நீலநிழல் (குறுநாவல்)-2

( 2 )

நான் திரும்பும்போதே ஒரு முடிவை எடுத்துவிட்டிருந்தேன். இனி நான் நாயக்கர் பற்றி நினைக்கப் போவதில்லை. ஒரு நொடிகூட. இதோ என் வாழ்க்கையில் இருந்து இந்த விந்தையான மனிதர் அகன்றுவிடப்போகிறார். இன்னும் ஒருவாரம் அவரைப் பற்றிய செய்தி ஊடகங்களில் இருக்கும். கூடவே என் பெயரும் அச்சாகி வரும். ஏதோ விந்தையான விதியின் கணக்கால் அவரும் நானும் இணைக்கப்பட்டிருக்கிறோம். அதை நான் அறியவே முடியாது. அதைக் கடந்துசெல்வதொன்றே வழி. அவ்வளவுதான். ஒரு வாரம் கழித்து அனைவரும் மறந்துவிடுவார்கள்.

ஷூக்களின் ஓசை மணலில் சரக் சரக் என ஒலிக்க கைகளை பின்னால் கட்டியபடி தலைகுனிந்து நடந்துகொண்டிருந்தேன். முன்னால் டவாலி சென்றார். பின்னால் துப்பாக்கியுடன் காவலன் வந்தான்.

ஜெயில் சூப்பரிண்டெண்ட் சகாதேவன் என்னை அணுகி “பேசிட்டீங்களா சார்?” என்றார்.

“ஆமா, ஒண்ணுமில்லை. சில செய்திகள் கேக்க வேண்டியிருந்திச்சு” என்றார்.

“சாதாரணமா இதுக்கு பெர்மிட் பண்றதில்லை சார். உங்கள ஏதாவது பண்ணிட்டார்னா எங்க போயி நான் சமாதானம் சொல்றது? இந்த மாதிரி கன்விக்ட்ஸ் கடைசிநேரத்திலே ரொம்ப டெஸ்பரெட்டா இருப்பாங்க… ஆனா நாயக்கர் பத்தி அந்தக் கவலையே வேண்டாம். அவரு வேற மாதிரி ஆளு.”

“வேற மாதிரின்னா?” என்றேன்.

“வேறமாதிரின்னா… சார் அவருகிட்ட ஒரு கம்பீரம் இருக்கு சார்.”

“கொலகாரனோட கம்பீரம்” என்றேன். என் குரலில் இருந்த அந்தக் கசப்பு நான் உத்தேசிக்காத ஒன்று.

“சார், அவரு ஒரு ராஜா… நெறையக் கொலைகள் பண்ணியிருக்கார். ஈவிரக்கமில்லாம கொன்னு குவிச்சிருக்கார்… கணக்கிலே வந்தது ரெண்டுதான்… வெளியே அம்பதாவது இருக்கும்னு சொல்லுறாங்க. ஆனா ராஜான்னாலே அப்டித்தானே? எல்லா ராஜாவும் கொலகாரனுங்கதானே? அது ராமன்னாலும் சரி, ராஜராஜ சோழன்னாலும் சரி, கொலை செஞ்சவங்கதானே?”

“எல்லாத்துக்கும் ஒரு நியாயம் சொல்லிடலாம்” என்றேன்.

”அதேதான்… எல்லாமே எங்கியோ நியாயமா ஆயிடுது… நாம அதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணக்கூடாது. நம்ம வேலையைச் செய்றோம்.”

“இங்க பாருங்க சகாதேவன், பாக்க கம்பீரமா இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறோம்ல, அதுலதான் தப்பு இருக்கு” என்றேன். “கொடூரத்துக்குக் கூட ஒரு கம்பீரம் இருக்கு. இல்ல, நம்ம பயத்தாலே நாம அத கம்பீரம்னு நினைச்சுக்கிடுறோம்.”

“சார், அது கம்பீரமா இருக்கணும்னு சாமியோ இயற்கையோ ஏதோ ஒண்ணு நினைக்குதுல்ல? அப்ப அதுல ஒரு மகத்துவம் இருக்குதுதானே?” என்றார் சகாதேவன். “காட்டிலே பாருங்க சார், புலி சிங்கம்னு வேட்டையாடுற கொலகார மிருகம்தான் கம்பீரமா அழகா இருக்கு… நெறம், முடியோட பளபளப்பு, உடம்போட அமைப்பு எல்லாமே அதுக்குத்தான் அமைஞ்சு வருது. அதான் நேச்சரோட ஸ்டைல்னு வைங்க.”

