நம் வரலாற்றாசிரியர்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறார்கள்?
அன்புள்ள ஜெயமோகன்,
வேதாசலம் அவர்களுக்கு தமிழ்விக்கி தூரன் விருது அளிக்கப்படும் செய்தியை இந்து ஆங்கில நாளிதழ் வழிகாக அறிந்தேன். அதன்பின்னரே உங்கள் தளம் வந்து பார்த்தேன். நான் இலக்கியத்தில் அதிக ஆர்வம் இல்லாதவன். ஆகையால் இங்கே அடிக்கடி வருவதில்லை. மகிழ்ச்சி. வேதாசலம் முக்கியமான அறிஞர். உண்மையான வரலாற்றாய்வாளர்கள் கல்வெட்டியல், நாணயவியல் போன்ற தொல்லியலாய்விலும் இன்னொரு பக்கம் தமிழ்நூலாய்விலும் ஈடுபாடும் பயிற்சியும் கொண்டிருப்பார்கள். அப்போதுதான் முழுமையான சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். வரலாற்றுக்கு வெளியே அரசியல் சர்ச்சைகளில் ஈடுபட மாட்டார்கள். வரலாற்று முடிவுகளை போதிய ஆய்வோ ஆதாரமோ இல்லாமல் சொல்ல மாட்டார்கள். அதெல்லாம்தான் நல்ல வரலாற்றாய்வாளரின் அடிப்படைத் தகுதிகள். வேதாச்சலம் அப்படிப்பட்ட ஒருவர். அவரை அங்கீகரிப்பதன் வழியாக ஒரு முக்கியமான அறிவுப்பணியை ஆற்றியிருக்கிறது தமிழ் விக்கி குழுமம்.
தமிழில் வேதாசலம் போன்ற முக்கியமான அறிஞர்கள் பலர் இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவருடைய பாண்டிய நாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல் ,பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு பாண்டிய நாட்டில் சமண சமயம் ஆகிய நூல்கள் மிக முக்கியமானவை. ஆனால் தமிழக ஆய்வாளர்கள் பலர் தமிழில் மட்டுமே எழுதுகிறார்கள். அவர்களை இந்திய அளவில் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. ஏனென்றால் அவர்களின் நூல்கள் ஆங்கிலத்தில் இல்லை. இந்த பெருங்குறைபாடு நமக்கு வரலாற்றாய்விலே பெரிய இடமேதும் இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறது
இன்றைக்கு தமிழில் இருந்து ஆங்கிலத்தில் கிடைக்கும் வரலாற்றுநூல்கள் இரண்டு வகை. வரலாற்றாய்வாளர் என்னும் தகுதி இல்லாதவர்கள், பெரும்பாலும் வேறுவேறு துறைகளில் அதிகாரமோ பணபலமோ அரசியல்செல்வாக்கோ உள்ளவர்கள் வரலாற்று நூல்களை எழுதி ஆங்கிலத்திலும் வெளியிடுகிறார்கள். இவற்றுக்கு ஆய்வுலகில் எந்த மதிப்பும் இல்லை. ஆய்வாளர்கள் பொருட்படுத்துவதுமில்லை. இந்நூல்களால் நம் பக்கத்து மாநிலங்களிலேயே கூட நம்மை கேலியாகத்தான் பார்க்கிறார்கள். இன்னொரு வகை என்பது, இந்த அசல் ஆய்வுகளை சார்ந்து ஆங்கிலத்திலே ஆய்வுகளை எழுதி வெளியிடுவது. இதை வெளிநாட்டு ஆய்வாளர்களும் செய்கிறார்கள். வேதாசலம், குடவாயில் போன்றவர்களுக்கு பெயர்ச்சுட்டு கொடுக்கிறார்கள்தான். ஆனால் சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் ஏற்பு இவர்களுக்குக் கிடைப்பதில்லை. வழிநூல்களை எழுதுபவர்களுக்கே கிடைக்கிறது. ஆகவே நம்முடைய முக்கியமான வரலாற்றாசிரியர்களுக்கு எந்த அங்கிகாரமும் இல்லாத நிலை உள்ளது. அவர்களை நமக்கும் தெரியாது. இந்திய அளவிலும் எவருக்கும் தெரியாது.
வேதாச்சலம் போன்றவர்களின் நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொண்டுவருவது அவசியம். குறைந்தபட்சம் அவருடைய பாண்டியநாட்டில் சமணசமயம் நூலாவது உடனடியாக மொழிபெயர்க்கப்படவேண்டும். ஆனால் இந்தவகையான நூல்களுக்குக் கல்வித்துறைக்கு அப்பால் வாங்குபவர்கள் இல்லை. ஆகவே தொழில்முறை பதிப்பாளர்கள் இவற்றை வெளியிட மாட்டார்கள். அமைப்புகள்தான் வெளியிடவேண்டும். நம் பல்கலைகள் இவற்றை வெளியிடுவது கிடையாது. தனிப்பட்ட அமைப்புகளாவது ஆர்வம் காட்டலாம்.
ஜெயபாலன் கிருஷ்ணன்
வரலாற்றை அறிந்துகொள்ள கல்வெட்டுகளை படியெடுப்பது அவசியம்: தொல்லியல் அறிஞர் கருத்துJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
