங்கள் முடிவடைகின்றன. இவ்வளவு சம்பிரதாயமாகச் சாவதற்காகத்தான் அவர் அத்தனை சண்டைகளை கடந்து வந்திருக்கிறார். அந்த நிழல் எங்கே?
நான் நினைப்பதை சகாதேவனும் நினைத்தார்போல “அவரோட நெழல்” என்றார்.
விளக்கு கீழே இருந்தமையால் நாயக்கருடைய நிழல் சுருக்குக் கயிறுடன் மறுபக்கம் சுவரில் மிகப்பெரிதாக எழுந்து நின்றது. பூதம் நிற்பதுபோல.
டிஐஜி என்னிடம் “உத்தரவு கொடுக்கலாம்ல?” என்றார்.
“ம்” என்றேன்.
அவர் கைகாட்ட சகாதேவன் கைகளை வீசினார். ஹேங்மேன் தன் உதவியாளனுக்குக் கைகாட்ட அவன் நெம்புகோலை பிடித்து இழுத்தான். இரும்பு முனகும் ஓசை. வெடி போன்ற ஓசையுடன் கீழ்த்தளம் திறந்துகொண்டது. அந்த ஓசையின் எதிரொலி எங்கெங்கோ கேட்டது.
நாயக்கர் கயிற்றுடன் விழுந்து அந்த விசையில் சற்றே எம்பி தொங்கி சுழன்றார். சுழன்றவிசையில் முறுகி உடனே மறுபக்கம் அவர் உடல் சுழன்றது. தீ பட்டதுபோல கயிற்றில் அவர் உடல் துள்ளியது. பின்பக்கம் கட்டப்பட்ட கைகளும் தோள்களும் வலிப்பு கொண்டன. நீரை உதைப்பதுபோல சேர்த்துக் கட்டப்பட்ட கால்கள் இழுத்து இழுத்து துள்ளின.
இறுதி உதையுடன் அவர் சற்று மேலெழுந்தார். அக்கணம் ஒரு முறுகலோசை கேட்டது. என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் கயிறு அறுந்து நாயக்கரின் உடல் கீழே சென்றது.
( 6 )
என் வாழ்க்கையில் மீண்டும் நான் நாயக்கரைச் சந்திக்க முடியுமென நினைக்கவே இல்லை. அத்தனை ஆண்டுகளுக்கு பின், நான் எங்கோ சென்று எவ்வாறோ வாழ்ந்து, முதிர்ந்து, களைத்து, அனைத்தின்மீதும் ஆர்வமிழந்து, அன்றாடத்தை மட்டுமே எண்ணியபடி அன்றன்று வாழ ஆரம்பித்துவிட்ட பின் அவரை அவருடைய ஊரிலேயே சந்தித்தேன்.
அன்று தூக்குமேடையில் அந்நிகழ்வுடன் என் நீதிபதி வாழ்க்கை முடிவுற்றது. நாயக்கரின் உடல் கீழே விழுந்ததும் டாக்டர் “ஓ காட்! ஓ காட்!” என்று கூவியபடி ஓடினார். நானும் டிஐஜியும் உடன் ஓடினோம்.
கீழே அவர் உடல் சுருண்டு கிடந்தது. டாக்டர் ஓடிச்சென்று சுருக்கை அவிழ்த்தார். நாடிபிடித்துப் பார்த்தார் “ஹி இஸ் அலைவ்!” என்றார். டாக்டரின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
டிஐஜி “லெட்ஸ் ஹேங் அகெய்ன்… இல்லேன்னா பெரிய வம்பு” என்றார்.
நான் “நோ, அதுக்கு ரூல் இல்லை. அவரை உடனே ஆஸ்பத்திரியிலே சேக்கணும்” என்றேன்.
“சார், இந்த விஷயம் நமக்கு மட்டும்தான் தெரியும். வெளியே தெரியாம நிப்பாட்டிடலாம்… இல்லேன்னா எல்லாருக்குமே சிக்கல்” என்றார் சகாதேவன்.
