புதைந்த காவியம்

அன்புள்ள ஜெ,

காவியம் நாவலை கதையாகவே வாசித்துச்சென்றவர்களில் நானும் ஒருவன். தொடக்கம் முதல் அது அப்படி  தன்னை ஒரு ‘நல்ல கதை’ என்று நம்பவைத்து வாசிப்பில் இட்டுச்சென்றது. துக்காராமுக்கும் ராதிகாவுக்குமான உரையாடல்களில் காவியத்தின் மெய்யான அழகியல் பற்றி வரும் இடங்கள், அவர்களின் ஆசிரியர் காவியத்தின் யக்ஷனாகிய கரடியை உணரும் இடங்கள் எல்லாம் ஒரு காதல்கதையின் ‘ஆம்பியன்ஸ்’ ஆக மட்டுமே என்னால் வாசிக்கப்பட்டன. அவர்கள் அறிவார்ந்த உரையாடலில் ஈடுபடுபவர்கள் என்பதைக் காட்டுவதற்காக மட்டுமே அந்தப்பகுதிகள் வருகின்றன என நினைத்துக்கொண்டவர்களில் நானும் ஒருவன்.

அவர்கள் சென்னைக்கு வந்ததும் நாவல் சூடுபிடித்து வேகம்கொண்டது. ஆனால் ராதிகா கொல்லப்பட்டதும் கதையே முடிந்ததுபோல ஆகிவிட்டது. மேலே படிக்கமுடியாமல் என் நண்பர்களில் பலர் நின்றுவிட்டனர். எனக்கும் சலிப்புதான். அதன்பின் தள்ளித்தள்ளித்தான் நாவலின் தொடர்ச்சியை வாசித்தேன். ராம் கண்,காது, பேச்சு இல்லாமல் மூடிப்போனபோது நாவல் மூச்சுத்திணறச்செய்வதாக ஆகியது.

ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் நாவலின் அகக்கட்டமைப்பு புரிய ஆரம்பித்தது. நான் வெண்முரசு 16 நாவல்களை வாசித்தவன். அதிலேயே இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருப்பவன். இந்நாவல் வெண்முரசுக்கு நேர் எதிரானது. வெண்முரசின் antithesis இது. ஒட்டுமொத்த இந்து சிந்தனை மாபு, இந்திய மையச்சிந்தன ஓட்டம் ஆகியவற்றை மறுத்து இன்னொரு பக்கத்தை முன்வைக்கிறது.

ரிக்வேதம் ‘ஆகாயவடிவமான அதுவே அறியும்’ என்று பிரம்மத்தை வானம் என்று சொல்கிறது. அதை பலமுறை நீங்களும் மேற்கோள்காட்டியிருக்கிறீர்கள். ரிக்வேதத்தின் தொடர்ச்சியாகவே இந்தியச் சிந்தனை மரபு வளர்ந்திருக்கிறது. ரிக் வேதத்திற்கு நேர் எதிரான ஒன்றாக அதர்வ வேதம் இந்நாவலில் சொல்லப்படுகிறது. அதர்வத்திலுள்ள மண்ணே அனைத்துக்கும் அடிப்படையானது என்னும் வரி முதல்புள்ளியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. மண் (தல) அதிலிருந்து தலாதேவி (பன்றிமுகமுள்ள வராஹி) அதன் இன்னொரு வடிவமான சீதை என்று மண்ணைச் சார்ந்தே இந்திய வரலாறும், இந்து ஞானமரபும் அமைந்துள்ளது என்னும் இன்னொரு பார்வையை நாவல் காட்டுகிறது.

நீங்கள் அதை ஒரு புனைவில் சொல்லியிருந்தாலும் ஆழமான ஆய்வுக்குப்பின் வெளிவரும் ஒரு பெரிய  thesis போலத்தான் இந்நாவலில் அந்த கருத்து முழுமையாக உள்ளது. அதர்வ வேதம், அதன்பிறகு வால்மீகி, அதன்பிறகு வியாசர், உக்ரசிரவஸ், அதன்பிறகு குணாட்யர் என எல்லா மாபெரும் இந்தியக் கவிஞர்களும் அடித்தள மக்களில் இருந்து வந்தவர்கள் என்றுதான் இந்தியாவின் தொன்மங்களே காட்டுகின்றன. தலித் என்றாலே மண்ணில் இருந்து வந்தவன் என்றுதான் பொருள்.  அந்தச சரடை துக்காராம் வரை இழுக்கிறீர்கள். அதர்வத்திற்கு எதிராக ரிக் வேதம் செய்த போர்தான் துக்காராமுக்கு எதிராக தேஷ்பாண்டே குடும்பம் செய்யும் போர் என்று நாவலில் திரண்டு வருகிறது என்று தோன்றுகிறது.