“எல்லா ஆர்டரும் வந்தாச்சா?” என்றேன். அந்தப்பேச்சை மாற்ற விரும்பினேன். ஏனென்றால் நானே அவர் சொல்வதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்.

“எல்லாமே பக்கா. நாளைக்கு காலம்பற நாலுமணிக்கு தூக்கு. டாக்டர், முன்சீப் கோர்ட்டு நீதிபதி ரெண்டு சாட்சிகள் எல்லாமே சொல்லியாச்சு” என்றார் சகாதேவன். “வழக்கமா கடைசிநேரம் வரை ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஜனாதிபதிகிட்டே திரும்பவும் மனு குடுப்பாங்க… சட்டத்திலே புதிசா ஏதாவது ஒரு இண்டு இடுக்க கண்டுபிடிப்பாங்க… ஆர்டர்ல ஒரே ஒரு சீல் மேலே கையெழுத்து இல்லேன்னு சொல்லிக்கூட இங்க தூக்க நிப்பாட்டியிருக்காங்க…“

சகாதேவன் என்னுடன் பேசிக்கொண்டே உடன் வந்தார். “இவரோட வக்கீல் ரொம்ப பெரிய ஆளு. அனந்தநாராயணையங்கார்னு ஜகக்கில்லாடி… ஒரு மணிநேரத்துக்கு அம்பதாயிரம் ரூபா பீஸு வாங்குறவரு. அவரு படிச்ச வேலை பதினெட்டும் பார்த்துட்டாரு. எல்லா வாசலும் மூடியாச்சு… நாளைக்கு தூக்குல தொங்குவாரு. இனி அதை மாத்தணுமானா சாட்சாத் பெருமாள் நினைக்கணும்… சங்குசக்கரத்தோட நேர்ல வரணும்.”

நான் தலையசைத்தேன்.

“ஆனா நம்ப முடியாது. இவருக்காக அவரு வைகுண்டத்திலே இருந்து வந்தாலும் வர வாய்ப்பிருக்கு. சார் இவரு இப்டி பல கண்டங்களிலே இருந்து தப்பிச்சவரு… மிரகிள் இஸ் ஹிஸ் லைஃப்னு சொல்லலாம்.”

நாங்கள் ஜெயிலர் அறையை அடைந்தோம். வார்டர்கள் இருவர் சல்யூட் அடித்தனர்.

“ஒரு காபி சாப்பிட்டுட்டு போலாமே சார்…”

“சரி” என்றேன். எனக்கும் ஒரு காபி தேவைப்பட்டது.

சகாதேவன் “இங்க நல்ல ஃபில்டர்காபி கெடைக்கும்… முருகேசு ரெண்டு ஃபில்டர் காபி…” என்றபின் அறைக்குள் நின்ற சற்று வயதான கிளார்க்கை பார்த்து “உமக்கு வேணுமா ஓய்?” என்றார்.

“சார் கூட காபி சாப்பிடுறது கௌரவம்… ஆனா வேண்டாம். ஒருநாளைக்கு ஒரு காபி… அதுக்குமேலே உடம்பு தாங்காது” என்றார்.

“இவரு ஹெட்கிளார்க் பெரியசாமி… இங்கியே முப்பது வருச சர்வீஸ்” என்று சகாதேவன் அறிமுகம் செய்து வைத்தார்.

“உடம்புக்கு என்ன?” என்றேன்.

“சுகரு இருக்கு… அதோட முப்பது வருசம் காபிடீயிலேயே வாழ்ந்தாச்சு… உடம்பு இத்துப்போச்சு” என்றார் பெரியசாமி.

“இதுக்கு முன்னாடி தூக்கு போட்டிருக்கீங்களா?”

“மூணு” என்று அவர் விரலைக் காட்டினார். “ரிப்பர் நடராஜ்னு ஒருத்தன்… பன்னிரண்டு கொலை பண்ணினவன்… ஒரு ஸ்பானராலே பின்மண்டையிலே அடிச்சு கொல்றது அவன் ஸ்டைல்… அவனைத்தான் எட்டு வருசம் முன்னாடி தூக்கிலே போட்டோம்… அதுக்குப்பிறகு இப்பதான்.”