“நோ… இது ஃபேட்… இத நாம ஒண்ணும் செய்ய முடியாது… ஆம்புலன்ஸை கூப்பிடுங்க”
டாக்டர் எழுந்து ”ஆமா, அவரு சொல்றதுதான் ரைட்டு…” என்றார். “இல்லேன்னா நாம எல்லாருக்குமே சிக்கல்.”
டிஐஜி கோபத்துடன் என்னை நோக்கி வந்தார். ஏதோ சொல்ல வாயெடுத்தார்.
நான் “என்னை மிரட்டுறீங்களா?” என்றேன்.
“மெரட்டல்தான்… முடியாது… மறுபடி தூக்கிலே போட்டாகணும்.” என்றார் டிஐஜி.
“அதுக்கு நீங்க எங்க ரெண்டு பேரையும் கொல்லணும்… இல்லேன்னா உங்க தொப்பி போறவரை விடமாட்டேன்” என்றேன்.
டிஐஜி முறைத்தபடி நின்றார்.
நான் முருகேசனிடம் “ஐயங்கார் மறுபக்கம் இருப்பார்… அவர்கிட்ட விஷயத்தைச் சொல்லு” என்றேன்.
முருகேசன் மறுபக்கம் சென்று சொல்ல ஐயங்காரும் ஆட்களும் ஓடிவந்தனர். அவர்கள் வெறிகொண்டவர்கள் போல கூச்சலிட்டனர்.@
“சாவே இல்ல! எங்க ஐயாவுக்கு சாவே இல்ல…!சாவ ஜெயிச்சாச்சு! எங்கடா சாவு? டேய் எங்கடா அந்த சாவு?”
சிறையே ஒரு பெரிய மிருகம்போல அலறிக் கூச்சலிட்டுக் கொண்டிருக்க அவரை அப்படியே ஆம்புலன்ஸில் ஏற்றி பெரிய மருத்துமனைக்கு கொண்டுசென்றோம். கூடவே அவருடைய ஆட்களும் வண்டிகளில் வந்தனர். வழியெங்கும் அவர்கள் கூச்சலிட்டுக்கொண்டே வந்தனர். ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தபோது அவர்கள் மொத்த ஆஸ்பத்திரியையும் கையிலெடுத்துக்கொண்டனர்.
“ஒழுங்கா பாருங்க… தப்பு எதுனா நடந்ததுந்னாக்கா ஆஸ்பதிரி இருக்காது” என்று ஒருவன் கூச்சலிட்டான்.
நாயக்கர் பிழைத்துக்கொண்டார். ஆனால் எட்டுமாதம் படுக்கையிலேயே இருந்தார். அவருடைய தண்டுவடம் சிதைந்துவிட்டது. ஒரு கையும் காலும் தளர்ந்துவிட்டன. பேச்சும் குழறலாகியது. அவருக்கு நிகழ்ந்ததெல்லாம் ஊடகங்களில் பேசுபொருளாகியது. பொதுமக்களின் சீற்றம் பல மாதங்களுக்கு நீடித்தது. அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைத்து, மரணதண்டனை ஆயுள்தண்டனையாக மாறியது.
ஓராண்டில் நாயக்கர் முற்றிலும் குணமடைந்தார். மேலும் ஓராண்டுகூட அவர் ஜெயிலில் இருக்கவில்லை. ஏதோ தேசத்தலைவரின் பிறந்தநாள் என அவருக்கு நன்னடத்தை மன்னிப்பு வழங்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் அதற்கான வழிகள், அதற்கான விலைகள் இருந்தன.
நான் அந்நிகழ்வு நடந்த மறுநாளே என் பணியை துறந்தேன். ஐயங்கார் என்னை பார்க்க வரவே இல்லை. அவர் நாயக்கரின் உடல்நிலைமையை சட்டப்பிரச்சினையாக ஆக்கி, அதன் வழியாக லாபம் அடையும் முயற்சியில் இருந்தார்.
நான் என் மகனுடன் அமெரிக்கா சென்றுவிட்டேன். அங்கிருந்துகொண்டு செய்திகளை மட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டேன். எட்டு ஆண்டுகளுக்கு பின் சென்னை விமானநிலையத்தில் ஐயங்காரைப் பார்த்தேன். முதலில் அவரை அடையாளம் காணவில்லை. அவர் கருப்பு கோட் அணிந்திருக்கவில்லை. பெரிய நாமம் போட்டிருந்தார்.
