காவியத்தை வாசித்தல்
காவியம் வாசித்தேன். வழக்கமாக இந்தவகையான நாவல்களில் அட்டையிலேயே அது எந்தவகையானது என்று சொல்லப்பட்டிருக்கும். ஆகவே அதன் வடிவம் பற்றிய ஓர் முன் தயாரிப்பு நம்மிடம் இருக்கும். காவியம் ஒரு மெடாஃபிக்ஷன் (Metafiction) வகை நாவல். ஆனால் மிகசாதாரணமாக, ஒர் திரில்லர் அல்லது பேய்க்கதை போல ஆரம்பித்தது. ஆனால் அப்படி எளிமையான ஒன்று அல்ல என்று அந்த மூன்று அத்தியாயங்களிலேயே தெரியவும் செய்தது. அது காதல்கதையாக உருமாறியது.
ஆகவே பலருக்கும் ஒரு குழப்பம் இருந்திருக்கும். இந்நாவல் முடிந்தபிறகு அதை ஒட்டுமொத்தமாக யோசித்து, அதன் பகுதிகளை எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைத்துத்தான் இதை புரிந்துகொள்ள முடியும். இந்தவகையான இருபது நாவல்களையாவது ஆங்கிலத்தில் வாசித்துள்ள எனக்கே இதைப்புரிந்துகொள்ள நாவல் முடிந்தபிறகு மீண்டும் ஒரு முறை வாசித்து, எல்லாவற்றையும் தொகுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. வாசகனின் ஆக்கபூர்வமான பங்களிப்பைக் கோரும் நாவல் இது. அதேசமயம் இந்தவகையான பலநாவல்கள் செய்வதுபோல திருகலான செயற்கைநடையால் வாசகனை அன்னியப்படுத்தவுமில்லை. தீவிரமான வாசிப்பை அளிக்கிறது. ஆகவே வெறும்கதையாகவே இதை வாசிப்பவர்களும் இருக்கலாம். அவர்களுக்கு பலவகையான குழப்பங்கள் உருவாகலாம். படிப்படியாக நிறைய விவாதித்தபிறகுதான் இந்நாவல் மீதான புரிதல் உருவாகி வரும் என நினைக்கிறேன்.
உதாரணமாக இதில் துக்காராமின் இளமைப்பருவமும் காதலும் சொல்லப்படுகின்றன. காதலின் உணர்ச்சிகரமான பகுதிகள் உள்ளன. அப்போதும் அதில் சப்டெக்ஸ்ட் ஆக காவிய இயலின் நுணுக்கமான விஷயங்கள் வந்துகொண்டிருந்தன. காவியங்களின் தேன் உண்ணும் அந்தக் கரடி ஒரு அபாரமான படிமம். நாவல் முடிந்தபோது அந்த படிமம்தான் நாவலின் மையம் என்று தெரிந்தது மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்கியது. அந்தக் கரடியின் ஒரு தோற்றம்தான் கானபூதி என்றும் சொல்லலாம். நாவல் துக்காராம் எழுதிய- அல்லது எழுதாத காவியம் பற்றியது என்பதை தொடக்கம் முதல் சொல்லிவருகிறது என்பதை நாவல் முடிந்தபிறகே உணரமுடிந்தது.
இந்நாவலை வாசித்தவர்கள் ஓர் ஆறு மலையிறங்குவதுபோல அது தன்னிச்சையாக முட்டிமோதிச் செல்வதை உணர்ந்திருப்பார்கள். அடுத்து என்ன வரும் என்றே தெரியாத நிலையில் வாசித்த அனுபவம். எதை எதிர்பார்த்தாலும் அதை உடனே நாவல் ரத்துசெய்துவிட்டது. பலருக்கு துகாராமும் அவர் மனைவியும் ஆணவக்கொலை செய்யப்படும்போது நாவல் ஒரு சுவரில் முட்டி நின்றுவிட்டதாகத் தோன்றும். ஆறு சமநிலத்தை வந்தடைந்த இடம் அது. அதன்பிறகு அது கிளைகளாக பிரிந்துவிட்டது. பல கிளைகள். ஒரு பெரிய கிளை என்பது தேஷ்பாண்டே குடும்பம், அவர்களின் பின்புல வரலாறு. இன்னொரு கிளை என்பது இந்தியப் பண்பாட்டில் காவியங்கள் உருவான வரலாறு. அவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கிளைகள்.
