வெ.வேதாசலம்- கடிதம்
அன்புள்ள ஜெ,
வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விருது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் வரலாற்றாய்வில் இரண்டு அடுக்குகள் உண்டு. ஒன்று, அடிப்படை ஆய்வுகளைச் செய்யும் வரலாற்றாய்வாளர்கள். அவர்கள் ஆய்வுகளைச் செய்வது ஒரு வேர் தன் வேலையைச் செய்வதுபோலத்தான். அ.கா.பெருமாள், குடவாயில் பாலசுப்ரமணியன் போன்றவர்கள் இந்த வகையானவர்கள். வேதாசலம் அவர்களில் முக்கியமான ஒருவர். அவர்கள் நேரடிக் கள ஆய்வு செய்கிறார்கள். அதற்காக ஊர் ஊராகச் செல்கிறார்கள். தரவுகளை திரட்டுகிறார்கள். முந்தைய அறிஞர்கள் எழுதிய நூல்குறிப்புகளுடன் ஒப்பிட்டு திருத்துகிறார்கள். ஆய்வுக்கருத்துக்களை முன்னெடுக்கிறார்கள். அவை ஆய்வுக்கட்டுரைகளாக ஆய்வேடுகளில் வெளிவருகின்றன. நூல்களாகவும் வெளியாகின்றன. அறிஞர்கள் அவற்றை வாசிக்கிறார்கள், அவர்களிடையே அவை விவாதிக்கப்படுகின்றன. உண்மையில் இதுதான் வரலாற்றாய்வு என்பது.
இன்னொரு வகையினர் வரலாற்றுப்பேச்சாளர்கள் அல்லது வரலாற்று இதழாளர்கள். இவர்கள் சமகாலத்திலுள்ள பொதுவான சமூக விவாதங்கள், அரசியல் ஆகியவற்றுக்கான கேள்விகளை பேசுபவர்கள். அதற்காக வரலாற்றை இவர்கள் வாசிக்கிறார்கள். வரலாற்றாசிரியர்கள் எழுதியவற்றில் இருந்து விடைகளைக் கண்டுபிடித்து முன்வைக்கிறார்கள். நேர்மையானவர்கள் உண்மையில் வரலாற்றாய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை மட்டும் சொல்வார்கள். தங்கள் தரப்பைச் சொல்ல மாட்டார்கள் – ஏனென்றால் தங்கள் தரப்பைச் சொல்ல அவர்களுக்கு ஆய்வுத்தகுதி கிடையாது என அறிந்திருப்பார்கள். ஆனால் பொதுவாக இங்கே இந்தத் தரப்பினர் தங்களுடைய கருத்துக்களையே வரலாற்று உண்மைகளாகச் சொல்வார்கள். வரலாற்றை அதற்கேற்ப திரிப்பார்கள். தங்களுக்குச் சாதகமாகப் பேசும் வரலாற்றாசிரியர்களை மட்டுமே பெயர் சொல்வார்கள். இவர்களே இங்கே வரலாற்றாசிரியர்களாக அறியப்படுகிறார்கள்.
உண்மையான வரலாற்றாய்விலே முடிவுகளுக்கு வருவது எளிதல்ல. அதற்கு உறுதியான முதன்மை ஆதாரங்கள் தேவை. அடுத்தகட்ட ஆதாரங்களாகிய இலக்கியக் குறிப்புகளுடன் அவை ஒத்துப்போகவேண்டும். அப்படி ஒத்துப்போனால்கூட அந்த வரலாற்று முடிவுகளைப் பொதுவெளியிலே வைத்து பிற ஆய்வாளர்கள் அதை விவாதிக்க அனுமதிக்கவேண்டும். எல்லா வகையான மறுப்புகளும் எழுவதற்கு வாய்ப்பு அளிக்கவேண்டும். அந்த எல்லா வகையான மறுப்புகளுக்கும் ஆதாரபூர்வமான விடைகள் அளிக்கப்படவேண்டும். அப்போதுதான் ஒரு வரலாற்று ஊகமானது வரலாற்று உண்மை ஆக மாறுகிறது. உண்மையான வரலாற்றாய்வாளர்கள் மிகமிகப் பொறுமையும் நிதானமும் கொண்டவர்கள். ஓர் உண்மையை நிறுவ பல படிகளாக, நீண்டகாலம் முயல்வார்கள்.
உதாரணமாக, வெ.வேதாசலம் அவர்கள் கீழடி ஆய்வில்கூட சம்பந்தப்பட்டவர். ஆனால் அவர் எதையுமே அதிரடியாகச் சொல்லவில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல கோயில்கள் உண்மையில் பழைய சமண சமயத்தலங்கள்தான் என்று தன்னுடைய பாண்டியநாட்டில் சமணம் என்னும் நூலில் சொல்கிறார். அதை அதிரடியாகச் சொல்லவில்லை. வெறும் ஊகமாகவும் சொல்லவில்லை. நுணுக்கமான ஆதாரங்களை, பல படிகளாக முன்வைத்து அதை நிறுவுகிறார். இருபதாண்டுகாலமாக அதை எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பின் முன் வைத்து அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி அதன்பிறகே அதை உண்மை என நிறுவுகிறார். இதுதான் வரலாற்றின் போக்கு.
தமிழகத்தில் நாம் உண்மையான வரலாற்றாய்வை விட்டு விலகிவிட்டோம். வரலாற்றாய்வாளர்களின் பெயர்கள்கூட நமக்குத்தெரிவதில்லை. நாம் வரலாற்று வம்புகளையும், வரலாற்று அரசியலையும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். ஆய்வு என்பது எப்படி நிகழும், வரலாற்று உண்மை எப்படி பேசப்படும் என்றெல்லாம் தெரியாமலாகிவிட்டது. உண்மையான வரலாற்றாய்வாளர்களை அறிமுகம் செய்து அவர்களின் எழுத்துக்களை முன்வைத்து ஒரு சிறு வாசகர் வட்டத்தை உருவாக்குவது மட்டுமே இன்றைக்கு வரலாற்றுணர்வை உருவாக்குவதற்கு நம்மால் செய்யத்தக்கது. தமிழ்விக்கி அச்செயலைச் செய்வது பாராட்டுக்குரியது.
ச.ராஜாராம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