“பெரும்பாலும் கடைசிநேரத்திலே ஏதாவது ஆர்டர் வந்திரும்” என்றேன்.

“ஆமா, ஆனா அதெல்லாம் ஒரு நாலஞ்சுநாள் முன்னாடி தெரிஞ்சிரும்… இருபத்துநாலு மணிநேரம்தான் இருக்குன்னா சான்ஸே இல்ல.”

“சடங்குசாங்கியம்லாம் இருக்குமே…”

“ஆமா, டாக்டர் வந்து ஆளு ஹெல்தியா இருக்கார்னு சர்ட்டிஃபிகெட் பண்ணணும். அதான் கடைசி. எல்லா பேப்பரையும் ஒரு மஜிஸ்ட்ரேட், ஒரு ரெவினியூ ஆபீஸர், ஒரு போலீஸ் ஆபீஸர்னு மூணுபேரு செக் பண்ணி ஓக்கே பண்ணணும். எல்லாம் முடிஞ்சாச்சு…” அவர் புன்னகைத்து “எல்லாருக்கும் ஒரு திரில்லுதான்… இதுக்கு முன்னாடி ஒருத்தர அவங்க தூக்கிலே போட்டதில்ல… ஒரு சரித்திரத்திலே பங்கு எடுக்கிறாங்கள்லா?”

“ஆமா” என்றேன்.

“தூக்குமேடை செக் பண்ணியாச்சு… கயிறு தயாராகி வந்தாச்சு… நாயக்கர் எம்பத்தொம்பது கிலோ… நூறு கிலோ எடையுள்ள இரும்புக் குண்டுகள தொங்கவிட்டு கயிறயும் செக் பண்ணியாச்சு. எல்லாமே பக்கா…”

“அப்ப அவ்ளவுதான்?” என்றேன். அவர் ஏதோ சொல்லுவார் என நான் எதிர்பார்த்தேன்.

“அவ்ளவுதான் சார்”

சகாதேவன் “ஆனா இங்க உள்ளவங்களுக்கு நம்பிக்கை இல்லை…” என்றார். காபி கொண்டு வைத்த முருகேசனிடம் “ஏம்பா முருகேசு?” என்றார்.

“ஆமா சார்”

“சொல்லு, ஐயாகிட்ட”

“அவரு தப்பிச்சிருவாரு சார்”

“எப்டி?”

“அது தெரியாது, ஆனா தப்பிச்சுக்குவார்…”

“ஏன் சொல்றே?”

“…பூனைக்கு ஏளு ஆயிசு சார். அவரு புலி… அது பதினாலு ஆயிசு”

“சாமியாவே கும்பிட ஆரம்பிச்சிட்டானுக… தூக்கில போட்டாக்கூட இவனுக நம்ப மாட்டானுக… அவரு சாகலேன்னு கத விடுவானுக” என்றார் சகாதேவன். “ஏசு மாதிரி மூணாம்நாள் மறுக்கா வந்துட்டாருன்னுகூட சொல்லிப்புடுவானுக”

“அவங்க சொல்றதிலே ஒரு உண்மை இருக்கு” என்று பெரியசாமி சொன்னார். “அவரு இதுவரை எப்டியெல்லாம் சாவிலேருந்து தப்பிச்சிருக்கார்னு கேட்டீங்கன்னா ஏதோ புராணம் மாதிரி இருக்கும்… சாவிலே இருந்து தப்பிச்சார்னு சொன்னா அது வெறும் வார்த்தை, செத்து அப்றம் மறுபிறப்பு எடுத்து வந்திருக்கார்னு சொல்லணும்… செத்துட்டார்னு உலகமே நினைக்கும். வந்திருவார். கொன்னுட்டோம்னு நினைப்பாங்க, செத்திருக்க மாட்டார். சார், எரிக்கிறதுக்கு சுடுகாட்டுக்கு கொண்டுபோயிருக்காங்க, அங்க எரியுற சிதையிலே எந்திரிச்சு உக்காந்திருக்கார்.”