அவர்தான் என்னை அடையாளம் கண்டு அருகே வந்தார். அறிமுகம் செய்துகொண்டதும் நான் எழுந்து கைகுலுக்கினேன். “உங்க பந்தயத்திலே ஜெயிச்சிட்டீங்க” என்றேன்.
“நீங்க ராஜினாமா செஞ்சது கேள்விப்பட்டேன்… அது நான் ஏதோ வேகத்திலே சொன்னது, அதுக்குப்போயி ராஜினாமா செஞ்சிருக்கவேண்டாம்” என்றார் ஐயங்கார்.
“இல்லை, எனக்குள்ள ஒரு உடைவு நடந்துபோச்சு. பந்தயம் வச்சிட்டேன்னு ஒரே காரணத்துக்காக நான் ஜெயிலுக்கு போயிருக்கக்கூடாது… அது பெரிய தப்பு.”
“அதுக்கென்ன, உங்க தொழில்தானே?”
“இல்ல, அது என் தொழில் இல்லை” என்றேன். “சரி, விட்டாச்சு. இப்ப நிம்மதியா இருக்க்கேன்… நீங்க எப்டி இருக்கீங்க?”
“அமோகமா இருக்கேன்… ரெண்டு பையன்களும் தொழிலிலேதான் இருக்கானுக” என்றார் ஐயங்கார்.
“வெள்ளையன் என்னானான்?”
“அவனத்தான் மூணு வருசம் முன்னாடி போட்டுட்டாங்களே… எட்டு துண்டு… சந்தை சங்சனிலே ஓட ஓட வெரட்டி வெட்டிக்கிட்டே இருந்தாங்க. அதன்பிறகு அதுக்குப் பழிக்குப்பழின்னு என்னென்னமோ போய்ட்டிருந்திச்சு… இப்பதான் கொஞ்சம் அடங்கியிருக்கு.”
நான் நாயக்கர் பற்றி கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. மேலும் பல ஆண்டுகளுக்குப்பின் சாத்தூர் அருகே நயினார்குளம் என்னும் ஊருக்குப் போயிருந்தேன். அது என் மகனின் மனைவியின் குலதெய்வம் இருக்கும் ஊர். அங்கே உச்சிமாகாளி அம்மன் கோயிலில் பூஜை எல்லாம் முடிந்து பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம். என் சம்பந்தி சென்னையில் ஆடிட்டர். அவர் பல விஷயங்களைச் சொல்லும் போக்கில் அங்கே பக்கத்தில்தான் நாயக்கர் தங்கியிருப்பதாகச் சொன்னார்.
“நாயக்கரா?” என வியந்துவிட்டேன்.
“ஆமா, அவரேதான். எல்லாத்தையும் முடிச்சுட்டு ஊருக்கே வந்திட்டார். இங்க இப்ப வெவசாயம் பண்றார்…” என்றார் சம்பந்தி. “பெரிய பண்ணை… நூத்தம்து ஏக்கருக்குமேலே இருக்கும். கரும்பு, சோளம். மெளகா எல்லாம் போடுறார்…”
“விவசாயமா? அவருக்கு என்ன வயசு இருக்கும்?”
“யாருக்குத் தெரியும்? எழுபதோ எம்பதோ தொண்ணூறோ… ஆளு அப்டியே மாறாமத்தான் இருக்கார். நாம செத்து நம்ம பேரப்புள்ளைங்க காலத்திலயும் அவரு அப்டியேதான் இருப்பாரு போல.”
நான் அவரைச் சந்திக்க முடிவுசெய்தேன். ஏனென்றால் அப்போது எல்லாவற்றிலுமிருந்து முழுமையாக விலகிவிட்டிருந்தேன். எல்லாமே பழைய நினைவுகளாக பொருளிழந்துவிட்டன.