நாவல் வளர வளர ஒவ்வொரு அம்சமும் எப்படி ஒரு நுணுக்கமான வலைப்பின்னலாக இணைக்கப்பட்டுள்ளது என்ற வியப்பை அடைந்தேன். நாவல் வெளிவந்துகொண்டே இருக்கும்போதே பலமுறை பின்னால் சென்று வாசித்தேன். மனம்போன போக்கில், உதிரிக்கதைகளாக சிதறுண்ட வடிவில் திட்டமிட்டு எழுதப்பட்ட எதிர்வடிவ நாவல். ஆனால் அடியில் அந்த சிந்தனைக்கட்டுமானம் அழுத்தமான ஒரு பார்வையை கொண்டுள்ளது. அது மேலும் மேலும் திரண்டு ஒன்றாகிக்கொண்டே செல்கிறது. மிக நுணுக்கமாக உங்கள் மனம் நாவலை முன்னரே உள்வாங்கியுள்ளது என்பதை தொடக்கத்திலேயே ததாகதர் வருவது, வால்மீகி வருவது எல்லாம் காட்டுகிறது. 

இந்த மெட்டாபிக்‌ஷன் நாவல் வடிவம் எதற்கானது என்பதை இந்நாவலை வாசிக்கும்போதுதான் உணரமுடிகிறது. நாம் நம்பும் வரலாறு, தத்துவம் அனைத்தையும் தலைகீழாக ஆக்கி வேறொரு கோணத்தில் பார்க்கச்செய்வதற்காகவே இநத வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் கதையை வைத்து விளையாடுவதற்கு அல்ல. மறைக்கப்பட்ட பிரதிகள் மேல்நாட்டு நாவல்களில் நிறையவே உண்டு. இங்கும் சிலர் எழுதியுள்ளனர். ஆனால் உண்மையான மறைக்கப்பட்ட பிரதி, மறைக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட பிரதி இங்கே நம் வரலாற்றிலேயே உள்ளது. இந்திய வரலாற்றிலேயே ஒரு மாபெரும் மறைக்கப்பட்ட ஆழம் உள்ளது.   தத்துவம், வரலாறு ஆகியவற்றில் ஆழமான  ஆய்வும், அதைப்பற்றிய உண்மையான மாற்றுப்பார்வையும் இல்லாமல் அதை எழுதமுடியாது. இந்நாவல் எல்லாவற்றையும் தலைகீழாக்குகிறது. ஆனால் இதுவே வரலாற்று உண்மை என்று தர்க்கபூர்வமாக நிறுவவும் முடிந்துள்ளது.

இந்நாவல் குணாட்யரின் காவியத்தை முன்வைத்து மறைந்த காவியம் என்ற உருவகத்தை உருவாக்குகிறது. இந்தியாவின் உண்மையான வரலாறும், உண்மையான ஞானமும்கூட மறைக்கப்பட்ட ஒன்றுதான் என்கிறது. ஆனால் பிரதிஷ்டான என்றால் வேர். வேர் மறைந்திருப்பதுபோல அந்த ‘தல’ வரலாறும் ஞானமும் நம் வரலாற்றுக்கு அடியில் உள்ளது. அது முளைத்துக்கொண்டே இருக்கிறது. வேர்களின் மௌனம்தான் இந்நாவல் சொல்லி முடிக்கும் கதை.

ஒற்றைவரியில் இருந்து ஆரம்பிக்கும் நாவல் அந்த ஒற்றை வரியில் முடிகிறது. முதல் அத்தியாயத்தில் கதைச் சொல்லும் பிசாசு ராமின் கொள்ளுப்பாட்டியிடம் என்ன சொன்னது என்று சொல்லப்படவில்லை. அதர்வ வேதத்தின் வரிதான் அது. மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:

கே.ராஜகோபால்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.