”கத விடாதீங்க”

“உண்மை சார்… பேப்பரிலே வந்திருக்கு. இருபது வருசம் முந்தின கதை. இவரோட எதிரி மாடசாமியோட ஆளுங்க சுத்தி நின்னு வெட்டினாங்க… எட்டு வெட்டு. அப்டியே விளுந்திட்டாரு… மூச்சுபேச்சு இல்ல. ஆறுபேர இவரு வெட்டிட்டாரு, இவரோட ஆளுங்க ஒம்பது பேரு விளுந்திட்டானுக. மூச்சு இல்ல, இதயத்துடிப்பு இல்ல, உடம்பு குளுந்தாச்சு. எடுத்து கார்ல போட்டு ஊருக்கு கொண்டுபோனாங்க. அங்க ஒரே அளுகை, ஆர்ப்பாட்டம். போலீஸுக்கு தெரிஞ்சா அறுத்து முறிச்சிருவானுக, சட்னு எரிச்சிருவோம்னு முடிவாச்சு… பாடை கட்டி சுடுகாட்டுக்கு கொண்டுபோனாங்க. பெரிய ஆர்ப்பாட்டம்லாம் இல்லாம கொஞ்சம் ரகசியமாத்தான் கொண்டு போயிருக்காங்க… ஒரு அம்பதுபேரு. ஒரு நாலு பறை, அவ்ளவுதான்… சிதை அடுக்கியாச்சு. பாடை மேலே தூக்கி வச்சாச்சு… அக்னிச்சட்டிய கையிலே எடுத்துட்டாங்க. அப்ப ஒரு முனகல் சத்தம். என்ன ஏதுன்னு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பாத்தாங்க. சட்டுனு பாடையிலே ஒரு கை அசைஞ்சுது… அவனவன் பயந்து அலறிட்டான்… அப்டியே புரண்டு எந்திரிச்சு உக்காந்திட்டாரு… சத்தியமாச் சொல்றேன், அங்க நின்னவங்களிலே முக்காவாசிப்பேரு அப்டியே அலறியடிச்சு ஓடிப்போயிட்டாங்க… அப்பேற்ப்பட்ட ஆளு அவரு.”

“அவ்ளவுதான், இவனுக அவருக்கு கோயிலே கட்டிருவாங்க” என்று நான் சொன்னேன்.

“சார், அவருகூட ஏதோ ஒண்ணு இருக்கு… அது சாமின்னா சாமி. இல்லேன்னா இல்ல.”

“ஏதோ ஒண்ணுன்னா?”

“நெழலுன்னு அவரு சொல்லியிருப்பாரே, அதான்”

“நெழல் எல்லார்கூடவும்தான்யா இருக்கு”

“ஆமா சார், ஆனா இது வேற”

“கருப்பசாமிங்கிறே?”

“சரி, நீங்க வேற பேரு சொல்லுங்க… ஆனா அது அவருகூட இருக்கு. அவர் அதை கர்ப்பத்திலே இருக்கிறப்பவே பாத்துட்டார். எங்கிட்ட சொன்னார்” என்றார் முருகேசன்.

“அவரு பாத்தது சாவை… அத்தனை மனுசனும் அதை கர்ப்பத்திலேயே பாத்திருவான்… ஒவ்வொரு கருவும் பலமுறை சாவுக்கு பக்கத்திலே போயித்தான் பிழைச்சு வருது” என்றேன்.

“என்னமோ… ஆனா அவரு பாத்தது அவருக்கு ஞாபகம் இருக்கு” என்றார் முருகேசன். “சார், இங்க ஜெயிலுக்கு வந்ததும் அவரு சொன்னதே ஒண்ணுதான். அவரைச்சுத்தி எப்பவும் வெளிச்சம் இருக்கணும். அவரு இருட்லே இருக்க மாட்டார். அவரோட ரூம் முன்னாடித்தான் வெளக்குத்தூண் இருக்கு. அதிலே எப்பவும் வெளிச்சம் இருக்கும். இருந்தாலும் ஒரு சிமினி வெளக்கு கொளுத்தி வைச்சுக்கிடுவார். அது ராத்திரி முழுக்க எரிஞ்சிட்டிருக்கும். கரெண்டு போயி ஜெனரேட்டர் ஆன் பண்ற நேரத்திலே ஒரு மூணுநிமிசம் இருட்டு வரும் பாருங்க, அந்த இருட்ட தாங்க மாட்டார்.” முருகேசன் சொன்னார் “வெளிச்சம் எதுக்குன்னா நெழலுக்காகத்தான்… கூடவே நெழலு இருக்கணும் அவருக்கு… ஒரு கருப்பு நாயி மாதிரி அது காலடியிலே கிடக்கணும். பின்னாடி வந்திட்டிருக்கணும். தூங்குறப்ப அது முழிச்சிருக்கணும்…”