பொருளிழக்காத ஒன்று இருந்தது, நாயக்கர் சொன்ன ஒரு வரி. நேற்றோ நாளையோ இல்லாமல் அன்றன்றில், அந்தந்தக் கணத்தில் மட்டும் வாழ்வது. வயதாகி, சாவு அணுக்கமாக நின்றிருக்கையில் நான் அப்படித்தான் இருந்தேன். ஒவ்வொரு நாள் கண்விழிக்கையிலும் எழும் நினைப்பு ‘இதோ ஒரு நாள் கிடைத்திருக்கிறது. இன்னும் ஒரு நாள். இன்னும் இருபத்துநான்கு மணிநேரம்…’ அந்த உணர்வு அளிக்கும் இனிமைதான் என் வாழ்க்கையை வாழச்செய்தது.
நான் சந்திக்க விரும்புகிறேன் என சொல்லி அனுப்பினேன். நாயக்கர் வரச்சொல்லி அனுமதி அளித்தார். என் சம்பந்தியின் ஓட்டுநர் செந்தில்குமார் என்னை அவன் ஜீப்பில் அழைத்துச்சென்றான்.
நான் சென்றபோது நாயக்கர் கையால் ஓட்டும் டிராக்டர் போன்ற சிறிய உழவு இயந்திரத்தால் உழுதுகொண்டிருந்தார். முதலில் அவர் நாயக்கர் என எனக்கு தெரியவில்லை. எங்களைக் கண்டதும் அவர் கையசைத்து அழைத்தார். யாரோ வழிசொல்லப்போகிறார்கள் என்று நினைத்து வண்டியை நிறுத்தி இறங்கி அருகே சென்றோம். அது நாயக்கர்தான் என்று கண்டதும் திகைத்துவிட்டேன்.
“வணக்கம்… எப்டி இருக்கீங்க? அமெரிக்காவிலேன்னு கேள்விப்பட்டேன்” என்றார் நாயக்கர்
“ஆமா… தற்செயலா இந்தப்பக்கம் வந்தேன்… அப்பதான் கேள்விப்பட்டேன்” என்றேன். “சந்திச்சு பல ஆண்டு ஆகுது. மறுபடி எப்ப பாக்கப்போறம்?”
“அதென்ன அப்டி சொல்றீங்க? பாத்தா என்ன? இங்கதானே இருக்கோம்?”
“நீங்க இருப்பீங்க… உங்களுக்கு சாவே இல்ல” என்றேன்.
நாயக்கர் உரக்கச் சிரித்தார். “இல்ல, இப்பவும் அது கூடவேதான் இருக்கு” என்றார்.
நாங்கள் வரப்பிலேயே அமர்ந்தோம். நாயக்கர் வேலையாளிடம் இளநீர் போட்டு தரச்சொன்னார். குடித்தபடி பேசிக்கொண்டோம்.
“எனக்கு தெரிஞ்சுக்கிட ஒண்ணுதான் மிச்சமிருக்கு நாய்க்கர்வாள்” என்றேன். “சொல்லுங்க, உங்க நிழல் கிட்ட அன்னிக்கு என்ன பேசினீங்க? உங்க கூட உங்க நிழலும் சேர்ந்ததனாலேதான் அந்த கயிறு அறுந்ததுன்னு நான் நினைச்சுக்கிடுறதுண்டு.”
“இருக்கலாம்… இல்லே அந்த சின்னப்பய முடிச்சிலே ஏதாவது குளறுபடி செஞ்சிருக்கலாம்…” என்றார் நாயக்கர்.
“முகுளம் உடைஞ்சிருக்கும்… ஆனா தப்பிச்சீங்க.”
“அதெல்லாம் ஆராய்ச்சி பண்றதிலே அர்த்தமே இல்லை… இருக்கேன், இந்தா இப்டி… அடுத்த செகண்டு போயிடலாம். அவ்ளவுதான்.”
“சொல்லுங்க என்ன நினைச்சீங்க?”