ஒரு கதையில் உள்ள கேள்விக்கு இன்னொரு கதை பதிலாகிறது. துரியோதனன் தன் தவறுக்காக வருந்தினானா என்ற கேள்விக்கு கானபூதி அஸ்வத் தேஷ்பாண்டேயின் கதையைச் சொல்கிறது. இப்படி இணைத்துக்கொண்டே சென்றாலொழிய இந்நாவலை புரிந்துகொள்ள முடியாது.
இந்நாவல் எல்லா வகையிலும் ஒரு புனைவுவிளையாட்டு. கதையைக்கொண்டு கதையை தட்டித் தட்டி விளையாடவேண்டும். காரம்ஸ் விளையாட்டில் ஸ்டிரைக்கர் போல கானபூதி. அது ஒரு கதையை வைத்து இன்னொரு கதையை சுண்டி குழியில் விழச்செய்கிறது. ஒரு கதைச்சரடில் ஒரு ஆணவக்கொலை என்ற ஒரே ஒரு புள்ளியை விரித்து விரித்து வரலாறாக ஆக்கிக்கொண்டே செல்கிறது கானபூதி. இன்னொரு கதைச்சரடில் இந்தியாவின் மொத்தக் காவிய வரலாற்றையும் ஒற்றைக்கதையாகச் சுருக்கிச் சுருக்கி ஒரு புள்ளியில் கொண்டுவந்து நிறுத்துகிறது. வரலாறும் வாழ்க்கையும் எல்லாமே கதைகளாக ஆகிவிட்டிருக்கின்றன.
இந்தவகையான மெட்டாநெரேஷன் விஷ்ணுபுரம், கொற்றவை ஆகியவற்றிலும் உண்டு. உங்களுடைய இயல்பான புனைவுமுறை இது. இதை இந்தியக் காவியங்களில் இருந்து பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இந்த நாவலில் அதை ஒரு கதைவிளையாட்டாகவே ஆக்கிக்கொண்டிருக்கிறீர்கள். இங்கே இரண்டு வகையான கதைகள் உள்ளன. ஒரு வகையான கதை இன்னொரு வகையான கதையை தோற்கடித்ததே நம் வரலாறு என்று நாவலில் திரண்டு வருகிறது.
இந்தவகையான கதைவிளையாட்டு– கதையாடல் என்பதெல்லாம் இங்கே பலராலும் செய்யப்பட்டுள்ளன. அவை மேலைநாட்டு நாவல் வடிவங்களை ஒட்டி செய்யப்பட்ட வடிவப்பரிசோதனைகள். அவற்றுக்கு அழகியல் ரீதியான தேவையோ,ஆசிரியரின் தேடல் சார்ந்த பின்னணியோ இல்லை . இந்த நாவலில்தான் இந்த கதைவிளையாட்டு என்பது முழுமையாக அர்த்தமாகிறது. இந்தியாவின் வரலாறே ஒரு கதைவிளையாட்டுதான் என்று இந்நாவல் நுணுக்கமாக நிறுவிக்காட்டுகிறது. சமகாலத்தின் ஒரு நிகழ்வுகூட வெறும் கதைகளாக ஆக்கப்படுவதுதான் என்று காட்டுகிறது. மெட்டாபிக்ஷனின் வலிமை என்ன, அது எப்படி நம் காலடி மண்ணை முழுக்கவே கரைத்து அழித்துவிடும் என்று காட்டுகிறது.
நாவல் முடிவில் ஒரு வெறுமைதான் வந்துசேரும் என நினைத்தேன். ஆனால் ஒரு ‘எலிவேஷன்’ வழியாக நாவல் அபாரமான ஒரு நிறைவை அளித்தது. காலம் முழுக்க இருந்துகொண்டே இருக்கும் அழிவற்ற கதைசொல்லியாகிய கானபூதி நம் பண்பாட்டின் உள்ளே வாழ்வதாகவே எண்ணத் தோன்றிவிட்டது. அவ்வளவு அழகான பிசாசு அது.
எம்.பாஸ்கர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