“அதான் சாவு” என்று நான் சொன்னேன். “அவருகூடவே இருந்திட்டிருக்கு”

“அவருக்கு அதுமேலே பயம் இல்லை” என்று சகாதேவன் சொன்னார். “சுத்தமா பயமே இல்லை. எங்கிட்ட சொன்னார், அதுதான் அவரோட விசுவாசமான சேக்காளின்னு. அதுகூட பேசிட்டே இருப்பார். ரொம்ப மெதுவா பக்கத்திலே இருக்கிற ஒருத்தர்கிட்ட பேசுற மாதிரி… “

சகாதேவன் அதை ஒருமாதிரி நடித்தே காட்டினார். “இதோ இப்டி மீசைய நீவிக்கிட்டு பக்கவாட்டிலே நிக்கிற நிழலை பாக்காம, ஆனா அதுகூட பேசுவார். ‘என்ன, இன்னிக்கு மழை வரும்போல இருக்கே… ஆவணியிலே மழைன்னா நல்லதுக்கில்ல. மக்காச்சோளம் கருது விடுற காலம்ல… பெஞ்சும் கெடுக்கும், ஓய்ஞ்சும் கெடுக்கும் மழைன்னு சொல்லுவாங்க… சாமின்னா அப்டித்தான் என்ன? அன்னமும் குடுக்கும் அடியோட அள்ளிட்டும் போகும்… என்ன நினைக்கிறே?’ அப்டீன்னு பேசிட்டே போவார்… சிலசமயம் சிரிப்பு. ‘சுப்பையாப்பய சொல்லுதான் நாம் மீசைக்கு ரத்தக்கொழுப்பு பூசி வளக்கேன்னு… மீசைக்கு கொளுப்பு மனசிலேல்லாய்யா இருக்கணும்?’ …நிழல்கூட பேசுற மனுசன்… தெரியாதவன் பாத்தான் பைத்தியம்னு நினைப்பான்”

“அதுவும் நல்லதுதான்… கண்டம்ட் வார்ட்னா தனிமையிலே வச்ச்சிருக்கணும்… அவனவன் தனிமையிலே இருந்தா கிறுக்கு பிடிச்சிருவான். சிலபேரு பாடுவான், சிலபேரு அளுவான், சிலபேரு பச்ச கெட்டவார்த்தையா கத்திக்கிட்டே இருப்பான். இவரு அமைதியா இருப்பாரு… அதான் துணைக்கு ஆளு இருக்குல்ல?” என்றார் முருகேசன்.

“நெஜம்மாவே மீசைக்கு ரத்தம் பூசியிருக்காரா?” என்றேன்.

“மேலக்கணக்குப்பட்டி மருதையன கொன்னுட்டு அந்த ரத்தத்தை அள்ளி பூசி மீசைய முறுக்கிக்கிட்டார்னு ஒரு கதை உண்டு… ஆரு கண்டா எது கதை எது நெஜம்னு? ஆனா மீசைக்கு நெய்யும் எண்ணையும் பூசுறவனுக உண்டு. மெழுகு பூசுறவனுக உண்டு… இவரு ஒண்ணுமே பூசுறதில்ல. டைகூட அடிக்கிறதில்ல. மீச அப்டியே அருவா மாதிரி நிக்கும்… காக்கைவாலு மாதிரி நெறம்… அவரு சொன்னதுதான், கொளுப்பு மனசிலே இருக்கு”

“அவரு நெழல்கூட வெளையாடுவாரு” என்று முருகேசன் சொன்னான்.

“என்ன வெளையாட்டு?” என்றேன்.

“என்னென்னமோ வெளையாட்டு. சுவர்லே நிழல் விழும். இவரு சுவரப்பாத்து உக்காந்துக்கிடுவாரு. நடுவிலே பரமபதம் வரைஞ்சு நிழல்கூட வெளையாடுவாரு… நிஜம்மாவே மனுசன்கூட வெளையாடுற மாதிரி தொடதட்டி சவால் விடுறது, ஜெயிச்சா கெக்கலிச்சு சிரிக்கிறது, கேலி பண்றது எல்லாம் உண்டு”

“இவருதானே ஜெயிப்பாரு?”