“கடைசிநாள் வரை நான் உங்களை நம்பி மதிச்சேன். சாட்சிகள்லாம் பொய், கேஸும் பொய்னாக்கூட நான் பண்ணின மத்த கொலைகளுக்காக நீதி நியாயமாத்தான் என்னைத் தேடி வந்திருக்குன்னு நினைச்சேன். என்னை பாத்துட்டு போனீங்கள்ல, அப்ப சந்தேகம் வந்திட்டுது. நீங்களே உங்க நீதியை நம்பலை. அதான் என்னை தேடிவந்து பாத்தீங்க. எங்கிட்ட பேசுறப்ப கண் கலங்கினீங்க…”
“ஆமா”
“அதோட மனசு கலங்கிட்டுது… போறதுக்கு முன்னாடி வெள்ளையனை ஒழிக்கணும்னு நினைக்க ஆரம்பிச்சிட்டேன்… நினைக்க நினைக்க வெறி ஏறிக்கிட்டே இருந்தது. அவனை எங்காளுங்க கொன்னிருவாங்கன்னு தெரியும்… ஆனா நானே கொல்லணும்னு துடிச்சேன். ஆனா முடியாது. என் கதை முடிஞ்சாச்சு… அன்னிக்கு என் நிழலோட பேசிட்டே இருந்தேன். அவ்ளவுதான், அந்த வஞ்சத்தோட நெறைவேறா ஆசையோட சாகப்போறேன்னு தோணிட்டுது. என் பக்கத்திலே நெழல் உக்காந்திட்டிருந்தது… அதப்பாத்தேன்… சரி வா வெளையாடுவோம்னு கூப்பிட்டேன்… வெளையாடினோம்.”
“வெளையாட வெளையாட என் மனசு மாறிட்டே இருந்திச்சு” என்றார் நாயக்கர். “…எப்பவும் நானேதான் ஜெயிப்பேன். இப்ப அது ஜெயிக்கட்டுமேன்னு நினைச்சேன். எப்டியும் எல்லாம் முடிஞ்சுபோச்சு… அது ஜெயிக்கிற காலம் வந்தாச்சு. ஒவ்வொரு ஆட்டமா விட்டுக்குடுக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொருத்தரையா மன்னிச்சு விட்டுட்டே இருந்தேன். கடைசியா வெள்ளையனை மன்னிச்சேன். ஆமா முழுமனசோட அவனை மன்னிச்சேன்… அதோட முழுசா தோத்துட்டேன். நிழல் ஜெயிச்சுது.”
“அதுக்குமேலே ஆட்டம் இல்லை. எல்லாம் அமைதியாயிட்டுது. சாப்பிட்டேன். நிம்மதியா தூங்கினேன். அந்த நெழல்கூட பேசிட்டே இருந்தேன். என் வாழ்க்கையை அது எப்டியெல்லாம் அர்த்தமாக்கியிருக்குன்னு தெரிஞ்சுது. சாவுன்னா என்ன? இந்த புக்ல எல்லாம் முக்கியமான வரிகளை கோடுபோட்டு வைப்பாங்கள்ல அதுதான்…மனுச வாழ்க்கையிலே எந்த பெரிய அனுபவம்னாலும் சாவோட அடிக்கோடு இருக்கும். அத மட்டும்தான் நாம ஞாபகம் வைச்சுக்கிடுவோம்… மத்ததெல்லாம் மறந்திரும்… பலபேரு வாழ்க்கையிலே நாலஞ்சு வரிதான் அப்டி இருக்கும். என்னோட வாழ்க்கையிலே எல்லா வரியும் அடியிலே கோடு போட்டிருக்கு. எவ்ளவு பெரிய கொடுப்பினை!”
“ஆமா” என்றேன். “இப்ப இந்த வயசிலே அது அப்டி தெளிவா தெரியுது.”
“சாவோட அருமை தெரிஞ்சவன்தான் மலைமேலே ஏறப்போறான். கடலுக்குள்ள நீஞ்சிப்போறான். நான் இந்த பொட்டக்காட்டிலேயே அதை எல்லாம் அனுபவிச்சிட்டேன்… நல்ல வாழ்க்கை. நெறைவாழ்க்கை… அப்றம் என்ன?” என்றார் நாயக்கர். “அன்னிக்கு தூக்குமேடைக்கு போறப்ப அப்டி மனசு நிறைஞ்சிருந்தது. உடம்பே தித்திக்கிற மாதிரி இருந்தது. இது ஒரு பெரிய அனுபவம், இதிலே ஒரு துளியையும் விட்டிரக்கூடாதுன்னு நினைச்சேன். அந்த வழி, அந்த படி எல்லாத்தையும் ரசிச்சேன். அந்த தூக்குமேடையைக்கூட பலதடவை ரசிச்சு பாத்தேன். முகத்த மூடுறதுக்கு முன்னாடி என்னோட நிழல பாத்தேன். பெரிசா பூதம் மாதிரி நின்னுட்டிருந்தது.”