“பின்ன என்ன? நெழலு ஜெயிச்சா இவரு ஏன் இருக்கப்போறாரு? அப்பவே போயிருப்பாரே”

நான் அந்தக் காட்சியை கற்பனை செய்துகொண்டு அமர்ந்திருந்தேன். நிழலுடன் பரமபதம் விளையாடுபவர். பரமபதமே சாவின் விளையாட்டுதான்… வாய்திறந்த பாம்புகள் ஒவ்வொரு கட்டத்திலும்.

“எந்திரிச்சு நின்னு நெழல்கூட கையை ஆட்டி ஆட்டி பேசுவார். நிழலைத் தொட்டு கொஞ்சுவார். பாத்துட்டே இருந்தா நிழல் தானா இவர்கூட வெளையாடுற மாதிரி தெரிய ஆரம்பிச்சிரும்… ஒருவாட்டி ஏழு மெழுகு வத்தி கொளுத்தி வைச்சிருந்தார். ஏழு நெழல் இவரச்சுத்தி… எட்டு உருவங்கள் ஜெயில் ரூமுக்குள்ள நடனம் ஆடுறமாதிரி இருந்திச்சு… நான் நெஜம்மாவே பாத்து பயந்துட்டேன்” என்றார் பெரியசாமி.

அந்த இடத்தில் அமர்ந்து அவ்வாறு பேசிக்கொண்டிருப்பது வழியாக நாங்கள் அங்கே நிகழப்போகும் ஒரு கொலையின் குற்றவுணர்ச்சியில் இருந்து எங்களை விடுவித்துக்கொண்டோமா என்று தெரியவில்லை. ஆனால் பேச்சை நிறுத்தவே முடியவில்லை.

“எங்கிட்ட ஒருவாட்டி சொன்னார். அவர் பக்கத்திலேயே இருந்தாலும் அவருக்கும் அந்த நிழலுக்கும் நடுவிலே ஒரு மயிரிழை அளவுக்கு தூரம் இருக்குன்னு… அவர அந்த நிழல் தொட்டா அது வாள் மாதிரி வெட்டுதான்… அவர் உடம்பிலே இருக்கிற எல்லா தழும்புகளும் அவரை அந்த நிழல் தொட்டுட்டுப்போனதுதான்… ஒரு சண்டையிலே அவரு அருவாளை வைச்சுக்கிட்டு சுத்திச்சுழன்று சண்டை போடுறப்ப அவரோட நிழல் அவர்கூடவே சுத்திக்கிட்டு அவரை கொல்ல வர்ரவங்களையும் அவங்களோட ஆயுதங்களையும் பாத்துக்கிட்டே இருக்கு… அவர் காதுக்குள்ள அவரு மட்டும் கேக்குறாப்ல எச்சரிக்கை சொல்லிட்டே இருக்கு. வலது பக்கம் பாரு அரிவாளு வருது, பின்னாலே வேல்கம்பு, அதோ ஒருத்தன் கத்திய வீசுறான், ஒருத்தன் அதோ துப்பாக்கிய எடுக்கிறான்… அவரு பாக்காததையும் அது பாத்திரும். அதனாலேதான் அவரை கொல்லவே முடியறதில்லை. எவ்ளவு அட்டெம்ப்ட் பண்ணியிருக்காங்க… பின்னாலே போயி வெட்ட முடியாது. தூக்கத்திலே வெட்ட முடியாது. வெஷம் குடுக்க முடியாது. எல்லாமே தெரிஞ்சிரும்… அவரோட மெய்க்காவலன் மாதிரி இருந்த லச்சப்பா அவரு நல்லா கொரட்டை விட்டு தூங்குறப்ப வெட்டினான். சட்டுன்னு புரண்டு தப்பிச்சுட்டாரு… அவரோட சமையக்கார அம்மாவே காபியிலே ஆர்சனிக் வெஷத்தை கலந்து குடுத்திச்சு… மணமோ ருசியோ இல்லாத வெஷம் அது. குடிக்க வாய் பக்கத்திலே கொண்டு போனவர் கீழ ஊத்திட்டார்… எல்லாம் நெழலு சொல்றதுதான்… ஆனா எப்ப நெழலு அவர்கிட்ட சொல்லலியோ அப்ப அவரு மேலே ஆயுதம் பட்டிரும்…” சகாதேவன் சொன்னார்.