நான் அவர் பேசப்போவதை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன்.
“அப்றம் தெரியுமே, மறுபடி இன்னொரு வட்டம்… நான் நிழல்கிட்ட கேட்டேன். ‘நான் தோத்துட்டேனே, அப்றம் ஏன் என்னை தப்பவிட்டே?’ன்னு. சிரிச்சுக்கிட்டே ‘நீயா தோக்கமுடியாது, நான் உன்னை தோக்கடிக்கணும்’னு நிழல் சொல்லிச்சு… ‘உனக்கு மிச்சமில்லாம இருக்கலாம், எனக்கு மிச்சமிருக்கு’ன்னு சொல்லிட்டுது…” நாயக்கர் சிரித்தார். “ஆமா அதுக்கு பல கணக்குகள் மிச்சமிருந்திச்சு… ஒவ்வொரு கணக்கா என்னைய வைச்சு முடிச்சுது” அவர் அவருக்குரிய பாணியில் புறங்கையால் மீசையை நீவிக்கொண்டார்.
அந்த அசைவு வழியாக அவரிலிருந்து அந்த வேட்டைக்காரன் மீண்டெழுந்து வந்ததை கண்டேன். ரத்தமெழுகு போட்ட மீசை. அது அப்போதும் கருமையாகவே இருந்தது.
“இப்ப எப்டி இருக்கீங்க? இப்ப உங்க கணக்குகள் முடிஞ்சிருச்சா?” என்றேன். “இப்ப சாவை காத்து இருக்கீங்களா?”
“இல்லை. நான் பாட்டுக்கு இருக்கேன். எனக்கு கணக்கு மிச்சமிருந்தாலும் இல்லாட்டியும் அதனாலே ஒண்ணுமில்லை. அதுக்கு என்ன மிச்சமிருக்குன்னு நம்மாலே சொல்லிக்கிட முடியாது… அது முடிவே இல்லாதது. புரிஞ்சுகிடவே முடியாதது…”
நான் அவரிடம் பேசிவிட்டு விடைபெற்றுக் கிளம்பினேன். என் கைகளைப் பிடித்து சிரித்தபடி நாயக்கர் சொன்னார். “மறுபடியும் பாப்போம்னு நான் யார்கிட்டயும் சொல்றதில்லை… பாக்கமாட்டோம்னும் சொல்றதில்லை… இப்ப துடுப்ப மடியிலே வைச்சுக்கிட்டு மிதக்கிற போட்ல உக்காந்திட்டிருக்கேன்… போறதுதான் கணக்கு. போற எடம்னு ஒண்ணுமில்லை.”
நெடுந்தொலைவு வரை என்னை பார்த்தபடி அவர் வரப்பில் நின்றிருந்தார். நான் திரும்பும்போதெல்லாம் அவரையே நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் அடுத்தக் கணமே கொல்லப்படலாம். எத்தனை எத்தனை எதிரிகள். எவ்வளவு அரிவாள்கள். அதேசமயம் சாவே இல்லாமல் இங்கே இப்படியே இருந்துகொண்டும் இருக்கலாம். அந்த இடம் அவருடைய மறைவிடம் அல்ல. அவரைத் தேடி வருவார்கள். அவர் அதற்கும் தயாராகத்தான் இருப்பார்.
நான் எண்ணியது சரி. அன்று மாலையே எட்டுபேர் அவரை சூழ்ந்துகொண்டு வெட்டினார்கள். நான் எண்ணியது மேலும் சரி. அம்முறையும் மூன்று மாதம் மருத்துவமனை வாசத்திற்குப்பின் நாயக்கர் பிழைத்துக்கொண்டார்.
(நிறைவு)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