முருகேசன் “அவருகூட சண்டை போட்டு வெட்டுபட்ட ஒருத்தன் இங்க இருந்தான். விருமன்னு பேரு… உள்ளதச் சொன்னா அவனும் அந்த நெழல பாத்திருக்கான்” என்றார்.

“எந்த நெழல?”

“அவரோட நெழலை”

“அதில என்னய்யா?”

“இல்ல அவரு சண்டை போடுறப்ப இன்னொருத்தரும் சேர்ந்து டான்ஸ் ஆடுற மாதிரி அந்த நெழல் கூடவே சுத்துமாம்… அவன் பாத்திருக்கான்” என்றர் முருகேசன். “அதாவது அது தனியா வேற மாதிரி சுத்தும்… இவரோட அசைவு அதுக்கு இருக்காது…”

“பாதிப்பயக்க பயந்தே வெட்டுவாங்கியிருக்காங்க” என்றேன்.

“அது அப்டித்தான் சார், ஒருத்தர் லெஜெண்ட் ஆயிட்டார்னா பிறகு எல்லாருமே ஆளுக்கொரு கதை சொல்லுவாங்க” என்றார் சகாதேவன். “எனக்கு நம்பிக்கை இல்ல, ஆனா பயம் உண்டு.”

“ஆனா அவரு நெழல்கூட வாழுறது நெஜம்” என்றார் முருகேசன்.

“அவருக்கு அது தேவைப்படுது. அவரு இங்க மட்டுமில்லே வெளியேயும் தன்னந்தனியாத்தான் இருந்திருக்கார். சின்னவயசிலே இருந்தே அந்த மனநிலை அவர் கிட்ட இருக்கு. அவர் ஒருபக்கம், மத்த உலகமே இன்னொரு பக்கம்னு இருந்திருக்கார். அப்டிப்பட்ட தனிமையிலே துணையா இப்டி ஒரு கற்பனையை வளத்துக்கிட்டிருக்கார். அப்டி பலபேர பாத்திருக்கேன். சில கிரிமினல்ஸ் எப்பவுமே ஆயுதம் வைச்சிருப்பாங்க. அந்த ஆயுதம்கிட்ட பேசுவாங்க, அதை அணைச்சுக்கிட்டு தூங்குவாங்க. அது உசிருள்ள கூட்டாளி மாதிரி ஆயிடும்… ஸீ, கிரிமினல்ஸ் நம்மள மாதிரி இல்லை. அத்தனை கிரிமினல்கூடயும் சாவு இருக்கு. எப்பவோ யாரோ அவங்கள கொல்லப் போறாங்கன்னு அவங்களுக்கு நல்லா தெரியும்… அந்த பயம்தான் அவங்க வாழ்க்கை. அதனாலே அவங்க வாழுற உலகமே வேற…” என்றார் சகாதேவன்.

“ஆமா சார், இங்க முருகன்னு ஒருத்தன் கழுத்திலே ஒரு டாலர் போட்டிருந்தான்… அதை கழட்டினா செத்திருவேன்னு சொல்லி அடம்புடிச்சான். அறுத்து எடுத்து லாக்கர்ல வைச்சுக்கிட்டோம். மறுநாள் சங்க அறுத்துக்கிட்டு செத்தே போய்ட்டான்” என்றார் முருகேசன்.

“எல்லாம் கிரிமினல்களோட மரப்பிராந்தி… நமக்கும் அவங்களுக்கும் நடுவே இருக்கிற வித்தியாசமே ஒண்ணுதான். நாம வாழ்க்கைய பயப்படுறோம், அவனுக சாவைப் பயப்படுறாங்க.”

”ஆனா ஒரு சின்ன வித்தியாசம் சார்… நாய்க்கர் சாவை பயப்படலை… அதுலே சந்தேகமே இல்லை. அவரு எப்பவுமே சாவுகூட வெளையாடிட்டிருக்கார்” என்றார் சகாதேவன்.

“ரைட்…” என்று நான் கிளம்பினேன். “இதுக்குமேலே ஒண்ணும் எங்கிட்ட செய்தி சொல்லவேண்டாம்… நான் நாளைக்கு நியூஸ்லே பாத்து தெரிஞ்சுக்கிடுறேன்” என்றேன்.

“அவ்ளவுதான்…” என்று சகாதேவன் சொல்லி என்னை வழியனுப்ப கார் வரைக்கும் வந்தார்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 11, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.